2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மோடியின் முதல் பயணமும் இலக்கும்

கே. சஞ்சயன்   / 2019 ஜூன் 07 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியப் பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை வரும், ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கவுள்ளார். முத‌ல் பயணமாக, மாலைதீவுக்குச் சென்று விட்டு, மறுநாள் அவர், இலங்கைக்கு வரப் போகிறார்.  

‘அயல்நாட்டுக்கு முன்னுரிமை’ என்ற இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கு ஏற்ப, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இந்தப் பயணம் அமையவுள்ளது.  

சீன ஆதரவு ஆட்சியாளரின் பிடியில் இருந்து மீண்ட மாலைதீவுக்குத் தான், இந்தியப் பிரதமரின் முதல் பயணம் இடம்பெறவுள்ளது.   

அங்கு ஆட்சிமாற்றம் ஏற்பட்டதையடுத்து, புதிய ஜனாதிபதியாக, இப்ராஹிம் சோலே பதவியேற்கும் நிகழ்வு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றிருந்த போது, இந்தியப் பிரதமர் மோடியும் பங்கேற்றிருந்தார்.  

எனினும், அவர், தனது முதல் பதவிக்காலத்தில், மாலைதீவுக்கு ஒருமுறை கூட, அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டிருக்கவில்லை.  

தனது முதலாவது பதவிக்காலத்தின் முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை, பூட்டானுக்கான அரசுமுறைப் பயணத்துடன் ஆரம்பித்திருந்த மோடி, இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் வெளிநாட்டுப் பயணத்தை, மாலைதீவில் இருந்து ஆரம்பிக்கிறார்.  

‘அயல்நாட்டுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையின் அடிப்படையில், மாலைதீவுக்கான பயணத்தை இந்தியப் பிரதமர் மேற்கொள்கின்ற போதிலும், அவரது பதவியேற்பு நிகழ்வுக்கு, மாலைதீவு அரசுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.  

ஏனென்றால், ‘பிம்ஸ் ரெக்’ அமைப்பில் மாலைதீவு அங்கம் வகிக்கவில்லை. இந்தியப் பிரதமரின் பதவியேற்பு நிகழ்வுக்கு, ‘பிம்ஸ் ரெக்’ நாடுகளின் தலைவர்களுக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டது. அதாவது, வங்காள விரிகுடா விளிம்பு நாடுகளின் அமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை, பங்களாதேஸ், நேபாளம், பூட்டான், மியான்மார், தாய்லாந்து போன்ற நாடுகளின் தலைவர்களே, இம்முறை அழைக்கப்பட்டனர்.  

2014 இல், நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வுக்கு, ‘சார்க்’ நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். ‘சார்க்’ அமைப்பில் பாகிஸ்தான் அங்கம் வகிப்பதால், அந்த அமைப்பை, இந்தியா மெல்ல மெல்லச் சாகடித்து வருகிறது.  

‘சார்க்’ அமைப்பின் மாநாட்டை நடத்துவதற்கு, இந்தியா ஒத்துழைக்கவில்லை. இதனால், பல ஆண்டுகளாக இந்த அமைப்பின் கூட்டங்கள் நடக்கவில்லை. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தால், ‘சார்க்’ அமைப்பு கிட்டத்தட்டச் செயலிழக்கும் நிலைக்குச் சென்று விட்டது,  

அதேவேளை, பிராந்தியத்தில் இந்தியா தன்னை முன்னிலைப்படுத்துவதற்கு, ‘பிம்ஸ் ரெக்’ அமைப்பை வலுப்படுத்தி வருகிறது. இந்த ‘பிம்ஸ் ரெக்’ அமைப்பில், உறுப்பினராக இருப்பதற்கு, மாலைதீவு, வங்காள விரிகுடாவில் இருக்க வேண்டும். அரபிக் கடலில் இருப்பதால், மாலைதீவுக்கு ‘பிம்ஸ் ரெக்’ அமைப்பில் இடமில்லை.  

ஆனாலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணத்துக்கு, மாலைதீவே தெரிவு செய்யப்பட்டிருக்கிறது, காரணம், அங்கு சீனாவின் செல்வாக்கை உடைத்து, அதிகாரத்துக்கு வந்துள்ள அரசாங்கத்தைப் பலப்படுத்துவதும், அதனை நிலைப்படுத்துவதும் இந்தியாவின் முக்கியமான தேவையாக இருக்கிறது.  

இந்தியாவின் பாதுகாப்புக்கு, அச்சுறுத்தல் ஏற்படாத வகையில், அயல் நாடுகளுடனான உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதன் அவசியம், அதிகமாக உணரப்படுகின்ற காலம் இது.  

அதுவும், 21/4 குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னரும், ஐ.எஸ் அமைப்பின் உரிமை கோரல், பிரகடனத்துக்குப் பின்னரும், இலங்கை, மாலைதீவு ஆகிய நாடுகளுடனான உறவுகள் விடயத்தில், நீக்குப் போக்காகவோ, அசமந்தமாகவோ இருந்து விட முடியாத நிலையில், இந்தியா இருக்கிறது.  

இதுவரை, பாதுகாப்பான பகுதியாக இந்தியா கருதி வந்த, அதன் தென்பகுதியின் ஊடாகவும், இந்தியாவுக்கு அச்சுறுத்தல்கள் வரக்கூடும் என்பதை, இந்தத் தாக்குதல்கள் முன் உணர்த்தி இருக்கின்றன.  

இந்தியாவைப் பொறுத்தவரை, பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்ட காலத்தில் இருந்தே, பல்வேறு வழிகளிலும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வந்திருக்கிறது. அதன் பின்னர், சீனாவுடனான பிரச்சினை ஏற்பட்டது. அது, வடகிழக்கு மாநிலங்கள் வழியாகவும், பல்வேறு வடிவங்களில் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.  

ஆனாலும், தென்பகுதி வழியாக பெரியளவிலான நேரடி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நிலை, இந்தியாவுக்கு இருக்கவில்லை. அதற்குக் காரணம், இந்தியாவுடன் மோதக்கூடிய பலம்வாய்ந்த எந்த நாடோ, தரை எல்லைகளோ இருக்காதமை மாத்திரமன்றி, தெற்கே எதிரி நாடுகள் என்று இல்லாததும் தான்.  
இலங்கையும் மாலைதீவும் இந்தியாவுக்கு நெருக்கமாகவே இருந்தன. ஒரு காலகட்டத்தில் இந்தியா, சோவியத் ஒன்றியத்தின் பக்கம் இருந்தபோது, இலங்கை, அமெரிக்காவின் பக்கம் சாயும் நிலை காணப்பட்டது.   

ஆனாலும், அமெரிக்கத் தலையீடுகளைத் தடுக்கும் வகையில், 1987இல் இலங்கையுடன் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டதன் மூலம், அந்த அச்சுறுத்தலையும் சமாளித்துக் கொண்டது.  

இலங்கையும் மாலைதீவும் சீனச் சார்பு ஆட்சியாளர்களின் கைகளில் சிக்கியிருந்த போதுதான், இந்தியா மிகப்பெரிய அச்சுறுத்தலை உணரத் தொடங்கியது.   

இந்தக் கட்டத்தில் தான், இலங்கையையும் மாலைதீவையும் எப்படியாவது நெருக்கமான நிலைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று இந்தியா கருதியது.  

இலங்கையில், 2015 ஆட்சி மாற்றத்துக்கு, இந்தியா உதவியது என்ற குற்றச்சாட்டுகளினது மாத்திரமன்றி, கடந்த ஆண்டு மாலைதீவு ஆட்சி மாற்றத்துக்கும் இந்தியா உதவியதாகக் கூறப்படும் கருத்துகளுக்கும் அதுவே அடிப்படையாகும்.  

மாலைதீவில் கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், இந்தியா பெரியளவிலான நிதி உதவியை அறிவித்தது. இந்தியப் பிரதமரின் இம்முறை பயணத்தின் போதும், அவ்வாறானதொரு பெரிய நிதியுதவி அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.  இலங்கைக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமான உதவிகளை இந்தியா வழங்கியிருக்கிறது. கடன்களாக, கொடைகளாக, உதவித் திட்டங்களாக, கடற்படைக் கப்பல்களாக என்று பல்வேறு வழிகளில் உதவிகளை வழங்கி, இலங்கையுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில், இந்தியா ஆர்வம்காட்டி வந்திருக்கிறது.  

ஆனாலும், கடந்த 21/4 தாக்குதல்கள், இந்தியாவுக்குப் பெரும் ஏமாற்றத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக, இந்தியா போதிய முன்னெச்சரிக்கைகளைக் கொடுத்திருந்த போதும், அதனை இலங்கை அதிகாரிகள் அலட்சியம் செய்ததால், பெரும் அனர்த்தங்கள் நிகழ்ந்தன.  

இந்தியாவின் புலனாய்வு எச்சரிக்கைகளை, இலங்கை அதிகாரிகள் நம்பவில்லை என்பதே, அந்தத் தகவல் அலட்சியம் செய்யப்பட்டமைக்குக் காரணம் என்று, இந்திய அதிகாரிகள் விசாரித்து அறிந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.  

அதாவது, பாகிஸ்தானுடன் இலங்கையை மோதிக்கொள்ள வைக்க, இந்தியா முனைகிறது என்ற சந்தேகம் தான், இதன் அடிப்படை.  

இவ்வாறானதொரு நிலையில், இலங்கையையும் மாலைதீவையும் இரண்டு பிரதான சக்திகளிடம் இருந்து விலத்தி வைத்திருக்க வேண்டிய நிலையில், இந்தியா இருக்கிறது.  

முதலாவது, சீனா; இரண்டாவது, ஐ.எஸ் போன்ற இஸ்லாமியத் தீவிரவாதம். இந்த இரண்டுமே, இலங்கையில் கைவரிசையைக் காட்டி விட்டவை.   

சீனாவின் பிடியில் இருந்து, இலங்கையால் அவ்வளவு இலகுவாக விடுபட முடியாது. அதேவேளை, ஐ.எஸ் செயற்பாடுகளை ஒழித்துக் கட்டுவதில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றிருக்கிறது.  

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பில் பங்கேற்க, புதுடெல்லி சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விடுத்த அழைப்பின் பேரில் தான், இந்தியப் பிரதமரின் பயணம் இடம்பெறவுள்ளது.  
ஆனாலும், இது முன்னரே திட்டமிடப்பட்டு விட்ட ஒன்று. இலங்கைக்கான இந்தியப் பிரதமரின் பயணத்தின் மூலம், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள், ஒத்துழைப்புகள் மேலும் பலப்படுத்தப்படவுள்ளன.  
பாதுகாப்பு, தீவிரவாத முறியடிப்பு உள்ளிட்ட விடயங்களுக்கு, இரண்டு நாடுகளும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன.  

இந்தியா விடயத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று நழுவலான கொள்கையையே கடைப்பிடித்து வந்தாலும், இப்போது, இந்தியாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்துவதில் அவர் ஆர்வம் கொண்டுள்ளது போலக் காட்டிக் கொள்கிறார்.  

அவரது சீனப் பயணத்தின் போது, கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு உடன்பாடு, இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தமை, அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.   

சீனாவுடனான உடன்பாட்டுக்குப் பதிலாக, இந்தியாவுடனும் சமநிலை உறவை ஏற்படுத்திக் கொள்வதற்காக, இந்தியப் பிரதமரை, அவர் அழைத்திருக்கலாம்.  

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவும் ஜப்பானும் இணைந்து, அபிவிருத்தி செய்ய இணங்கியதும், அதற்கான ஒரு காரணமாக இருக்கலாம்.  

சீனா, ஐ.எஸ் ஆகிய இரண்டும், இந்தியாவுக்கு அச்சுறுத்தலைக் கொடுப்பதற்கான தளமாக, இலங்கையைப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுப்பது தான், இந்தியாவின் இப்போதைய இலக்கு.   

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கொழும்புப் பயணம், இந்தியாவின் இந்த இலக்கை நிறைவேற்றிக் கொள்வதில், கணிசமான பங்களிப்பைச் செய்யக் கூடும் என்பதே, பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .