2025 டிசெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பு மாநகர சபையில் அதிகாரப் பலப்பரீட்சை

Johnsan Bastiampillai   / 2021 நவம்பர் 18 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சட்டத்தை மீறும் அதிகாரிக்கு நடவடிக்கை எடுக்காத ஆளுநர் என்ற கோசம் மட்டக்களப்பிலிருந்து நாட்டின் உள்ளூராட்சித்துறைக்குள் கேள்விகளை எழுப்பிவருகிறது.

இது ஒரு மாநகர சபை சம்பந்தப்பட்டது மட்டுமே. உள்ளூராட்சி சபைகளில் நடைபெறும் சாதாரணமான விடயம் என்றே அதிகாரிகள், திணைக்களங்கள், ஊடகங்கள் உள்ளிட்ட எல்லோரும் பார்க்கின்றனர். ஆனால், இதற்குள் இருக்கின்ற சூட்சுமம் மிகவும் சிக்கலானது.  

உள்ளூராட்சிச் சட்டங்களின் கீழ் உள்ள மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகளின் அதிகாரம் அளிக்கப்பட்ட அரசியல் அலகே சபைகளாகும். தேர்தல் மூலம் மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகளின் சபைக்கு நிருவாகத்தினர் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். இதனை உள்ளூராட்சி சபைகளின் நிறைவேற்று அதிகாரமாகவே இலங்கை அரசியலமைப்பு வரையறுக்கிறது. 

ஆனால் மட்டக்களப்பு மாநகர சபையில் மாத்திரம் அதற்கு எதிரான செயற்பாடுகளே நடைபெறுகின்றன. அதற்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமா, அல்லது அரசியல் போட்டியா, கட்சி பேதமா, அரசியல் காழ்ப்புணர்ச்சியா என்பதெல்லாம் புரியாத புதிராகவே இருக்கிறது. புத்தி ஜீவிகளும், உள்ளூராட்சி சார் பங்குதாரர்களான மக்களும் இந்தவிடயத்தில் அக்கறையற்றிருப்பது கவலையானதே.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஏறாவூர் பற்று (செங்கலடி), மண்முனை தென் எருவில் பற்று (களுதாவளை), மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை), மண்முனை மேற்கு (வவுணதீவு), போரதீவுப்பற்று (வெல்லாவெளி) ஆகிய பிரதேச சபைகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சிக்குட்பட்டதாக இருக்கிறது. ஒரேயொரு மாநகர சபையாக மட்டக்களப்பு மாநகர சபை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வசம் இருக்கிறது.

மட்டக்களப்பு மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தினை கடந்த 05.04.2018 அன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. அன்றிலிருந்து இரு ஆணையாளர்கள் கடமையாற்றியுள்ளனர். அவர்களுடன் இல்லாத குழப்பம் மூன்றாவதாக 2020 டிசெம்பரில் நியமிக்கப்பட்ட புதியவருடன் என்ன என்பதே கேள்வி.

2018ஆம் ஆண்டு முதல் 2019 வரை மணல் வீதியில்லா மாநகரம் என்ற திட்டத்தின் ஊடாக  300க்கும் மேற்பட்ட வீதி அபிவிருத்தி வேலைகள், 20 வரையான வடிகான் கட்டுமானம் என்பன மேற்கொள்ளப்பட்டது.  2020ம் ஆண்டு கொவிட் தொற்றால் நாடு முடக்கப்பட்ட வேளையிலும் கூட 105 வீதி வேலைகளும், 16 பிரதான வடிகான் கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் 2021ம் ஆண்டில் 11 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், நடைபெற்றவைகள் மிகச் சொற்பமே என்கிறது மாநகர சபைத் தகவல்கள். இதற்கு தற்போதுள்ள ஆணையாளருடைய செயற்பாடே காரணம் என்கிறது மேயர் தரப்பு.

அத்தோடு, 2020.12.07ஆம் திகதி முதல் மாநகர சபையின் ஆணையாளராக புதியவர் நியமிக்கப்பட்டதனை தொடர்ந்து சபையின் செயற்பாடுகளை குழப்பியடிக்கும் விதமாகவும்,  இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்றத்தால் ஆக்கப்பட்ட மாநகர சபையின் கட்டளைச் சட்டம், தாபனவிதிக் கோவை மற்றும் நிதி நிர்வாக சுற்றறிக்கைகளையும், அத்துடன் சபைத் தீர்மானங்களையும் மீறிச் செயற்பட்டு வருவதையும் எம்மால் அவதானிக்க முடிந்ததுடன், அது தொடர்பில் உடனுக்குடன் கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கும், பிரதம செயலாளர், முதலமைச்சரின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தோம். இருந்த போதும் அது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரினால் எதுவித நடவடிக்கைகளோ எடுக்கப்படாமலும், அல்லது அது தொடர்பாக அவருக்கான அறிவுறுத்தல்களோ வழங்கப்படாமலும் இருந்தமையானது அவர் இவ்வாறான அத்துமீறிய செயற்பாட்டினை தொடர்வதற்கு காரணமாக அமைந்தது என்றும் மேயர் தரப்பு கருத்து முன்வைக்கின்றது.

இந்நிலையில், புதன்கிழமை (10) கிழக்கு மாகாண ஆளுநர், மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் ஆகியோருக்கு எதிராக மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.   கடந்த கூட்டறிகை இன்மையால் சபை அமர்வு  மேயரால் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து மேயர் உட்பட உறுப்பினர்கள் பலரும் மேற்படி நிர்வாக நடவடிக்கையைக் கண்டித்தும், கிழக்கு மாகாண ஆளுநர் மாநகர சபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்பதையும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறான பிரச்சினைகள் கடந்த 2020 டிசெம்பர் மாதத்திலிருந்து நடைபெறுகின்ற மேயருக்கும் ஆணையாளருக்குமிடையிலுள்ள பிரச்சினையாகும். இருவரும், மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள். ஒவ்வோர் அரசியல் நிலைப்பாடுகள் கொண்டவர்கள். தனிப்பட்ட விடயங்கள் நிர்வாகம், அதிகாரச் செயற்பாடுகள் சார்ந்து வருகின்றபோது, பொருந்தாது என்பது சிலவேளைகளில் எல்லோருக்கும் புரிந்துவிடுவதில்லை. அதுபோன்றதொரு புரிதலுக்கு மட்டக்களப்பு மாநகர சபை தயாராக இல்லை.

கடந்த டிசெம்பருக்குப் பின்னர் உருவான முறுகல் நிலை, ஆணையாளரருடைய அதிகாரங்கள் மாநகர மேயரால் மீளப்பெறப்பட்டதுடன் முற்றிக் கொண்டது.  பின்னர், மாநகர ஆணையாளருக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள் சபையால் மீளப்பெறப்பட்டுள்ளது. ஆனால் அவருடைய செயற்பாடுகள் கட்டுப்படுத்த முடியாதவைகளாகவே இருந்தன. அவரின் தொடர் நடவடிக்கை காரணமாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இருந்தாலும், ஆணையாளரின் செயற்பாடுகளில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறவில்லை.

ஆளுநர், பிரதம செயலாளர் தகுந்த நடவடிக்கையினை எடுக்காத நிலையில் இவர்கள் இவ்வாறு குழப்பத்தினை விளைவிக்கும் ஆணையாளரை மாற்றி புதிய ஆணையாளர் ஒருவரை நியமிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோசமிட்டுப் போராட்டம் நடத்தும் நிலை உருவாகியிருக்கிறது.

2020 டிசெம்பருடன் உருவான சிக்கல் முடிவுக்கு வராமல், மாநகர மேயரால் மீளப்பெறப்பட்ட அதிகாரங்களில் தலையீடு செய்ய மாநகர ஆணையாளருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.  பின்னரான நடவடிக்கைகள் காரணமாக,  நீதிமன்றக் கட்டளையை மீறியமை தொடர்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 87 குற்றச்சாட்டுக்களுடன், மேயரால் தாக்கல் செய்யப்பட்டது. அதன் காரணமாக ஆணையாளர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

இவ்வாறன நிலைமை ஏற்பட்டால் தாபன விதிக்கோவையின் பிரகாரம் பதவியிலிருந்து நீக்கப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெற்றிருக்கவில்லை.

அதற்கும் மேலதிகமாக மூன்று தடவைகள் பிரதமரால் ஆணையாளரை இடமாற்றம் செய்யும்படி கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளபோதும் எந்தவித நடவடிக்கயும் எடுக்கப்படவில்லை.

 குறிப்பாக, இலங்கை நிர்வாக சேவை அதிகாரி ஒருவர், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பு சட்டத்தினை வெளிப்படையாக மீறும் போது அவருக்கு எதிராக, முறையான ஒழுங்காற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பு அவ் அதிகாரிக்கான  நியமன அதிகாரியையே சாரும்.  

மாநகர ஆணையாளரது செயற்பாடுகள் தவறானது என உள்ளூராட்சி ஆணையார், முதலமைச்சரின் செயலாளர் ஆகியோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும், ஆளுநர் அதற்கான எந்த நடவடிக்கைகயும் மேற்கொள்ளவில்லை. ஆளுநர் இவ்வாறு மௌனமாக இருந்தமையை, ஆணையாளரது அத்துமீறிய செயற்பாடுகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவே குற்றம்சாட்டப்படுகிறது. இது வெறும் குற்றச்சாட்டல்ல.

உண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கான சேவைகளையும் அபிவிருத்திகளையும் திறம்பட மேற்கொள்ளக் கூடாது என கிழக்கு ஆளுநர்   திட்டமிட்டு   முன்னெடுக்கும் செயற்பாடுகளாகவே கொள்ள வேண்டும்.

அத்துடன், மாநகர ஆணையாளரின் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் அதற்கான நியாயமான தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் வகையில் நடவடிக்கை எதனையும் எடுக்காத நிலையில்,  ஆளுநர், மாநகர ஆணையாளர் தவறுகளை இழைக்கவில்லை என மேயரிடம் தெரிவித்துள்ளமையானது அரசியல் ரீதியான பாரதூரமான பாகுபாட்டையே வெளிக்காட்டிநிற்கிறது. இந்த பாகுபாட்டுத் தன்மையானது இலங்கையின் உள்ளூராட்சி அரசியல் வரலாற்றில் கறைபடிந்த பதிவாகவே இருக்கும்.

எனினும், 2021 பெப்ரவரியில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசாரணை குழு, ஓகஸ்ட் மாதத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் ஆணையாளர் கட்டளைச் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும், மாநகர சபைத் தீர்மானங்களை அமல்படுத்தல் வேண்டும். உள்ளூராட்சி ஆணையாளரின் அறிவுத்தல்களை பின்பற்ற வேண்டும் ஆகிய மூன்று பரிந்துரைகளை முன்வைத்திருந்தது. 

இப் பரிந்துரைகளின் படி, ஆணையாளர் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இதுவரை அது நடைபெறவில்லை. அத்துடன், நான்காவதாக மேயருக்கும் ஆணையாளருக்குமிடையில் இணக்கப்பட்டை ஏற்படுத்துதல் என்ற பரிந்துரையும் முன்வைக்கப்பட்டிருந்தது.

இவை எதுவும் நடைபெறாமலேயே நகரும் மட்டக்களப்பு மாநகர சபையானது நிதிப்பற்றாக்குறையையும் அபிவிருத்திகள் போதாமையையும் சுமக்கிறது.  இது  மாநகர சபைக்கு பெரும் இழப்பே. இதனைச் சீர் செய்வதற்கான வழிகளை யார் தேடுவது என்பது இந்த இடத்தில் தொக்கி நிற்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X