Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஒக்டோபர் 12, சனிக்கிழமை
என்.கே. அஷோக்பரன் / 2018 பெப்ரவரி 12 , மு.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 131)
சிங்கள - பௌத்த அடையாளத்தின் உருவாக்கம்
இலங்கையின் பெரும்பான்மை இனம், தன்னைச் சிங்கள- பௌத்தமாக அடையாளப்படுத்திக் கொள்கிறது. ஆனால், இன்று புரிந்துகொள்ளப்படும் சிங்கள - பௌத்த அடையாளம், 19ஆம் நூற்றாண்டின் பின்னர் உருவான அல்லது உருவாக்கப்பட்ட அடையாளம் என்பதே லெஸ்லி குணவர்த்தன, ப்ரூஸ் கப்ஃபெரர், ஸ்ரான்லி ஜே. தம்பையா போன்றோரது கருத்தாகும்.
சிங்கள - பௌத்த அடையாளத்தை, ‘நவீன தேசியத்துவ அடையாளம்’ என்று விளிக்கும் ப்ரூஸ் கப்ஃபெரர், “தற்போது துரதிர்ஷ்டவசமாக இனங்களிடையே ஏற்பட்டிருக்கும் எதிர்ப்புணர்வுக்கும், போருக்கும் எண்ணெய் ஊற்றும் அல்லது ஆதரவளிக்கும் வகையிலான, இந்த நவீன தேசியத்துவ அடையாளமானது, கொலனித்துவ மற்றும் கொலனித்துவத்துக்குப் பிறகான தேசிய அரசாங்கத்தின் தோற்றத்தோடு உருவானதாகும்” என்கிறார்.
நவீன தேசிய - அரசாங்கங்களின் தோற்றமானது, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய தேசிய - அரசாங்கங்களின் தோற்றத்தோடு உருவாகிறது. இந்தத் தேசிய - அரசாங்கங்களானவை, ஒரு தனித்த அரசாங்கத்தை ஸ்தாபித்ததோடு, அந்த அரசாங்கத்திலிருந்து வேறுபடாத தனித்த ஒரு தேசத்தையும் உருவாக்கியது.
பிரான்ஸ் அரசாங்கத்தின் ஆட்சிக்குட்பட்டவர்கள் ‘பிரென்ஞ்ச்’ தேசமாக அடையாளப்படுத்தப்பட்டார்கள். அவ்வாறே, அமெரிக்க அரசாங்கம் மற்றும் அமெரிக்க தேசத்தின் தோற்றத்தையும் நாம் காணலாம். இந்த பாணியைப் பின்பற்றி கொலனித்துவத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகள், தம்மைத் தேசிய - அரசுகளாக வடிவமைத்துக் கொண்டன.
கொலனித்துவத்துக்கு முன்னர் ஒருபோதும் ஒரு தேசமாக இருந்திராத இந்தியா, கொலனித்துவத்தின் பின்னர், பல சமஸ்தானங்களையும் தேசங்களையும் ஒன்றிணைத்து, நவீன இந்தியாவாக உருவானது. சுதந்திரத்தின் பின்னர், இது இந்திய தேசிய அரசாக உருப்பெற்றது.
கொலனித்துவத்துக்கு முன்னர், இலங்கை தனித்த ஒரு தேசமாகவோ, சிங்கள - பௌத்த தேசமாகவோ இருக்கவில்லை. சிங்கள - பௌத்த அடையாளத்தின் எழுச்சியை, 19ஆம் நூற்றாண்டளவில், அநகாரிக தர்மபால உள்ளிட்டோரின், பிரித்தானிய கொலனித்துவ மேலாதிக்கத்துக்கு எதிரான எழுச்சியோடு ஆரம்பமாவதைக் காணலாம்.
கிறிஸ்தவ மிஷனரிகளின் மேலாதிக்கத்துக்கு எதிராக, அநகாரிக தர்மபால உள்ளிட்டோரின் சிங்கள - பௌத்த எழுச்சியைக் காணலாம். இதற்கொப்பாக வடக்கில், ஆறுமுகநாலரின் எழுச்சியை பலரும் ஒப்பிடுவர். ஆனால், ஆறுமுகநாவலரின் எழுச்சியானது, தமிழர்களிடையேயான ‘சைவ’ எழுச்சியாகவும் தமிழ்ச் சைவத்தின் மறுமலர்ச்சியாகவும்தான் இருந்தது.
சிங்கள - பௌத்தர்களின் எழுச்சியானது, அவர்களை ஒட்டுமொத்த இலங்கைத் தீவின், பெரும்பான்மைத் தேசியமாக உருவாக்கியது. சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் அதிகாரத்தை கைப்பற்றத்தக்க ஜனநாயகப் பெரும்பான்மையை சிங்கள-பௌத்த தேசம் கொண்டிருந்தமையால், இலங்கை அரசாங்கம், சிங்கள - பௌத்த தேசத்தின் நலன்களை முன்னிறுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டது எனலாம்.
இதன் விளைவுகளைத்தான், 1956 தனிச்சிங்களச் சட்டத்திலிருந்து இன்று வரை காணக்கூடியதாக உள்ளது. இலங்கையின் தமிழ்த் தேசிய கருத்துருவாக்கம் என்பது, சுதந்திரத்தின் பின்னரான, சிங்கள - பௌத்த மேலாதிக்கத்துக்கு எதிரான எழுச்சியாகவே பலம்பெற்றதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
ஆனால், இந்த எதிரெதிர் கருத்துருவாக்கங்கள், ஒன்றையொன்று எதிர்த்ததன் மூலம், தம்முள் ஒற்றுமையை அதிகரித்து, தமது உள்ளக பலத்தை வலுவாக்கிக் கொண்டன. அதாவது பலம்வாய்ந்த, சிங்கள-பௌத்த அடையாளம் என்பது கட்டியெழுப்பப்பட்ட தேசம், பிரதேசம், சாதி(குல) எனப் பல்வேறுபட்ட நிலையிலும் பிரிந்திருந்த சிங்கள-பௌத்தர்கள் ஒன்றுபட வேண்டியிருந்தது. அது இலகுவாகவோ, உடனடியாகவோ நடைபெறவில்லை.
1920களில் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க, சமஷ்டி முறையைக் கோரியது, உள்ளகப் பிரிவினையின் முக்கிய காரணமாகும். கண்டியச் சிங்களவர்களுக்குத் தனி அலகும், கீழ்நாட்டுச் சிங்களவருக்குத் தனி அலகும் பண்டாரநாயக்க கோரியமை, அன்று சிங்கள-பௌத்த மக்களிடையே இருந்த அடிப்படை வேறுபாட்டின் எதிரொலிதான் ஆகும்.
காலவோட்டத்தில், ஆட்சி அதிகாரத்தின் சாதகம், பெரும்பான்மை பலத்தைக் கட்டியெழுப்புதல் உள்ளிட்ட பல காரணங்களின் விளைவாக, அரசியல் ரீதியில் சிங்கள - பௌத்த தேசியம் கட்டியெழுப்பப்பட்டது. இந்தப் பெரும்பான்மைக்கு எதிராக, ஒடுக்கப்படும் சிறுபான்மையானது, தமிழ்த் தேசியம் என்ற அடையாளத்தின் கீழ் ஒன்றுபட்டது.
தமிழரிடையேயும் மதங்கள், இனங்கள், பிரதேசங்கள், சாதிகள் என்பவற்றைத் தாண்டி, தமிழ்த் தேசியம் வலுவுற நீண்ட காலம் தேவைப்பட்டது. இதன் போக்கிலே ஆரம்பத்தில், தமிழ்த் தேசியத்துக்குள் பங்காளிகளாக இருந்த இந்திய வம்சாவளித் தமிழரும், பின்னர் தமிழ் பேசும் முஸ்லிம்களும் விலகி, தமக்கான தனித் தேச அடையாளத்தைக் கட்டியெழுப்பிக் கொள்கின்றமையையும் நாம் காணலாம்.
ஆகவே, இலங்கையை சிங்கள-பௌத்த தேசமாக அடையாளப்படுத்துவதானது, வரலாற்று ரீதியில் மிகச் சிக்கலானது; பிரச்சினைக்குரியது.
வரலாற்றில் ஆங்காங்கு நடந்தவற்றை, தமக்கேற்றால் போலத் தொகுத்து, தமக்கான அடையாளத்தைக் கட்டமைத்துக் கொள்வதனாலோ, அதைப் பெரும்பான்மை அதிகாரப் பலம் கொண்டு நிறுவிவிடுவதாலோ, அதுவே முடிந்த முடிவென்று ஆகிவிடாது.
ஆகவே, தமிழ் பௌத்தர்கள் பற்றி அமிர்தலிங்கம், குறிப்பிட்டமைக்குள்ளும் வடக்கு-கிழக்கில் இருக்கும் பௌத்த ஸ்தலங்கள் தமிழ் பௌத்தர்களுடையது என்று சொன்னமைக்குள், வரலாற்றில் காணப்பட்ட பௌத்த அடையாளம் எல்லாம், சிங்கள-பௌத்த அடையாளத்துக்குரியவைல்ல என்ற நியாயம் உட்புதைந்துள்ளது.
சர்வகட்சி மாநாட்டில் தொடர்ந்து உரையாற்றிய அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், “தமிழர்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்குமான பாதுகாப்பு மற்றும், தமிழ்ப் பிராந்தியங்களின், அதாவது தமிழர் தாயகப் பிராந்தியங்களின் ஒருமைப்பாட்டுப் பாதுகாப்பு என்பன உடனடித் தேவைகள்” என்று குறிப்பிட்டார்.
“தமிழர் தாயகப் பகுதிகளை 1957, 1960, 1967 ஆகிய ஆண்டுகளில் தமிழ் மற்றும் பெரும்பான்மைத் தலைவர்களிடையேயான உடன்படிக்கைகள் மற்றும் 1972 மற்றும் 1978ஆம் ஆண்டுகளின் அரசமைப்புகள் ஏற்றுக் கொண்டுள்ளன” என அமிர்தலிங்கம் மேலும் சுட்டிக்காட்டினார்.
1972 மற்றும் 1978ஆம் ஆண்டுகளின் அரசமைப்புகள், வடக்கு-கிழக்கு பிராந்தியங்களை நிர்வாக மற்றும் நீதிச் செயற்பாடுகள் தொடர்பில், தனித்த மொழிக் கட்டமைப்பைக் கொண்டமையானது, தமிழர் தாயகத்தை மறைமுகமாகவேனும் அங்கிகரித்திருக்கிறது என்பது அமிர்தலிங்கத்தின் வாதமாக இருந்தது.
தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாடென்பது, தமிழர் தாயகத்தில் நடத்தப்பட்டுவரும் திட்டமிட்ட குடியேற்றங்களாலும், அதனால் விளைவிக்கப்படும் குடிப்பரம்பல் மாற்றங்களாலும் கடும் பாதிப்பைச் சந்திக்கிறது என்பது அமிர்தலிங்கத்தின் ஆதங்கமாக இருந்தது.
1921இல் கிழக்கு மாகாணத்தில் 4%-6% ஆக இருந்த சிங்கள மக்களின் சனத்தொகை, அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் திட்டமிட்ட குடியேற்றங்களால் அதிகரிக்கப்பட்டதன் விளைவாக, தமிழர்களின் ஆட்புல அடிப்படைகள் சிதைக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக அமிர்தலிங்கம் தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார்.
திட்டமிட்ட குடியேற்றங்கள்
இந்தவிடயம், இன்றுவரை வாதப் பொருளாக இருக்கின்றது. வடக்கு, கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றங்களை அரசாங்கம் செய்கிறது என்ற குற்றச்சாட்டை தமிழ்த் தலைமைகள் முன்வைக்கும் போதெல்லாம், எடுத்த எடுப்பிலேயே, “தமிழர்கள் கொழும்புக்கு இடம்பெயர்ந்து, அங்கு சொத்துகள் வாங்கி, தொழிலில் ஈடுபட்டு, வாழ முடியும் என்றால், சிங்கள மக்கள் ஏன், வடக்கு கிழக்கில் வாழ முடியாது?” என்ற கேள்வி சிலரால், குறிப்பாக பெரும்பான்மைத் தலைவர்களால் முன்வைக்கப்படுகிறது.
இதற்கு, அது சரிதானே என்பது உங்களது பதிலாக இருக்குமானால், நீங்கள் இந்த ஒப்பீட்டுக்குள் புதைந்திருக்கிற ஒரு முக்கியமான அடிப்படை வித்தியாசத்தைக் கவனிக்கத் தவறிவிட்டீர்கள் என்று அர்த்தம். அரசாங்கங்கள் திட்டமிட்டுக் குடியேற்றம் செய்வதையும் இயல்பாக நடக்கும் குடியேற்றத்தையும் சமமாக ஒப்பிடுவது, ஒரு தர்க்கத் தவறாகும் (false equivalency).
அரசாங்கங்கள் திட்டமிட்டுக் குடியேற்றங்களைச் செய்வதென்பது, குறித்த ஒரு பிரதேசத்தில் சென்று மக்களை குடியேற்றுவதற்காக, அரசாங்கம் வீடு, காணி, உட்கட்டமைப்பு, தொழில், வாழ்வாதாரம் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து, வேறு பிரதேசத்திலுள்ள மக்களை, குறித்த ஒரு பிரதேசத்தில் குடியேற்றுவதாகும்.
வடக்கு, கிழக்கில் இதுபோன்ற திட்டமிட்ட குடியேற்றங்களை அரசாங்கம் செய்வதனூடாக, அங்குள்ள குடிப்பரம்பலைச் சிதைக்கிறது என்பதுதான் தமிழ்த் தலைமைகளின் ஆதங்கமும் குற்றச்சாட்டும். மாறாக, கொழும்பிலே தமிழர்கள் வசிப்பதானது, இயல்பான குடியேற்றம்.
தமிழ் மக்கள், தாமாக வாழ்வாதாரம் உள்ளிட்ட இன்ன பலபிற தேவைகளுக்காக, அங்கு வந்து குடியமர்கிறார்கள். வீடுகளையோ, சொத்துகளையோ தமது சொந்தச் செல்வத்திலேயே வாங்கிக் கொள்கிறார்கள்.
ஆகவே, இதையும், அரசாங்கங்களின் திட்டமிட்ட குடியேற்றங்களையும் சமமாக ஒப்பிடுவது எப்படி ஏற்புடையதாகும்? வடக்கு, கிழக்கு மட்டுமல்ல, நாட்டின் எப்பாகத்திலும் இயல்பாக நடக்கும் குடியேற்றத்தைத் தமிழ்த் தலைமைகள் எவரும் எதிர்க்கவில்லை என்பது இங்கு பதிவு செய்யப்பட வேண்டியது.
தமிழ் மக்கள் கொழும்புக்கோ, ஏனைய பிரதேசங்களுக்கோ இயல்பாக இடம்பெயர்வதைப் போல, சிங்கள மக்களும், ஏனைய சகல மக்களும், வடக்கு-கிழக்குக்கு இடம்பெயர்வதை எதிர்க்கும் உரிமை யாருக்கும் கிடையாது, ஆனால் அதேவேளை, அரசாங்கம் திட்டமிட்டு குடியேற்றங்களைச் செய்யுமானால்; அதன் உள்நோக்கம் பற்றிய கேள்விகளும், அது ஒருசாராருக்குப் பாதிப்பாக அமையும் போது, அதற்கெதிரான வலிமையான எதிர்ப்பு, தவிர்க்க முடியாததாகிறது.
இது, சிங்கள மக்களுக்கு எதிரான, தமிழ்த் தலைமைகளின் நிலைப்பாடு அல்ல; மாறாக, அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான தமிழ்த் தலைமைகளின் எதிர்ப்பு. ஆனால், இதைச் சிங்கள மக்களுக்கு எதிரான நிலைப்பாடாக உருவகப்படுத்தி, பரப்புரை செய்ததில் பேரினவாத அரசியல் வெற்றி பெற்றிருந்தது.
அம்பாறையும் தனிஅலகும்
குடிப்பரம்பல், காணிகள் பற்றிப் பேசியபோது, அமிர்தலிங்கம் அம்பாறை பற்றிக் குறிப்பிட்டுப் பேசியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும்.
“1984 ஜனவரி 1ஆம் திகதி, அகில இலங்கை முஸ்லிம் லீக் அமைப்பினர், தனக்கு அனுப்பி வைத்த அறிக்கையைச் சுட்டிக்காட்டிப் பேசிய அமிர்தலிங்கம், அதிகாரப் பகிர்வின் போது, அம்பாறை தனித்த அலகாகக் கருதப்பட வேண்டும் என்ற முஸ்லிம் லீக்கின் நிலைப்பாட்டைச் சுட்டிக் காட்டியதுடன், அங்கு சீனிக் கூட்டுத்தாபனம் மற்றும் ஓட்டுத் தொழிற்சாலை ஆகியவற்றுக்காக முஸ்லிம் மக்களிடமிருந்து அரசாங்கம் சுவீகரித்த காணிகள், அம்மக்களுக்கு நட்டஈட்டுடன் திருப்பித் தரப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
வன்முறைப் பாதை
தனது பேச்சின் இறுதியில், அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் வன்முறைப் பாதை பற்றிக் குறிப்பிடவும் அமிர்தலிங்கம் தவறவில்லை. “வன்முறை என்ற ஒரு கூறு, இந்த நாட்டின் அரசியல் கட்டமைப்புக்குள் நுழைந்திருப்பதை நான் குறிப்பிட்டாக வேண்டும்”. இவ்வாறு சொன்ன அமிர்தலிங்கம், அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராகப் பொலிஸாரினாலும், இராணுவத்தினராலும் கையாளப்பட்ட வன்முறை நடவடிக்கைகள், தமிழ் இளைஞர்கள் சிலரை, எதிர் நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டியது.
1974ஆம் ஆண்டு நடந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில், ஒன்பது அப்பாவி மக்கள் பொலிஸாரின் நடவடிக்கையால் கொல்லப்பட்டமையானது, தமிழர்களின் ஆண்மைக்குச் சவாலாகக் கருதப்பட்டது. இந்தியாவில் நடந்த ‘ஜாலியன்வாலா பாக் படுகொலைகள்’ அங்கு ஆயுதந்தாங்கிய இளைஞர் இயக்கங்கள் உருவாகக் காரணமானது. இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டமையானது, பொலிஸாருக்கெதிரான எதிர் நடவடிக்கைகளுக்கு காரணமானது. இது, அதிகரித்து அதிகரித்து இன்றைய சிரமம்மிகு நிலைக்கு எம்மைக் கொண்டு வந்திருக்கிறது.
ஆனால், இங்கு இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். இந்த வன்முறைகளில் தமிழர் பிரதேசங்களில், ஒரு சிங்களக் குடிமகன் கூட பாதிக்கப்படவில்லை. ஆனால், தென்னிலங்கையின் நிலைமை இதற்கு முற்றிலும் எதிரானது. இதற்குப் பதில், தமிழ் இளைஞர்களைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்து, சித்திரவதை செய்வதோ, அப்பாவி மக்களுக்கெதிரான வன்முறையோ அல்ல. இது இன்னும் அதிகளவிலான இளைஞர்கள் ஆயுத வழியை நாடுவதற்கே வழிகோலும்.
அண்மையில் கூட, ஆயுதப்படைகள் வவுனியாவில் தமிழ் மக்களுக்கெதிராக பெரும் வன்முறையில் ஈடுபட்டிருந்தனர். இவர்களை அடையாளங்கண்டு, தண்டிக்க வாய்ப்புகள் இருக்கிறதா? தமிழர் பிரதேசங்களில் ஆக்கிரமிப்பு இராணுவமாகத் தளம் கொண்டிருக்கும் இராணுவப் படைகள், விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று அமிர்தலிங்கம் கோரிக்கை விடுத்தார்.
தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் பற்றிய அமிர்தலிங்கத்தின் நிலைப்பாட்டில் ஒரு தௌிவின்மையைக் காணலாம். அவற்றை முற்றுமுழுதாக ஆதரிக்கவும் முடியாத, அதேவேளை அவற்றை முழுமையாக நிராகரிக்கவும் முடியாத அரசியல் சுழலில் அவர் சிக்கியிருந்தமையைக் காணலாம்.
இரத்ததிலகம் பெற்று, வீரவசனம் பேசிய அமிர்தலிங்கம், ஒரே மூச்சில் காந்தியத் திலகமாக முடியாது என்ற யதார்த்தம் கூட, அமிர்தலிங்கத்தின் இந்தத் தயக்கத்துக்குக் காரணமாக இருக்கலாம்.
இங்கு, தமிழ் இளைஞர்களது வன்முறைப் பாதையைச் சுட்டிக்காட்டுவோர், அதற்கான காரணங்கள், அதன் தோற்றுவாய், அதைத் தவிர்ப்பதற்கு இருந்த மிக இலகுவான வழிகள் என்பவற்றை வசதியாக மறந்துவிடுகிறார்கள்.
இந்த இடத்தில், அமிர்தலிங்கத்தின் கருத்தை ஆயுத வன்முறையை நியாயப்படுத்தும் முயற்சியாகப் பார்த்தல் தவறு. மாறாக,அதைத் தடுத்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அநியாயமாகத் தவறவிடப்பட்ட அநியாயத்தைச் சுட்டிக்காட்டும் முயற்சியாக நோக்குதலே பொருத்தமானது.
(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
37 minute ago
57 minute ago
2 hours ago