2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

புறப்படாத ‘கோச்சி’

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 07 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்தியாவில் சாதிக் கொடுமையாலும் பட்டினியாலும் மக்கள் திண்டாடுவதை, சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அம்மக்களை கூலித் தொழிலாளிகளாக ஆங்கிலேயர்கள் என்று அழைத்து வந்தார்களோ, அன்று தொடங்கியது மலையக மக்களின் வரலாறு. மலைப்பாங்கான இடங்களில் குடியமர்த்தப்பட்டதால், ‘மலையகத் தமிழர்’ என்றும் ‘இந்திய வம்சாவளி தமிழர்’ என்றும் பெயர் குறிப்பிடப்பட்டனர்.

200 வருடங்களுக்கு மேலாக பல்வேறு வளர்ச்சியைக் கண்ட தோட்டத்துறை, இன்று இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியமைக்கும் காரணியாக மாற்றம் பெற்றுவிட்டது.  காலப்போக்கில் வாக்குரிமை, ஊதிய அதிகரிப்புகள் என்று சலுகைகள்  இம்மக்களுக்குக் கிடைத்தாலும் என்றுமே மாற்றம் பெறாத ஒன்றுதான் லயன்கள். 

மலையகத் தொழிலாளர் குடும்பங்களுக்கு சுமார் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் வீடுகளுக்கு மேலதிகமாக தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம், கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தின்போது அறிவித்தது.  இத்தேவையானது முழுமையடைய இன்னும் எத்தனை வருடங்கள் செல்லும் என்பதைக் கணிப்பிட முடியாது.

 200 வருட காலத் தேவை லயன்களுக்கு பதிலாக, தனி வீட்டுத் திட்டங்கள்;   அதை அவ்வளவு இலகுவாகச் செய்துவிட முடியாது என்பதும்  நிதர்சனமான உண்மை.  அரசாங்கத்தாலும் இந்திய நிதி உதவியாலும், கட்டம் கட்டமாக வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆரம்ப காலத்தில் தனித்தனி வீடுகளாக  கட்டப்பட்டதுடன், அதன் பின்னர் மாடிவீட்டு திட்டங்களாக முன்னெடுக்கப்பட்டன.  அதில் காணப்பட்ட சவால்களால், அத்திட்டம் தோல்வியடையவே மீண்டும் காணியுடனான வீடமைப்புத் திட்டங்கள் நடைமுறைக்கு வரத்தொடங்கின. அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீ விபத்துகளால்  உடமைகளை இழந்தவர்கள் முன்னுரிமை அடிப்படையில் முதலில் வீடுகளை பெற்றுக்கொண்டனர்.  ‘பெருந்தோட்ட மக்கள் அனைவருக்கும் வீடு’ என்பதே இத்திட்டத்தின் தொனிப் பொருளாக அமைந்தது.

இலங்கையில் வீட்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் காணியின் அளவு மற்ற சமூகங்களை காட்டிலும் மலையக மக்களுக்கு குறைவானது என்பதே உண்மை. ஆனால், காணி உரித்துடனான 7  பேர்ச் காணியில் வீடு என்பது ஒரு சிறந்த வளர்ச்சி என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  இரண்டு அறைகள், ஒரு வரவேற்பரை,  மலசலகூட வசதியுடன் 750 சதுர அடி நிலப்பரப்பில் இந்த  வீடுகள் அமைக்கப்படுகின்றன. காணி உரித்தும்  கிடைக்கப் பெறுவதால் தனி வீட்டுத்திட்டத்தின் முழுப்பயனையும் மக்கள் பெறமுடியும். மலையக மக்களின் சமூக வாழ்க்கை முறைக்கும் அவர்களின் அடையாளத்தை மாற்றியமைப்பதற்கும் லயங்களிலிருந்து  தனி வீட்டுத்திட்டத்துக்கு முன்னேறிச் செல்ல வேண்டியது அவசியமானதொன்றாகும்.

வீட்டுத் திட்டத்தின் நகர்வுகள்  மந்த வேகத்தில் காணப்படுகிறது என்று குறை கூறும் எதிரணியினரும்  இந்தத் திட்டத்தின் பெறுமதியை உணராத சமூகத்தினரும்  இருக்கத்தான் செய்கிறார்கள்.  ஆனால், இத்திட்டத்தின் நிறைகளைக் காண்பது போலவே, குறைகளையும் காண வேண்டியது கட்டாயம்.  ஒரு வீட்டை அமைப்பதற்காக ஒதுக்கப்படும் 10 இலட்சம் ரூபாயும் முழுமையாக இத்திட்டத்துக்காகப்  பயன்படுத்தப்படுவதில்லை என்பது பலரின் கருத்து.  மேலும் கையளிக்கப்பட்ட வீடுகளில் கூட, முறையான வசதிகள் பூரணப்படுத்தப்படவில்லை என்பதோடு, கட்டி முடிக்கப்படாத வீடுகள் கவனிப்பாரற்றுக் கிடப்பதையும் நாம் காணக்கூடியதாக உள்ளது.

மின்சார வசதிகள் செய்து கொடுக்கப்படாமலும் பாதை வசதிகளும் விளக்கு வசதிகளும் இன்றி பூரணப்படுத்தப்பபடாத ஒரு திட்டமாகவே இத்திட்டம் மக்களுக்கு கையளிக்கப்படுகின்றது.  கட்டி முடிக்கப்படாமல் காணப்படும் சில வீடுகளின் கூரைகள் மழைக்காலங்களில் பறந்துவிடுகின்றன.  சுவர்களில் வெடிப்புகளும் நிலத்தாழ்வுகளும் இந்த வீட்டுத் திட்டங்கள் தொடர்பில் விமர்சனங்களை ஏற்படுத்தி விடுகின்றன.  காணி உறுதிப்பத்திரமும் முறையானதாக இல்லை என்று அண்மைக்காலங்களில் பாராளுமன்றில் கூட பேசப்பட்டது நினைவிருக்கலாம்.

கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் கையளிக்கப்படும் விதத்திலும் குறைபாடுகளும் முறைகேடுகளும் காணப்படுகின்றன. கட்சி அடிப்படையிலும் தொழிற்சங்கங்களின் பரிந்துரையின் அடிப்படையிலுமே பயனாளிகள் தெரிவு இடம்பெறுகின்றது என்ற பிரச்சினைக்கும் தீர்வேயில்லை.  அரசியல்வாதிகளா அல்லது வீடு கட்டுவதை பொறுப்பேற்கும் ஒப்பந்தக்காரர்களா இதற்கெல்லாம் காரணமானவர்கள்?

 நிதிப்பற்றாக்குறை, காலநிலைக் காரணிகள் என்பவற்றை காரணம் காட்டி வீடுகளின் தரம்  தொடர்பாக உரிய பதிலை யாரும் வழங்குவதில்லை. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட லயன்கள் 200  வருடங்களைத் தாண்டியும் எப்படி தாக்குப் பிடிக்கிறது என்று சிந்தித்துப்பாருங்கள். இன்று இவ்வளவு தொழில்நுட்பங்களுக்கு மத்தியில், எம்மால் ஏன் அதை சாத்தியப்படுத்த முடியவில்லை என்பது புரியும்.

வெறுமனே மற்றவர்களை மட்டும் குறை கூறி, பயனாளர் தரப்பை ஆராயாமல் விட்டுவிட முடியாது.  லயன்களில் வாழும்போது மழைக்காலத்தில் தகரம் பறந்தாலோ சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டாலோ நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து, அனுசரணையை எதிர்பார்த்து பழகிவிட்டார்கள். அதே மனநிலையில் தனி வீட்டுத் திட்டத்தின் வரப்பிரசாதத்தை அவர்கள் இழந்துவிடக்கூடாது. நம்முடைய வீடு என்ற எண்ணம் எப்பொழுதுமே இருக்க வேண்டும். ஆனால், தோட்டப்புறங்களில் இன்று நடப்பவை, தான் பெற்றுக்கொண்ட வீட்டைக் கைமாற்றம் செய்வதும் வாடகைக்கு விடுவதும் ஆகும். இதனால் தொடர்ந்தும் லயங்களிலேயே  வசிக்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது.  புதிய வீட்டின் பராமரிப்பு செலவையும் லயன்களை விட்டு இடம் பெயருவதால் நிர்வாகத்தின் மூலம் கிடைக்கும் சலுகைகளில் குறைவு ஏற்படுவதையும் கொண்டு வீட்டுத் திட்டத்தின் முழு பலனையும் உரிமையையும் அவர்கள் அனுபவிக்க தவறிவிடுகின்றனர். 

தொழிலாளிக்கு இந்த வீட்டுத் திட்டங்கள் புதிய முகவரியை தருகின்றன என்பது மட்டுமே அவர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய ஒன்று. ஆகவே, மக்கள் முதலில் மாற வேண்டும்; உரிமைகளை ஏற்கப் பழக  வேண்டும்; சலுகைகளை மட்டுமே வேண்டிக்கிடப்பது  முட்டாள்தனம்.

வீடமைப்ப்புக்காக  செலவிடப்படும் நிதி, எந்த ஒரு தனி மனிதனுடையதல்ல.  அரசினதும்  மற்றும் நன்கொடையாகக் கிடைக்கப்பெறும் மக்களின் வரிப்பணமுமாகும்.  அதை முறையாக கையாள்வது எல்லோருடைய கடப்பாடாகும்.  வெறுமனே ஒருவரையொருவர் குறை கூறுவதும் அரசியல் வெறுப்பைக் காட்ட ஒரு பேசுபொருளாக மாத்திரமே இப்பிரச்சினையை பார்ப்பதும் சிறந்ததல்ல.

அரசியல்வாதிகளும் நிர்வாகமும் நிர்மாணப் பணிகளை ஒழுங்கமைப்பதோடு முறையான கண்காணிப்புகளையும்  மேற்கொள்ள வேண்டும்.  நிதி முறையாக கையாளப்படுவது முதல் தரமான வீடுகள் கையளிக்கப்படுவதுவரை, அரசாங்கமும் தனது தலையீட்டை உறுதிப்படுத்த வேண்டும்.  குறைந்தளவு வீடுகளானாலும் தரமான வீடுகளாகவும் சகல வசதிகளையும் கொண்ட வீடுகளாகவும் கையளிப்பதே  வினைத்திறனான செயற்பாடாகும்.

வீடுகளைப் பெற்றுக்கொள்ளும் பயனாளர்களின்  நடவடிக்கை குறித்து கண்காணிப்பதும் பராமரிப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதும் தோட்ட நிர்வாகத்தின் பொறுப்பாக அமையவேண்டும். ‘தோட்டம்’  என்ற பெயர் மாறி, ‘கிராமம்’ என்ற பெயர் வரவேண்டும்.

லயனும் லாம்பும்  என்று வாழ்ந்தது போதும். வீடும் விளக்கும் என்று எண்ணத் தொடங்குங்கள்.  மாற்றங்களை நீங்கள் ஏற்காத  வரை, மற்றவர்களால் எதையும் மாற்ற முடியாது.  அது நல்லதாக இருந்தாலும் சரி, தீயதாக இருந்தாலும் சரி...


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X