Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 ஜூன் 25 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
தேசிய அரசியலைப் போலவே முஸ்லிம் அரசியலிலும் தேர்தலை மையமாகக் கொண்டு கட்சி தாவும் படலமும், ஆட்சேர்க்கும் முயற்சிகளும் ஆரம்பமாகியிருக்கின்றன. ஆனால் தம்முடைய பலம் பலவீனம் பற்றிய கள அறிவின் அடிப்படையில் அவர்கள் நகர்வுகளைச் செய்வதாக தெரியவில்லை. சில நகர்வுகள் கோமாளித்தனமாக உள்ளன.
முஸ்லிம் கட்சிகளுக்குள் உள்ளக முரண்பாடுகள் வலுவடைவதும்,சில முரண்பாடுகள் தணிவடைவதும் உள்ளடங்கலாக அனைத்து விதமான ‘சம்பவங்களும்’ நூறு வீதம் அடுத்து நடைபெறவுள்ள இரு தேர்தல்களை மையமாகக் கொண்டே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
மாகாண, உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் இன்மையால், முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் தமது பலத்தை உரசிப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் அண்மைக்காலத்தில் கிடைக்கவில்லை.
முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை பற்றிச் சிந்திக்காமல் தமது கல்லாப் பெட்டிகளில் மட்டும் குறியாக இருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து இப்போதுதான் கண்விழித்துள்ளார்கள்.
மக்களுக்கு எதுவுமே செய்யாமல், அவர்கள் தம்மோடு இருக்கின்றார்கள் என்ற ஒரு மாயையில் மூழ்கிக் கிடந்த அரசியல் தலைவர்கள், தளபதிகளுக்கு உள்ளுக்குள் தோல்விப் பயம் எடுத்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடைபெறும் என்பதால் அந்த உதறல் வெளியில் தெரியாமல் இருக்கின்றது. அவ்வளவுதான்.
முஸ்லிம் கட்சித் தலைவர்களான றவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன் போன்றோர் பெரும்பாலும் கட்சியின் வெற்றி பற்றிச் சிந்திக்கின்றனர். அடுத்ததாக ஜனாதிபதித் தேர்தல்தான் நடைபெற்றாலும் அதற்குப் பிறகு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை நோக்கி இப்போதே கட்சியின் வாக்குவங்கியையும் சரிசெய்ய அவர்கள் முற்படுகின்றனர்.
ஆனால், றவூப் ஹக்கீம் ஒரு குறிப்பிட்ட பெரும்பான்மைக் கட்சியின் கம்பளைத் தொகுதி அமைப்பாளராக இருந்து கொண்டு, கிழக்கில் எப்படி முஸ்லிம் காங்கிரஸை சந்தைப்படுத்தப் போகின்றார் என்பதுதான் தெரியவில்லை.
ஆக, அவர் உள்ளடங்கலாக தற்போது எம்.பி.க்களாக இருப்பவர்களுக்கும், முஸ்லிம் கட்சிகளில் ஏற்கனவே மாகாண சபை உறுப்பினர்களாக பதவி வகித்தவர்களுக்கும் தமது சொந்த வெற்றிதான் முழுமுதல் இலக்காக உள்ளது.
மறுபுறத்தில், எம்.பியாக இருந்து புளித்துப்போன, தோல்வியடையக் கூடிய அல்லது தலைவருடன் இணங்கிப் போகாத அரசியல்வாதிகளை ஓரம் கட்டுவதற்கு தலைவர்கள் முயற்சிக்கின்றனர்.
இரு பிரதான முஸ்லிம் கட்சிகளுக்குள்ளும் இந்நிலைமை காணப்படுகின்றது என்றாலும் முஸ்லிம் காங்கிரஸிற்குள் உள்ளக முரண்பாடுகள் அதிகமுள்ளன.
ஒவ்வொரு ஊரிலும் மு.கா.வுக்கும் ம.கா.வுக்கும் பல அணிகள், பிளவுபட்ட குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் பயன்பெறும் அல்லது தலைவரால் பயன்படுத்தப்படும்.
முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை அந்தக் கட்சி அடிப்படையில் நல்லதொரு கட்டமைப்பை கொண்டதாகும். மறைந்த தலைவர் அஷ்ரபையும் மரத்தையும் கட்சி கீதத்தையும் பயன்படுத்தியே தேர்தலில் வெற்றி பெறும் நிலை இருந்ததை யாரும் மறுக்க முடியாது.அந்தளவுக்கு மு.கா. என்ற ‘வர்த்தக நாமம்’ கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
இதைவிடுத்து தற்போதைய தலைவருக்காக கட்சிக்கு வாக்களித்தல் என்பது மிகக் குறைவாகும். ஆவர் மீது பல விமர்சனங்கள் உள்ளன. பல விவகாரங்களில் குறிப்பாக கிழக்கு மக்களிடையே அதிருப்தி உள்ளது.
இந்தப் பின்னணியில் மு.கா. என்ற வட்டத்தை விட்டு வெளியேற முனைகின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல.
இருப்பினும் கட்சிக்காக - பாட்டுக்காக வாக்களிக்கும் மக்களின் மனப்பாங்கு மாறி வருகின்ற சூழலில், தலைவருடன் சேர்ந்தியங்காவிட்டால் கூட தனக்கு கிடைத்த பதவி ஊடாக தனித்து நின்று மிகச் சிறப்பாக மக்களுக்குச் சேவையாற்றிய யாராவது இருந்தால் அவர்களுக்கு வெற்றி சாத்தியப்படலாம்.
இதேவேளை, மக்கள் காங்கிரஸின் நிலைமை வேறு விதமானது அதாவது அக் கட்சிக்கு அடிப்படையிவ் ஒரு சிறந்த கட்டமைப்பு இல்லை. அதனை உருவாக்கும் முயற்சிகளும் பெரியளவில் பயனளிக்கவில்லை. இதனால் தலைவர் றிசாட் பதியுதீனை மையமாகக் கொண்ட ஒரு கட்சியாக இது உள்ளது எனலாம்.
மக்கள் காங்கிரஸ் கட்சி பற்றி பெரிய பிம்பங்கள் மக்களிடையே இல்லை. இருப்பினும் தலைவர் றிசாட் பற்றி ஒப்பீட்டளவில் கொஞ்சம் சாதகமான அபிப்பிராயமும் சிறிய அனுதாபமும் உள்ளதெனலாம்.
தேசிய காங்கிரஸின் நிலையும் இதுதான். தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் தனிஆள் அரசியலே கட்சி அரசியலாக உள்ளது. அவர் கட்சியை வளர்க்க செலவளிக்கவில்லை என்பதுடன் ஒரு கட்டம் வரைக்கும் தனது இடத்தில் இருந்து இறங்கி வந்து, மக்களை வசீகரிக்கும் அரசியலைச் செய்யவும், காலத்திற்கு ஏற்ப நிலைப்பாடுகளை எடுக்கவும் இல்லை என்று கூறலாம்.
இவ்வாறான யதார்த்தங்களையும் கட்சியின் பலம், பலவீனங்களையும் புரிந்து கொள்ளாமலேயே முஸ்லிம் தலைவர்களும் கட்சிகளும் தற்போது நகர்வுகளைச் செய்து கொண்டிருப்பதாக தெரிகின்றது.
ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறும் என்பதால், தனிப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் இத்தேர்தல் முடிவு வரும் வரைக்கும் மதில்மேல் பூனையாகவே இருப்பார்கள். இப்போது யாரிடம் நிதி பெற்றாலும், அபிவிருத்திகளை பெற்றுக் வந்தாலும், அடுத்ததாக யார் ஜனாதிபதியாக வருகின்றார்களோ அவரின் பக்கமே பெரும்பாலான முஸ்லிம் அரசியல்வாதிகள் நிற்பார்கள்.அதற்காக அவர்கள் வெட்கப்படப் போவதில்லை.
இருப்பினும், அண்மைக்காலமாக தோல்விப் பயத்தில் அவர்கள் ஓடித் திரிவதைக் நன்றாகவே அவதானிக்க முடிகின்றது. என்ன செய்தாவது எந்த அணியுடன் சேர்ந்தாவது எவ்வளவு செலவு செய்தாவது இந்த முறை முயற்சி செய்து பார்க்க அவர்கள் முற்படுகின்றனர்.
இதேவேளை, முஸ்லிம் கட்சிகள் இப்போதிருந்தே தமது தளங்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலிலே தமது வாக்குவங்கிகளை காப்பாற்றினாலேயே தலைவர்களும் கட்சியும் மதிக்கப்படும். அடுத்துவரும் பொதுத் தேர்தலை இலகுவாக எதிர்கொள்ளலாம் என்ற நிலைமை உள்ளது.
ஆதலால்,முஸ்லிம் கடசிகள் மற்றும் அரசியல் அணிகளின் தலைவர்கள் தீயாய் வேலை செய்யத் தொடங்கியுள்ளனர்.
மு.கா. தலைவர் தமது எம்.பி.க்களை,கட்சி முக்கியஸ்தர்களை நிழல் களத்தில் எதிர்த்தாடுகின்றார். அவர்களை அரவணைக்கும் தோரணையில் செயற்படுகின்றார்.சரிவராவிட்டால் கழற்றி விடும் எண்ணமும் அவருக்கு இருக்கலாம்.
இந்தப் பின்னணியில், கட்சிக்கு ஆள்சேர்க்கும் படலங்கள் ஆரம்பமாகியுள்ளன. ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பல்டி அடிக்கும் போக்கை அதிகம் காணக் கிடைக்கும். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு சாதகமான பக்கத்திற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளின் குரங்குத்தனங்கள் மேலும் வெளிப்படும். ஒருவேளை கட்சிகளே இவ்வாறு தாவினாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை.
ஒரு காலத்தில் அஷ்ரபிற்காக, மரத்திற்காக, கட்சிக்காக வாக்களித்தது போலரூபவ் இப்போது தனிப்பட்ட கட்சிக்காகவோ அல்லது குறிப்பிட்ட அரசியல்வாதிகளுக்காகவோ மக்கள் வாக்களிப்பதில்லை. அந்தக் காலம் மலையேறிவிட்டது.
நிலைமை இப்படியிருக்க சில நூறு வாக்குகளைக் கூட பெற முடியாதவர்களை முஸ்லிம் கட்சிகள் தமது கட்சிக்குள் இணைக்கத் தொடங்கியுள்ளன. ஏதோ பல்லாயிரம் வாக்குகள் பெறுவார் என்ற படம் காட்டப்படுகின்றது. முஸ்லிம் அரசியல் களநிலையின் பலம், பலவீனம் பற்றிய களஅறிவு அற்றவர்களாக தலைவர்கள் இருப்பதற்கு இதுவும் ஓர் உதாரணம் எனலாம்.
ஊருக்கு எம்.பி வேண்டும் என்பதற்காக, இருக்கின்ற பேய்களில் சிறந்த பேய் என்பதற்காக, இருக்கின்ற கள்வர்களில் சிறிய கள்வர் என்பதற்காக, வாக்கை யாருக்காவது அளிக்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் தருகின்ற சிறுதொகை பணம் மற்றும் உலருணவுப் பொருட்களுக்காகவே அதிகமான வாக்குகள் அளிக்கப்படுகின்றன.
ஒரு அரசியல்வாதி தனக்கு, தனது குடும்பத்திற்கு செய்த உதவிக்காக வாக்களிக்கின்ற முஸ்லிம்கள் சிலர் இருக்கலாம்.
ஆனால் மூகத்திற்கு செய்த சேவைக்காகவோ, பெற்றுத்தந்த உரிமைக்காகவோ வாக்களிக்கின்ற அல்லது சமூகத்திற்கு இழைத்த துரோகங்களுக்காக குறிப்பிட்ட அரசியல்வாதியை தோற்கடிக்கின்ற முஸ்லிம் வாக்காளர்கள் மிகக் குறைவாகும்.
06.04.2024
25 minute ago
29 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
29 minute ago
2 hours ago
2 hours ago