Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2016 ஏப்ரல் 02 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி தேசியப்பட்டியலின் கீழ் சன்மானமாக வழங்கிய இரண்டாவது எம்.பி பதவிக்கு, அக்கட்சி நிரந்தரமாக யாரையும் இதுகால வரைக்கும் நியமிக்கவில்லை என்பதால், இவ் விவகாரம் பற்றிய பல கதைகள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த முஸ்லிம் சமூகம் எத்தனையோ பிரச்சினைகளைப் பற்றி பேச வேண்டியிருக்கின்ற ஒரு முக்கியமான காலகட்டத்தில், தேசியப்பட்டியல் எம்.பி என்ற ஒரு சின்ன விடயத்தைப் பற்றி மாதக்கணக்காக பேசிக் கொள்ளும் இன்றைய நிலைமையை ஏற்படுத்தியவர் யார் என்பதற்கு பதிலாக, இருவேறு நபர்கள் இருக்க முடியாது.
இப்போது புதிய கதையொன்று உலா வரத் தொடங்கியுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் ஒரு சில இணையத்தளங்களிலும் கொசிப் செய்தியாக இப்போது இதுவே பரவிக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. இந்தச் செய்தி என்னவென்றால், 'முஸ்லிம் காங்கிரஸின் இரண்டாவது நிரந்தர தேசியப்பட்டியல் எம்.பியாக அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனையை சேர்ந்த ஒருவரை நியமித்து விட்டு, அவரிடமிருக்கும் மாகாண அமைச்சை அக்கரைப்பற்றுக்கும், மாகாண சபை உறுப்புரிமையை இறக்காமம் பிரதேசத்துக்கும் வழங்க மு.கா. தலைவர் வியூகம் வகித்துள்ளார் என்பதாகும்.
இப்படி இதற்கு முன்னமே பல தடவை பல்வேறுபட்ட கதைகள் சுழற்சிக்கு விடப்பட்டிருந்தன. அதனை நம்பி வாக்களித்து ஏமாந்து போன அனுபவம் இப்பகுதி மக்களுக்கு இருக்கின்றது. என்றாலும், 'ஒருவேளை நடந்தாலும் நடக்கும்' என்ற நப்பாசை திரும்பவும் துளிர்விட்டுள்ளதைக் காண முடிகின்றது.
மு.கா.வுக்கு கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கும் என்ன நடந்தது என்று நமக்கு தெரியும். அக்கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்களும் கட்சியின் உறுப்பினர்களும் மாத்திரமல்லாது, அந்த எம்.பிக்களை பகரமாக வழங்கியிருந்த ஐக்கிய தேசியக் கட்சியும் கூட பார்த்துக் கொண்டிருக்க, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமின் சாணக்கியம் எப்படி வேலை செய்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஓர் ஊருக்கு இரண்டு எம்.பி வழங்க முடியாது என்று கூறிய அவர், தனது சகோதரருக்கே ஒரு தேசியப்பட்டியல் எம்.பி பதவியை வழங்கினார். இன்னும் விளக்கிக்கூறினால், ஒரே குடும்பத்துக்குள்ளேயே இரண்டு எம்.பிக்களை வைத்துக் கொண்டனர். இரண்டாவது தேசியப் பட்டியல் எம்.பி பதவியை, அவரது 'கொடுக்கல்வாங்கல்களை' எல்லாம் மேற்கொள்பவர் என்று கட்சி உறுப்பினர்களால் சொல்லப்படுகின்ற ஒரு சட்டத்தரணிக்கு வழங்கினார். இத்தனைக்கும் இவ்விருவரும், மு.கா. என்ற அரசியல் இயக்கத்தில் எவ்வித வரப் பிரசாதங்களை அனுபவிப்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட முடியாதவர்களாவர்.
இவ்வாறு வழங்கப்பட்ட தேசியப் பட்டியல் எம்.பி பதவியை தலைவரின் சகோதரர் டொக்டர் ஹபீஸ், சில நாட்களுக்கு முன்னர் இராஜினாமாச் செய்தார். யாருக்கோ உரித்துடைய பதவியை தாம் வைத்துக் கொண்டிருப்பதில் தனக்கிருந்த மன உறுத்தலை இதன் வாயிலாக அவர் வெளிப்படுத்தினார். அப்பதவி, திருமலையைச் சேர்ந்த எம்.எஸ். தௌபீக்குக்குப் பின்னர் வழங்கப்பட்டது. தௌபீக்குக்கு இப்பதவி வழங்கப்பட்ட வேளையில் அதை யாரும் எதிர்க்கவில்லை. தலைவர், அரசியல் அதிகாரம் இல்லாத பிரதேசங்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவதாக சொன்னதற்காகவன்றி, அதிலுள்ள நியாயங்களை எல்லோரும் புரிந்து கொண்ட காரணத்தினால், அமைதி காத்தனர்.
அதற்குப் பின்னர், மு.கா.வுக்குள் இருக்கின்ற எந்த நாடாளுமன்ற உறுப்பினரோ, உயர் பீட அங்கத்தவரோ, தலைவர் ஹக்கீமிடம், இரண்டாவது தேசியப் பட்டியல் பற்றி கேள்வி எழுப்பியதாக ஒரு தகவலும் வெளியாகவில்லை. தேசியப் பட்டியலுக்கு உரிமை கோருகின்ற செயலாளர் ஹசன்அலி, தவிசாளர் பஷீர் சேகுதாவூத் போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய ஓரிருவரே இதற்கு விதிவிலக்கு. முஸ்லிம் வாக்காளர்கள் எல்லோரும் பாத்திருக்க, தேசியப் பட்டியல் விவகாரத்தில் ரவூப் ஹக்கீம் செய்த எல்லா மாய வேலைகளையும் மௌனியாக பாhத்திருந்ததன் மூலம், மற்றைய உயர்பீட உறுப்பினர்கள், எம்.பிக்கள் அனைவரும்அச்செயலுக்கு மறைமுகமாக உடந்தையாகிப் போனார்கள்.
இப்படியே மாதங்கள் கடந்து விட்ட பிற்பாடு, பாலமுனையில் தேசிய மாநாட்டை மு.கா. ஏற்பாடு செய்தது. பெரிய பிரமாண்டங்களை காண்பித்து, கடைசியில் அம்மாநாடு 'சப்' என்று ஆகிப் போனது வேறு விடயம். ஆனாலும் மாநாட்டுக்கு முந்திய நாட்களில் அம்பாறை மாவட்டத்தில் கூடாரமடித்திருந்த தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் முக்கிய உறுப்பினர்களுக்கு ஒரு கட்டத்தில் தேசியப் பட்டியலின் இரண்டாவது எம்.பி நியமனம் பற்றி பேசியே தீர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஒலுவிலில் நிருபர்களை சந்தித்த தலைவர், 'அம்பாறை மாவட்டத்துக்கு சுழற்சி முறையில் தேசியப்பட்டியல் எம்.பி வழங்கப்படும்' என்று அறிவித்தார்.
மறுநாள் பேசிய அவர், 'சதா காலத்துக்கும் தாமே பதவிகளை வகிக்க வேண்டுமென்று யாரும் நினைக்கக் கூடாது' என்றார். இந்த உரையின் மூலம் 'யாருக்கோ' அவர் ஒரு செய்தியைச் சொல்லாமல் சொன்னார். இருப்பினும், 'சதா காலத்துக்கும் பதவிகளை வகித்தல்' என்ற வகுதிக்குள் தலைமைப் பதவியும் உள்ளடங்குமா? தலைவரே என்று அவரிடம் யாரும் கேட்கவும் இல்லை அவரும் சொல்லவும் இல்லை. இப்படிச் சொல்கின்ற தலைவர் ரவூப் ஹக்கீம், கட்சியின் யாப்பை ஒருபுறம் வைத்துவிட்டு, சோமவங்ச அமரசிங்க ஜே.வி.பி.யின் தலைமைப் பதவியை இராஜினாமாச் செய்து, அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கொடுத்தது போன்று வேறு யாருக்காவது விட்டுக் கொடுக்க முன்வரக் கூடிய ஒரு நபர் என்பதை நிரூபித்திருப்பார் என்றால், அவரது மேற்சொன்ன உரைக்கு குறுக்கு கேள்வி கேட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
இப்படியாக நடந்து முடிந்த தேசிய மாநாட்டுக்கு முன்னரே, நாடாளுமன்ற உறுப்பினர் சல்மானை இராஜினாமாச் செய்ய வைத்துவிட்டு, வேறு யாராவது பொருத்தமான நபரை அவ்விடத்துக்கு நியமிக்க மு.கா. தலைமைத்துவம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் மு.கா.வின் கோட்டையான அம்பாறை மாவட்டத்துக்கு வந்து, தேசிய மாநாட்டை நடாத்தி, அதிலோர் உருப்படியான கோரிக்கையையும் முன்வைக்காமல் போயிருக்கின்றார் என்றால், இந்த மக்களையும் போராளிகளையும் கூட்டத்தோடு முட்டாளாக்குகின்ற செயல் இதைப் பார்;க்கிலும் வேறொன்றும் இருக்க முடியாது. எல்லாவற்றையும் செய்துவிட்டு ஒன்றுமே நடக்காதது போல் அரசியல் செய்யும் கலையை மு.கா. தலைவர் கற்று வைத்திருக்கின்றார்.
இப்போது, ஹக்கீம், இவ்வார இறுதியில் மீண்டும் அம்பாறைக்கு விஜயம் செய்யவுள்ளதாக சொல்லப்படுகின்றது. பாலமுனை மாநாட்டில் விட்ட தவறுகளை சரிசெய்து மழுப்பிப் பேசுவதும் இப்பயணத்தின் நோக்கங்களில் ஒன்றாக இருக்கலாம். இப்படியான சந்தர்ப்பத்திலேயே தேசியப்பட்டியல் எம்.பி பதவியை, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கி, அவரிடமிருக்கும் மாகாண அமைச்சு, மாகாண சபை உறுப்புரிமை ஆகிய இரண்டையும் இரண்டாக பிரித்து முதலாவதை அதாவுல்லாவின் கோட்டையாக இருந்த அக்கரைப்பற்றுக்கும், இரண்டாவதை இறக்காமத்தில் உள்ள மாகாண சபை வேட்பாளருக்கும் கொடுக்கப் போவதாக அனுமானங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இது, தலைவரின் வருகையை அறிந்து, அவருக்கு இதுபற்றி பேசுவதற்கான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக, வேண்டுமென்றே கிளப்பி விடப்பட கதையா என்ற ஐயப்பாடும் இருக்கின்றது.
அட்டாளைச்சேனைக்கு தேசியப் பட்டியல் வழங்கியே தீர வேண்டும். அவ்வூர் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவது நியாயமல்ல என்றாலும், மு.கா. தலைவர், இவ்விவகாரத்தில் பாரிய தவறை இழைத்திருக்கின்றார். அதெப்படி என்றால், இவ்வூருக்கு தேசியப்பட்டியல் கொடுக்க வேண்டுமென்றால், ஆரம்பத்திலேயே உத்தேச தேசியப்பட்டியலில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த யாராவது ஒருத்தரின் பெயரைப் போட்டிருக்க வேண்டும். பெயரைப் போடாத அன்றேல், தேர்தலில் போட்டியிடாத ஒருவரை தேசியப்பட்டியல் மூலம் நியமிப்பதில் இப்போது சட்டச் சிக்கல் உள்ளது. சுழற்சி முறைக்கு நியமிக்கின்ற விடயத்தில் சட்டத்தில் சில ஓட்டைகள் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனாலும், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஏற்கெனவே இது தொடர்பான மனுவொன்றை தாக்கல் செய்திருந்ததுடன், அண்மையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தேசியப்பட்டியல் எம்.பியாக நியமிக்கப்பட்டதற்கு எதிராகவும் அந்நிலையம், நீதிமன்றத்தை நாடியிருந்தமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது.
இதுவெல்லாம் சாணக்கியமிக்க மு.கா. தலைவருக்கு தெரியாத விடயங்கள் இல்லை. அவர் தனது வியூகத்தின் ஊடாக சட்டத்தை சமாளித்துக் கொண்டு, பட்டியலில் பெயர் குறிப்பிடாத யாரொருவரையும் நியமிக்க நடவடிக்கை எடுக்கக் கூடும். அப்படியான ஒரு நிலைமை வருகின்ற போது, ஒரே கல்லில் 3 மாங்காய்களை அடிக்க மு.கா. தலைவர் விரும்பலாம் என்று ஒரு சிலர் கருதுகின்றனர். அப்படியென்றால், அட்டாளைச்சேனையில் உள்ள மாகாண அமைச்சருக்கே தேசியப் பட்டியல் எம்.பியை கொடுக்க வேண்டி வரும் என்பது அவர்களின் கருதுகோளாகும். அவ்வாறு கொடுக்கும் பட்சத்திலேயே அவரிடமிருக்கும் இரண்டு பதவிகளை எடுத்து வேறு இரண்டு ஊர்களுக்கு பகிர்ந்தளிக்க முடியும். ஆனால், ஏனைய ஊர்களைப் போல அட்டாளைச்சேனையிலும் மு.கா.வுக்குள் பலதரப்பட்ட ஆதரவுக் குழுக்களை தலைவர் போஷித்து வளர்த்திருக்கின்றமையால், யார் என்றாலும் ஒருத்தருக்கு எம்.பியை கொடுத்தால் மற்றைய தரப்பினர் தலைமையுடன் அதிருப்தி அடையும் சாத்தியத்துக்கான அறிகுறிகள் இப்போதே தென்படத் தொடங்கி விட்டன.
தலைவரின் தீர்மானம் எப்படி அமையப் போகின்றது என்பதை, உயர்பீடமும் முக்கிய உறுப்பினர்களும் கண்ணில் எண்ணெயை ஊற்றிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ரவூப் ஹக்கீமின் அதிகாரங்களை குறைப்பதற்காக, ஒரு சிலர் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறான நேரத்தில், ரவூப் ஹக்கீம் ஏதாவது அறிவிப்பை விடுக்கும் பட்சத்தில், அது எவ்வாறானதாக இருக்கின்றதை என்பதை பொறுத்தே, அதிருப்தியாளர்களின் பிரசாரங்கள் அமையும். அதைப் பொறுத்தே அவரது எதிர் செயற்பாட்டாளர்கள் பலம் பெறுவதோ, பலம் குறைவதோ தீர்மானிக்கப்படலாம்.
இவ்வார இறுதியில், அட்டாளைச்சேனையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் தலைவர் ஹக்கீம், தேசியப் பட்டியல் பற்றியதான அறிவிப்பை வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பும் இப்போது உருவாகியுள்ளது. ஆனால், பிந்திக்கிடைத்த தகவலின் பிரகாரம் தேசியப்பட்டியல் சம்பந்தமாக இந்த நிமிடம் வரைக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை எவ்வித முடிவும் எடுக்கவில்லை. சல்மான் எம்.பியிடம் இருந்து அப்பதவியை சேதாரமின்றி வாங்குவதில் அவர் கவனம் செலுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது. மிக முக்கியமாக, தேசியப்பட்டியல் எம்.பி பதவியை அடிப்படையாகக் கொண்டு தவிசாளர், செயலாளர் போன்றோரே உட்கட்சிப் போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்ற வேளையில், அவர்களுக்கு கொடுக்காமல் வேறு யாருக்காவது எம்.பியை வழங்குவதாயின், மாகாண அமைச்சை கொடுப்பதாயின் அவர்கள் மிகச் சரியான தெரிவுகளாக இருக்க வேண்டும் என்பதில் தலைமை கவனம் செலுத்தியுள்ளது.
இந்த கணக்குகளை எல்லாம் கூட்டிக் கழித்த பிறகே, மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் இறுதி விடையை - முடிவை எடுப்பார். அவ்வாறு முடிவெடுக்க முடியாத ஒரு நிலைவரம் ஏற்படுமாயின், அம்பாறைக்கான தனது பயண நிகழ்ச்சிநிரலை 'தவிர்க்க முடியாத காரணங்களின்' பெயரில் மாற்றியமைத்துக் கொண்டாலும் வியப்பில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
15 May 2025