2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

திருப்பி அனுப்பப்படும் ரோஹிங்யா அகதி மக்கள்

Editorial   / 2025 ஜனவரி 10 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன்
 
பர்மா என்ற பண்டைய பெயரையுடைய மியன்மாரில் நடைபெற்று வரும் கடும்போக்கு வாதிகளின் அச்சுறுத்தலால், தங்களது வாழ்விடங்களை இழந்து, உயிரை மாத்திரமேனும் காத்துக்கொள்ளும் வகையில் ஆபத்தான கடல் மார்க்கப் பயணத்தின் மூலம் இலங்கை வரும் ரோஹிங்ய மக்கள் தொடர்ச்சியாக

திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
2024 டிசெம்பரில் வந்தவர்களும் திருப்பி அனுப்பப்படுவார்கள். என்ன வித்தியாசம் என்றால் கடந்த தடவைகளில் ஐ.நாவின் அகதிகளுக்கான அலுவலகம் இங்கிருந்தது. இப்போது அது இல்லை.
    இலங்கையில் இனக் கலவரங்கள் ஏற்பட்ட காலங்களிலும், யுத்தம் நெருக்கடியான வேளைகளிலும் இந்தியா உள்ளிட்ட அயல் நாடுகளை நோக்கி இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்தனர். அங்கிருந்தும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருக்கின்றனர். கடல் பயணமாக அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் இலங்கைத் தமிழர்கள் சென்றுள்ளனர். இப்போது அவ்வாறான பயணங்கள் ஓய்ந்து விட்டது. என்றாலும், அவுஸ்திரேலிய அரசாங்கம் சட்டவிரோத பயணங்கள் பற்றிய விளம்பரங்களை மேற்கொண்ட வண்ணமே இருக்கிறது.

இந்த நிலையில்தான், கடந்த வருட இறுதியில் கடல் வழியாக மியன்மாரிலிருந்து முல்லைத்தீவு வந்தடைந்த ரோஹிங்ய அகதிகளை உரிய சட்ட நடைமுறைகள் மற்றும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் அவர்களைச்  சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பி வைப்பது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அமைச்சர் ஆனந்த விஜேபால கருத்தொன்றை வெளியிட்டிருந்தார். இந்தக் கருத்தானது பல சந்தேகங்களைத் தோற்றுவித்திருப்பதுடன், அரசாங்கத்தின் இந்தச் செயல்பாடு குறித்து விமர்சனங்களையும் உருவாக்கி வருகிறது.

மியன்மாரிலிருந்து படகில் வந்த
115 அகதிகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர். கப்பலிலிருந்த 12 பணியாளர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேநேரம், ஏனையவர்களை மிரிகானையிலுள்ள சட்ட விரோத குடியேற்றகாரர்களுக்கான தடுப்பு முகாமுக்கு அனுப்பிவைக்க உத்தரவிடப்பட்டு இருந்தபோதிலும், அழைத்துச் செல்லப்பட்டு இடைவழியில் திருப்பியனுப்பப்பட்டு பின்னர்
முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

அங்குள்ள அகதிகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் மீண்டும் அவர்களது சொந்த நாட்டுக்கே அனுப்பிவைப்பதாகவே அமைந்திருக்கிறது. தேசிய மக்கள் சக்தியால் அமைக்கப்பட்ட புதிய அரசாங்கம் மியன்மார் மக்கள் குறித்து சாதகமான முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், மியன்மார் அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு நாட்டை வந்தடைந்தவர்களது பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் அந்நாட்டு அரசாங்கத்திடம் வழங்கப்பட்டிருக்கிறது.

இலங்கை அரசு 1951ஆம் ஆண்டு அகதிகள் பிரகடனத்தில் கையெழுத்திடாத போதிலும், அகதிகள் அல்லது புகலிடக்கோரிக் கையாளர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்ளக் கூடிய அபாயம் உள்ள நாட்டுக்கு அவர்களை வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பக்கூடாது எனும் சர்வதேச அடிப்படை சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டியது அவசியமாகும். அதன்படி, மியன்மாரிலிருந்து நாட்டை வந்தடைந்த அகதிகளை இலங்கை அரசாங்கம் மீண்டும் அந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பக்கூடாது. இது ஒரு நாட்டிற்கு வருகை தந்த புகலிட கோரிக்கையாளர்களது உரிமையை மீறுவதாகவே உள்ளதென்று சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான  ஐக்கிய நாடுகள் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினரும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்ணான்டோ, தமது நாட்டில் வசிப்பதற்கு அச்சம் கொண்டு தப்பி வந்தவர்களை மீண்டும் அந்த நாட்டுக்கு அனுப்புவது சர்வதேச சட்டத்துக்கு முரண் என்பதுடன், அவர்களைக் குற்றவாளிகளாகவோ, சந்தேகநபர்களாகவோ பார்ப்பது தவறு என்பதுடன் தடுத்து வைப்பதும் தவறாகும் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த இடத்தில் தான் மியன்மார் அகதிகள் குறித்த இலங்கையின், கடந்த கால செயற்பாடுகள் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும். அதேநேரத்தில், மியன்மார் அகதிகளின் வருகை இது முதல் தடவையல்ல என்பதுடன், ஏற்கெனவே வந்தவர்கள் அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
2008 மார்ச் 3ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த மியான்மரை சேர்ந்த 55 பேர், ஐ.நா. அகதிகள் ஆணையத்திடம் கையளிக்கப்பட்டு 2012 ஜூலை மாதம் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். அதேநேரம், 2013 பெப்ரவரியில் இலங்கை கடற்பரப்பில் கைதான 170 மியன்மார் பிரஜைகளும் அவ்வாறே ஐ.நாவிடம் ஒப்படைக்கப்பட்டு 2015 நவம்பரில் இலங்கையிலிருந்து அனுப்பப்பட்டனர்.

அத்துடன், 2017 ஏப்ரல் 30ஆம் திகதி இலங்கை கடற்பரப்பிற்குள் வைத்து இரு இந்தியர்களுடன் கைதான பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட மியன்மாரைச் சேர்ந்த 30 பேர் மற்றும் இலங்கையில் பிரசவமான குழந்தைக்கும் ஏற்பட்ட நெருக்கடியான நிலை பல பிரச்சினைகளை நாட்டுக்குள் ஏற்படுத்தியிருந்தது. இந்த மியன்மார் அகதிகள் 5 வருடங்களாகத் தங்கியிருந்த இந்தியாவிலிருந்து தம்முடைய நாட்டுக்கு அனுப்பப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே அங்கிருந்து இலங்கைக்கு வந்திருந்தனர்.

ஆனால், இங்கு வந்தவர்களுக்கு பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன. மிரிஹான தடுப்பு முகாமிலிருந்த வேளை மியன்மார் பெண் ஒருவர் பாதுகாப்பு அதிகாரி ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். இது தொடர்பில் நுகேகொட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வாறு பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக ஐ.நாவின் அகதிகளுக்கான அலுவலகத்தினால் கல்கிசையில் வாடகை வீடொன்றில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு ஏற்பட்ட பௌத்த அமைப்புகள், பிக்குகள் உள்ளிட்டோரின் ஆர்ப்பாட்டம் போன்ற பிரச்சினைகள் காரணமாகப் பூசா தடுப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டு பின்னர் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டிருந்தனர்.
இவ்வாறான நிலை தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் தான், கடந்த வருடத்தின் இறுதியில் மியன்மாரிலிருந்து 115 பேர் இலங்கைக்கு வந்திருந்தனர்.

ஆனால், அந்த அகதிகளைத் தங்க வைப்பது தொடர்பில் இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு, அரசாங்கத்தின் நடவடிக்கையில் மாற்றம் இருக்கிறது என்பதைக் காட்டி விட்டது.
கடந்த காலங்களில் ஏற்பட்டது போன்றதான ஒரு ஆபத்தான நிலைமை மியன்மார் மக்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே மிரிஹானை
மாற்றப்பட்டு முல்லைத்தீவிலுள்ள விமானப்படை முகாம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், அம்மக்களை மீண்டும் அவர்களுடைய நாட்டுக்கு அனுப்பப்படுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் பிழையானது என்ற கருத்துக்களே வெளிவந்த வண்ணமிருக்கின்றன. கடந்த காலங்களில் மியன்மார் மக்களுக்கெதிராக நடைபெற்ற சம்பவங்களுக்கு எதிராக
 இலங்கையிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அம்மக்களின் நலன்களில் அக்கறை எடுத்திருக்கின்றனர். அதேபோன்று, தற்போது தங்களது அக்கறையையும், ஆதரவையும் வழங்கி வருகின்றனர். மியன்மார் அகதிகள் குறித்து வெளிவரும் தகவல்கள் காரணமாக அரசாங்கத்தின் மீது ஏற்பட்ட நம்பிக்கை அற்ற நிலை காரணமாகவும் இவ்வாறான நிலை உருவாகியிருக்கலாம். இருந்தாலும், கடந்த அரசாங்களைப் போலல்லாமல், தீர்மானம் எடுக்கப்படுதல் முக்கியமானதே. அது சாத்தியமானதா என்பதுதான் கேள்வி.

சந்தேகம் என்னவென்றால், முல்லைத்தீவில் தங்க வைக்கப்பட்டுள்ள மியன்மார் அகதிகளைச் சந்திக்கச் சென்ற மனித உரிமை ஆணைக்குழுவினர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். குடிவரவு-குடியகல்வு கட்டுப்பாட்டாளரினால் சந்திப்புக்கு அனுமதி வழங்காமைக்கு மியன்மார் மக்களிடமிருந்து நோய்த் தொற்றுக்கள் பரவலாம் என்ற அச்சம் காணப்படுவதாகக் கூறியிருக்கிறார்.  அவர்கள் அனுமதிக்கப்படாமை பற்றி ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளனர். அமைச்சர் அம்மக்கள் தொடர்பான விபரங்கள் மியன்மாரின் அரசாங்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார்.

இவ்வாறான நிலையில், இலங்கை அரசு இந்த அகதிகள் விடயத்தில் சரியான அல்லது அம்மக்களுக்கு சாதகமான வழிமுறைகளைப் பின்பற்றுமா என்பது விளக்கம் சொல்ல முடியாதது ஒன்றே.

எது எவ்வாறாயினும், மியன்மாரிலிருந்து நாட்டுக்கு வந்த மக்கள் இங்கு நிரந்தரமாகத் தங்க வைக்கப்பட்ட போவதில்லை என்பது மாத்திரம் உறுதியானது. ஆனால், அவர்கள் அவர்களுடைய நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் அவர்களுக்கான உத்தரவாதத்தினை மாத்திரம் இலங்கை அரசினால் பெற்றுக்கொள்ள முடியுமா என்பது சந்தேகம் தான். நாடு இருந்து கொண்டிருக்கும் நெருக்கடியான நிலையில், அடிப்படையான தீர்மானங்களின் அடிப்படையிலேயே எந்த ஒரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும் என்பதுவே நிச்சயமானது.

எவ்வாறானாலும், ரோஹின்ய மக்கள் நாடு நாடாகச் சிதறி ஓடுவதும் அல்லல் படுவதும் மனித உரிமைகளை மீறும் செயல் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் அவர்களின் நிம்மதியான வாழ்வுக்கு வழி சமைப்பது யார் என்பதுதான் கேள்வி.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X