2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தமிழ்த் தேசிய அரசியலில் ஒற்றுமையின்மை

Johnsan Bastiampillai   / 2022 ஒக்டோபர் 03 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

என். கே அஷோக்பரன்

twitter: @nkashokbharan

 

 

 

பலரும் எழுதி எழுதி சலித்துப் போனதொன்றை, மீண்டும் மீண்டும் எழுத வைப்பதுதான் தமிழ் அரசியல்வாதிகளின் சதி. ‘குன்றக் கூறல்; மிகைபடக் கூறல்; கூறியது கூறல்’ ஆகியவை குற்றம் என்கிறது நன்னூல். 

ஆனால், எப்படிச் சொன்னாலும், எத்தனை முறை சொன்னாலும் புரியாதது போலவே நடிக்கும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு, வேதாளத்தின் கேள்விகளும் பதில் சொல்லும் விக்கிரமாதித்தனாய், சற்றும் மனந்தளராது, மீண்டும் மீண்டும் கல் செதுக்குவது போல, அது உருப்பெறும் வரை செதுக்கிக்கொண்டே இருக்க வேண்டியது தார்மிகக் கடமையாகிறது.

இலங்கையில், தமிழ்த் தேசிய அரசியல் என்பது, தற்காப்புத் தேசியமாகவே உருவாகியது. அது, சிங்கள- பௌத்த பெரும்பான்மை இன-மத தேசியத்துக்கு எதிராக, அதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே, தமிழ்த் தேசியம், ஈழ மண்ணில் விதைகொண்டு, வேர்விட்டது. 

அதனால்தான், ஏ.ஜே வில்சன் உள்ளிட்ட ஆய்வாளர்கள், இதைத் ‘தற்காப்புத் தேசியம்’ என்கிறார்கள். சாதிகள் சேர்க்கையாக, சாதி ரீதியாகக் கட்டமைந்திருந்த தமிழ்ச் சமூகத்திடையே, ‘தமிழர்’ என்ற அடையாளத்தை முன்னிறுத்தி, அவர்களை ஆக்கிரமிப்புச் செய்ய, பேரினவாதத் தேசியம் முயன்றதன் எதிர்விளைவாக, அதே ‘தமிழர்’ என்ற தேசிய அடையாளத்தின் கீழ், தமிழ் மக்கள் ஒன்றிணைந்தமையை நாம் காணலாம். 

‘தமிழ்த் தேசியம்’, இலங்கைத் தீவின் அரசியலில் மட்டுமல்ல, தமிழ் மக்கள் என்ற இனக்கூட்டத்தின் கட்டமைப்பிலும் போக்கிலும் சிந்தையிலும் கூட, மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது. சாதி ரீதியிலான அடையாளத்தை மேவி, இனத்தேசிய அடையாளம் முன்னிறுத்தப்பட்டது. 

தமிழ்த் தேசியத்துக்கான தேவை, சிங்கள-பௌத்த தேசியத்தின் எழுச்சியால், அது ‘தமிழர்’ மீது ஏற்படுத்திய அடக்குமுறையால் எழுந்ததாகும். 

1956இல் இருந்து, தமிழ்மக்கள் ஏகோபித்து, தமிழ்த் தேசியத்துக்கான தமது அங்கிகாரத்தையும் மக்களாணையையும் வழங்கி வந்திருக்கிறார்கள். இது, ஆறு தசாப்த காலத்துக்கும் மேலான, தமிழ் மக்களின் மக்கள் விருப்பத்தைப் பறைசாற்றி நிற்கிறது. கருத்தியல் வாதங்களால், இந்த யதார்த்தத்தை, மறுத்துவிட முடியாது. 

இதனால்தான், திம்பு கோட்பாடுகளின் முதல் கோட்பாடான, ‘இலங்கை தமிழர், ஒரு தேசமாக அங்கிகரிக்கப்பட வேண்டும்’ என்பது, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளில் முதன்மைமிக்கதாக இருக்கிறது.

இந்த முழக்கத்தை அடிப்படையாகக் கொண்டுதான், தமிழ்த் தேசிய கட்சிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழ்த் தேசிய கட்சிகளிடையே, கருத்தியல் ரீதியிலான முரண்பாடு என்பது, தமிழ்த் தேசிய கொள்கையின் தீவிரத்தன்மை சார்ந்ததாகவே இருக்கிறதேயன்றி, தமிழ்த் தேசிய அடிப்படைகளை, குறைந்த பட்சம், தமது உத்தியோகபூர்வ கொள்கைப் பிரகடனங்களில் ஒரே மாதிரியானதாகவே பறைசாற்றி வருகின்றன. 

அப்படியானால், ஏன் அவற்றால் ஒற்றுமையாகச் செயற்பட முடியவில்லை? இதற்கு, குறைந்த பட்சம் இரண்டு காரணங்களை அடையாளம் காணலாம். 

முதலாவது, கொள்கை தொடர்பான நேர்மையின்மை. 

இரண்டாவது, சுயநலம். 

தமிழ்த் தேசியம் என்பதையும் அதன் அடிப்படைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பனவற்றையும் முன்னிறுத்தி, தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவற்றைக் குறிப்பிட்டு, அந்தத் தமிழ்த் தேசியத்தின் பாதுகாவலர்களாகத் தம்மை முன்னிறுத்தும் அரசியல்வாதிகள், தமிழ்த் தேசியத்தை வாக்குப் பெறுவதற்கான ஒரு சாதனமாகவே பார்க்கிறார்களேயன்றி, அதன் மீதான உண்மைப் பற்றுதல் அவர்களுக்கு இல்லை. 

அடிப்படையில் தாராளவாதிகளான சிலர் கூட, இன்று தமிழ்த் தேசியத்தின் தலைமைகளாகத் தம்மை முன்னிறுத்துகிறார்கள். அவர்களுக்கு, ‘தமிழ்த் தேசியம்’ என்பது வாக்குப் பெற்று, தமக்கான பாராளுமன்ற பதவி பெறுவதற்கான ஒரு கருவி; அவ்வளவுதான்!

தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் கட்சியில், அதன் விஞ்ஞாபனத்தின் கீழ், தமிழ்த் தேசிய ஆதரவு வாக்குகளைப் பெற்றும், தமிழ்த் தேசத்தின் பிரதிநிதிகளாகத் தெரிவானவர்கள், தமிழ்த் தேசியத்தை விடுத்து, சிவில் தேசிய அரசியல்வாதிகளாகத் தம்மைப் பாவித்துக் கொண்டும் வருகிறார்கள். 

ஒருவர் அடிப்படையில், சிவில் தேசியத்தை விரும்பும் தாராளவாதியாக இருக்க விரும்பினால், நல்லது! அவர் அதைச் செய்யலாம். ஆனால், நேர்மை என்பது, அதை நேர்மையாக மக்களிடம் சொல்லி, அந்தக் கொள்கையை முன்னிறுத்தும் கட்சியில் இணைந்து, அந்தக் கொள்கையை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட்டு, அந்தக் கொள்கைக்கு மக்களாணை கிடைத்தால், அதைப் பெற்றுக்கொண்டு, அந்தக் கொள்கைப்படி நடப்பதாகும். 

ஆனால், தேர்தல் வெற்றிக்கு தமிழ்த் தேசியம்; வென்ற பின்னர், தாரளவாத சிவில் தேசியம் என்பதெல்லாம், அடிப்படையில் நேர்மையற்ற செயல். இதுதான் இன்று, தமிழ்த் தேசிய அரசியலின் சாபக்கேடாக மாறியுள்ளது. 

தமிழ்த் தேசியத்தின் நன்மைகளை எல்லாம் பெற்றுக்கொண்டு, தமிழ்த் தேசியத்துக்கு விரோதமாகச் செயற்படும் குழாமொன்று, தமிழ்த் தேசிய அரசியலை ஆக்கிரமித்துள்ளதன் விளைவுதான், இன்று தமிழ்த் தேசிய அரசியலுக்குள் உட்கட்சி முரண்பாடுகள் வலுத்துள்ளன. 

தமது சுயநல அரசியலுக்காக, கொள்கை ரீதியான வாதப்பிரதிவாதங்களுக்குப் பதிலாக, தமிழ்த் தேசிய அரசியலைத் தனிநபர்கள் பற்றிய ‘குழாயடிச் சண்டை’க்களமாக மாற்றி இருக்கிறார்கள். இதன் விளைவுதான் இன்று தமிழ்த் தேசிய அரசியல், நடுச்சந்தியில் நாறிக்கொண்டு கிடக்கிறது.

“தேசம் என்பது, ஓர் உணர்வாகும். இறுதியாக நாம், ஒரு தேசத்தின் உறுப்பினர்களானவர்கள், உணர்ச்சிப் பெருக்குடனும் ஏகமனதாகவும் தம்மை ஒரு தேசமாக நம்புவதால், நாம் அதைத் தேசமென்று கருதமுடியும்” என்கிறார் றாம்சே மயர். இந்த உணர்வு, அடிப்படையிலேயே இல்லாதவர்கள், எப்படி அந்தத் தேசத்தின் பிரதிநிதிகளாக முடியும்? 

