2025 மே 16, வெள்ளிக்கிழமை

தமிழகத்துக்கு வந்த மோடியும் சோனியாவும்

Thipaan   / 2016 மே 09 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும், தமிழகத் தேர்தல் பிரசாரத்துக்கு வந்து திரும்பியிருக்கின்றனர். 'மத்திய அரசின் முயற்சிகளுக்கெல்லாம் அ.தி.மு.க அரசாங்கம் துணை போகிறது' என்று, சென்னை தீவுத் திடலில் வைத்து அ.தி.மு.கவின் மீது தாக்குதல் தொடுத்தார் சோனியா காந்தி. அந்த மேடையில் அமர்ந்திருந்த கருணாநிதியோ, 'இந்திராவின் மருமகளே வருக, இந்தியாவின் திருமகளே வெல்க' என்று, முதன் முதலில் சோனியா அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தது நான் தான் என்று உருக்கமாகப் பேசினார். காங்கிரஸுக்கும்

தி.மு.கவுக்கும் இடையில் இருந்த கசப்புணர்வை நீக்க, 'அ.தி.மு.க மீதான தாக்குதலை' சோனியா காந்தியும் 'காங்கிரஸின் மீதான பாராட்டை' தி.மு.க தலைவர் கருணாநிதியும் அரங்கேற்றினார்கள்.

தமிழக அரசியலில் 'காங்கிரஸும் தி.மு.கவும் இயற்கைக் கூட்டாளிகள்' என்ற வாதத்துக்கு வலுச் சேர்க்கவே இப்படிப் பிரசாரம் செய்தனர். அதைத் தொடர்ந்து, மதுரை மாநகரில் தி.மு.க பொருளாளர் மு.க. ஸ்டாலினும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் ஒரே மேடையில் காட்சியளித்தனர். இப்படி, 'சோனியாவும் கருணாநிதியும்' ஒரு மேடை, 'ராகுலும் ஸ்டாலினும் வேறு ஒரு மேடை' என்று தி.மு.க - காங்கிரஸ் பிரசாரத்தை எடுத்துச் செல்கின்றனர். இந்த அணி உருவாக்கியிருக்கும் தேர்தல் களம் இப்படிச் சென்று கொண்டிருக்கிறது.

அதேவேளை, மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாரதிய ஜனதாக் கட்சி, அ.தி.மு.கவுடன் கூட்டணி இல்லாத நேரத்தில் கூட, அ.தி.மு.கவை விமர்சிப்பதில் படு குழப்பத்தில் மூழ்கிக் கிடக்கிறது. பா.ஜ.கவின் தேசிய தலைவர் அமித் ஷா 'தமிழகத்தில் நடப்பது போன்ற ஊழல் ஆட்சி, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடக்கவில்லை' என்றார். அது, அ.தி.மு.க மீதான கடுமையான தாக்குதலாகத் தெரிந்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரத்தை தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், பிரசாரத்துக்கு வந்த மோடி, 'காங்கிரஸ் தாக்குதலை தொடுத்தார்' '2-ஜி அலைக்கற்றை விவகாரத்தைத் தொட்டார்'. ஆனால், அ.தி.மு.கவின் ஊழல் புகார்கள் குறித்து வாய் திறக்கவில்லை. இத்தனைக்கும் மோடி வருவதற்கு முன்பே 'கரூரிலுள்ள அ.தி.மு.க பிரமுகர் ஒருவரது வீட்டிலிருந்து, கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டமை குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்' என்று தி.மு.க தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார். அதைத் தொடர்ந்து, அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர், மோடியைச் சந்தித்து தனியாக ஒரு மனுவையும் கொடுத்தனர். ஆனாலும் அது பற்றியெல்லாம் பிரதமர் மோடி தமிழகத்தில் பேசவில்லை. அவருடைய எண்ணவோட்டமும் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவின் பேச்சும் ஏறக்குறைய ஒரே மாதிரி அமைந்திருக்கின்றன.

காரணம், அ.தி.மு.கவுக்கு லோக்சபாவில் இருக்கும் 37 எம்.பிக்களும் ராஜ்ய சபையில் இருக்கும் 12 எம்.பிக்களும் நமக்கு ஆதரவு தருவார்கள் என்றும், அ.தி.மு.கதான் பா.ஜ.கவுக்கு இயற்கையான கூட்டணி கட்சி என்றும் டெல்லி பா.ஜ.க தலைவர்கள் கருதுகிறார்கள். நாடாளுமன்றத்தில் பா.ஜ.கவுக்கே அறுதிப் பெரும்பான்மை இருக்கிறது. அ.தி.மு.கவின் 37 எம்.பிக்களின் ஆதரவு தேவையில்லை என்ற நிலை.

ஆனால், ராஜ்ய சபையில் அ.தி.மு.கவின் 12 எம்.பிக்கள் ஆதரவு இருந்தாலும் எந்த மசோதாவும் நிறைவேறாது என்ற நிலை. கடந்த காலத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்குத் திருத்தம் கொண்டு வந்த போதே, அ.தி.மு.க, பா.ஜ.கவுக்கு ஆதரவாக வாக்களித்தது. ஆனாலும் எதிர்கட்சிகள் கொண்டு வந்த அந்த திருத்தம் ராஜ்ய சபையில் நிறைவேறியது.

பின்னர் ஏன், அ.தி.மு.கவை பிரதமர் நரேந்திர மோடி 'ஊழல் பற்றி' விமர்சிக்காமல் சென்றார். இதன் பின்னணியிலும் அரசியல் இருக்கிறது. தமிழகத் தேர்தல் நிலைவரம் பற்றி, அடுத்தடுத்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 'லயோலா கல்லூரி' மாணவர்கள் அமைப்பு மூலம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் தி.மு.க கூட்டணி முந்துகிறது என்ற முடிவுகளை வெளியிட்டார்கள். 'தினமலர்- நியூஸ் 7' வெளியிட்ட கருத்துக்கணிப்பிலும் தி.மு.கவுக்கே ஆதரவு இருக்கிறது என்ற முடிவினை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, அ.தி.மு.கவின் கோட்டையாக கருதப்பட்டு வந்த தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலேயே (கோவை உள்ளிட்ட மாவட்டங்கள்) அ.தி.மு.கவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்று வரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க தலைமையை யோசிக்க வைத்துள்ளன.

2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பின்னால், அ.தி.மு.க தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியாவிட்டால், தி.மு.க தலைமையில் அமையும் ஆட்சியின் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க அ.தி.மு.கவுக்கு மத்தியில் உள்ள பா.ஜ.க அரசாங்கம் தேவை என்று கருதுகிறார்கள். டெல்லி பா.ஜ.க தலைவர்களும் சரி, பிரதமர் நரேந்திர மோடியுமே கூட இந்த எண்ணவோட்டத்தில் இருப்பதாகவே தெரிகிறது. அது தவிர, அ.தி.மு.க வாக்காளர்கள் தங்களுக்கு இயற்கையாக வரும் வாக்காளர்கள் என்றும் பா.ஜ.கவினர் கருதுகிறார்கள். இதுபோன்ற சிந்தனையில் இருக்கும் பா.ஜ.கவினர் இப்போதைக்கு அ.தி.மு.கவை விமர்சிக்காமல் இருப்பது இரு வகையில் உதவும் என்று கணக்கு போடுகிறார்கள்.

ஒன்று, 2016 தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், ராஜ்ய சபையில் அ.தி.மு.கவின் ஆதரவை 'நம் கையில் இருக்கும் எம்.பிக்கள்' போல் கருதலாம். எப்படிப்பட்ட நெருக்கடியான நேரத்திலும் பா.ஜ.கவுக்கு அ.தி.மு.கவினர் துணை நிற்க வேண்டிய கட்டாயம் வரும். இன்னொன்று, எதிர்காலக் கூட்டணி. தமிழகத்தில் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவால் வெற்றிக் கூட்டணி அமைக்க முடியவில்லை.

தி.மு.கவுடனோ அ.தி.மு.கவுடனோ கூட்டணி வைக்க முடியாததால், பா.ஜ.கவால் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரை மட்டுமே பெற முடிந்தது. அந்தக் கூட்டணியையும் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. இப்போது சட்டமன்ற தேர்தலில், பா.ஜ.கவுக்கு ஏறக்குறைய கூட்டணிகளே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. தி.மு.கவும் அ.தி.மு.கவும், மத்திய அரசின் உதவி நிச்சயம் தேவை என்ற ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கின்றன. பிரதமர் மோடி மத்தியில் வலுவான அரசின் தலைவராக இருக்கிறார். ஆனாலும் அவரால் தி.மு.கவுடனும் கூட்டணி ஏற்படுத்த முடியவில்லை. அ.தி.மு.கவுடனும் கூட்டணியை உருவாக்கிட முடியவில்லை.

இந்த நிலை 2019 நாடாளுமன்ற தேர்தலில் வரக்கூடாது என்று பா.ஜ.கவினர் கருதுகிறார்கள். ஏன் டெல்லியில் உள்ள மேல்மட்டத் தலைவர்களுக்குக் கூட, இந்தச் சிந்தனை இருக்கிறது.  2014 நாடாளுமன்ற தேர்தலுக்கும் 2019 நடக்கப் போகும் தேர்தலுக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் இருக்கும். முதலில், சென்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு இருந்த செல்வாக்கு 2019லும் தொடரும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றன. டெல்லி சட்டமன்றத் தேர்தல் தோல்வி, பீஹார் சட்டமன்றத் தேர்தல் தோல்வி எல்லாம் இந்த பாதையை நோக்கிச் செல்கிறது.

ஏன் இப்போது நடக்கும் மேற்கு வங்கம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களில் கூட ஆட்சியை பிடிப்பதற்கோ, எம்.எல்.ஏ-க்கள் அக்கவுன்ட் ஓப்பன் பண்ணுவதற்கோ, பா.ஜ.க போராடிக் கொண்டுதான் இருக்கிறது. ஆகவே, 2019ல் பா.ஜ.கவுக்கு வலுவான கூட்டணி அமைய வேண்டும் என்ற நிலையில்தான் இன்றைய இரண்டு ஆண்டு கால பா.ஜ.க ஆட்சி இருக்கிறது. 'வருமுன் காப்போம்' என்ற அடிப்படையிலேயே பிரதமர் மோடி அ.தி.மு.கவை விமர்சிக்காமல் விட்டுச் சென்றுள்ளார்.

அதே நேரத்தில், இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக உருவாகிய அணிகள், சிலந்தி வலைச் சிக்கலில் மாட்டிக் கொண்டு நிற்கின்றன. விஜயகாந்த், வைகோ உள்ளிட்டோரின் அணி வெகு தூரம் வாக்காளர்களை கவர்ந்து விடவில்லை. அக்கூட்டணியின் தலைவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை அக்கூட்டணி கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கோ, தொண்டர்களுக்கோ வரவில்லை என்பதன் அடையாளம் தேர்தல் களத்தில் தெரிகிறது.

அதேபோல், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் டொக்டர் அன்புமணிக்கே பெண்ணாகரம் தொகுதியில் சவால் காத்திருக்கிறது என்று வெளிவந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் அக்கட்சிக்கு 'நற்செய்தி' சொல்லவில்லை. நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சீமானுக்கே, 5 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள்தான் அந்த தொகுதியில் கிடைக்கிறது என்பது, 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் அவர் கட்சிக்கு ஏமாற்றமாகவே இருக்கிறது. அ.தி.மு.கவை எதிர்ப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் தவிக்கும் பா.ஜ.கவுக்கும், தமிழக வாக்காளர் மத்தியில் சாதகமான முடிவுகள் - குறைந்த பட்சம் சட்டமன்றத்துக்குள் நுழைவதற்கு சில சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற வாய்ப்பு கிடைக்குமா என்பது, மில்லியன் டொலர் கேள்வியாக இருக்கிறது.

இந்தத் தேர்தல் முடிவுகள் இறுதியில் தமிழகத்தில் 'மாற்று அணி' என்ற முழக்கத்துக்கு இன்னொரு இடைவெளியை உருவாக்கி விடும் என்றே கள நிலவரங்கள் தெரிய வருகின்றன. 1989இல் தொடங்கிய 'இரு திராவிட கட்சிகளுக்கும்' மாற்று என்ற முழக்கத்தின் முனை, 2016லும் மழுங்கிக் கொண்டிருக்கிறது என்பது தமிழகத்தின் எதிர்கால ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஏற்றதல்ல. ஆனால், அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு கட்சிகளையும் எதித்துக் களம் காண வலுவுள்ள தலைமையில் ஒரு கட்சி இன்னும் தமிழகத்தில் உருவாகவில்லை என்ற எதார்த்தம் இந்த தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கப் போகிறது. மீண்டும் தமிழகத்தில் 'அ.தி.மு.கவுக்கு தி.மு.க மாற்று' 'தி.மு.கவுக்கு அ.தி.மு.க மாற்று' என்ற 40 ஆண்டு காலச் சரித்திரம் தொடரும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .