2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வன்முறையை பரிசளிக்கும் நல்லாட்சி

Editorial   / 2019 மார்ச் 28 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 நல்லாட்சியின் இலட்சணம், இப்போதைக்கு எமக்கு விளங்கியிருக்க வேண்டும்.   

கடந்த வாரம் புத்தளத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது, பொலிஸார் நடத்திய தாக்குதல், வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. ஆனால், பொலிஸாரின் இந்த நடத்தையில் ஆச்சரியப்பட அதிகம் இல்லை. வன்முறையையே பதிலாகக் கொண்ட அரச இயந்திரம், தனது இயலாமையை வேறெவ்வாறு வெளிக்காட்டவியலும்?   

இன்று, போராடுவதைத் தவிர வழி வேறில்லை என்பதை, நல்லாட்சி தனது கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் காட்டிள்ளது. அது தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கையாகட்டும், அரசியல் கைதிகளின் விடுதலையாகட்டும், மாணவர்களது கோரிக்கைகளாகட்டும், புத்தளம் மக்களின் சுற்றுச்சூழல் கோரிக்கையாகட்டும் அனைத்தையும் வன்முறையாலேயே அரசாங்கம் எதிர் கொள்கிறது.   

கடந்த வெள்ளிக்கிழமை சுத்தமான சூழலுக்காகவும், ஆரோக்கியமான வாழ்வுக்காகவும் அமைதி வழியில் போராட்டம் நடத்திய புத்தளம் மக்கள் மீது, பொலிஸாரால் கட்டவிழ்த்து விடப்பட்ட, மிருகத்தனமான தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது.   

தமது எதிர்காலச் சந்ததியின் வளமான வாழ்வுக்காகவே புத்தளம் மக்கள் போராடுகிறார்கள். புத்தளத்தின் அறுவக்காட்டில், பாரியளவில் குப்பையை கொண்டுவந்து கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்து, தமது சுற்றுச்சூழலைக் காப்பதற்காக, நூறு நாள்களுக்கு மேலாக, புத்தளம் மக்கள் போராடி வருகிறார்கள்.   

புத்தளத்தில் சீமெந்து தொழிற்சாலைக்குத் தேவையான சுண்ணாம்பு கற்கள் அகழப்பட்டதன் விளைவால், ஏற்படுத்தப்பட்ட குழிகளை இலங்கையின் பிறபகுதிகளிலும் ஏனைய நாடுகளில் இருந்தும் கொண்டுவரப்படும் குப்பைகளால் நிரப்பும் முயற்சிக்கு எதிர்ப்புத்தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.   

நிலநிரப்பல் திட்டம் என்ற போர்வையில், குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. குறிப்பாக, பிற நாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் மருத்துவ, இரசாயன, ஆய்வுக்கூடக் குப்பைகளின் கிடங்காக இலங்கை மாறும் அபாயம் அதிகரித்து வருகிறது.   

கடந்தாண்டு சிங்கப்பூருடன், இலங்கை செய்துகொண்ட வர்த்தக உடன்படிக்கையின் ஓர் அம்சமாக, சிங்கப்பூரின் குப்பைகளை இலங்கையில் கொட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஒருபக்கம் குப்பைகளைக் கொட்டுவது, இன்னொருபுறம் அனல் மின்நிலையங்களைத் தொடக்குதல், மூங்கில் பயிரிடுதல் என எமது சூழலுக்கும் எதிர்கால வாழ்வுக்கும் பாதகமான அனைத்தையும் நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுக்கிறது. அதை எதிர்பவர்களுக்கு வன்முறை பரிசளிக்கப்படுகிறது.   

இதன் ஒரு பகுதியாகவே, அரசாங்கம் கொண்டுவரமுயலும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நோக்க வேண்டியுள்ளது. இந்தப் புதிய சட்டம், ஏற்கெனவே நடைமுறையில் இருந்த பயங்கரவாதச் தடைச்சட்டத்துக்குப் பதிலாகக் கொண்டுவரப்படுகிறது.   

இப்புதிய சட்டமானது ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லாடலை விரும்பிய வகையில் வியாக்கியானப்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது, போஸ்டர் ஒட்டுவது, கூட்டங்கள் நடத்துவது என அனைத்துமே ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லாடலுக்குள் அடக்கப்படலாம்.  

இப்புதிய சட்டமானது, நீதிமன்ற அனுமதியின்றி ஒருவரைக் கைதுசெய்து, காவலில் வைப்பதற்கான அனுமதியை வழங்குகிறது. இவை மிக ஆபத்தான திசைவழியில் நாட்டை நகர்த்துகின்றன.  பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்ற பேரில், எவர் மீதும் பயங்கரவாதி என்று முத்திரை குத்திய பின்பு, அவருக்கெதிரான எந்தக் கொடுமையையும் நியாயப்படுத்தலாம். அதேவேளை, தற்காப்புக்காகவோ தாங்க இயலாமையாலோ எடுக்கப்படுகிற ஓர் எதிர்ப்பு நடவடிக்கை, கடுமையான விமர்சனத்துக்கு உட்படுத்தப்படுகிறது. 

கொடுமைகளை ஒப்பிடும் போது, அவற்றின் அளவும் அவை நிகழ்ந்த சூழலும் அரச பயங்கரவாதத்துக்குச் சாதகமாகவே கணிப்பிடப்படுகிறது. சட்டத்தினதும் ஒழுங்கினதும் பேரிலான அரசாங்கத்தின் வன்முறையைச் சமூக நீதிக்கான போராட்டம் எவ்வாறு எதிர்கொள்வது என்ற கேள்வி இப்போது தவிர்க்க இயலாததாகிறது. மக்கள் பொதுவாக அமைதியையே விரும்புகின்றனர். ஆனால் அரசுகள் அமைதியை விரும்பவில்லை என்பதை, தொடர்ந்து நிரூபிக்கின்றன.   

இன்று தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், அன்னையர் என அனைவரும் நீதிக்காகவும் நியாயத்துக்காகவும் உரிமைகளுக்காகவும் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகிறார்கள்.   

நல்லாட்சி அரசாங்கம் வன்முறையையே வழியாகக் கொண்டுள்ளது. இப்போது புதிய சட்டமூலங்கள் மூலம் அதைச் சட்டரீதியாக நடைமுறைப்படுத்த முனைகிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்; இதற்கெதிரான போராட்டம் சமூக நீதிக்கான போராட்டமாகும்.  

இன்று புத்தளத்தில் நடப்பதைக் கண்டும் காணாமல் இருப்போருக்குச் சொல்வது ஒன்றுதான்.  
 எமது சுற்றுச்சூழல் பிரச்சினை, புத்தளத்துடன் முடிவடையவதில்லை. ஏனெனில், இது புத்தளத்தில் தொடங்கவுமில்லை. இதற்கு முன் சம்பூர்; இப்போது புத்தளம். அடுத்தது என்ன என்ற கேள்வியை நாம் கேட்டாக வேண்டும். அல்லது, கந்தக பூமியையே எமது பிள்ளைகளுக்குப் பரிசளிப்போம்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X