R.Tharaniya / 2025 நவம்பர் 12 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஐயூப்
சில எதிர்க்கட்சிகள் இம் மாதம் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடத்தவிருக்கும் அரச எதிர்ப்பு கூட்டத்தின் நோக்கத்தை மாற்றிக்கொண்டுள்ளதாக தெரிகிறது.
ஆரம்பத்தில் அக்கட்சிகள் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக தாம் இந்தக் கூட்டத்தை நடத்துவதாக தெரிவித்தன. அரசாங்கம் அரசியலமைப்பு ரீதியான சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருவதாகவும் தனிக்கட்சி ஆட்சியை நிறுவ முயல்வதாகவும் குற்றஞ்சாட்டின.
பொதுப் பணத்தில் பிரித்தானியாவுக்கு தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டி பொலிஸார் கடந்த ஓகஸ்ட் மாதம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்தனர்.
இதனை அடுத்து முன்னாள் ஜனாதிபதிகளினதும் அவர்களின் விதவைகளினதும் சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்கு கடந்த செப்டம்பர் மாதம் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதன் விளைவாக முன்னாள் ஜனாதிபதிகள் அரச விடுதிகளில் இருந்து வெளியேற நேர்ந்தது.
இதனை அடுத்தே அரசாங்கம் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்து செய்ததற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவை கூறின. அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் 1000 எதிர்ப்புக் கூட்டங்கள் சத்தியாகிரகங்கள் போன்றவற்றை நடத்தவிருப்பதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்தார்.
எதிர்க்கட்சிகள் நுகேகொடையில் நடத்தவிருக்கும் கூட்டம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவை பிரபல்யப்படுத்தும் கூட்டமாகவே தெரிகிறது.
எவ்வாராயினும் இப்போது கூட்டம் நடத்தவிருக்கும் எதிர்க்கட்சிக் குழுவினர் தம்மை கூட்டு எதிர்க்கட்சி என்றே அழைக்கின்றனர். 2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த போது இந்தப் பெயரிலேயே அவரது ஆதரவாளர்கள் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அவர்களும் நுகேகொடையிலேயே தமது முதலாவது எதிர்ப்புக் கூட்டத்தை நடத்தினர்.அந்த எதிர்ப்பு அன்று சிறிது காலத்துக்குள்ளேயே மாபெரும் அலையாக மாறி மூன்றாண்டுகளில் அதாவது 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் ஐ.தே.கவை படுதோல்வி அடையச்செய்தது.
ஆனால், பழைய பெயரில் பழைய இடத்தில் கூட்டம் நடத்தினாலும் இம்முறை இந்த கூட்டு எதிர்க்கட்சி பாரிய எதிர்ப்பு அலையாக மாறும் சாத்தியம் இல்லை என்றே தெரிகிறது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, இந்த கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்காமையே அதற்கு முக்கிய காரணமாகும்.
2015 ஆம் ஆண்டு நுகேகொடையில் கூட்டம் நடத்தும் போது ஆளும் கட்சியான ஐ.தே.கவைப் பார்க்கிலும் எதிர்க்கட்சியான மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பலம் வாய்ந்த கட்சியாக இருந்தது. ஐ.தே.க சிறுபான்மை அரசாங்கமொன்றை நடத்தியது.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐ.தே.க வெற்றி பெற்றாலும் அதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வெளியே இருந்து வழங்கிய ஆதரவினாலேயே அரசாங்கத்தை ஐ.தே.க நடத்தியது.
இன்று நிலைமை முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. இன்று ஆளும் தேசிய மக்கள் சக்தி, விகிதாசார முறைப்படி தனியாக மூன்றில் இரண்டுக்கு மேலான பாராளுமன்ற ஆசனங்களைப் (159 ஆசனங்களை) பெற்று பலமான நிலையில் இருக்கிறது. கடந்த மே மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டாலும் இன்றும் நாட்டில் மிகவும் பலம் வாய்ந்த கட்சி, தேசிய மக்கள் சக்தியாகும்.
நுகேகொடை கூட்டத்துக்கான கூட்டு எதிர்க்கட்சியின் பிரதான சுலோகமான அடக்குமுறை என்பது தமக்கே பாதகமாக அமையக்கூடும் என்று அக்கட்சிகள் இப்போது உணர்வதாக தெரிகிறது.
ஏனெனில், இந்தக் கூட்டத்தை நடத்தப் போகும் ஐ.தே.க., ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் அம்முன்னணிக்குள் இருந்தவர்களின் ஆட்சிக் காலங்கள் மிகக் கொடூரமான அடக்குமுறை நிறைந்த காலங்கள் என்பதை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.
1977 முதல் 1994 ஆம் ஆண்டு வரையிலான ஐ.தே.க., ஆட்சியின் கீழ் வடக்கில் இடம்பெற்ற அடக்குமுறையே இனப்பிரச்சினையை ஆயுதப் போராக மாற்றியது. இலங்கை வரலாற்றில் நடைபெற்ற மிகவும் ஊழல் நிறைந்த தேர்தல் 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலாகும். அதே ஆண்டு நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பு இலங்கை வரலாற்றில் மிக மோசமான ஊழல் நிறைந்த வாக்கெடுப்பாகும்.
அக்காலத்தில் முதன்முதலாக அரசியல் ஆதரவு பெற்ற பாதாள உலக கோஷ்டிகள் உருவாகின. கோணவல சுனில் மற்றும் சொத்தி உபாலி போன்ற குண்டர்கள் தனியான ஆட்சியை நடத்தி வந்தனர். அக்காலத்தில் பியகம, மஹியங்கனை மற்றும் கெக்கிராவ போன்ற பகுதிகள் எதிர்க்கட்சிகளுக்கு ‘தடை செய்யப்பட்ட’ பிரதேசங்களாக இருந்தன.
1983 ஆம் ஆண்டு நாடெங்கிலும் தமிழர்களுக்கு எதிராக குண்டர்கள் ஏவி விடப்பட்டனர். எவ்வித காரணமும் இன்றி மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட மூன்று கட்சிகள் தடை செய்யப்பட்டன. அக்கால அடக்குமுறையை பற்றி ஒரு புத்தகத்தையே எழுதலாம். அந்த ஐ.தே.கவே இப்போது ஐ.தே.க என்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்றும் பிரிந்து செயல்படுகின்றன.
இதனை அடுத்து பதவிக்கு வந்த சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் குமார் பொன்னம்பலம் கொல்லப்பட்டார். பெத்தகான சஞ்சீவ என்ற பாதாள உலக குண்டன் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டு இருந்தான். அக்காலத்திலும் களனி மற்றும் ஆனமடுவ போன்ற பகுதிகளில் எதிர்க்கட்சியினருக்கு தலையைக் காட்ட முடியாத நிலை ஏற்பட்டது. ஊடகவியலாளர்களான மயில்வாகனம் நிமலராஜன் மற்றும் சிவராம் ஆகியோர் சந்திரிகாவின் ஆட்சிக் காலத்திலேயே கொல்லப்பட்டனர்.
மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் லசந்த விக்ரமதுங்க, நடேசன் மற்றும் சுகிர்த்தராஜன் போன்ற பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். உதயன், சிரச மற்றும் சியத்த ஆகிய ஊடக நிறுவனங்கள் தீயிடப்பட்டன. பெருமளவான ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர். அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் தியாகராசா மகேஸ்வரன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.
அந்த மஹிந்த ராஜபக்ஷவே இப்போது ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணயின் தலைவராகவும் இருக்கிறார்.தேசிய மக்கள் சக்தியின் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை. எனவே நுகேகொடையில் கூட்டம் நடத்தவிருக்கும் கட்சிகள் அடக்குமுறை என்ற சுலோகத்தை வாபஸ் பெற்றிருக்கின்றன போலும்.
தே.ம.ச.,வுக்கு அதன் தேர்தல் வாக்குறுதிகளை நினைவூட்ட பொருத்தமான மாதம் இம் மாதமாகும். ஆனால், நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய கடந்த கால ஆளும் கட்சிகளுக்கு அதற்காக தார்மிக உரிமை இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது.
அந்த வகையில் அரசாங்கத்தை விமர்சிக்கும் தார்மிக உரிமை வாக்களித்த மக்களுக்கு இருக்கிறது. உண்மையிலேயே அரசாங்கம் அதன் சகல வாக்குறுதிகளையும் நிறைவேற்றாவிட்டாலும் சில முக்கிய விடயங்களை சாதித்துள்ளது. அதில் ஒன்று அரசியல் மட்டத்தில் ஊழலை ஒழித்தமையாகும்.
ஆளும் கட்சியில் ஊழல்வாதிகள் அறவே இல்லை என்ற உத்தரவாதத்தை வழங்க எவராலும் முடியாது. ஆனால் அவ்வாறு ஆளும் கட்சியில் ஊழல் பேர்வழிகள் இருந்து அம்பலமானால் நிச்சயமாக அரசாங்கத்தின் தலைவர்கள் அவர்களை பாதுகாக்காது வெளியேற்றுவார்கள் என்றொரு நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இது முன்னொருபோதும் காணாத நிலைமையாகும்.
போதைப் பொருட்களுக்கு எதிரான அரசாங்கத்தின் போராட்டமும் நேர்மையானதாக தெரிகிறது.அத்தோடு வங்குரோத்து நிலையை அடைந்த நாட்டை மீட்க சர்வதேச நாணய நிதியம் கடுமையான நிபந்தனைகளுடன் திட்டம் ஒன்றை வகுத்துக் கொடுத்தது. அதனை ரணில் விக்ரமசிங்க செயல்படுத்தினார்.
ஆனால், அவர் ஊழலை கட்டுப்படுத்தவில்லை. அவரது காலத்திலும் ஊழல் மலிந்து இருந்தமை அண்மையில் ‘கோப்’ குழுவின் விசாரணை ஒன்றின் போது தெரியவந்தது.
தே.ம.ச., தலைவர் அனுரகுமார திசாநாயக்க சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்படுத்துகிறார். அரச நிதி நிலைமை பலமாக இருப்பதை இம்முறை வரவு -செலவு திட்ட விவாதத்தின் போது எதிர்க்கட்சியினரும் ஏற்றுக்கொண்டனர். நாளை நிலைமை எவ்வாறு அமையும் என்ற உத்தரவாதத்தை வழங்க முடியாவிட்டாலும்.
இப்போதைக்கு அரசாங்கத்தின் ஒரு வருட சாதனையை பாராட்டலாம்.
11 minute ago
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
3 hours ago
6 hours ago
7 hours ago