2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2019 மார்ச் 21 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் பாதுகாப்பான இடம் என்று எதுவுமில்லை என்பதை, கடந்தவாரம் இடம்பெற்ற நிகழ்வுகள், மீண்டும் உறுதிப்படுத்திச் சென்றுள்ளன. இனவாதமும் தீவிர வலதுசாரி நிலைப்பாடுகளும் கடந்த ஒரு தசாப்த காலமாக, அறுவடை செய்த பாசிசத்தின் இன்னொரு பலிபீடமாக, நியூசிலாந்து நாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகளை நோக்க வேண்டியுள்ளது. 

இதை எவ்வாறு புரிந்து கொள்வது? உலகில் பாதுகாப்பான நாடு என்று எந்த நாட்டைச் சொல்ல இயலும்? நேற்று கிறைஸ்ட்சேர்ச்சில் நடந்தது, நாளை இன்னோர் இடத்தில் நடக்காது என்ற உத்தரவாதத்தை, யாரால் தரவியலுவும்? நிச்சயமின்மைகளே, நிச்சயமான காலப்பகுதியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  

கடந்த வெள்ளிக்கிழமை (15) மதியம், நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் நகரில் உள்ள, இரண்டு மசூதிகளுக்குள் புகுந்த ஆயுதாரி, அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்த பொதுமக்களைச் ‘சரமாரி’யாகச் சுட்டான். இதில் 50 பேர் உயிரிழந்தும் 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தும் உள்ளனர். 

நியூசிலாந்தின் வரலாற்றில், மிகப்பெரிய சூட்டுச் சம்பவமாக, முழு நியூசிலாந்தையும் இச்சூட்டுச் சம்பவம் உலுக்கியுள்ளது. இந்தச் சம்பவத்துடன், தொடர்புடைய மூன்று விடயங்கள் கவனிப்புக்குரியன. அவை, இச்சம்பவத்துக்குப் புறம்பாக, நாகரிகமடைந்த மனிதகுலமாக எம்மைச் சொல்லிக் கொள்ளும் நாம், அவதானிக்க வேண்டிய சில முக்கியமான எச்சரிக்கைகளைச் சுட்டிக்காட்டி நிற்கிறது.   

வலது தேசியவாத எழுச்சியின் நிழலில் இடம்பெற்ற, இந்தக் கொலைவெறித் தாக்குதலை, தனிப்பட்ட ஒருவரின், திட்டமிடப்படாத கோபத்தின் விளைவு என்று, வெறுமனே சுருக்கி விட முடியாது. இது தெளிவாகத் திட்டமிடப்பட்டு,  நடத்தப்பட்ட தாக்குதல் என்ற உண்மையை,  விளங்க வேண்டும். இதைப் புத்தி பேதலித்த ஒருவரின் நடவடிக்கையாகச் சுருக்குவது, இந்தச் சம்பவத்தின்  ஆபத்தின் ஆழத்தை, முழுமையாகப் புறக்கணிக்கவே உதவும். 

இத்தாக்குதலை மேற்கொண்ட நபர், இச்சம்பவத்தை ‘பேஸ்புக்’, ‘யூ டியூப்’ ஊடாக, நேரடியாக ஒளிபரப்பியுள்ளார். தனது செயலை நியாயப்படுத்தி, 73 பக்க விளக்க உரையையும் வெளியிட்டுள்ளார். எனவே, இது தற்செயல் நிகழ்வல்ல. பத்தாண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட, பொருளாதார நெருக்கடியின் வழித்தடத்தில், உலகெங்கும், குறிப்பாக மேற்குலகில், வலது தேசியவாத சக்திகளின் எழுச்சி நிகழ்ந்தது. 

இது தற்செயலாக நிகழ்ந்ததல்ல; நிதி மூலதனத்தின் முழுமையான ஆதரவுடன் நடந்தது. ஜனநாயகமும் அதன் நடைமுறைகளும் மக்கள் மத்தியில் பாரிய நம்பிக்கையீனங்களைத் தோற்றுவித்திருந்தன. இந்நிலையில் நிதிமூலதனத்தையும் நவதாராளவாதத்தையும் பாதுகாக்கவும் கட்டற்ற சுரண்டலை வரைமுறையற்று நிகழ்த்தவும் ஜனநாயகம் இனியும் போதுமானதாக இல்லை என்பது உணரப்பட்டது. இதன் பின்புலத்திலேயே, நிதிமூலதனத்தின் உதவியுடனும் நவதாராளவாதத்தின் நிகழ்ச்சி நிரலில், வலது தேசியவாத எழுச்சி, முன்னிலை அடைந்தது. இது, ‘ஜனரஞ்சக வாதம்’ என்ற முகமூடியைத் தனக்குப் பொருத்திக் கொண்டது.   

இவை அனைத்தும், நவபாசிச நிலைப்பாடுகளை உடையன. இவ்விடத்தில், பாசிசம் எவ்வாறு தன்னைத் தகவமைக்கிறது என்பதை, நோக்கல் தகும். 

இரண்டாம் உலகப்போருக்கு வித்திட்ட பாசிசம், எவ்வாறு மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்தது; மக்களைத் தன்பின்னே தொடர்ச்சியாக அணிதிரட்டியது என்பதை, கெயோர்கி டிமித்ரொவ் 1935ஆம் ஆண்டு, கொம்யூனிஸ அகிலத்தின் இரண்டாம் சர்வதேச மாநாட்டில் வழங்கிய அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடுகிறார். அவர், ‘நிதி மூலதனத்தின் அதி பிற்போக்கு, அதிபேரினவாதம், அதிஏகாதிபத்தியம் ஆகிய கூறுகளின், பகிரங்க பயங்கரவாதச் சர்வாதிகாரமே, பாசிசம்’ எனக் குறிப்பிடுகிறார். 

இதை விளக்கும் டிமித்ரொவ், ‘பாசிசம் என்பது வர்க்கம் கடந்ததுமல்ல; அரசாங்கம், நிதி மூலதனத்தைப் புறந்தள்ளிய, சிறு முதலாளிகளினதும் உழைப்பாளிகளினதும் அல்ல. நிதிமூலதன அதிகாரமே, பாசிசம்’ என்கிறார். 

‘தொழிலாளர்களினதும் விவசாயிகளினதும் ஆய்வறிவாளர்களினதும் செயற்பாடுகளுக்கும்  சுதந்திரத்துக்கும் எதிரான பயங்கரவாத வஞ்சகத்தின் அமைப்பே, பாசிசம் ஆகும். இது, வௌியுறவுக்  கொள்கையில், பிறதேசங்களிடம் மிருகத்தனமான வெறுப்பைத் தூண்டும், போலி நாட்டுப்பற்றின் அதிகொடிய வடிவம்’ என்றார். இன்று பாசிசம், இவ்வாறுதான் செயற்படுகிறது. 

வலது தேசியவாதம், நாட்டுப்பற்றையும் இனப்பற்றையும் தனக்குத் துணைக்கு அழைக்கிறது. அத்துடன், வெள்ளை நிறவெறியும் சேர்ந்து விடுகிறது. இவை, பல்வேறு வடிவங்களில், தம்மை வெளிக்காட்டுகின்றன. 

தொடக்கத்தில் பாசிசம், முதலாளித்துவ சமூக ஜனநாயகக் கட்சிகளுடன் மென்மையாகச் செயற்படும். புரட்சி வெடித்தெழலாமென, ஆளும் முதலாளி வர்க்கம் அஞ்சும்போது, கட்டற்ற அரசியல் ஏகபோகத்தை அடைய, பாசிசம் உதவுகிறது. தேவையாயின், பம்மாத்தான ஜனநாயகத்தைப் பச்சைப் பயங்கர சர்வாதிகாரத்துடன் இணைக்கவும் பாசிசத்துக்கு இயலும். பாசிசம், அதிகாரத்துக்கு வருவதென்பது, ஜனநாயக ஆட்சியை (அது பெயரளவிலாயினும்) பயங்கர சர்வாதிகாரத்தால் பிரதியிடுவதாகும்.   

உலகப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்த கடந்த பத்தாண்டுகளில், இந்த அமைப்புமுறை மீதான கோபமும் நவதாராளவாதத்தின் தோல்வியும் ஜனரஞ்சகவாதமாக வெளிப்படுகிறது. இதை, அதிவலது தேசியவாதமாக மாற்றுவதன் ஊடு, நிதிமூலதனம் தன்னைக் காத்துக் கொள்கிறது. இதற்கு நல்ல உதாரணம், அமெரிக்காவின் ஜனாதிபதியாக ட்ரம்ப் தெரிவானமையாகும். 

அமெரிக்க ஆளும் நிறுவனத்தின் மீதான கோபம், ட்ரம்பைக் கொண்டு வந்தது. ஆனால், நிதிமூலதனம் முன்பை விடப் பாதுகாப்பாக இருக்கிறது. மக்களது கோபம் நிறவெறியாகவும் இஸ்லாமிய எதிர்ப்பாகவும் குடியேற்றவாசிகளுக்கு எதிரான மனோநிலையாகவும் வெளிப்படுகிறது. ஆனால், மக்கள் தொடர்ந்து சுரண்டப்படுகிறார்கள்; பொருளாதார நெருக்கடியின் மோசமான விளைவுகளை எதிர்கொள்கிறார்கள். ஆனால், அனைத்துக்கும் குடியேற்றவாசிகளும் முஸ்லீம் தீவிரவாதிகளுமே காரணம் என்று நம்பவைக்கப்படுகிறார்கள்.   

கிரைஸ்ட்சேர்ச் தாக்குதலை மேற்கொண்ட நபர், அதைச் சமூக ஊடகங்களின் வழி ஒளிபரப்பியுள்ளார். அதேவேளை, இது தொடர்பாகத் தொடர்ச்சியான ஊடாடல்கள், கருத்துப் பரிமாற்றங்கள், இவ்வகையான செயல்களுக்கு உற்சாகமூட்டும் அனைத்தும், சமூகவலைத்தளங்களின் ஊடாக நடைபெறுகிறது. 

ஒருவரைத் தீவிர நிலைப்பாட்டின் பக்கம் கொண்டு செல்வதில், சமூக ஊடகங்களின் பங்கு பெரியது. பல மேற்குலக நாடுகளில் பிறந்து, வளர்ந்த மூஸ்லீம்கள், ஐ.எஸ்.ஐ. எஸ்ஸுக்காகப் போராடப் போனதன் பின்னணியில், சமூக ஊடகங்கள் ஆற்றிய பங்குகள்  இருந்தன என்று ஆய்வுகள் மூலம் நிறுவப்பட்டுள்ளன.  

இன்று, தீவிர நிலைப்பாடுகளின் அனைத்துத் தரப்பிலும் சமூக ஊடகங்கள் வலுவான கருவியாகியுள்ளன. இவை, நாடுகள் கடந்த நிலையில் ஒழுங்கமைக்கப்படுகின்றன. கிரைஸ்ட்சேர்ச் தாக்குதலை மேற்கொண்ட நபர் வெளியிட்டுள்ள ‘மாபெரும் மாற்றீடு’ என்று தலைப்பிட்ட 73 பக்க அறிக்கையானது, 2011இல் நோர்வேயில் 77 பேரைக் கொலைசெய்த குடியேற்ற எதிர்ப்பு பாசிசவாதியான அன்டர்ஸ் பிரேவிக்கின் அறிக்கையை ஒத்திருந்தது. 

இவ்விடத்தில், அன்டர்ஸ் பிரேவிக்கின் தாக்குதலின் முக்கியத்துவத்தை நோக்க வேண்டும். முதன்முதலாக, இணையவழித் தீவிரவாதியாக மாறிய நபர் அன்டர்ஸ் பிரேவிக் ஆவார். அவரது சிந்தாந்தம், முழுமையாக இணையத்தின் வழியே உருவாக்கப்பட்டது. அவருக்கு ஆசிரியராகவோ, ஆலோசகர்களாகவோ யாரும் இருக்கவில்லை. இணையத்தின் வழியே, துப்பாக்கி சுடவும் குண்டுகளை உருவாக்கவும் கற்றிருந்தார். 

இதே நடைமுறையே கிரைஸ்ட்சேர்ச் தாக்குதலிலும் பின்பற்றப்பட்டுள்ளது. எனவே, இன்னமும் தீவிரவாத நிலைப்பாடுகளை எடுக்கும் வழிமுறைகள், இணையத்தில் உள்ளன என்ற ஆபத்து, கடந்த எட்டு ஆண்டுகளில் களையப்படவில்லை என்பது புலனாகிறது.   

“இத்தாக்குதலை நடத்திய நபர், எந்தப் பயங்கரவாதக் கண்காணிப்புப் பட்டியலிலும் இடம்பெற்றிருக்கவில்லை. எனவே, இதை நாம் எதிர்பார்க்கவில்லை” என நியூசிலாந்து பொலிஸ் ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஆனால், இவ்வாறான அதிவலது தீவிரவாத பாசிசவாதிகளை, மேற்குலக அரசாங்கங்கள் தொடர்ந்தும் கண்டும் காணாமலேயே இருக்கின்றன. ஏனெனில், அவற்றுக்கான மறைமுக ஆதரவு, அரசாங்க வட்டாரங்களில் உண்டு.   

77 பேரைக் கொலைசெய்த அன்டர்ஸ் பிரேவிக், மனநலம் பாதிக்கப்பட்டவர் என, மனநோய் மருத்துவர்கள் நீதிமன்றுக்கு அறிக்கையளித்தனர். இதை, நோர்வே வைத்தியர்கள் சங்கம் ஏற்றுக் கொண்டது. பிரேவிக் தண்டனையில் இருந்து தப்புவதற்கான வாய்ப்புகளை, இது உருவாக்கிக் கொடுத்தது. இது, நோர்வேயில் மிகப்பெரிய விவாதப் பொருளானது. இருந்தபோதும், பாதிக்கப்பட்டவர்களது தளராத போராட்டம், பிரேவிக்கை மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தச் செய்து, அவர் மனநலம் பாதிக்கப்படாதவர் என்பதை உறுதிசெய்து, அவருக்குத் தண்டனை வழங்கப்பட வழிசெய்தது. இது, அரசாங்க மட்டங்களில், இத்தகைய இனவெறிக் கருத்துகளுக்கான ஆதரவு இருப்பதைக் காட்டும் ஓர் உதாரணம் மட்டுமே.   

கிரைஸ்ட்சேர்ச் தாக்குதலை நியூசிலாந்துப் பிரதமர் வன்மையாகக் கண்டித்துள்ளார். ஆனால், அவர் வெளிப்படையான ஆசிய எதிர்ப்பு, குடியேற்றவாசிகளுக்கு எதிர்ப்பு என்பவற்றைக் கொள்கைகளாகக் கொண்ட, ‘நியூசிலாந்து முதலில்’ (NZ First) என்ற இனவாத, ஜனரஞ்சக வாதக் கட்சியைத் தனது பங்காளிக் கட்சியாகக் கொண்டுள்ளார். முஸ்லீம் விரோதத்தை, வெளிப்படையாகப் பேசும் இக்கட்சியின் உறுப்பினர்களே, தற்போதைய அரசாங்கத்தில் துணைப் பிரதமர், வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் ஆகிய பதவிகளில் உள்ளனர்.   

அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்களுக்கு எல்லாம் நியூசிலாந்து, தனது இராணுவத்தை அனுப்பியுள்ளது. ஆப்கானிஸ்தான் தொட்டு, ஈராக்கில் தொடர்ந்து, அமெரிக்கா முன்னெடுத்த ‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில்’ நியூசிலாந்துக்கு முக்கிய பங்குண்டு. 

இன்று, அன்பையும் அமைதியையும் போதிக்கும் நியூசிலாந்து, உலகின் அவலங்களுக்கும் போர்களுக்கும் பொறுப்புச் சொல்லக் கடமைப்பட்டுள்ளது. இது குறித்து, விரிவான தகவல்களுக்கு Nicky Hager எழுதிய Other people’s wars : New Zealand in Afghanistan, Iraq and the war on terror புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன்.   
உலகம் பாதுகாப்பான இடமாக இல்லை என்பதை, இத்தாக்குதல்கள் சுட்டி நிற்கின்றன.

வன்முறையையே வாழ்க்கையாகக் கொண்ட ஓர் உலகையா, எமது பிள்ளைகளுக்கு, நாம் விட்டுச் செல்லப்போகிறோம் என்பதை, எம்மை நாமே கேட்டாக வேண்டும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .