R.Tharaniya / 2025 ஒக்டோபர் 27 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
முளையிலேயே கிள்ளப்படாத விடயங்களான இனத்துவேசம், பேரினவாதம், பாரபட்சம், அடக்குமுறைகள், ஆதிக்கத்தன்மை போன்றவற்றினை நன்றாக வளர்ந்துவிட்ட பின்னர் சரிசெய்து விடலாம் என்று எண்ணங்கொள்வது சாத்தியத்துக்குட்படுத்த முடியாதது என்பதே யதார்த்தம்.
இந்த யதார்த்தத்தைக் கடந்து செல்ல நினைப்பது குதிரைக் கொம்பானது. இதனையே மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செய்ய நினைக்கிறது.
காலம் கடந்த பின்னர் அதனையும் பூசி மெழுக நினைப்பதல்ல, முனைவது, நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயல்வது எந்த அடிப்படையில் நாட்டில் இலங்கையர் என்ற உணர்வை ஏற்படுத்தும் என்பதுதான் இந்த இடத்திலுள்ள கேள்வி.
மக்கள் விடுதலை முன்னணியினர் இவ்வாறான கொள்கையை தேர்தல் காலத்திலோ அதற்கு முன்னரோ வெளிப்படையாக முன்வைத்திருக்கவில்லை. கொள்கையை வெளிப்படுத்தாமல், முன்வைக்காமல் தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்தபின்னர் வெளிப்படுத்துவது இவர்களுடைய இதய சுத்தியை அல்லது உள் மனச்செயற்பாட்டை சந்தேகத்துக்கே உட்படுத்துகிறது எனலாம்.
பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கை தொடர்பான வெளிப்புற முயற்சிகள் தற்போதைய தேசிய செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கையாக அமையும் என்பதுடன், சமூகங்களை தேவையில்லாமல் துருவப்படுத்தும் தலையீடு தொடர்பாக மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் உள்ள முடிவுகள் மற்றும் பரிந்துரைகளுடன் அரசாங்கம் உடன்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
இது ஒரு வெறும் கருத்து என்ற கணக்கில் விட்டுவிடக்கூடிய கருத்தல்ல. அதே நேரத்தில் வெறுமனே இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மாத்திரமே நடைபெற்றிருக்கின்றன. அவற்றினை விசாரித்துவிட்டால் நாட்டிலுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைத்துவிடும் போன்றதான கருத்துநிலையில் பிரதமருடைய உரை அமைந்திருந்தது.
திட்டமிட்டவகையிலான குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல் செயற்றிட்டங்கள், கல்வியில் தரப்படுத்தல், விகிதாசார முறைப்படுத்தல் என கட்டமைக்கப்பட்ட வகையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் இலங்கையில் நடைபெற்றன. இப்போதும் இச் செயற்பாடுகள் முற்றுமுழுதாக நிறுத்தப்பட்டுவிட்டன என்று உறுதியாக கூறமுடியாத நிலைமையே தொடர்கிறது.
ஆயுத யுத்தம் தொடங்கப்பட்டது முதல் வெவ்வேறு வழிமுறைகள் மூலம் இவ்வாறான செயற்றிட்டங்கள் நகர்த்தப்பட்டிருக்கின்றன. யுத்த ஓய்வுக்குப் பின்னரும் வேறு பல வடிவங்களாக நடைபெற்றன. அந்த வகையில்தான் இப்போதும் இலங்கையின் அரசாங்கத்தில் நம்பிக்கையற்ற தமிழர்கள் சர்வதேச பிரசன்னம், சர்வதேச போர்க்குற்ற விசாரணை, சர்வதேச நீதி வழங்கலைக் கோருகின்றனர்.
இதனை தவறென்றோ, பிழையென்றோ யாரும் கூறுவார்களானால் அவர்கள் கடந்தகால அனுபவத்தில் இதுவரை எதனையும் கற்றுக்கொள்ளவில்லை என்ற முடிவுக்கே வரமுடியும். அதனால்தான், பௌத்த மயமாக்கல் நிறுத்தப்படவேண்டும் என்ற அடிப்படையில் பௌத்த மயமாக்கல் எதிர்ப்பைத் தமிழ்த் தரப்பு கையில் வைத்திருக்கிறது.
அதே போன்றுதான் இலங்கையின் பேரினவாதத் தரப்பில் நம்பிக்கையற்றுப் போனமையினாலேயே இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு சர்வதேசத்தின் பிரசன்னத்தையும் சர்வதேச நடைமுறைகளைகளையும் கோருகின்றனர். இதனைக் கைவிடுமாறு கோருவது எந்தவிதத்திலும் நியாயமாகாது என்பதும் நிலைப்பாடு.
அத்துடன் அதற்கான உரிமையும் யாருக்குமில்லை என்பது தமிழர்களின் நிலைப்பாடு. காலம் கடத்தல்களையே ஒவ்வோர் அரசாங்கமும் கைக்கொள்வதற்குக் காரணம் எதிர்கால சந்ததியினை இலக்காகக் கொண்டது என்பது வெளிப்படையானதாக இருக்கின்ற நிலையில், யதார்த்தத்தை மறந்து தமிழர்கள் தங்களது நிலைப்பாடுகளைக் கைவிட்டு யதார்த்த அரசியலைப் பேச வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் ஜே.வி.பி. இருப்பது கவலைக்குரியது.
அதற்காக அவர்கள் முன்வைப்பது புதிய அரசியல் யாப்பாக இருக்கிறது. இருந்தாலும் அது தமிழ் மக்களுக்கு சமத்துவமான நடைமுறையை ஏற்படுத்துவது எந்த அடிப்படையைக் கொண்டிருக்காது என்பது வெளியே வராத ஒன்றாக இருந்து வருகிறது.
புதிய அரசியல் யாப்பின் ஊடாக இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வை காணமுடியும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்ற ஜே.வி.பி.யினர் இது தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.
இந்தக் கலந்துரையாடல்களின் தீர்மானமானது எந்தவகையிலும் தமிழர்கள் எதிர்பார்க்கின்ற விடயங்களைத் தொட்டுவிடவில்லை என்பதே உண்மை.
கடந்த ஒரு வருட கால ஆட்சியில் இதுவரையில் எட்டிவிட்ட விடயங்கள் என்று முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை அகற்றியது, போதைப்பொருள் மீட்புகள், அது தொடர்பான கைதுகளை மாத்திரமே பட்டியலிட முடியும்.
ஆனால், நாட்டில் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றே நாட்டின் முன்னேற்றத்துக்குரியதாக அமையும் என்பது மறக்கப்பட்டதாக இருந்து வருகிறது.
நாட்டின் எதிர்காலத்துக்காக கொண்டுவரப்பட வேண்டிய முன்னேற்றங்கள் எதிர்காலத்தில் நகர்த்தப்படவுள்ள அரசியல் வியூகங்களில் தங்கிருக்கிறது என்பதனை இதுவரையில் உணர்ந்து கொள்ளாத ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான தேசிய சபை புதிய அரசியல் யாப்பு என்பதற்குள் மாத்திரம் நின்றுகொண்டிருக்கிறது.
அதில், தீர்வின்றி நீண்டுகொண்டிருக்கின்ற வடக்கு கிழக்குத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சகல இன, மத மக்களையும் பொதுமைப்படுத்தும் வகையிலேயே நகர்வுகள் காணப்படுகின்றன.
ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதும் அடங்கியிருக்கிறது. இருந்தாலும் இப்போதிருக்கின்ற ஜனாதிபதி அதிகாரத்தை மாற்றுவதற்கு ஜே.வி.பி. விரும்புமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால், 2029 ஆம்ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிக்கப்படுமா? என்பது புரியா புதிரே.
இலங்கை சுதந்திரமடைந்தது முதலே தொடர்ந்து கொண்டிருக்கின்ற இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்த்துவிடுவதில் அக்கறையற்றிருந்த இலங்கையின் அரசாங்கங்கள் தங்களது ஆட்சிகளை நகர்த்துவதிலேயே அக்கறை கொண்டிருந்தனர். சிறுபான்மையினரான தமிழ் மக்களின் உரிமைக்கான கோரிக்கையை மலினப்படுத்தும் செயற்திட்டங்களே திட்டமிடப்பட்டவகையில் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இதனை மறுப்பவர்களும் மறந்தவர்களும் இலங்கையர்கள் என்று மக்களை ஒருநிலைப்படுத்துவதைப்பற்றி சிந்திப்பது வேடிக்கையானது.
இலங்கையில், 1833இல் கோல்புறுக் - கமரன், 1929இல் மனிங், 1924இல் மனிங் - டெவன்சியர், 1931இல் டொனமுர், 1947இல் சோல்பரி என அரசியலமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
1948இல் பிரித்தானியரால் சுதந்திரம் வழங்கப்பட்ட பின்னரும் டொமினியன் அந்தஸ்திலேயே நாடு இருந்துவந்தது. பின்னர் 1972இல் குடியரசாக மாறியது. 1978இல் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டது. 22 திருத்தங்களைக் கண்ட இலங்கையின் அரசியலமைப்பு கண்டிருக்கின்ற திருத்தங்கள் யாவும் அரசாங்கங்களின் தேவைகளுக்கும், நோக்கங்களுக்குமாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தன.
2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டபோது புதிய அரசியலமைப்பை உருவாக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டினால் அது இடைநடுவில் கைவிடப்பட்டிருந்தது. அதற்கு பேரினவாதத் தரப்பினருடைய செயற்பாடே காரணமாக இருந்தது.
ஆட்சியிலிருக்கின்ற தேசிய மக்கள் அரசாங்கம் அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வதனை விடுத்து புதிய அரசியலமைப்பையே உருவாக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறது. இலங்கையின் அரசியலமைப்பானது மக்களது நலனைக் கருத்தில் கொண்டா? அரசியல் நலனை நோக்காகக் கொண்டா? மேற்கொள்ளப்படப்போகிறது என்பது முக்கியமாக கவனத்திலெடுக்கப்பட வேண்டும்.
குடியரசு அரசியல் யாப்பானது நாட்டில் ஆட்சி நடத்துபவர்களுக்கும் நாட்டு மக்களுக்குமான வழிகாட்டியாகும். ஆனால், அந்த வழிகாட்டியை தாங்கள் நினைத்த வேளைகளிலெல்லாம் ஆட்சியாளர்கள் தமக்கேற்றால் போன்று, தமது அரசியல் தேவைகளுக்காக மாற்றியமைப்புதுதான் இலங்கையில் நடைபெற்று வந்திருக்கிறது.
அரசியலமைப்பையே தமக்Nகுற்றாற்போல மாற்றியமைக்கின்ற, நடைமுறைப்படுத்துகின்ற அரசாங்கங்களையுடைய நாட்டில் புரையோடிப்போயிருக்கின்ற இனப்பிரச்சினைக்கும், யுத்தத்தில் நடைபெற்ற குற்றங்களுக்கும், நியாயமான நடைமுறைகள் கைக்கொள்ளப்படுமா என்பது சந்தேகமானதே.
அந்தவகையில்தான் முளையிலேயே கிள்ளப்படாததற்காக மரத்தை வெட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைப்பாட்டைக் கைக் கொள்வது சிறப்பானதாக இருக்கும் என்ற முடிவு கிடைக்கும்.
உள்ளகப் பொறிமுறையை கொண்டுவருதல் என்கிற நிலைமை அரசியலமைப்புக்கு வெளியே பயங்கரவாதத் தடைச்சட்டம் இருப்பது போன்று இல்லாத நிலைமையை, ஏம்மாற்றங்களை தமிழர்களுக்குத் தராது என்று நம்புவோம்.
ஏமாற்றங்களையே கடந்து வந்திரக்கின்ற தமிழர்களிடம் கொண்ட கொள்கையை கைவிடும்படி கூறும் ஜே.வி.பி. நாட்டின் கடந்தகால அனுபவங்களுக்குள் சென்றுவருதலே கட்டாயமாகும்.
லக்ஸ்மன்.
55 minute ago
8 hours ago
27 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
8 hours ago
27 Oct 2025