2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

போரின் பின்னரான அபிவிருத்தி அரசியல்

Mayu   / 2024 டிசெம்பர் 11 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

போரின் முடிவானது முழுமையான இராணுவ வெற்றியின் மூலம் சாத்தியப்பட்டது. இது விடுதலைப் புலிகள் களத்தில் இருந்து முற்றாகத் துடைத்தொழிக்கப்பட்டதன் விளைவிலானது. இவ்வாறான வெற்றி அரசாங்கத்துக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவுக்கும் இலங்கையில் நிரந்தரமான சமாதானத்தை நிறுவுவதற்கான வாய்ப்பை வழங்கியது.

இராணுவ வெற்றியைத் தொடர்ந்து, ராஜபக்க்ஷ அரசாங்கமானது தனது பகிரங்க அறிக்கைகள், கொள்கைகள், மற்றும் நடவடிக்கை மூலம், போருக்குப் பிந்தைய வடக்கு மற்றும் கிழக்கை மறுசீரமைக்கும் அபிவிருத்தி மூலோபாயத்தின் மூலம் சமாதானத்தை நிலைநாட்ட விரும்புவதாகக் காட்டிக் கொண்டது.

2009 மே மாதம் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நேரத்தில், தமிழ் மக்களைக் காப்பாற்றவும் ஒரு பயங்கரவாதக் குழுவைத் தோற்கடிக்கவும் ஒரு மனிதாபிமான நடவடிக்கையாகவே அரசாங்கம் போரை வடிவமைத்திருந்தது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இலங்கையில் நிலவுவது ‘அபிவிருத்திப் பிரச்சனையே’. இதை ஜனாதிபதி பல தடவைகள் தனது உரைகளில் வெளிப்படையாகவே குறிப்பிட்டிருக்கிறார். 

இதன் விளைவாக, தமிழ் மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான வழிமுறையாக முன்வைக்கப்படும் வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்தும் அரசாங்கத்தின் பேச்சுக்களுடன் ‘அரசியல் தீர்வு’ பற்றிய விவாதம் பொது நிகழ்ச்சி நிரலில் இருந்து மெதுவாக மறைந்து விட்டது.

அரசியல் தீர்வுக்கான தேவையிலிருந்து விவாதத்தைத் திசைதிருப்புவதே இந்த உத்தியின் நோக்கம். அபிவிருத்தி முன்னுதாரணத்தின் மூலம் சமாதானத்தைப் பலப்படுத்துவதன் மூலம், மோதலின் மூல காரணங்களை மறுப்பதற்கும், அபிவிருத்தியின் பற்றாக்குறையை மோதலுக்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடுவதற்கும், அதன் மூலம் மோதலை அரசியலற்றதாக்குவதற்கும் அரசாங்கம் முயன்றது. இந்தக் கதையாடலை வடிவமைப்பதில் அரசாங்கம் வெற்றியும் பெற்றது என்றே கொள்ள வேண்டும். 

2009 மே மாதம் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், வடக்கு மாகாணத்தில் அபிவிருத்தி குறித்த கதையாடல்கள் மூலம் சமாதானம் எட்டுவது என்பது இன்னும் தீவிரமாகப் பலப்படுத்தப்பட்டது.

ஜனாதிபதியின் சகோதரரான பெசில் ராஜபக்க்ஷவின் தலைமையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட வடமாகாண செயலணியில் ஒரு தமிழர் கூட இருக்கவில்லை என்பது அபிவிருத்தி உந்துதல் எந்த திசையில் செல்லும் என்பதை சுட்டிக்காட்டியது. கிழக்கை விட வடக்கில், இராணுவத் தேவைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதுடன், நீண்டகாலமாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்கள் காரணமாக, பலத்த இராணுவமயமான சூழலுக்குள்ளேயே அபிவிருத்தி மேற்கொள்ளப்படும் என்பது புலனானது. இது அபிவிருத்தியின் இராணுவமயமாக்கலைக் குறித்து நின்றது. 

அபிவிருத்தி என்பது உலகமயமாக்கப்பட்ட உலகின் சமூக-பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்பிற்குள் மக்கள்தொகையின் நடத்தை மீதான கட்டுப்பாட்டைப் பேணும் ஒரு வடிவமாக மாறியுள்ளது. போருக்குப் பின்னரான அபிவிருத்தியில் இராணுவத்தினரின் ஈடுபாடு அதிகரித்துள்ளதை இராணுவத் தளபதியே விதந்துரைத்துள்ளார். ஆவர் ‘வடக்கில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்த் பாதுகாப்புப் படைகள் வட பிராந்தியத்தை அபிவிருத்தி செய்வதில் புதிய பாத்திரத்தில் ஈடுபடுவார்கள்’ என்றார். 

அரசாங்கம் கையாண்ட அபிவிருத்தி மூலோபாயமானது போருக்கான அடிப்படைக் காரணிகளையோ, இனப்பிரச்சனைக்கான தீர்வையோ கவனத்தில் கொள்ளவில்லை. அபிவிருத்தியிலிருந்து உரிமைகள் பிரிக்கப்பட்ட நிலையே போருக்குப் பிந்தைய நாட்டின் வடக்குக் கிழக்கில் இருந்தது. ஆனாலும்  இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளும் நன்கொடையாளர்களும் ஏனையோரும் தொடர்ச்சியாக இலங்கை அரசோடு அபிவிருத்திச் செயற்றிட்டத்தில் இணைந்திருந்தன.

அவர்களைப் பொறுத்தவரையில் நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சமச்சீரற்ற வளர்ச்சி மற்றும் வளர்ச்சியின்மை மோதல்களை விளைவிக்கிறது உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜப்பான்,அமெரிக்கா போன்ற இருதரப்பு நன்கொடையாளர்களும் வடக்கு மற்றும் கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி உதவி வழங்குவதோடு முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்க உதவுகின்றன. உதாரணமாக: கிழக்கு மாகாணத்தில் சம்பூரில் உயர் பாதுகாப்பு வலயத்தில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்ட நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கு இந்தியா நிதியுதவி செய்கிறது. இதே நிலைப்பாட்டையே ஏனைய நாடுகளும் கைக்கொண்டன. 

மே 2009 இல் ஐரோப்பிய ஒன்றியத்தின்  இலங்கை வர்த்தக உச்சி மாநாட்டில் அமெரிக்க அபிவிருத்தி நிறுவனத்தின் ((USAID) பணிப்பாளர் தனது உரையில், ‘இன்றுவரை,இலங்கை அரசாங்கம் வறுமையைக் குறைத்தல்,பணவீக்கத்தைக் குறைத்தல் மற்றும் அதிகாரத்தை படிப்படியாகப் பரவலாக்குதல் ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டுள்ளது’ எனக் குறிப்பிட்டார்.

மேலும் ‘கிழக்கில் உள்ள மூலோபாயம் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை கட்டியெழுப்புவதற்கு பொருளாதார வளர்ச்சி பங்களிக்கும் என்ற அடிப்படையை அடிப்படையாகக் கொண்டது.

இது நிலையான அரசியல் தீர்வுக்கு சாதகமான நிலைமைகளை உருவாக்க உதவும்’ என்றும் சொன்னார். இக்கூற்று அபிவிருத்தியின் ஊடாக அரசியல்தீர்வு என்ற நிலைப்பாட்டிலேயே நன்கொடையாளர்கள் இருந்ததை உறுதி செய்தது. 

போருக்குப் பின்னரான காலப்பகுதியில் பாரம்பரிய நன்கொடையாளர்களுக்குப் புறம்பாக, ஈரான் போன்ற புதிய நன்கொடையாளர்களின் நுழைவு மற்றும் சீனா போன்ற புதிய அதிகாரமையத்தைக் கட்டமைக்கும் நன்கொடையாளர்களின் அதிகரித்த ஆதரவு, சிறுபான்மை சமூகங்களின் விளைவுகளைப் பொருட்படுத்தாமல் வடக்கு மற்றும் கிழக்கில் அதன் அபிவிருத்தி முயற்சிகளை மேலும் முன்னெடுக்க அரசாங்கத்திற்கு உதவியுள்ளது.

உதாரணமாக, ஜப்பான், சீர்திருத்தத்தை மேற்கொள்ள அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு கருவியாக உதவியைப் பார்க்கவில்லை, ஏனெனில் மாற்றம் உள்ளிருந்து மட்டுமே நிகழ முடியும். வெளிப்புற அரங்காடிகள் மூலம் அல்ல என்பது ஜப்பானின் நிலைப்பாடு.

எனவே, அரசாங்கம் திறமையாக, தற்போதைய உலகளாவிய உதவிக் கட்டமைப்பை தன் நோக்கங்களை அடைவதற்காகப் பயன்படுத்தியது. 

ஒரு புறம் மனிதாபிமான உதவி நிறுவனங்களுக்கு எதிர்ப்பு, மறுபுறம் ஆதிக்கப் போட்டியில் இருக்கும் எதிரெதிர்தரப்புகளை அணுகுவதன் மூலம் நிதிமூலங்களைத் தக்கவைப்பது, உரிமை சார்ந்த விடயங்களை பேசாமல் இருக்கும் நாடுகளுடனான  ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் போருக்குப் பிந்தைய காலப்பகுதியை அரசாங்கம் திறமையாக வழிநடத்தியுள்ளது.

இலங்கை மேற்கத்திய நாடுகளில் இருந்து விலகி ஜனநாயகத்திற்கு எதிரான மற்றும் மேற்கத்திய விரோத நாடுகளுக்கு ஆதரவாக செயற்படுவது அபிவிருத்திக்கான உதவிகளை வறண்டு போகச் செய்யவில்லை என்பதை போருக்குப் பிந்தைய இலங்கையின் கதை எடுத்துக்காட்டுகிறது.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு, அதிக பொறுப்புக்கூறல் போன்றவற்றைப் பகிரங்கமாக பல நாடுகள் கோருகின்ற அதேவேளை, சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும்,சிறுபான்மையினருக்கு அதிகரித்த பொருளாதார மற்றும் சமூக நலன்களை வழங்குவதற்குமான அபிவிருத்தி முன்முயற்சிகளை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ந்து உதவிகளை வழங்கின. 

இலங்கைக்குப் பரிசளித்ததில் மேற்கத்தேய நாடுகளின் சர்வதேச அமைப்புகளின் பங்களிப்பு பெரிது. ஆனால் அது இன்றுவரை முக்கிய பேசுபொருளல்ல. 

12.06.2024


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .