Thipaan / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழர் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன், திடீர் திடீரென்று புதிய குண்டுகளைத் தமிழகத் தேர்தல் களத்தில் வீசி வருகிறார். அதுவும் 'திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி' என்று அறிவித்த பின்னர், திடீரென்று இலங்கைப் பிரச்சினையை முன் வைத்து, அவர், அரசியல் களத்தை திசை திருப்புகிறார். முதலில் 'பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அவர் இறுதிப் போருக்கு சில தினங்களுக்கு முன்பே இலங்கையிலிருந்து வெளியேறி விட்டார்' என்றார்.
பின்னர், இப்போது 'இலங்கைத் தமிழர் பிரச்சினைதான் சென்ற 2011 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியை தோற்கடித்தது. அதே பிரச்சினை இந்த தேர்தலிலும் அவர்களுக்கு பாதகமாக இருக்கும்' என்று அறிவித்து, 'இலங்கைத் தமிழர் பிரச்சினை வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பிரதானப் பிரசாரமாக இருக்கும்' என்று அறிவித்துள்ளார்.
பழ. நெடுமாறன் பேட்டியும் பின்னணியும்:
அமைதியாக இருந்த பழ. நெடுமாறனின் இந்த அறிவிப்பின் பின்னனியில், 'தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியை' மீண்டும் இலங்கைத் தமிழர் பிரச்சினையை முன் வைத்து தோற்கடிக்க வேண்டும் என்ற திட்டம் உருவாகியிருப்பது தெரிய வருகிறது. தமிழகத்தில் 2009 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக 'இலங்கைத் தமிழர் பிரச்சினை' கடுமையாக பிரசாரம் செய்யப்பட்டது. அந்தக் கட்சி தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றாலும் அந்த பிரசாரத்தால் பாதிக்கப்பட்டது காங்கிரஸ் கட்சிதான். 16 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு, 8 இடங்களில் மட்டுமே தமிழகத்தில் வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட அந்த தோல்வியை ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாவது முறை (2009- 2014) ஆட்சிக்கு வந்த போது தி.மு.கவுடனான உறவில் கசப்புணர்வை உருவாக்கியது.
2011ல், 2 ஜி அலைக்கற்றை விவகாரம் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியின் தோல்விக்கு மிக முக்கியக் காரணம் என்றாலும், டொக்டர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி, திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவையுடன் தி.மு.க அமைத்த 'பொருந்தா கூட்டணி' மிக முக்கியக் காரணம். அதே சமயத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்தியிலிருந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடந்து கொண்ட விதம், இலங்கைத் தமிழர்கள் போரில் கொல்லப்பட்டது உள்ளிட்டவை பற்றிய தீப் பறக்கும் பிரசாரம் காங்கிரஸ் கட்சியை 'தமிழர் விரோத கட்சி' என்ற நிலையை ஏற்படுத்தியது.
தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது, தமிழகம் சார்ந்த காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை, பாலாறு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு தமிழக பிரச்சினைகளில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசு அப்போது கை கொடுக்கவில்லை என்ற கோபம் தமிழக மக்களுக்கு இருந்தது. எல்லாம் சேர்ந்து தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியை 2011 சட்டமன்ற தேர்தலிலும் தோற்கடித்தது. இலங்கைத் தமிழர் பிரச்சினையும் அக்கூட்டணி தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக அப்போது விளங்கியது.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பா.ஜ.க அணுகுமுறை
அந்த அடிப்படையில்தான் இப்போது மீண்டும் இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழக சட்டமன்ற தேர்தலில் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பிருக்கிறது. தமிழக பிரச்சினைகளிலும் சரி, இலங்கைத் தமிழர் பிரச்சினைகளிலும் சரி, ஒரு சில முன்னேற்றத்தை தவிர, இப்போது மத்தியில் உள்ள பாரதிய ஜனதாக் கட்சியின் மத்திய அரசுக்கும், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தமிழக வாக்காளர்கள் கருதவில்லை. இலங்கைத் தமிழருக்கான அனைத்து பிரச்சினைகளிலும் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கைகள்தான் இப்போதுள்ள பாரதிய ஜனதாக் கட்சியின் அரசின் கொள்கையாகவும் இருக்கிறது.
தமிழக பிரச்சினைகளில் கூட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும், பாரதிய ஜனதா கட்சி அரசுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. காவேரி பிரச்சினையோ, ஜல்லிக்கட்டு பிரச்சினையோ, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்த பிரச்சினையோ, எதிலும் பா.ஜ.க அரசில் அதிரடி மாற்றங்கள் இல்லை. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் மீதான வெறுப்பு தமிழகத்தில் குறைந்துள்ளது என்பதே இப்போது தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி அமைந்துள்ளதற்கு மிக முக்கிய காரணம்.
ஆனாலும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸும், தி.மு.கவும் இரட்டை வேடம் போட்டன என்ற குற்றச்சாட்டை வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், நாம் தமிழர் கட்சி சீமான், இப்போது தமிழர் தேசிய முன்னனி ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் ஆகியோர் பேசி வருகிறார்கள்.
'தனி ஈழம் பற்றி' வைகோ தலைமையில் அமைந்துள்ள மக்கள் நலக் கூட்டணியின் 'குறைந்த பட்ச செயல் திட்டத்தில்' இடம்பெறவில்லை. பேரறிவாளன் விடுதலை உள்ளிட்ட பல விஷயங்களில் இங்குள்ள கட்சிகள் வெறும் அறிக்கை விடுவதோடு நிறுத்திக் கொண்டன. 'மத்திய அரசின் அனுமதியில்லாமல் இவர்களை எல்லாம் மாநில அரசு விடுதலை செய்ய முடியாது' என்று இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், தமிழக அரசிடமிருந்து மத்திய அரசுக்கு இவர்கள் விடுதலை பற்றி தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அதி தீவிர பிரசாரங்கள் இல்லை. அனைத்து அரசியல் கட்சிகளுமே இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அதிக அக்கறை எடுத்து பிரசாரம் செய்யாமல் இருந்த நேரத்தில் அமைந்துள்ள 'தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி' மீண்டும் இலங்கைத் தமிழர் பிரச்சினையை தமிழக தேர்தல் பிரசாரக் களத்தில் முதன்மைப்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. அதனால்தான் பழ. நெடுமாறன் போன்றோர் 'இத் தேர்தலில் இலங்கைத் தமிழர் பிரச்சினையின் தாக்கம்' இருக்கும் என்று அறிவித்துள்ளார்.
'கிங்கா, கிங் மேக்கரா'
இது ஒரு புறமிருக்க, தி.மு.க சார்பில் 'மீடியா போர்' ஆரம்பித்து விட்டார்கள். தமிழக பத்திரிகைகளிலும், டி.வி.களிலும் 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா' என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சாடும் விளம்பரங்கள் தினசரிக் காட்சிகளாக இருக்கின்றன. காங்கிரஸ் கூட்டணி அமைந்தவுடன் விஜயகாந்த் தி.மு.கவுடன் வருவார் என்று எதிர்பார்த்தார்கள். அவர் காஞ்சிபுரத்தில் நடத்திய மாநாட்டில் அறிவிப்பார் என்று எண்ணினார்கள். ஆனால், 'கூட்டணிக்காக உங்களை யாருடனும் அடகு வைக்க மாட்டேன்' என்று தன் தொண்டர்களின் மத்தியில் பேசிய விஜயகாந்த், 'யாருடன் கூட்டணி' என்பதை சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறார்.
'நான் கிங் ஆக இருக்க வேண்டுமா அல்லது கிங் மேக்கராக இருக்க வேண்டுமா?' என்ற கேள்வியை மாநாட்டில் இருந்த தொண்டர்களிடம் கேட்டு, அவர்கள் 'நீங்கள் கிங்காக இருக்க வேண்டும்' என்று கூற, 'நான் கிங்காக இருந்தால் நீங்களும் கிங்காக இருப்பீர்கள்' என்று பேசி எந்த கூட்டணி அறிவிப்பும் இல்லாமல் மாநாட்டை முடித்து விட்டார்.
மூன்று கட்சிகள் விஜயகாந்தை இழுக்க வியூகம் அமைத்து செயல்படுகின்றன. '100 சட்டமன்ற தொகுதிகளைக் கொடுத்து, முதலமைச்சர் வேட்பாளராகவும் விஜயகாந்தை அறிவிக்க' மக்கள் நலக் கூட்டணி தயார் என்று கூறி விட்டது. அதே போல் 'விஜயகாந்த் கிங்காக இருப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை' என்று பா.ஜ.கவின் தேசிய செயலாளர் முரளிதரராவ் அறிவித்துள்ளார். தி.மு.க தரப்பில் விஜயகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவரது நிபந்தனை என்ன, தி.மு.க எந்த நிபந்தனைகளுக்கு சம்மதிக்கிறது என்பது குறித்து வெளிப்படையான விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.
ஆனால், தனக்கு அரசியல் ரீதியாக எது இலாபம் என்பதில் விஜயகாந்த் தெளிவாக இருப்பது போலவே அவரது நடவடிக்கைகள் தெரிகின்றன. பா.ஜ.கவுடனும், மக்கள் நலக்கூட்டணியுடனும் விஜயகாந்த் கூட்டணி வைத்தால் அதனால் வெற்றி கிடைக்குமா என்பது மில்லியன் டொலர் கேள்வியாக இருக்கிறது.
தி.மு.க கூட்டணியை நோக்கி விஜயகாந்த்?
அதே சமயத்தில் தி.மு.கவுடன் கூட்டணி வைக்கும் வாய்ப்பு விஜயகாந்த்துக்கு இருக்கிறது. அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் அனைவருமே இதை விரும்புகிறார்கள். அதனால்தான் தொண்டர்களின் விருப்பத்துக்கு மதிபபளித்து காஞ்சிபுரம் மாநாட்டில் தி.மு.கவை விஜயகாந்த் விமர்சிக்கவில்லை. அது மட்டுமல்ல, 25 நாட்களாக தி.மு.கவை விஜயகாந்த் நேரடியாக விமர்சித்து அறிக்கையோ, பேட்டியோ கொடுக்கவில்லை. அ.தி.மு.க மீது அடுத்தடுத்து கண்டன அறிக்கைகளை, பேட்டிகளை கொடுத்து வருகிறார். இதிலிருந்து 'வெற்றிக் கூட்டணி என்றால் அது தி.மு.கவுடன் போவதுதான் சரியாக இருக்கும்' என்று விஜயகாந்த் எண்ணுவதே போலவே அவருடைய நடவடிக்கைகள் வெளிப்படுகின்றன.
கூட்டணிகள் அமைந்ததும் தேர்தல் களத்தில், இலங்கைத் தமிழர் பிரச்சினையை தி.மு.க- காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளுமே முன்னெடுக்கும் என்றே தெரிகிறது. குறிப்பாக பா.ஜ.கவே கூட காங்கிரஸை இந்த விடயத்தில் விமர்சிக்கலாம். அ.தி.மு.க கடுமையாகவே காங்கிரஸை சாடலாம்.
மதிமுக போன்ற கட்சிகள் வீறு கொண்டு காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்யலாம். ஆக மொத்தம் கூட்டணி முடிவிற்காக 'இலங்கைத் தமிழர் பிரச்சினை' காத்திருக்கிறது. தெளிவான கூட்டணி காட்சிகள் அரங்கேறிய பின்னர் இன்னொரு சுற்றில், தமிழக தேர்தல் களத்தில் மூன்றாவது முறையாக இலங்கைத் தமிழர் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும் என்றே தெரிகிறது.
20 minute ago
26 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
26 minute ago
1 hours ago