Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
எம். காசிநாதன் / 2020 ஜூன் 23 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைதியை நிலைநாட்டும் ஒப்பந்தம், 1993ஆம் ஆண்டில் கையெழுத்தான பின்னர், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சுமூகமான உறவில், எந்த விதமான துப்பாக்கிச் சூடும் நடக்கவில்லை. ஆனால், தற்போது முதற்கல்லை வீசி, தெளிந்த நீரோடையைக் குழப்பியிருக்கிறது சீனா. அமைதியாக இருந்த இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக நல்லுறவில், ‘அலை’களை சீனா ஏற்படுத்தி இருக்கிறது.
நாட்டினுடைய பாதுகாப்புக் கொள்கையில், பிரச்சினைகளை ஏற்படுத்தும் நாட்டுடன், வர்த்தக உறவைத் தொடர்ந்திட முடியுமா என்ற கேள்வி, முழுமையாகவும் உணர்வு பூர்வமாகவும் இந்திய மக்கள் மத்தியில் உருவாகி இருக்கிறது. இந்தியாவுக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையிலான உறவில், புதிய அத்தியாயத்தைத் தொடங்கவே, பிரதமர் நரேந்திர மோடி விரும்பினார். 2014இல் அவரது பதவியேற்பு விழாவுக்கு அண்டை நாட்டின் ஆட்சித் தலைவர்களை அழைத்திருந்தமை நல்லதோர் எடுத்துக் காட்டு.
அதன் பிறகு, எல்லைப் பிரச்சினையில், ‘தலைவலி’ மிக்க பிரதேசங்களாகத் திகழும் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுடன் கூட, முதற்கட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, இணக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ளவே முயன்றார். பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் செரிப்பின் பிறந்த நாளை முன்னிட்டு, 2015இல் நேரில் லாகூருக்கு, அதுவும் திட்டமிடப்படாத திடீர் விமானப் பயணமாகச் சென்று வாழ்த்துத் தெரிவித்து இருந்தார். அவரது இந்த விஜயம் குறித்து இந்தியாவில் சர்ச்சைகள் கிளம்பி இருந்தன. ஆனாலும், அது பற்றியெல்லாம் கவலைப்படாமல், பாகிஸ்தான்-இந்திய உறவில், ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கி விட முடியாதா என்ற எதிர்பார்ப்பினால் அவ்வாறு செய்தார் என எடுத்துக்கொள்ளலாம்.
ஏனென்றால், பாகிஸ்தான்-இந்திய எல்லைப் பிரச்சினைக்கு, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கத்தை விட, பாரதிய ஜனதாக் கட்சியின் தலைமையிலான மத்திய அரசாங்கம், தீர்வு காணுவது எளிது என்பது, வெளியுறவுக் கொள்கையில் வித்தகர்களாக இருப்போரின் கருத்தாக இருந்தது. அப்படியொரு முயற்சியை மோடிக்கு முன்பிருந்த பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் செய்தார்.
1999இல் டெல்லிக்கும் லாகூருக்கும் இடையிலான பஸ் போக்குவரத்து, நட்புறவை வளர்க்கும் திட்டத்துடன்தான் உருவாக்கப்பட்டது. ஆனாலும், காஷ்மிர் பிரச்சினைக்கு ஓர் அர்த்தமுள்ள தீர்வுக்கோ, இந்தியா மீதான பயங்கரவாதத் தாக்குதல்களை நிறுத்தவோ, பாகிஸ்தான் அரசாங்கம் ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள மறுத்து விட்டது. இந்த நிலையில், அந்நா ட்டுடன் ‘பேசிப் பயன் கிடைக்குமா’ என்ற மிகப்பெரிய கேள்வி, இந்திய மக்கள் மனதில் தோன்றி விட்டது. அதனால்தான், பாகிஸ்தான் மீதான தாக்குதல்களும் பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துகளும் இந்தியாவில் தேர்தல் பிரசார யுக்திகளாகவும் வடமாநிலங்களில் வாக்குகளை அள்ளிக் கொடுக்கும் அட்சய பாத்திரங்களாகவும் திகழத் தொடங்கின.
மக்களின் இந்த எண்ணவோட்டம், இந்தியாவில் உள்ள காஷ்மிர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை இரத்துச் செய்து, அந்த மாநிலத்தை மூன்றாகப் பிரித்து, லடாக் என்ற புதிய யூனியன் பிரதேசமும் அறிவிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த அறிவிப்பு, இந்திய மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் இருந்த இந்தியாவின் கனவு, பிரதமர் நரேந்திர மோடி காலத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டதாக, மக்கள் உணர்ந்தார்கள். இந்த உணர்ச்சி மிகுந்த ஆதரவு, “ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மிர் இந்தியாவின் வசமாகும்’’ என்ற முழக்கத்துக்கு வரவேற்பை பெற்றது. நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, “காஷ்மிர் இந்தியாவுக்குச் சொந்தமானது. காஷ்மிர் என்று நான் கூறுவது, ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மிருடன் அக்சய் சின் பகுதியையும் சேர்த்துத்தான்’’ என்று பிரகடனம் செய்தார்.
அடுத்த சில தினங்களில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை என்று நடந்தால், அது ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மிர் பகுதி குறித்துத்தான் இருக்கும’்’ என்று தெளிவுபடுத்தினார். இன்னும் ஒருபடி மேலே சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மிர் இந்தியாவின் ஒரு பகுதி. அதை நிர்வகிக்கும் காலம், ஒரு நாள் வந்தே தீரும்’’ என்றார். ஆகவே, காஷ்மிர் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்ட பிறகு, வெளிவந்த இந்தப் பேட்டிகளுக்கும், தற்போதையை இந்திய-சீனப் பிரச்சினைக்கும் எதுவுமே தொடர்பில்லை என்று ஒதுக்கித் தள்ளிவிட, வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள், நிச்சயம் முன் வரமாட்டார்கள்.
அதைத்தான், தற்போது இந்தியா மீது வம்படியாக, “கல்வான் பள்ளாத்தாக்கு எங்களுடையது’’ என்றும் “எங்கள் வீரர்கள் மீது, இந்தியாதான் தாக்குதல் நடத்தியது’’ என்றும் “முதலில் எங்கள் எல்லைக்குள் நுழைந்தது இந்தியாதான்’’ என்றும், சீனா எடுத்து ‘அயலிடச்சான்று’களை எடுத்துவைத்து வருகின்றது. ஏனென்றால், சீனாவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் எண்ணவோட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுக் கொள்கைகளை அமைத்துக் கொள்ளவில்லை. குறிப்பாக, அந்நாட்டு ஜனாதிபதியுடன் மிக நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்டால், ஆசிய துணைக் கண்டத்தில் மட்டுமல்ல, உலக நாடுகளுக்கே ‘இந்தியா-சீனா’ நல்லுறவு, பிரமாண்டமானதோர் எடுத்துக் காட்டாக விளங்கிடும் என்ற நோக்கிலேயே, முயற்சிகளை மேற்கொண்டார்.
2014ஆம் ஆண்டு செப்டெம்பரில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் முதல் முறையாக, பிரதமரான நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு வந்தார். மகாத்மா காந்தியின் ‘சபர்மதி’ ஆசிரமத்துக்குச் சென்றார். அந்தச் சந்திப்பை, “இரு நாட்டு உறவுகளில், குறிப்பிடத்தக்க மைல்கல்’’ என்று, அப்போது கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
பின்னர், 2015இல் பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்குச் சென்றார். அப்போதும் இந்தப் பேச்சுவார்த்தை பற்றி, பெருமிதமாகப் பேசப்பட்டது. இரு நாட்டு உறவுகளிலும், தலைவர்களிடத்தில் அரசியல் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை வலுப்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
2018இல் சீனாவில் நடைபெற்ற ‘வூஹான்’ சந்திப்பில், சீன ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாட்டு உறவுகளை, மேம்படுத்தும் முயற்சியின் விளைவாக வெளியான கூட்டறிக்கையில், ‘அமைதியானதும் நிலையானதுமான பதற்றமற்ற இந்திய-சீன உறவு, உலக அளவில் நிலவும் ஸ்திரமற்ற சூழலில் இருந்து, விலகிய சாதகமான முன்னேற்றம்’ என்று பெருமிதத்துடன் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. பின்னர், 2019 ஆம் ஆண்டு ஒக்டோபரில் இரண்டாவதாக சென்னையில் சந்திப்பு நடைபெற்றது. சீன ஜனாதிபதியை வரவேற்று, மகாபலிபுரம் பாறை அருகில் நின்று, தமிழர் பண்பாட்டின் வேட்டி சட்டையுடன் காட்சியளித்தார் பிரதமர் மோடி. இக்கூட்டத்துக்குப் பின்னர், உரையாற்றிய சீன ஜனாதிபதி ஜி ஜிங் பிங், “இதயபூர்வமாக, கபடற்ற முறையில் இந்தியப் பிரதமருடன் இரு நாட்டு உறவுகள் குறித்து, நண்பர்கள் போல் பேச்சுவார்த்தை நடத்தினோம். மிக ஆழமாக நல்ல ஆலோசனைகளைச் செய்திருக்கிறோம்’’ என்று கூறினார்.
அப்படியோர், ஆழமான பேச்சுவார்த்தை, இதயபூர்வமான பேச்சுவார்த்தை, கபடற்ற பேச்சுவார்த்தை நடத்திய சீன ஜனாதிபதி ஜி ஜிங் பிங், சீனாவுடன் பிரதமர் நரேந்திர மோடி அமைக்கப் பாடுபட்ட சுமுகமான உறவுப் பாதையை, எட்டு மாதங்களுக்குள் ஏன் துண்டாட நினைக்கிறார்? இது, இந்திய மக்களின் மனதில் இன்று எழுந்துள்ள கோபம் ஆகும். இதைவிட, அன்று பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவுக்குச் செய்த நம்பிக்கைத் துரோகத்தின் இரண்டாவது கட்டம், இப்போது அரங்கேறுகிறதோ என்ற எரிச்சல், இந்திய மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கிறது.
இந்தக் ‘கல்வான்’ பள்ளத்தாக்குத் தாக்குதல் மூலம், 20 இந்திய வீரர்களைக் கொன்ற சீனாவை, நம்பத் தகுந்த நாடு என்று, பிரதமர் நரேந்திர மோடியால் இந்திய மக்களிடத்தில் இனி உறுதியளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள மகாத்மா காந்தியின் ‘சபர்மதி’ ஆசிரமத்தில் தொடங்கிய நல்லிணக்கம், மாமல்லபுரம் சந்திப்புக்குப் பிறகு, சறுக்கல் ஏற்பட்டு நிற்கிறது.
“நாங்கள் அமைதியை விரும்புகிறோம். ஆனால், எங்களைச் சீண்டினால், தக்க பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பதும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், “நம் எல்லையை, ஓர் அங்குலம் கூட, விட்டுக் கொடுக்க மாட்டோம்’’ என்று, பிரதமர் உரையாற்றி இருப்பதும், இரு நாட்டு உறவில் சூடுபிடித்திருக்கிறது.
மாமல்லபுரம் சந்திப்புக்கு பின்னர் வெளியான அறிக்கையில், ‘இது போன்ற சந்திப்புகள் ஆழமான பேச்சு வார்த்தைகளுக்கு உதவிடும். இரு தலைவர்களுக்கும் இடையில், பரஸ்புர புரிதலுக்கு வித்திடும். மூன்றாவது பேச்சுவார்த்தைக்குப் பிரதமர் நரேந்திர மோடி, சீனா வருவார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்தப் பரஸ்பர புரிதலுக்கு உதவிய ‘வூஹான் உணர்வு’, ‘சென்னைத் தொடர்பு’ ஆகிய இரண்டுக்கும், இந்தியப் பகுதியில் உள்ள ‘கல்வான்’ பள்ளத்தாக்கில் தாக்குதல் நடத்தி, இப்போதைக்கு கேள்விக் குறியை ஏற்படுத்தியுள்ளது சீனா. இந்தக் கேள்விக்குறியை உருவாக்கிய முழுப் பொறுப்பும், சீன ஜனாதிபதியைச் சாரும்.
அண்டை நாடான சீனாவுடன் வர்த்தக ரீதியாக, முதலீடு ரீதியாக, வெளியுறவுக் கொள்கை ரீதியாகப் பரஸ்பர நட்புணர்வை வளர்க்க முயற்சித்த இந்தியப் பிரதமரை, நிச்சயம் சாராது. ஆகவே, சென்னைத் தொடர்பை சீனா, திசைதிருப்ப நினைப்பது ஏன் என்பதுதான், எல்லோருடைய மனதிலும் இயற்கையாக எழுந்துள்ள இன்னொரு கேள்வியாக இருக்கிறது!
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
9 hours ago
30 Apr 2025