தாராளவாதம், இன-மதத் தேசியவாதத்துக்கு முற்றிலும் முரணானது. அது இன-மதத் தேசியவாதத்தை நிராகரிக்கின்றது. ஆகவே, ஒருவர் தாராளவாதியாகவும் இன-மதத் தேசியவாதியாகவும் இருக்க முடியாது. தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசிய முகம்; தெற்குக்கும் சர்வதேசத்துக்கும் தாராளவாத முகம் என்று இருப்பவர்கள், ஒருபோதும் இரண்டுக்கும் நேர்மையாக இருக்க முடியாது. 

ஆகவே, தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தாராளவாதிகளின் ஆதிக்கம், தமிழ்த் தேசிய அரசியலுக்குப் பெரும் சவாலாக மாறியிருக்கிறது. இங்கு, கொள்கை வாதப்பிரதிவாதங்களைத் தவிர்த்து, தனிநபர்கள் பற்றிய ‘குழாயடிச் சண்டை’களுக்கும் இதுவே வழிவகுப்பதாக இருக்கின்றது. இதைத் தமிழ் மக்கள் உணர வேண்டியது அவசியம்.

மறுபுறத்தில், கொள்கை ஒன்றாக இருந்தாலும், தேர்தல், பதவி என்ற சுயநல காரணங்கள் எப்போதும் தமிழ்த் தேசிய அரசியலைத் துண்டாடி வந்திருக்கிறது. இன்றைக்கு தமிழ்த் தேசிய அரசியலில், தமிழ்த் தேசியவாதிகளிடையே ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகள் இதன்பாற்பட்டவை ஆகும்.

யார் தலைவர், யாருக்குப் பதவி என்ற அடிபாடுகளுக்காகப் பிரிந்து, ஒரு கொள்கையில் ஒன்றுபட்டிருந்த ஆதரவாளர்களை, தனிநபர்களின் சண்டைகளுக்காக, தனிநபர்களின் ஆதரவாளர்களாக மாற்றி, ஒருவரை இன்னொருவர் தூசித்துக்கொண்டும், அடிதடிப்பட்டுக் கொண்டும் தம்மைத் தாமே அசிங்கப்படுத்திக் கொண்டும் இருக்கிறார்கள்.

தமிழ்த் தேசிய அரசியலின் பலம் என்பது, அதற்கு மாற்றான எல்லாத் தரப்புக்கும் மிகச்சவாலன ஒன்றாகும். ஆகவே, தமிழ்த் தேசிய அரசியலைப்  பலவீனப்படுத்துவது என்பதே, தமிழ்த் தேசிய அரசியலுக்கு மாற்றான சக்திகளின் பிரதான குறிக்கோள்களில் ஒன்றாகும். 

தமிழ்த் தேசிய அரசியலில் ஒற்றுமை இன்மையென்பது, தமிழ்த் தேசிய அரசியலைப் பலவீனப்படுத்துவதை இலகுப்படுத்துவதாகவே அமைகிறது. ஒரு குறிப்பிட்ட கொள்கையை முன்னிறுத்தும் தலைவர்கள் மீது மக்கள் நம்பிக்கையிழக்கும் போது, அந்தக் கொள்கை மீதும் மக்கள் நம்பிக்கை இழக்கத் தொடங்குகிறார்கள். 

தமிழ்த் தேசிய அரசியலின் உட்கட்சிச் சண்டைகளும் பூசல்களும், வேறுபட்ட குழுக்களிடையேயான ‘குழாயடிச் சண்டை’களும், தமிழ்த் தேசியம் மீது தமிழ் மக்களுக்கு சலிப்பை உண்டாக்குவதாகவும் வெறுப்பை உருவாக்குவதாகவும் அமைகிறது. 

அப்படியானால், இது தமிழ்த் தேசியத்தை பலவீனப்படுத்த எண்ணும் சக்திகளுக்கே சாதகமாக அமைந்துவிடுகிறதல்லவா! ஆகவேதான், தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் சக்திகள், விழித்துக்கொள்ள வேண்டிய காலம் என ‘பள்ளியெழுச்சி’ பாடப்படுகின்றது.

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், மீண்டும் உண்மையான தமிழ்த் தேசிய அமைப்புகளிடையே பலமானதோர் ஒற்றுமை கட்டியமைக்கப்பட வேண்டியமை, காலத்தின் தேவையாக எழுந்திருக்கிறது. இதைத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் சரிவரச் செய்யாது விட்டால், தமிழ்த் தேசியத்தின் மீது தமிழ்த் தேசம் நம்பிக்கை இழந்துவிடும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .