2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

புதிய அரசாங்கமும் புதிய அரசியலமைப்பும்

R.Tharaniya   / 2025 ஜூலை 31 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஐயூப்

புதிய அரசியலமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதாக தேசிய மக்கள் சக்தி பதவிக்கு வருவதற்கு முன்னர் வாக்குறுதி அளித்திருந்தது. அது அக்கட்சியின் வாக்குறுதிகளில் முதன்மையான ஒன்றாகவும் கருதப்பட்டது. ஏனெனில், 
தேசிய மக்கள் சக்தி சமூக அமைப்பையே மாற்றி அமைக்க வேண்டும் (system change) என்றே கூறி வந்தது.

ஆயினும், இப்போது அரசாங்கத்தின் தலைவர்களில் எவரும் அதைப் பற்றி எதையும் கூறுவதாக இல்லை. புதிய அரசியலமைப்பு என்பதை தமிழ் தலைவர்கள் மிகவும் அக்கறையுடன் நோக்குகிறார்கள். 

ஏனெனில், அவ்வாறான புதிய அரசியலமைப்பொன்றில் இனப் பிரச்சினைக்கானத் தீர்வும் பொதிந்திருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
தேர்தலுக்கு முன்னர் பொதுவாக, தாம் பதவிக்கு வந்தால் புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டு வருவோம் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் கூறினார்களேயல்லாமல் எப்போது அதைக் கொண்டு வருவோம் என்று அவர்கள் கூறவில்லை.

ஆயினும், அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் மூன்று வருடங்களில் தான் 
புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவோம் என்று கூறினார்கள்.

புதிய அரசியலமைப்பு என்ற விடயத்தில் இலங்கை மக்களுக்கு மிக மோசமான அனுபவங்களே இருக்கின்றன. எனவே, அவர்கள் எதையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதைத் தவிர்க்க முடியாது.

அந்த பழைய அனுபவங்களைச் சற்று பின்னோக்கி பார்ப்பது பொருத்தமானதாகும்.1972 ஆம் ஆண்டே முதன் முதலாகச் சுதந்திர இலங்கையில் அரசியலமைப்பு மாற்றம் ஒன்று இடம்பெற்றது. பிரிட்டிஷ் அரசாங்கத்தால் சுதந்திரத்துக்கு முன்னர் வரையப்பட்ட சோல்பரி அரசியலமைப்பே அது வரை அமலிலிருந்தது.

சிறிமா பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் அதனை முற்றாக நீக்கி இலங்கையை ஒரு குடியரசாக பிரகடனப்படுத்தும் வகையில் புதிதாக அரசியலமைப்பொன்றை அறிமுகப்படுத்தியது.

அதன் மூலம் இலங்கைக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான சகல அரசியல் மற்றும் நிர்வாக தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு இலங்கை பூரண சுதந்திர நாடாக மாறியது.

எனினும் 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பதவிக்கு வந்த ஜே.ஆர்.ஜயவர்தனவின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அதே ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியரசு அரசியலமைப்பைத் திருத்தி நிறைவேற்று ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்தியது. அவ்வாறு ஜனாதிபதி பதவிக்கு முதன் முதலாகத் தாமாக நியமிக்கப்பட்ட ஜே.ஆர்.ஜயவர்தன 1978ஆம் ஆண்டு முழு அரசியலமைப்பையே மாற்றி புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டு வந்தார்.

அது ஏறத்தாழ சர்வாதிகாரி ஒருவரைத் தோற்றுவித்தது. அதை இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு என்று பலர் அழைக்கின்றனர். அது வரை அமலில் இருந்த தொகுதி வாரித் தேர்தல் முறைக்குப் பதிலாக விகிதாசார தேர்தல் முறை அதன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இப்புதிய அரசியலமைப்பை நாட்டில் பலர் எதிர்த்தனர். இரத்மலானை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த விமானம் ஒன்றும் 1978ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. அக்காலத்தில் உருவாகியிருந்த தமிழ் ஆயுத குழுவொன்று இந்த புதிய அரசியலமைப்பை எதிர்த்து அக் குண்டுத் தாக்குதலை நடத்தினர் என்று அக்காலத்தில் கூறப்பட்டது.

இவ்வரசியலமைப்பை மாற்றி அமைப்பது 1994ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்ட சந்திரிகா குமாரதுங்கவின் தேர்தல் வாக்குறுதிகளில் பிரதான ஒன்றாக இருந்தது. அவர் 1994 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். ஆயினும், அவருக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கவில்லை. எனவே, அவரால் அந்த அரசியலமைப்பு மாற்றத்தைக் கொண்டு வர முடியவில்லை.

ஆயினும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய ஆதரவு வழங்குவதாக 1994ஆம் ஆண்டு அவரோடு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட காமினி திசாநாயக்க தெரிவித்தார். எனினும், பகுதி பகுதியாகவன்றி முழுமையாக அரசியலமைப்பை மாற்றுவதே தமது நோக்கம் எனக் கூறி சந்திரிகா அதை நிராகரித்தார்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்ற மஹிந்த ராஜபக்‌ஷவும் புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்து இருந்தார். குறிப்பாக நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக அவர் கூறினார். எனினும் அதற்காக அவருக்கு அம்முறை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கவில்லை.

2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றி பெற்ற நிலையில், 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஏறத்தாழ அந்த நிலையை அவர் அடைந்தார். ஏனைய சில கட்சிகளின் ஓரிரு எம்.பிக்களை விலைக்கு வாங்கி அவர் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைத் திரட்டிக்கொண்டார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்குப் பதிலாக அதை மேலும் பலப்படுத்திக் கொள்ளவே அவர் அதைப் பயன்படுத்தினார். புதிய அரசியலமைப்பு என்ற விடயம் முற்றாக மறைக்கப்பட்டுவிட்டது.

ஊழலும் கொலையும் அடாவடித்தனமும் நிறைந்த அந்த ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணி திரண்டதன் விளைவாக, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்தார்.

புதிதாகப் பதவிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தனர். 

அதற்காக 2016ஆம் ஆண்டு பாராளுமன்றம் அரசியலமைப்புச் சபையாக மாற்றப்பட்டது. நாடளாவிய ரீதியில் மக்கள் கருத்து திரட்டப்பட்டது. அக்கருத்துக்களின் பிரகாரம் கொண்டு வர வேண்டிய சட்டத் திருத்தங்களைப் பரிந்துரை செய்வதற்காக ஆறு உப குழுக்கள் நியமிக்கப்பட்டன.

அவற்றின் பரிந்துரைகளுக்குச் சட்ட வடிவம் கொடுப்பதற்காக பிரதமரின் தலைமையில் வழிநடத்தல் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. அதன் இடைக்கால அறிக்கை 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆயினும், அதன் மூலம் சமஷ்டி மறுக்கப்பட்டுள்ளது என்று தமிழர்களும் சமஷ்டி வழங்கப்படப் போகிறது என்று சிங்களவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கும் பிரதமர் ரணிலுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. அரசாங்கம் 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது.

மைத்திரிபால, மஹிந்தவை மீண்டும் பிரதமராக நியமித்ததால் அரசியல் நெருக்கடி ஒன்றும் உருவாகியது. 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று முஸ்லிம் பயங்கரவாத குழுவொன்று ஒரே நாளில் பல இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்து அரசாங்கம் பாரியதோர் நெருக்கடியை எதிர்நோக்கியது. இதுபோன்ற பல காரணங்களால் புதிய அரசியலமைப்புக்கான முயற்சி மறைக்கப்பட்டுவிட்டது.

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக பதவியேற்றார். அவரும் புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்து இருந்தார். ஆயினும், அவருக்கு அதற்கான தெளிவு இருக்கவில்லை.

அதற்கிடையே கொவிட்-19 பரவியது. நாடு பெரும் பொருளாதார நெருக்கடியையும் எதிர்நோக்கியது. புதிய அரசியலமைப்பு பற்றிய விடயம் கைவிடப்பட்டது.
இப்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியலமைப்பு விடயத்தில் இது வரை எதையும் செய்யாவிட்டாலும், அதைக் குறை கூற முடியாது.

புதிய அரசியலமைப்பொன்று என்பது இலகுவான விடயமல்ல. பல்வேறு சமூகக் குழுக்களின் பிரச்சினைகள் ஆராயப்பட வேண்டும். அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கும்போது, புதிய பிரச்சினைகள் அதனால் உருவாகாத முறையில் அவற்றைத் தீர்க்க வேண்டும்.

பொருளாதார மேம்பாட்டிற்கான ஆலோசனைகள் அதில் அடங்கியிருக்க வேண்டும். மாறி வரும் சமூக பொருளாதார மற்றும் சர்வதேச நிலைமைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

இனப் பிரச்சினைக்கானத் தீர்வு அதில் பொதிந்திருக்க வேண்டும். அதேவேளை, அது தற்போது முரண்பட்டு இருக்கும் பல்வேறு இனங்கள் மற்றும் சமூகக் குழுக்களின் அபிலாஷைகளைக் குறைந்தபட்ச அளவிலாவது தீர்க்க வேண்டும். 
சட்டத்தையும் ஒழுங்கையும் நீதியையும் பாதுகாக்க வேண்டும். 

இவ்வாறானதோர் முயற்சியைக் குழப்ப நாட்டில் எத்தனையோ குழுக்கள் இருக்கின்றன. சில குழுக்கள் இம்முயற்சியைப் பயன்படுத்தி இன ரீதியாக குழப்பங்களை ஏற்படுத்தலாம்.

அவற்றில் சில குழுக்கள் இனப் பிரச்சினை தீர்வதைப் பார்க்கிலும் அதனைத் தீராமல் இருப்பதையே விரும்புகின்றன. ஏனெனில், இனப் 
பிரச்சினை தீர்ந்தால் அவர்களது இருப்பு அத்தோடு முடிவடைந்துவிடும்.

வேறு சில குழுக்கள் இம்முயற்சியைப் பயன்படுத்தி அரசியல் ரீதியில் குழப்பங்களை ஏற்படுத்தலாம். நாட்டில் மொத்த நலனைப் பார்க்கிலும் தத்தமது சுயநலன்களை அரசாங்கம் முதன்மைப்படுத்த வேண்டும் என்றே இக்குழுக்கள் கருதுகின்றன.

இந்த நிலையில், எடுத்த எடுப்பில் அரசாங்கம் அவசரப்பட்டு புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டு வர வேண்டும் என்று கருதுவது பொருத்தமானதல்ல.குறிப்பாக, பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலையை அடைந்த ஒரு நாட்டை பொறுப்பேற்ற ஒரு கட்சி முதலில் இது போன்றதொரு சிக்கலான விடயத்தில் கைவைக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.

ஆனால் அரசாங்கம் அந்த நோக்கத்துக்கான சில பூர்வாங்க நடவடிக்கைகளையாவது இப்போது எடுத்திருக்க வேண்டும். இவ்வாறு நடைபெறுவதாக தெரியவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .