Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
என்.கே. அஷோக்பரன் / 2018 ஓகஸ்ட் 27 , மு.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 158)
பயங்கரவாத ஒழிப்பும் அச்சுவேலித் தாக்குதலும்
1985 ஜனவரியில் ஜே.ஆர். ஜெயவர்தனவின் இராணு ரீதியான அணுகுமுறை, அதனுடைய முழுவடிவத்தைப் பெறத்தொடங்கியது.
‘தேசிய பாதுகாப்பு’ என்பது, சகல நிலைகளிலும் முக்கியத்துவம் மிக்கதொன்றாக மாற்றப்பட்டது. ‘பயங்கரவாத ஒழிப்பு’ என்பது, அரசாங்கத்தின் வேதவாக்கானது.
தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி தலைமையில், இந்தச் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை, களையெடுக்கும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது.
இதன்படி, 1985 ஜனவரி முதல்வாரத்திலேயே, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருக்கோணமலை, வவுனியா, அக்கரைப்பற்று என, வடக்கு, கிழக்கு எங்கும் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதல்களில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்கள்.
1985 ஜனவரி ஒன்பதாம் திகதி, யாழ். அச்சுவேலிப் பகுதியில், இலங்கை இராணுவம், விடுதலைப் புலிகள் அமைப்பின் மறைவிடம் ஒன்றின் மீது, தாக்குதல் நடத்தியதில், அந்த அமைப்பின் யாழ்ப்பாணத் தளபதி கொல்லப்பட்டார்.
இது, அரச படைகளுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தது. ஜே.ஆர் அரசாங்கம், இதைக் குறிப்பிடத்தக்க வெற்றியாகக் கருதியதுடன், தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றது.
இந்தத் தாக்குதல் ஜே.ஆருக்கு, தான் தேர்ந்தெடுத்த ‘பயங்கரவாத ஒழிப்பு’ என்ற, இராணுவ ரீதியான அணுகுமுறை மீதான, நம்பிக்கைக்கு உரமூட்டியது. பெப்ரவரி நான்காம் திகதி, ஜே.ஆர் ஆற்றிய சுதந்திரதின உரையில், “பயங்கரவாத அச்சுறுத்தலை நாம் வெற்றிகொள்வோம்” என்று, உறுதியுடன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வெற்றியை, அரச படைகளின் மிகப்பெரிய ஊடறுப்பு என்று, சிலாகித்துப் பேசிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி, உளவுத்தகவலின் அடிப்படையிலேயே, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தான் தேசிய பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்றதன் பின்னர், நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என்றும், குறிப்பிட்டிருந்தார்.
இந்தத் தாக்குதல் வெற்றியைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலிருந்து, குறித்த தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவினர், வசம் இருந்த ஆயுதங்கள் பலவும் மீட்கப்பட்டன.
அதன் மூலம், குறித்த ஆயுதங்கள் இந்தியாவால் வழங்கப்பட்டன என்று, அடையாளம் காணப்பட்டதாகத் தனது நூலில், ரீ.சபாரட்ணம் குறிப்பிடுகிறார்.
இதுவரை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு, தான் ஆதரவு வழங்குவதை, இந்தியா நேரடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இலங்கை அரசாங்கம், இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தபோதெல்லாம் இந்தியா, அதை மறுத்து வந்துள்ளது.
இந்த நிலைப்பாட்டைத் தனது நூலொன்றில் ஜே.என். திக்ஸிட் பின்வருமாறு விமர்சிக்கிறார். ‘இந்தக் குற்றச்சாட்டை இந்தியா, வௌிப்படையாக மறுத்திருக்க வேண்டியதில்லை. மாறாகக் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில், அமைதி காப்பதுடன், பதில் சொல்ல வேண்டுமானால், இலங்கையில் ஆயுதக் குழுக்கள் உருவாகியுள்ளதெனில், அது இலங்கை அரசாங்கத்தின் தமிழர்கள் மீதான பாகுபாட்டு கொள்கைகளால் உருவானது என்று குறிப்பிட்டிருக்கலாம்’ என்று அவர் தனது நூலில் கருத்துரைக்கிறார்.
இந்தியா, இந்தக் குற்றச்சாட்டை மறுப்பதில் உள்ள சிக்கல், இதில் இந்தியாவின் பங்கை வௌிப்படுத்தத்தக்க ஆதாரங்கள் கிடைக்கும் போது, அது இராஜதந்திர ரீதியில் இந்தியாவைச் சங்கடத்துக்கு உட்படுத்தும் என்பதுடன், இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியாவுடன் பேரம் பேசத்தக்க பலத்தை வழங்குவதாக அமையும்.
மறுபுறத்தில் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக அதிகரித்த கைதுகள், மற்றும் தொடர்ந்த வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பில், தமிழ்த் தலைமைகள் தமது கண்டனத்தைப் பதிவு செய்தனர். அவர்களுக்கு இந்தியாவை விட, வேறு நாதியிருக்கவில்லை.
தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான எம்.சிவசிதம்பரம், “தமிழர்கள் இனி, இந்தியாவிடம்தான் தமது பாதுகாப்புக்குக் கையேந்தவேண்டும்” என்று கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பதிலடித் தாக்குதல்கள்
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிரான, பதிலடியை வழங்கத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் தயாராகின. 1985 ஜனவரி 19ஆம் திகதி, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) யாழிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணமான ‘யாழ்தேவி’ ரயில் மீது, முறிகண்டிப் பிரதேசத்தில் வைத்து, குண்டுத் தாக்குதலொன்றை நடத்தியது.
இந்தத் தாக்குதலில், 22 இராணுவ வீரர்கள் உட்பட, 34 பேர் கொல்லப்பட்டதாக ‘போரும் சமாதானமும்’ என்ற நூலில், அன்டன் பாலசிங்கம் குறிப்பிடுகிறார்.
இந்தத் தாக்குதல், இலங்கை அரசாங்கத்துக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருந்தாலும், இது பயங்கரவாதத்துக்கு எதிரான, இலங்கை அரசாங்கத்தின் கருத்துருவாக்கத்துக்கு வலுச்சேர்ப்பதாக இருந்தது.
இலங்கை அரசாங்கம், தன்னுடைய பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையை, இன்னும் வலுவாக முன்னெடுக்கத் தொடங்கியது. இந்தத் தாக்குதலின் எதிர்வினையாக, இலங்கை அரசாங்கம் கொழும்பிலும் வடக்கு, கிழக்கிலும் தமிழ் மக்களுக்கு எதிராகப் பெரும் சுற்றி வளைப்புத் தேடுதல்களையும் கைதுகளையும் அரங்கேற்றியது.
வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு படைகள், பொதுமக்கள் மீதான துப்பாக்கிச் சூடுகளையும் நடத்தியிருந்தனர். வடக்கு, கிழக்கு முழுமையான யுத்த பூமியாக மாறத் தொடங்கியிருந்தது. சுற்றி வளைப்புகள், தாக்குதல்கள், கைதுகள், காணாமல் போதல் என இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வு, அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. இதனால் வடக்கு, கிழக்கை சேர்ந்த பெருமளவு தமிழர்கள், உள்நாட்டில் இடம்பெயர்ந்தும், வௌிநாட்டுக்குக் குறிப்பாகத் தென்னிந்தியாவுக்கு அகதிகளாகச் செல்லத்தொடங்கினர்.
1983 ‘கறுப்பு ஜூலை’யைத் தொடர்ந்து, இந்தியாவில் தஞ்சமடைந்து வந்த ஈழ அகதிகளின் எண்ணிக்கை, தற்போது பெருமளவு அதிகரிக்கத் தொடங்கியது. இந்தியாவுக்கு புதியதொரு சவாலாக, இது உருவெடுத்திருந்தது. மேலும், இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே, கடல் மார்க்கமாகப் பயங்கரவாதிகள் பயணிப்பதையும் ஆயுதக்கடத்தலைத் தடுக்கவும் பாக்கு நீரிணை பாதுகாப்பு நடவடிக்கையை முடுக்கிவிட்டிருந்தது. இந்தப் பாதுகாப்பு நடவடிக்கையில், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய (குறிப்பாக தமிழக) மீனவர்கள், இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்கும் கைதுகளுக்கும் உள்ளானார்கள். இது, இந்தியாவுக்கு இன்னொரு தீராத தலைவலியாக உருவெடுத்திருந்தது.
திட்டமிட்ட குடியேற்றமும் கொக்கிளாய்த் தாக்குதலும்
1985 ஜனவரி முழுவதும், இடம்பெற்ற தாக்குதல்கள், பெப்ரவரி மாதமும் தொடர்ந்தது. தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கும், அரச படைகளுக்கும் இடையிலான போர், வலுத்துக் கொண்டிருந்த நிலையில்தான், பெப்ரவரி இரண்டாவது வாரம், ராஜீவ் காந்தியின் அழைப்பின் பேரில், தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியை, ராஜீவ் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்த, ஜே.ஆர், இந்தியா அனுப்பி வைத்தார்.
மறுபுறத்தில் வடக்கு, கிழக்கின் எல்லைகளில், சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குவதில், ஜே.ஆர் அரசாங்கம் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டுக் கொண்டிருந்தது.
ஜே.ஆர், இந்தக் குடியேற்றங்கள் தொடர்பில், மிக உறுதியாக இருந்தார். இலங்கைத் தீவுக்குள், ஒரு பகுதியை எந்தவொரு தனிப்பட்ட மக்கள் கூட்டமும், தம்முடைய தாயகமாகக் கருதமுடியாது என்றும், அத்தகைய தாயகக் கோரிக்கையை, அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும், நாட்டின் ஒட்டுமொத்த இன விகிதாசாரம் பேணப்படும் வகையில் குடியேற்றங்கள் அமைக்கப்படும் என்றும், அவர் ஜனவரி இறுதிப்பகுதியில் தெரிவித்திருந்தார்.
வன்னிப் பகுதியில், ஏறத்தாழ 30,000 சிங்கள மக்களைத் தெற்கிலிருந்து அழைத்து வந்து குடியேற்றுதல், அவர்களுக்கும், அந்தக் குடியேற்றங்களுக்கும் பாதுகாப்பு வழங்குதல் என்ற திட்டத்தை, ஜே.ஆர் முன்வைத்திருந்தார்.
இந்தக் குடியேற்றங்கள் பற்றிக் கருத்துரைத்த அமைச்சர் காமினி திசாநாயக்க, இந்தக் குடியேற்றங்களின் இராணுவ ரீதியான முக்கியத்துவத்தை, இஸ்ரேலின் மேற்கு எல்லைப்புறக் குடியேற்றங்களுடன் ஒப்பிட்டார். இது, ஜே.ஆர், அத்துலத்முதலி ஆகியோரின் இராணுவ நடவடிக்கைகள், இஸ்ரேலிய ஆலோசனையின்படி, நடத்தப்படுகிறது என்ற சிலரது கருத்துக்கு, வலுச்சேர்ப்பதாக அமைந்தது.
இந்த நிலையில்தான், அச்சுவேலித் தாக்குதலுக்கான பதிலடித் தாக்குதலொன்றை, இதே காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்தியிருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில், அரசாங்கம் உருவாக்கியிருந்த திட்டமிட்ட குடியேற்றங்களைப் பாதுகாப்பதற்காக, முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பகுதியில், ஓர் இராணுவ முகாமொன்று ஸ்தாபிக்கப்பட்டது.
1985 பெப்ரவரி 13ஆம் திகதி, விடுதலைப் புலிகள் அமைப்பினர், இந்த இராணுவ முகாம் மீது, தாக்குதலொன்றை நடத்தியிருந்தனர். இந்தத் தாக்குதலில், இருதரப்பு இழப்புப் பற்றியும் இருதரப்பும் முரணான புள்ளிவிவரங்களை வௌியிட்டிருந்தனர்.
யுத்தமொன்றின் போது ஒரு தரப்பு, தன்தரப்பு இழப்புகளைக் குறைத்தும், எதிர்த்தரப்பின் இழப்பை அதிகப்படுத்தியும் குறிப்பிடுவது புதியவிடயமல்ல. ஆகவேதான், இந்த இழப்பு குறித்த தகவல்கள் ஏற்புடைமை ஐயத்துக்கு உரியதாகின்றன. இரு தரப்பு இழப்புகள் எவ்வாறிருப்பினும், இந்தத் தாக்குதல் இலங்கை அரசாங்கத்துக்கு, இன்னொரு வகையில் அதிர்ச்சியைக் கொடுப்பதாக அமைந்திருந்தது.
இலங்கையில் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், ‘கெரில்லா யுத்தம்’ என்ற நிலையிலிருந்து மாறி, மரபுவழி யுத்தத்தின் அம்சங்களை நோக்கி நகர்ந்தமை, இந்தத் தாக்குதலில் தௌிவானதாக, சிலர் பதிவு செய்கிறார்கள்.
அதாவது, இந்தத் தாக்குதலில் விடுதலைப் புலிகள் இயக்கம், நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி இருந்ததும், போராளிகள் இராணுவ சீருடையை ஒத்த சீருடையை அணிந்திருந்தமையும் யுத்தத்தில் ஈடுபடும் இராணுத்தினர் கொண்டுள்ளதைப் போல, உணவுப்பொதி, நீர்க்குடுவை, மருந்துகள் என்பவற்றையும் தம்முடன் கொண்டிருந்தமையும் இராணுவ முகாமொன்றின் மீது, நேரடி யுத்தத்தில் ஈடுபட்டமையும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், கெரில்லாப் போர் முறையைத் தாண்டி, மரபுவழிப் போருக்குத் தயாராகி விட்டார்கள் என்பதை, உணர்த்துவதாக அமைந்ததாகச் சிலர் குறிப்பிடுகிறார்கள்.
இது இலங்கை அரசாங்கத்தினது, குறிப்பாக பாதுகாப்புச் சபையினது கவனத்தை ஈர்த்திருந்தது. இனி அரசாங்கமும், தன்னுடைய யுத்த அணுகுமுறையை, இதற்கேற்றாற்போல மாற்ற வேண்டிய தேவை உருவாகியிருந்தது.
விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்திய கொக்கிளாய் தாக்குதலுக்கு பதிலாக, குறித்த தாக்குதல் நடந்த இரண்டாம் நாள், முல்லைத்தீவுப் பகுதியில், அரசபடைகள் கடுமையான சுற்றிவளைப்புத் தாக்குதலொன்றை நடத்தியிருந்தனர். இதில், 52 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
தமிழ்த் தரப்பில், “கொல்லப்பட்டவர்கள் அப்பாவிப் பொதுமக்கள்” என்று தெரிவித்தபோது, இலங்கை அரசாங்கம், “கொல்லப்பட்டவர்கள், தமிழ்ப் பிரிவினைவாதிகள்” என்று குறிப்பிட்டிருந்தது.
சென்னையிலிருந்த அமிர்தலிங்கம், செய்வதறியாது திகைத்துப்போயிருந்தார் என்று சொன்னால், அது மிகையல்ல. அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டிப்பதுடன், மீண்டும் இந்திய அரசாங்கத்திடம் மண்டாடுவதையே அவர் செய்தார்.
“1970-71 காலப்பகுதியில், மேற்கு வங்கத்தில் உருவானதைப் போன்றதொரு சூழல்தான், தற்போது இலங்கையின் வடக்கு, கிழக்கில் நிலவிவருகிறது. தமிழர் பிரதேசங்களில் இன அழிப்பைத் தடுக்க, இந்தியா நேரடியாகத் தலையிட வேண்டும்” என்று அமிர்தலிங்கம், ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசாங்கத்திடம், கோரிக்கை விடுத்தார்.
ஆனால், ராஜீவ் காந்தி மற்றும் அத்துலத்முதலி ஆகியோரிடையே பெப்ரவரி இரண்டாவது வாரத்தில் இடம்பெற்றிருந்த பேச்சுவார்த்தைகளில், அத்துலத்முதலியின் கோரிக்கைகளுக்கு ராஜீவ் காந்தி சாதகமான பதிலை வழங்கியிருந்தார் என்பதுதான் நிதர்சனமாக இருந்தது.
(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago