Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 செப்டெம்பர் 14, சனிக்கிழமை
என்.கே. அஷோக்பரன் / 2018 மே 28 , மு.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 145)
1984 ஓகஸ்ட் மாதத்தில், வடக்கில் வன்முறை தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது. வடக்கில் பொலிஸார், அரச படைகள் மற்றும் அரச நிறுவனங்கள் மீதான, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்கள் கடுமையாக அதிகரித்திருந்தன.
இதற்குத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களிடம் ஏற்பட்டிருந்த போட்டியும் முக்கிய காரணமென, ரீ.சபாரட்ணம் சுட்டிக் காட்டுகிறார். மற்ற அமைப்புகளைவிடத் தாம் முக்கியத்துவம் பெற வேண்டும் என்ற நோக்கில், போட்டி மனப்பாங்கோடு தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டனவென அவர் பதிவுசெய்கிறார்.
யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் எனப் பல இடங்களிலும் தாக்குதல்களும், அவற்றுக்கெதிரான அரசபடைகளின் கோரமான பதில்த் தாக்குதல்களும், தொடர் தாக்குதல்களும் மாறிமாறி நிகழ்ந்த வண்ணமிருந்தன. தமிழ் மக்களின் உயிர்களும், உடைமைகளும் இந்தக் கோர தாக்குதல்களில் பலியாகிக் கொண்டிருந்தன.
அரசபடைகளின் தாக்குதல்கள், வெறுமனே தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை இலக்குவைப்பதாக அன்றி, பொது மக்களையும் பொதுமக்களின் உடமைகளையும் பாதிப்பதாக அமைந்திருந்தன.
1984 ஓகஸ்ட் 11ஆம் திகதி, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், அரச படைகள் மீது நடத்திய தாக்குதலொன்றில், ஆறு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதில் தாக்குதல் நடத்திய இராணுவமானது, மன்னார் நகரெங்கும் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டது.
வீடுகள், கடைகள் என நகரெங்கும் இராணுவம் குண்டுமழை பொழிந்தது. மன்னாரில் இராணுவம் நடத்திய தாக்குதல் பற்றி விவரித்திருந்த மன்னார் ஆயர், “இராணுவ ஆக்கிரமிப்புப் படைகள், தன் வழியில் சிக்கும் அனைத்தையும் அழித்துச் செல்வது போலுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.
பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில், இலங்கை அரசாங்கம் சர்வதேச அழுத்தத்தை எதிர்நோக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது. இலங்கை அரசாங்கத்தை நோக்கி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, தேசிய பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் பதிலளித்த லலித் அத்துலத்முதலி, தன்னுடைய நாவன்மையால் பதிலளித்துச் சமாளித்துக் கொண்டிருந்தார்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விவாதங்களில் வளர்த்த திறமை, தற்போது அவருக்குக் கைகொடுத்தது எனப் பல விமர்சகர்களும் குறிப்பிடுகிறார்கள்.
மன்னார்த் தாக்குதல் பற்றி பதிலுரைத்த அத்துலத்முதலி, “அது தொடர்பில், மூன்று இராணுவ வீரர்கள் இராணுவ முகாமுக்குள் வரையறுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது விசாரணை முன்னெடுக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னர், இந்த விவகாரம் தொடர்பில், நடந்தவை பற்றிய எந்தத் தகவல்களும் இல்லை.
அமிர்தலிங்கத்தின் அதிருப்தி
அதிகரித்த வன்முறைகள் தொடர்பில், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் முன்னிருந்தது, இரண்டே இரண்டு வழிகள்தான்.
ஒன்று, சர்வகட்சி மாநாட்டில் தமிழர் பிரதேசங்களில் தலைவிரித்தாடும் வன்முறை பற்றிய கடும் கண்டனங்களைப் பதிவு செய்வது.
இரண்டாவது, இந்தியாவிடம் முறையிடுவது. இரண்டையும் அவர்கள் செய்தார்கள்.
சர்வகட்சி மாநாட்டில், அமிர்தலிங்கம் தனது ஆதங்கத்தைக் கடுமையாகப் பதிவு செய்திருந்தார். “தமிழ்பேசும் மக்கள், ஆயுதப்படைகளால் துன்புறுத்தப்பட்டு, சிதைக்கப்பட்டு, கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது, நாம் ஒன்றும் நடக்காதது போல, இங்கே அமர்ந்து கொண்டிருக்க முடியாது” என்று அவர் பேசியிருந்தார்.
மறுபுறத்தில், “தமிழர்கள் இந்தத் தீவில் முற்றாக அழித்தொழிக்கப்பட முன்பு, தயவு செய்து இலட்சக்கணக்கான தமிழர்களைக் காப்பாற்றுங்கள்” என்று இந்தியாவிடம் இறைஞ்சியிருந்தார்.
இந்தியாவிடமிருந்து, இந்திராவின் கண்டனக் குரல் வந்தது. ஜே.ஆரின் நடவடிக்கைகள், இந்திராவின் பொறுமையைச் சோதித்திருந்ததாகவும், சினத்தை அதிகரித்திருந்ததாகவும் பலரும் பதிவு செய்கிறார்கள்.
ஆயினும், உடனடித் தலையீடு என்பதன் சாத்தியக் கூறுகள் தென்படவில்லை. ஆனால், இந்தியா இராணுவ ரீதியில் தலையிடக்கூடும் என்ற அச்சம், ஜே.ஆருக்கு எப்போதும் இருந்தது. இதற்குக் காரணம், இந்திரா காந்தி என்ற பலமான தலைமை.
1971 பங்களாதேஷ் விடுதலைப் போர், 1975 முதல் 1977 வரையிலான ‘எமர்ஜென்ஸி’ (அவசர நிலை), 1984 ஜூனில் இடம்பெற்ற சீக்கியப் போராளிகளுக்கெதிரான ‘ஒபரேஷன் ப்ளூ ஸ்டார்’ என, அதிரடி நடவடிக்கைகளை அச்சமின்றி, ஆணித்தரமாக முன்னெடுத்த ஒரு தலைவர், இந்திரா காந்தி.
ஆகவே, சர்வதேச அரசியல் தந்திரோபாயங்களும், பூகோள அரசியல் தந்திரோபாயங்களும், இந்தியாவின் வௌியுறவுக் கொள்கையும் எதைச் சுட்டிக் காட்டினாலும், அவற்றின்படி இலங்கையில், இந்திரா காந்தி இராணுவ ரீதியில் தலையிடமாட்டார் என்று, எவராலும் அடித்துச் சொல்லிவிட முடியாத சூழ்நிலைதான் இருந்தது.
இந்த நிச்சயமற்றநிலைதான், ஜே.ஆர் ஏனைய சர்வதேச நாடுகளிடம், இந்தியாவின் தலையீடு ஏற்பட்டால், அதை எதிர்த்துத் தம்மை ஆதரிப்பதற்கான ஆதரவுவேட்டையைச் செய்யத் தூண்டியது எனலாம்.
வெறுமனே, அமிர்தலிங்கம் உள்ளிட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களின் அழுத்தம் மட்டும் இந்திராவுக்கு இருக்கவில்லை. தமிழ்நாட்டிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டு இளைஞர்களிடம், இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக நடைபெற்று வந்த வன்முறைகளுக்கெதிரான பெரும் எழுச்சி ஏற்பட்டிருந்தது.
1984 ஓகஸ்ட் 13ஆம் திகதி, சென்னையில் தமிழக மாணவர்கள், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றும் வரும் வன்முறைகளைக் கண்டித்தும், உடனடியாக, இந்தியா நேரடியாகத் தலையிட வேண்டியும் பெரும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தார்கள்.
சென்னையில் அமைந்திருந்த இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகராலயம் நோக்கி, பேரணியாகச் சென்ற மாணவர்களைத் தமிழகப் பொலிஸார் தடியடி நடத்திக் கலைத்ததுடன், தொடர்ந்த மாணவர் போராட்டங்களைத் தடுக்கும் முகமாக, தமிழக அரசு கல்லூரிகளுக்கு ஒருவார விடுமுறையும் அறிவித்திருந்தது.
பயனற்றுச் சென்றுகொண்டிருந்த சர்வகட்சி மாநாடு
இந்தப் பதற்றமான சூழல் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில்தான், ஜே.ஆர் தலைமையிலான சர்வகட்சி மாநாடு, இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் நடந்து கொண்டிருந்தது.
பிராந்திய சபைகளைவிடக் குறைவானதோர் அதிகாரப் பகிர்வுக்குத் தாம் தயாரில்லை என்பதை, 1984 ஓகஸ்ட் 21ஆம் திகதி, சர்வகட்சி மாநாட்டில் அமிர்தலிங்கம் மிகத் தௌிவாகப் பதிவு செய்திருந்ததோடு, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அவை அமைப்பது தொடர்பாக, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், வைத்திருந்த முன்மொழிவையும் அவர் நிராகரித்திருந்தார்.
அதை நிராகரிக்க, அவர் இரண்டு காரணங்களை முன்வைத்திருந்தார். முதலாவதாக, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அவையொன்றை ஸ்தாபிப்பதற்கான குறித்த முன்மொழிவானது, தமிழ்த் தரப்பு நிராகரித்திருந்த மாவட்ட சபைகளை, அதிகாரப் பகிர்வுக் கூறாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது.
இரண்டாவதாக, குறித்த முன்மொழிவானது, மத்தியில் அதிகாரம் குவிக்கப்படுவதற்குச் சாதகமாக அமையுமேயன்றி, அதிகாரப் பகிர்வுக்கு அல்ல என்றும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
ஜே.ஆரைப் பொறுத்தவரையில், சர்வகட்சி மாநாடு என்பது, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு வழிமுறை என்பதைவிட, இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தைச் சாந்திப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகவே இருந்தது.
1984 செப்டெம்பர் மூன்றாம் திகதி வரையாக அமர்வுகளில், இரண்டாவது அவை பற்றிய முன்மொழிவைச் சர்வ கட்சி மாநாடு பரிசீலிக்கும் என, ஜே.ஆர் அறிவித்திருந்தார்.
பிரதான எதிர்க்கட்சியான, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தமிழர் தரப்பும் முற்றாக நிராகரித்திருந்த ஒரு முன்மொழிவை, ஆராய்வதால் என்ன பயன்? ஆனால், ஜே.ஆர் அதைச் செய்தார். அவர், பயன்விரும்பி இக்காரியத்தை முன்னெடுக்கவில்லை என்பதை மீளுணர்த்துவதாக இது அமைந்தது.
ஒரு புறத்தில் அதிகரித்து வந்த வன்முறை, மறுபுறத்தில் இனப்பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பு, அதுவும் மிகக் குறைந்த பிராந்திய ரீதியிலான அதிகாரப் பகிர்வு வழங்கும் பட்சத்தில், தனிநாட்டுக் கோரிக்கையைத் தமிழ்த் தலைமைகள் கைவிட்டு, இறங்கி வரத் தயாராகத் இருந்த வாய்ப்பான சூழல்.
ஆனால், ஜே.ஆர் இதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. இது பற்றித் தனது நூலில் குறிப்பிடும் அன்ரன் பாலசிங்கம், இது சிங்களக் கடும்போக்குவாத அரசியல் தலைமை என்றும், ஜே.ஆரின் ‘மாக்கியாவலிய’ தன்மையான போக்கு என்றும் விமர்சிக்கிறார்.
செப்டெம்பர் மூன்றாம் திகதி நடந்த அமர்வுகளைத் தொடர்ந்து, சர்வகட்சி மாநாட்டின் அமர்வுகள், செப்டெம்பர் 21ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தன.
பருத்தித்துறை படுகொலைகள்
1984 செப்டெம்பர் மாதமும் தமிழர் பிரதேசமெங்கும் கடும் வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. செப்டெம்பர் மாதத்தின் முதல்பகுதியில், திக்கம் பகுதியில் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவொன்று நடத்திய குண்டுத் தாக்குதலில் நான்கு பொலிஸார் பலியாகினர்.
இதற்குப் பதிலடியாக, பருத்தித்துறை நகரத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய பொலிஸார், ஏறத்தாழ 16 பொதுமக்களைச் சுட்டுக் கொன்றதுடன், நகரிலுள்ள கட்டடங்களையும் தீக்கிரையாக்கினர்.
மேலும், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் மீது தாக்குதல் நடத்தியதுடன், அதன் கட்டடங்களை எரியூட்டியதில், ஏறத்தாழ ஒரு சகாப்தகால வரலாறுகொண்ட ஹாட்லி கல்லூரியின் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது.
1981இல் யாழ். நுலக அழிப்பைத் தொடர்ந்து, தமிழர் மண்ணில் நிகழ்த்தப்பட்ட இரண்டாவது பெரிய நூலக அழிப்பு இது. பருத்தித்துறைத் தாக்குதல் தொடர்பில், அமிர்தலிங்கம் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில், பதிலுரைத்த தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி, இந்தச் சம்பவத்தில் ஏறத்தாழ ஆறு முதல் 10 வரையிலான பொதுமக்களே கொல்லப்பட்டதாகவும், சில கட்டடங்கள் தீக்கிரையானதாகவும் குறிப்பிட்டதுடன், அரசாங்கம் பொலிஸ் விசாரணை ஒன்றுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும், குறித்த நிகழ்வுக்குக் காரணமானோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
அமிர்தலிங்கத்தின் கண்டனத்தை உதாசீனம் செய்த அத்துலத்முதலி, “யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது என்று அமிர்தலிங்கத்துக்குத் தெரியாது” என்று, யாழ்ப்பாணத்தில் அமிர்தலிங்கம் இல்லாததைச் சுட்டிக் காட்டிக் குறிப்பிட்டவர், அமிர்தலிங்கம் குழுவினரை, தமிழ் மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்றார்.
பஸ் படுகொலைகள்
செப்டெம்பர் 11ஆம் திகதி, இன்னொரு மிகக் கொடூரமான சம்பவம் இடம்பெற்றது. முல்லைத்தீவுப் பகுதியில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவொன்றின் கண்ணிவெடித்தாக்குதலில் சிக்கி, ஒன்பது இராணுவ வீரர்கள் பலியாகியிருந்தனர்.
இதேநாள், கொழும்பிலிருந்து, யாழ்ப்பாணம் வந்துகொண்டிருந்த, பொதுமக்கள் பயணம் செய்த பஸ் ஒன்று, வவுனியா அருகில் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டது. குறித்த பஸ்ஸில் பயணம் செய்த பெண்களும், குழந்தைகளும் காட்டுக்குள் துரத்திவிடப்பட்டதுடன், அந்த பஸ்ஸில் பயணம் செய்த ஆண்கள் மீது, ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் உயிரிழந்ததுடன், 10 பேர் படுகாயமடைந்தனர்.
குறித்த தாக்குதல் அரச படையால் நடத்தப்பட்டது எனக் குறித்த தாக்குதலிலிருந்து தப்பி வந்தவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.
குறித்த தாக்குதல் இராணுவத்தால் நடத்தப்பட்டது என்பதை மறுத்த அரசாங்கம், ஆனால், அது முன்னாள் இராணுவத்தால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்ததோடு, முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தது.
தொடர்ந்து நடந்த தாக்குதல்களில், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எடுத்துப்பார்த்தால், ஏறத்தாழ அனைத்துச் சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதை நாம் அவதானிக்கக் கூடியதாக இருந்தாலும், அதன் பின்னர், அது தொடர்பில் எந்த வித முன்னேற்றமும் இடம்பெறவில்லை என்பதையும் அவதானிக்கலாம்.
இந்த வன்முறைச் சம்பவங்கள், அமிர்தலிங்கத்தைக் கடும் அதிருப்தியில் தள்ளியிருந்தது. ஜனாதிபதி ஜே.ஆருக்குத் தந்தியடித்த அமிர்தலிங்கம், அரசாங்கத்தின் படைகள் அப்பாவி பஸ் பயணிகளைக் கொன்றுகொண்டிருக்கும்போது, அந்த அரசாங்கத்தோடு, நாம் எப்படிப் பேச்சுவார்த்தை நடத்துவது என்று, அந்தத் தந்தியில் குறிப்பிட்டிருந்தார்.
(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago