2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

செப்டெம்பர் அமர்வில் தமிழர் நிலைப்பாடு

R.Tharaniya   / 2025 ஜூலை 14 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன்

செப்டெம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கின்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை அமர்வுக்குத் தமிழர்கள் தயாராக வேண்டிய நேரமாக இதனைக்கொள்ள வேண்டும்.

ஏனெனில், இந்த வருட அமர்வானது இலங்கையில் இடதுசாரி சித்தாந்தத்தின் கீழ் ஆட்சிக்கு வந்திருக்கின்ற மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது எதிர்கொள்ளல்.

அந்தவகையில்தான் இந்த அமர்வானது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கொள்ளப்படுகிறது. அத்துடன், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரது விஜயம். 

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி  வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பல்வேறு வடிவங்களிலும் தங்களது முயற்சிகளை 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் மறுக்கப்பட்ட உரிமைகளை அடைவதற்கான முயற்சிகளை நகர்த்தி வருகின்றனர்.

இருந்தாலும், 16 வருடங்களை எட்டிவிட்டபோதிலும் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு முடியாததாக சர்வதேச சமூகம் இருந்து வருகிறது.

ஒவ்வொரு அமர்விலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இராஜதந்திர ரீதியாக இலங்கை அரசாங்கம் நகர்ந்து வருகிறது. இது தமிழர்கள் தங்களது எந்த முயற்சியையும் வெற்றியாக மாற்றிக் கொள்ளமுடியாத நிலையையே ஏற்படுத்துகிறது.  

ஒவ்வொரு வருடத்திலும் இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர் குற்றங்கள்  தொடர்பாக ஐ.நா. மனித உரிமை
பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும், ஏற்கெனவே இலங்கை  தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் வலுப்பெறும் என்றெல்லாம் நம்பியிருப்பது மாத்திரமே தமிழர்களுக்கு மிஞ்சியிருக்கிறது. 

2009இல் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களின் போராட்டத்தைப் புதைத்ததுடன் ராஜபக்‌ஷ கூட்டணி இலங்கையின் ஏகாதிபத்தியவாதிகளாக தம்மை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சித்தனர்.

ஆனால், அதற்குள்ளிருந்த மைத்திரிபால சிறிசேனவை வெளியே எடுத்து அவரை ஜனாதிபதியாக்கி ரணில் விக்ரமசிங்க, மங்கள சமரவீர, சந்திரிகா பண்காரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட பெரும் கூட்டணி நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்தியது. இது மகிந்த ராஜபக்‌ஷ கூட்டணிக்கு பெரும் அடியாகவே அமைந்தது.

இந்தச் சூழ்நிலையையும் தமக்குச் சாதகமானதாக்க முடிந்த மகிந்த அணி மைத்திரியை தமது வலைக்குள் கொண்டுவந்து பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க வெளிநாடு சென்றிருந்த வேளையில், மகிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக்கிக் கொண்டது.

இந்த பதவி மாற்றத்தினை தவறு என்று நீதிமன்றம் சென்று நிரூபித்துக் கொண்ட ரணில் தரப்பு மகிந்த ராஜபக்‌ஷவின் பிரதமர் பதவியை இல்லாமல் செய்தது, 
அதன்பின்னர் உருவாக்கப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சித் தேர்தலில் தொடங்கி ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது. அதன்படி, கோட்டாபய  ராஜபக்‌ஷ பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிபெற்ற ஜனாதிபதியானார்.

பாராளுமன்றம் பெரும்பான்மைபலத்துடன் அமைக்கப்பட்டது. ஆனால், கோட்டாபய  ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் ஆட்சி நடவடிக்கைக் காலம் கொவிட் பெருந்தொற்றுக் காலமாக இருந்தது. அக்காலத்தில் அவர் மேற்கொண்ட முடிவுகள் பெரும் பொருளாதார நெருக்கடிகளைக் கொண்டுவந்தது. 

அதன் காரணமாக ‘அரகலய’ போராட்டம் வெடித்து கோட்டாபய - ராஜபக்‌ஷ அரசாங்கம் இல்லாமல் செய்யப்பட்டது. நாட்டுக்குள் இருக்கும் போது, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக அறிவித்தார்.

கோட்டாபய  ராஜபக்‌ஷ நாட்டை விட்டுத் தப்பியோடி தனது பதவி 
விலகலை நாட்டுக்கு வெளியே இருந்து கொண்டே அறிவித்தார். 

நாட்டுக்கு வெளியே சென்று பதவி விலகலை அறிவித்த பின்னர், பாராளுமன்றத்தின் ஊடாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானார். அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தியவர்கள், அரச சொத்துக்களைச் சேதப்படுத்தியவர்கள் என்ற குற்றச்சாட்டில் பலரை ரணில் ஆட்சிக்கு வந்ததும் கைது செய்தார், நடவடிக்கை எடுத்தார்.

அவ்வாறான செயற்பாடுகள் தவறு என்ற விமர்சனங்களை நாட்டுக்குள்ளும் வெளிநாடுகளிலும் உருவாக்கிக் கொண்டார். இருந்தாலும் அவற்றினை அவர் சமாளித்தும் கொண்டார்.  ஆட்சியை நடத்துதல், சட்டங்களை உருவாக்குதல், தேர்தல்களை நடத்தாது காலம் கடத்துதல் என நகர்ந்து கொண்டிருந்தார்.

அதன் பின்னர்தான் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான 
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இப்போது ஆட்சிக்கு வந்திருக்கிறது.
இந்த ஒழுங்கில் மகிந்த ராஜபக்‌ஷ தரப்பு யுத்தத்தினை முள்ளிவாய்க்காலில் புதைத்து மௌனிக்கச் செய்ததன்.

பின்னர் தமிழ்த் தரப்பு போர்க்குற்ற, இன அழிப்பு செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கைக்குத் தயாராகிக்கொண்டிருந்த வேளை, நல்லாட்சி என்ற பெயரில் ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, இணை அனுசரணை வழங்கியது, ஆனால், 

கோட்டாபய ஜனாதிபதியானதும் அதிலிருந்து விலகிக் கொண்டார். பின்னர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானதும் மீண்டும் காலத்தைத் தாமதப்படுத்த இராஜதந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.

அந்த வகையில்தான் கால இழுத்தடிப்பு நடைபெறுகிறது. அரசாங்கம் என்று பொதுவில் பார்த்தாலும் அரசாங்கங்களின் மாற்றத்தினை தமக்குச் சாதகமாக இலங்கை ஐக்கிய நாடுகள் சபையில் பயன்படுத்திக் கொண்டு 
வருகிறது. இப்போது மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தங்களுக்கான காலத்தை மனித உரிமைப் பேரவையில் கோரும் என்பதே நிச்சயமானது. 

இந்த நிச்சயத்தின் அடிப்படையைக் கொண்டுதான் செப்டெம்பருக்காக தமிழ்த் தரப்பு தயாராக வேண்டும் என்ற நிலைப்பாடு ஏற்பட்டிருக்கிறது. 
இலங்கை தொடர்பான விடயம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்டு காலம் தோறும் புதுப்புது தீர்மானங்கள் ஏற்படுத்தப்படுவதும்.

இலங்கை அரசு இணை அனுசரணை வழங்குவதும் காலங்கடத்துவதும் நடைபெறுகிறதே தவிர இற்றைவரை இத்தீர்மானங்கள் ஊடாக குறிப்பாக வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு  எந்த நன்மைகளும் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

இவ்வாறான சூழ்நிலையில், ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி, காலம் தாழ்த்தலுக்கான நகர்வை மேற்கொண்டிருந்தது. அதேபோன்று, தற்போதைய அரசாங்கம் பொருளாதார ஸ்திரத் தன்மையைக் காரணம் காட்ட முயற்சிக்கிறது.

மனித உரிமைகள் பேரவை அமர்வில் அரசின் கோரிக்கை சாதகமாகவே பரிசீலிக்கப்படும் என்பதற்கு அண்மையில் இலங்கையின் அரசியல், பொருளாதாரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை அவதானிப்பதற்காக நாட்டுக்கு வருகை தந்த மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் விஜயத்தின் முடிவில் வெளியிட்ட அறிக்கை இதற்கு ஒரு சாட்சியாகும்.

இதில் முக்கியம் என்னவென்றால், தமிழ் மக்களின்  தொடர்ச்சியான பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்கக் கூடிய ஆரோக்கியமான விடயங்கள் அந்த அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை என்பதுதான். 

நீண்டகாலமாக நாட்டில் புரையோடிப்போயிருக்கின்ற 
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்விற்குரிய பொறிமுறையை 
முன்வைக்காத அரசாங்கத்தின் உள்ளக பொறிமுறை என்ற கண்துடைப்பில்தான் சர்வதேசம் நம்பிக்கை கொண்டிருக்கிறதா? என்றும் இந்த இடத்தில் சந்தேகிக்கத் தோன்றுகிறது. 

அந்த வகையில்தான், கண்துடைப்புகளாலேயே காலத்தை நகர்த்தும் அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் தாமதித்த நீதி மறுக்கப்பட்ட நீதியாகவே கொள்ளப்பட வேண்டும் என்பதும் நினைவூட்டப்பட வேண்டும் என்பதும் முக்கியமானது.

உண்மை, நீதி, நல்லிணக்கம், மீள் நிகழாமை என வெளிப்பேச்சுக்கு நகரும் இலங்கை அரசின் உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டுவதற்கான சந்தர்ப்பமாக இந்த 2025 செப்டெம்பர் அமர்வினை தமிழர் தரப்பு பயன்படுத்துவது கட்டாயமானது. 

இலங்கை அரசாங்கம் கூறிவருகின்ற உள்ளகப் பொறிமுறையானது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையப் போவதில்லை. மாறாக, சர்வதேச பொறி முறைகள் ஊடாகவே தமிழ் மக்களுக்கான தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்பது தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தாலும் அது கவனிக்கப்படாததாக இருந்து வருகிறது. 

அதேநேரம், இலங்கைக்கு உள்ளேயும், சர்வதேசத்திலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்ற சர்வதேச பொறிமுறையை விடுத்து, இலங்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு உள்ளக நெறிமுறைகள் ஊடாகவே தீர்வினை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்துப்படி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்ரர் ரார்க் கருத்து வெளியிட்டமையானது, வெறுமனே ஒதுக்கி விடக்கூடியதொன்றல்ல. 

அத்துடன், இதுவே செப்டெம்பர் அமர்விலும் பிரதிபலிக்கும் என்பது தமிழர் தரப்புக்கு நினைவில் இருத்தல் வேண்டும். இதனை அடியொட்டியே வருகிற செப்டெம்பர்  மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கான நகர்வுகள் அமைதல் வேண்டும்.  பிரித்தானியர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் வழங்கப்பட்டமை முதல் இலங்கையில் தமிழ் மக்கள் எதிர் நோக்கிவருகின்ற பிரச்சினைக்குரிய தீர்வு உள்நாட்டு பொறிமுறை ஊடாக நிறைவேற்றப்படாது என்பதுவே உறுதியானது.

அதனைக் கடந்து, சர்வதேச நீதிப்பொறி முறையே பொருத்தப்பாடானது என்பதாக 
அந்த நிலைப்பாடு இருக்க வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .