Thipaan / 2016 நவம்பர் 17 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவது அன்றாட நிகழ்வல்ல. அதிலும் மிகுந்த பணிவையும் அமைதியையும் கடைப்பிடிக்கும் சமூகங்கள் வீதியில் இறங்குவதென்பது ஒரு வலிய செய்தியை எப்போதுமே சொல்லும். மிகவும் வளர்ச்சியடைந்த சமூகங்கள் எனச் சொல்லப்படும் சமூகங்களிலிருந்து மக்கள் போராட்டங்கள் எழும்போது, அந்த நாடுகள் தொடர்பில் கட்டியெழுப்பப்பட்ட விம்பங்கள் உடைந்து நொருங்குவது இயல்பு. இதனால்தான், அவ்வாறான நாடுகளில் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிற போது, அவை ஊடகங்களால் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகின்றன. அவ்வாறு மறைக்கப்படும் போராட்டங்கள் கவனத்தை வேண்டுவன; ஏனெனில், அது அதிகார வர்க்கத்தை நெருக்கடிக்குள்ளாக்குகிறது.
கடந்த வாரம், தென்கொரியாவின் தலைநகர் சியோலில் ஒரு மில்லியன் மக்கள் வீதியில் இறங்கி, தென்கொரிய ஜனாதிபதி பார்க் கியுன்-ஹியை பதவி விலகுமாறு கோரிப் போராட்டம் நடாத்தினார்கள். தென்கொரிய வரலாற்றில் 1987 ஆம் ஆண்டு ஜனநாயகத்துக்கான போராட்டத்துக்குப் பின்னர் இவ்வளவு தொகையான மக்கள் போராட்டமொன்றில் பங்குபற்றியிருப்பது இதுவே முதல்முறை. தென்கொரியாவின் இளந்தலைமுறை அனுபவப்பட்ட, பங்குபற்றிய, ஒழுங்குபடுத்திய ஒரு போராட்டம் என்ற வகையில் இது முக்கியத்துவம் வாய்ந்தது.
கடந்த ஒருவாரமாக அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவான டொனால்ட் ட்ரம்புக்கு எதிரானதும் ஆதரவானதுமான போராட்டங்கள் ஊடக வெளியை நிரப்ப, எவரது கண்களுக்கும் படாமல் தென்கொரிய மக்கள் தீரத்துடன் வீதியில் இறங்கிப் போராடியிருக்கிறார்கள். ஆசியாவின் பொருளாதார அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் தென்கொரியாவில் நடந்தேறியுள்ள இப்போராட்டமானது தென்கொரியா குறித்த இன்னொரு சித்திரத்தை வழங்குகிறது. அது எமக்குச் சொல்லப்படாத ஏழை உழைப்பாளிகளின் இரத்தத்திலும் வியர்வையிலும் இருக்கின்ற கதையாகும்.
தென்கொரியாவில் கடந்த வாரம் நடந்த போராட்டத்துக்காக, தலைநகர் சியோலிற்கு ஏனைய நகரங்களில் இருந்து மக்கள் புகையிரதங்களிலும் பேருந்துகளிலும் வந்தனர். அவ்வவ் நகரங்களில் இருந்து தலைநகருக்கான போக்குவரத்து டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. மாணவர்கள் பாடசாலைச் சீருடையுடன் இதில் கலந்து கொண்டார்கள். தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுடன் வந்திருந்தார்கள். 150,000 தொழிலாளர்கள், 35,000 பொதுத்துறை மற்றும் போக்குவரத்து ஊழியர்கள், 20,000 அரசாங்க அலுவலர்கள், 15,000 இரும்புக் கைத்தொழிலில் ஈடுபடுகின்ற தொழிலாளர்கள், 15,000 சேவை வழங்குநர்கள், 10,000 ஆசிரியர்கள், 5,000 மருத்துவ மற்றும் சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்கள் என அனைத்துத் துறைகளையும் சேர்ந்தவர்கள் இதில் பங்குபற்றியிருக்கிறார்கள்.
பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மூலம் இதைக் கலைக்க முடிவெடுத்தபோது, சியோல் நகரின் மேயர் பார்க் வொன்-சூன் இத்தேவைக்குத் தண்ணீர் தர மறுத்துவிட்டார். கடந்தாண்டு நவம்பரில் தண்ணீர்ப் பிரயோகத்துக்கு இலக்காகி விவசாயி ஒருவர் மரணமாகியதை உதாரணம் காட்டியதோடு “தண்ணீர் என்பது நெருப்பின் மீது, அதைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுவது; அமைதியான போராட்டக்காரர்களின் மீதல்ல” எனவும் தெரிவித்தார்.
தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிரான இப்போராட்டங்கள் அங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் தொழிலாளர் சந்தைத் திருத்தங்களுக்கெதிராகவும் ஆட்சியின் ஊழலுக்கெதிரானதுமாகவே அமைந்துள்ளன.
கிழக்காசியாவில் மிகவும் அபிவிருத்தியடைந்த கொரியத் தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடாகிய தென்கொரியாவில் 92 சதவீதமானவர்கள் நகர்களில் வாழ்கிறார்கள். உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதார நகராகிய சியோலைத் தலைநகராகக் கொண்டுள்ளதோடு 50 மில்லியன் மக்களைச் சனத்தொகையாகக் கொண்டது. 1945 ஆம் ஆண்டில் நிகழ்ந்த இரண்டாம் உலகப்போரின் முடிவு, கொரியா என்ற நாட்டை இரு துண்டுகளாகப் பிரிக்க வழியமைத்தது. 1910 ஆம் ஆண்டு முதல் ஜப்பானால் ஆக்கிரமிக்கப்பட்டு ஆளப்பட்ட கொரியா, இரண்டாம் உலகயுத்தத்தில் ஜப்பானின் தோல்வியோடு கொரியாவின் ஒருபகுதி சோவியத் ரஷ்யப் படைகளின் வசமும் இன்னொரு பகுதி அமெரிக்கப் படைகளின் வசமும் சென்றது. இதன் விளைவால் வெவ்வேறு சிந்தனைப் பள்ளிகளை மையமாகக் கொண்ட இரண்டு வேறுபட்ட ஆட்சி நிர்வாகங்கள் உருவாக்கப்பட்டு, கொரியா வடக்கு, தெற்கு என இரண்டு நாடுகளாகியது. 1950 ஆம் ஆண்டு இவ்விரு நாடுகளுக்கும் இடையில் உருவான யுத்தம் 1.2 மில்லியன் கொரியர்களைக் காவு கொண்டது. 1953 வரை நிகழ்ந்த இந்த யுத்தம் அமெரிக்க - சோவியத் ரஷ்ய கெடுபிடிப்போரின் முதலாவது களமாகியது.
இதைத் தொடர்ந்து, அரசியல் ரீதியான உறுதியற்ற நிலை தென்கொரியாவை, சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்த்திச் சென்றது. சர்வாதிகார ஆட்சிக்கெதிராக 1960 இல் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட எழுச்சி ஜனாதிபதியை பதவியில் இருந்து அகற்றியது. இதைத் தொடர்ந்த குழப்பமான சூழல், இராணுவ ஜெனரலான பார்க் சுங்-ஹீ சதிப்புரட்சி மூலம் 1963 இல் பதவிக்கு வர வழிவகுத்தது. இவரது ஆட்சியில் தென்கொரியா பொருளாதார ரீதியில் பாரிய வளர்ச்சி கண்டது. ஆனால், இவ்வளர்ச்சியானது அரசியல் ரீதியான உரிமை மறுப்புடன் சாத்தியமானது. இராணுவச் சர்வாதிகாரி போல் நடந்துகொண்ட பார்க் சுங்-ஹீ 1979 இல் கொலை செய்யப்பட்டார். பொருளாதார வளர்ச்சியை, அடிப்படை உரிமைகளை மறுத்துக் கொடுங்கோன்மையின் மூலம் சாத்தியமாக்கினாலும் உலகளாவிய ரீதியில் தென்கொரியா அடைந்த பொருளாதார அபிவிருத்தி, ஒரு மாதிரியாகக் காட்டப்பட்டது. இது, இன்றுவரை தென்கொரியாவைப் பிணைத்திருக்கின்ற ஒரு சங்கிலியாகும்.
1987 இல் ஜனநாயகத்துக்கான கோரிக்கைகளை முன்வைத்து நடாத்தப்பட்ட தொடர் போராட்டங்கள் தென்கொரியாவை ஜனநாயக மயமாக்கலுக்குள் இழுத்துச் சென்றுள்ள போதும், பொருளாதாரத்துக்காக அரசியல் உரிமைகளை விட்டுக் கொடுத்தல் என்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதாக மாறியிருக்கிறது. இப்பின்னணியிலேயே ‘அபிவிருத்தியை அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க வேண்டும்’ என்ற மந்திரம் ஒலிக்கிறது. இக்கோஷம் மூன்றாம் உலக நாடுகளில் கோட்பாட்டுருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
இன்று இந்த மந்திரம் எங்கும் ஒலிக்கிறது. மூன்றாம் உலக நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள், பிரதமர்கள் இதைத் தான் சொல்கிறார்கள்; வருகை தருகின்ற உலக வங்கி உயரதிகாரிகள் இதையே தான் சொல்கிறார்கள். உள்ளுர் அரசியல்வாதிகள் முதல், ஊடகங்கள் வரை இதே கருத்தைத்தான் எதிரொலிக்கிறார்கள். அரசியல் என்றால் வேறொரு கருத்தாக்கமாக, மாறுபட்ட வர்க்க நிலைப்பாடுகளாக முன்வைக்கப்படுவது அதிகரித்து வருகிறது. அரசியலை அபிவிருத்தியிலிருந்து பிரித்துப் பார்க்க எனக் கூறுவதன் மூலம், உண்மையான ‘அபிவிருத்தி’ என்றதொரு கருத்தாக்கம் இருப்பது போலவும் அதுதான் எல்லாவற்றையும் விட மேலானதாக ஓங்கி இருப்பதாகவும் அதற்கு எதிராக யாரும் பேசக் கூடாது என்பதாகவும் வலியுறுத்தப் படுகிறது. அனைத்து வர்க்கங்களின் மீதும் அனைத்து அரசியல் சக்திகளின் மீதும் ‘அபிவிருத்தி’ என்பது குறித்த ஒரு குறிப்பிட்ட கருத்தாக்கம் திணிக்கப்படுகிறது. அந்தக் கருத்தாக்கத்தைத் திணிப்பது உலக நிதி மூலதனம். இந்தத் திணிப்பு வெறும் பொருளாதார ஆளுமை தொடர்பானது மட்டுமல்ல, கருத்து ஆளுமை தொடர்பானதும் கூட. இது ஒரு வகையில் கருத்துநிலைச் சர்வாதிகாரத்தை வளர்க்கின்ற செயன்முறையை திட்டமிட்டுச் செய்கிறது.
இப்படிப்பட்ட ஒரு கருத்துநிலைச் சர்வாதிகாரத்தை வளர்ப்பது எப்போதுமே முதலாளித்துவ அமைப்பின் பண்பாக இருந்து வந்துள்ளது. கட்டுப்பாடுகள் அற்ற முதலாளித்துவ அமைப்பு, ஒழுங்கையும் சமூக நிலையையும் கொண்டு வரும் என்று போதிக்கப்பட்டது. எனவே, பொருளாதார அபிவிருத்திக்காக உரிமைகள் மறுக்கப்படுதல் இயல்பானதெனவும் வைக்கப்பட்ட வாதங்கள் மக்கள் மத்தியில் பரவலாக்கப்பட்டன. தென்கொரிய மக்கள் மத்தியில் இக்கருத்தாக்கத்துக்கான ஆதரவு வலுவானதாக இருக்கிறது.
1987 ஆம் ஆண்டின் பின்னர் ஜனநாயகத்துக்கான நெடும்பயணத்தை தென்கொரியா ஆரம்பித்த போதும், அதனது பொருளாதார வளர்ச்சியே பிரதானமானது. குறைந்த ஊதியத்தில் நிறைந்த மனிதவலு, பணிவான பண்பாடுடைய வேலையாட்கள், நீண்டநேரங்களுக்கு வேலை செய்யக்கூடிய பணியாளர்கள் என்பன இந்தப் பொருளாதார அற்புதத்துக்கு வாய்ப்பாகியது. உலகின் 11 ஆவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ள தென்கொரியா, தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ளது. சாம்சுங், எல்ஜி, கியா, ஹுண்டாய் போன்ற உலகளாவிய ரீதியில் அறியப்பட்ட நிறுவனங்கள் இங்குதான் இருக்கின்றன. பல்தேசிய நிறுவனங்களின் தேவைகளுக்காக தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்பட்டு, அவர்கள் உரிமைகள் அபிவிருத்தியின் பெயரால் அடகுவைக்கப்படுகின்றன.
இப்போது பதவி விலகுமாறு கோரப்படுகின்ற தென்கொரிய ஜனாதிபதி பார்க் கியுன்-ஹி, முன்னாள் சர்வாதிகாரி பார்க் சுங்-ஹீயின் மகளாவார். 1987 ஆம் ஆண்டின் பின்னர் வலுவான ஜனநாயகத்துக்கான போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு தென்கொரியாவை ஜனநாயகமயமாக்கலுக்குள் உள்ளாக்கியுள்ள வேளை, சர்வாதிகாரியின் மகள் எவ்வாறு தென்கொரியாவின் ஜனாதிபதியானார் என்பது ஒரு புதிர்தான். ஆனால், தென்கொரிய மக்களின் மனோநிலையின் முரண்நகையும் இத்தெரிவினுள் அடங்கியுள்ளது.
1987 ஆம் ஆண்டின் பின்னர், தென்கொரிய அரசியலின் பிரிகோடாக ஜனநாயகத்தை வலுப்படுத்தல் இருந்து வந்துள்ளது. ஒருபுறம் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பவர்கள் அரசியலின் ஓர் அந்தத்திலும் சர்வாதிகார ஆட்சியின் உதவியால் தொழில் உரிமைகளை மறுத்தும் நசுக்கியும் இலாபம் பார்த்தவர்கள் சர்வாதிகார ஆட்சிக்கு ஆதரவாகவும் ஜனநாயகமயமாதலுக்கு எதிராகவும் அரசியலின் மறு அந்தத்திலும் இருக்கிறார்கள். கடந்த இரண்டு தசாப்த கால ஆட்சியானது ஜனநாயகத்தை முன்மொழிபவர்களது ஆட்சியாக இருந்தது. இக்காலப்பகுதியில் உலகைத் தாக்கிய பொருளாதார நெருக்கடியும் அதைத் தொடர்ந்த பொருளாதார மந்தநிலையும் ஜனநாயகத்தால் பொருளாதார அபிவிருத்தியைத் தர இயலாது போன்றதொரு தோற்றத்தை தென்கொரியர்கள் மத்தியில் உருவாக்கியது. இதன் விளைவாக 2012 ஜனாதிபதித் தேர்தலில் தனது தந்தையை முக்கியமான முனைப்பாக்கும் அடையாளமாக முன்வைத்து, பார்க் கியுன்-ஹி வெற்றி பெற்றார். தந்தை சாத்தியமாக்கிய பொருளாதார வளர்ச்சியை மகளிடம் தென்கொரியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், சர்வதேச நிதிமூலதனத்தின் முக்கியமான கேந்திர நிலையங்களில் ஒன்றாக மாறிவிட்ட தென்கொரியாவால் அதைச் சாத்தியமாக்க இயலவில்லை. நிதிமூலதனம் இலாபத்தை மையமாகக் கொண்டு செயல்படுகையில் மக்கள் நலன்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை. பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் மக்களைச் சென்றடையவில்லை. இதனால் மக்கள் மத்தியில் உருவாகும் அதிருப்தியைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி பார்க் கியுன்-ஹி எதிர்கட்சியாக செயற்பட்ட அரசியல் கட்சியைக் கலைத்தார், தொழிலாளர் சட்டங்களை இறுக்கிப் பல்தேசியக் கம்பெனிகளுக்கு உதவினார், தொழிற்சங்க உறுப்பினர்கள், எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் ஆகியோரைச் சிறையில் அடைத்தார். இருந்தபோதும் யாரும் தென்கொரியாவில் மனித உரிமைகள் தொடர்பில் பேசவில்லை. சத்தமில்லாமல் ‘ஜனநாயக சர்வாதிகாரம்’ தென்கொரியாவில் அரங்கேறியது.
ஆசியாவின் மீதான அமெரிக்காவின் பிராந்திய நலன்களைப் பேணுவதில் ஜப்பானுக்கு இணையாக, முக்கியமான கூட்டாளி தென்கொரியா ஆகும். தென்கொரியாவின் சர்வாதிகாரப் போக்குடைய ஆட்சி மெச்சப்படுவதற்கும் அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்கள், அடக்குமுறைகள் சர்வதேச ஊடகங்களின் கண்களுக்குத் தெரிந்தும் தெரியாமல் இருப்பதற்கும் அமெரிக்க நட்பு முக்கிய காரணியாகும். ஜனாதிபதி பார்க் கியுன்-ஹி அமெரிக்காவின் அடியாளாகக் கருதப்படுபவர். அமெரிக்க-தென்கொரிய உறவென்பது கிழக்காசியாவில் தனது இராணுவ இருப்பைத் தக்கவைப்பதனூடு பூகோள அரசியலில் தன்னை இணைத்துக்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு முக்கியமானது. தென்கொரியாவில் 30,000 அமெரிக்கப் படைவீரர்கள் நிலை கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆறுமாதங்களுக்கு மேலாக தென்கொரிய விவசாயிகள், அமெரிக்கா தென்கொரியாவில் நிறுவுவதற்குத் திட்டமிட்டுள்ள நவீன ரக ஏவுகணை எதிர்ப்பு கவசத்தைத் தங்கள் பகுதிகளில் நிறுவ வேண்டாம் எனக் கோரிப் போராடி வருகின்றனர். அரசாங்கத்துக்கு எதிரான பல ஊழல் குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ள நிலையில் தென்கொரிய ஜனாதிபதி அரசாங்கத்தில் உள்ள பலரைப் பதவி விலக்குவதன் மூலம் தனது பதவியைத் தக்க வைக்க முனைகிறார். ஆனால் மக்கள் தொடர்ந்தும் போராடுகிறார்கள். இப்போராட்டம் தென்கொரியாவில் ஜனநாயகத்தை மீள நிலைநிறுத்துவதற்கான போராட்டமாக விரிகிறது. இது அமெரிக்காவில் உலக நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட நிறப்புரட்சியோ அல்லது அரபு வசந்தமோ அல்லது ஆட்சிமாற்றமோ அல்ல. இதன் பின்னால் நீண்டகாலமாக உரிமைகள் மறுக்கப்பட்டு, சுரண்டப்பட்ட சாதாரண தென்கொரியர்களின் கோபமும் நியாயத்துக்கான அவாவும் மேலோங்கியுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் பின்னர் பிரிக்கப்பட்ட நாடுகள் இணைவதை அமெரிக்கா தொடர்ச்சியாகத் தடுத்து வந்துள்ளது. அதேவேளை, சோவியத் யூனியனின் செல்வாக்குச் சரிந்ததன் பின்னணியில் கிழக்கு ஐரோப்பாவில் ‘சோஷலிஸ’ அரசுகள் சரிந்த கையோடேயே போரால் பிரிந்த ஜேர்மனியை ஒன்றிணைப்பதை ஆதரித்தது. இன்றுவரை மீண்டும் கொரியா ஒரு நாடாக இணைவதற்குத் தடையாக உள்ளது அமெரிக்கா தான். கொரிய மக்கள் இணைந்து ஒரேநாடாக வாழ்வதற்கு விரும்புகிறார்கள். அமெரிக்க நலன்களுக்குப் பாதகமான ஒரு கொரியா உருவாவதை அமெரிக்கா விரும்பாது. எனவே, கொரியாவின் இணைவுக்கான போராட்டமும் மக்களிடமிருந்தே உருவாக வேண்டிய தேவையும் உண்டு.
மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் ஒரு வலுவான ஆயுதம் என்பதை தென்கொரியாவில் நடந்தேறுகின்ற நிகழ்வுகள் மீண்டுமொருமுறை காட்டி நிற்கின்றன.
14 minute ago
20 minute ago
29 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
29 minute ago
39 minute ago