2026 மார்ச் 28, சனிக்கிழமை

வறுமையை ஒழிக்கப் போராட வேண்டும்: மோடி அழைப்பு

Thipaan   / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் நரேந்திரமோடி பிரசாரம் செய்த பீஹார் சட்டமன்றத் தேர்தல், அவர், இந்தியப் பிரதமரான பின்னர் சந்திக்கும் ஆறாவது சட்டமன்றத் தேர்தலாகும்.

நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்குக் கிடைத்த வெற்றி, அடுத்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களிலும் முழுமையாக எதிரொலிக்கவில்லை என்பதை எடுத்துக் காட்டிய சட்டமன்றத் தேர்தல்களாக இதுவரை நடைபெற்ற ஹரியானா, சட்டிஷ்கர், மஹாராஷ்டிரா, ஜம்மு அன்ட் காஷ்மீர், டெல்லி சட்டமன்றத் தேர்தல்கள் நிரூபித்து விட்டன.

நான்கு மாநிலங்களிலுமே பா.ஜ.கவோ அல்லது அதன் கூட்டணிக் கட்சியோ முதலமைச்சர் பதவியைப் பிடித்தாலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை பா.ஜ.கபெறவில்லை.

தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோடி தேவை என்று வாக்களித்தவர்கள், மாநில அளவில் அந்த அளவுக்கு அபரிமிதமாக மோடிக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. அதனால் ஆட்சியைக் கைப்பற்றினாலும், சட்டிஷ்கர், ஹரியானா, ஜம்மு அன்ட் காஷ்மீர் போன்ற மாநிலங்களில் பா.ஜ.க, வாக்கு வங்கி சேதாரத்தைச் சந்தித்து. டெல்லி சட்டமன்றத் தேர்தலிலோ ஆட்சி அமைக்க முடியாத அளவுக்;கு படு தோல்வியைச் சந்தித்து.

இந்திய ராஜ்ய சபையில் ஏற்கெனவே பா.ஜ.கவுக்கு போதிய பலம் இல்லை. முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை. நில எடுப்பு மசோதாவுக்காக திரும்பத் திரும்ப அவசரச் சட்டம் கொண்டு வந்தாலும், இறுதியில் அந்த மசோதாவே வேண்டாம் என்று கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க போன்ற கட்சிகளின் தயவு கிடைக்கும் என்றாலும், அது மட்டுமே ராஜ்யசபையில் மசோதாக்களை நிறைவேற்ற பா.ஜ.கவுக்கு போதாது. பா.ஜ.கவுக்கு, காங்கிரஸுடன் இணக்கமான சூழ்நிலை நிலவாத காரணத்தால், ராஜ்ய சபையில் பிரதான பலமிக்க கட்சியாக இருக்கும் காங்கிரஸின் தயவு இன்றி முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற பா.ஜ.கவால் முடியவில்லை.

இது மட்டுமல்,- ஜி.எஸ்.டி என்ற வரிச் சட்டத்தைக் கூட பா.ஜ.க அரசு கொண்டு வர முடியவில்லை. இச்சட்டம் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி கொண்டுவந்து நிறைவேற்ற முடியாமல் போன சட்டம் என்றால் கூட, அந்த சட்டத்தை நிறைவேற்றவும் காங்கிரஸ் கை கொடுக்கவில்லை. ஆகவே காங்கிரஸ் கிடுக்கிப்பிடி பா.ஜ.கவுக்கு பெரும் தொல்லையாக அமைந்திருக்கிறது.

'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை' என்பது போல் ஆட்சிக்கு வந்தும் தன் விருப்பத்துக்கு ஏற்றவாறு பா.ஜ.கவால் ஆட்சி செலுத்த இயலவில்லை. இது மாதிரி சூழலில்தான் பீஹார் வெற்றியை பா.ஜ.க மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அதனால் பீஹார் மாநில சட்டமன்றத் தேர்தலில் படையோடு சென்று பிரசாரம் செய்கிறது. 'மண்டலா' 'கமண்டலா' என்ற பிரசாரம் அங்கே தலை தூக்கியிருக்கிறது.

பீஹார் சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தமட்டில் ஜாதி பிரதானமாக இருக்கிறது. அதை வைத்துத்தான் வாக்குப் பதிவுகள் என்ற நிலையில், பா.ஜ.க 'நல்ல நிர்வாகம், வளர்ச்சி' போன்ற தாரகமந்திரங்களை எடுத்துச் சென்று வெற்றி அடைய முயலுகிறது. தொடக்கத்தில், இரு தரப்பிலுமே கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்திக் கொண்டார்கள். பிரதமர் நரேந்திரமோடி 'லாலுவும், நிதினும் எப்படி ஜெயப்பிரகாஷ் நாராயணன் எதிர்த்த காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்தார்கள்' என்று விமர்சித்தார். ஜெயப்பிரகாஷ் நாராயண் இந்தியாவில் எமெர்ஜென்ஸி வருவதற்கு முன்பு காங்கிரஸை எதிர்த்து பேரியக்கம் கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் தட்டி எழுப்பிய உணர்வுதான் இந்திய மாநிலங்கள் அனைத்திலும் எதிரொலித்தது. விளைவு வேறு விதமாக மாறுகிறதே என்று கருதிய அன்றைய பிரதமர் இந்திரா காந்தி 'நெருக்கடி நிலை' பிரகடனம் செய்தார். அந்த 'எமெர்ஜென்ஸி காலத்து நினைவுகளை' திரும்பவும் பீஹார் தேர்தல் பிரசாரத்துக்கு கொண்டு வந்தார் பிரதமர் மோடி. இப்பிரசாரத்தின் சூடு தணிவதற்குள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் 'இட ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்று புதிய குண்டைத் தூக்கிப் போட்டார்.

பீஹார் சட்டமன்றத் தேர்தலை அனல் பறக்க வைக்க இதை விட வேறு பிரத்தியேக யுக்தி தேவையில்லை என்ற நிலை உருவானது. ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், 'இடஒதுக்கீட்டைக் காப்பாற்ற என் உயிரை விடத் தயார்' என்ற ரீதியில் தமிழக மண்ணில் நடக்கும் உணர்ச்சி மிகுந்த பிரசாரம் போல் பீஹாரில் செய்யத் தொடங்கினார்.

பா.ஜ.க, வந்தால் இட ஒதுக்கீடு போய் விடும் என்ற தோற்றத்தை பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் படு வேகமாக கொண்டு போய்ச் சேர்த்தார். இதுவரை நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் முதல்வர் யார் என்பதை அறிவிக்காமலேயே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பா.ஜ.க இந்த முறை தன் ரூட்டை மாற்றியது. பீஹாரில் பா.ஜ.க வெற்றி பெற்றால் 'பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராவார்' என்று அறிவித்தது.

'கிரிமினல் குற்றவாளிகளுக்கு எல்லாம் பா.ஜ.க சீட் கொடுத்து விட்டது' என்று பா.ஜ.கவிலேயே இருக்கும் முன்னால் உள்துறை செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.கே. சிங் பகிரங்கமாக பேட்டி அளித்தது அக்கட்சிக்கு மேலும் தலைவலியைக் கொடுத்தது. 'பிற்படுத்தப்பட்டவர் முதலமைச்சர்' என்று பா.ஜ.க அறிவித்தாலும், 'லாலு- நிதிஷ் கூட்டணி' யின் வெற்றிப் பயணத்தை தடுக்க முடியாது போலிருக்கிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. இப்படியொரு இக்கட்டான சூழலில் 'மாட்டிறைச்சி' பிரச்சினை பீஹார் அரசியலிலும் தலை தூக்கியது.

உத்தரபிரதேசத்தில் 'தாத்ரி' என்ற இடத்தில் 'மாட்டிறைச்சி' சாப்பிட்டார் என்று ஒரு சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த கொலை அகில இந்திய அளவில் பெரும் தாக்கத்தை உருவாக்கியது. அருகில் உள்ள பீஹார் மாநிலத் தேர்தலில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் சூழலை கிளப்பியது. 'சமூக நல்லிணக்கம்' என்று பிரதமரும், அவரது மூத்த அமைச்சர்களும் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்கள்.

குறிப்பாக இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண்ஜேட்லி போன்றவர்கள் இதை கண்டித்து விட்டார்கள். ' நாட்டின் பொருளாதாரத்தை பின்னோக்கிக் கொண்டு போய் விடும்'என்றே எச்சரித்தார்கள்.

ஆனாலும் இவ்வளவு சென்சிட்டிவான விஷயத்தில் பிரதமர் நரேந்திரமோடியின் பதில் என்ன என்பதை அனைத்து எதிர்கட்சிகளும் எழுப்பின. அதற்கு பதில் சொல்ல பீஹார் தேர்தல் களத்தைப் பயன்படுத்திக் கொண்டார் பிரதமர் மோடி.

தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், 'முஸ்லிம் இந்துக்களை எதிர்த்து சண்டை போடுவதா, இந்துக்கள் முஸ்லிம்களை எதிர்த்து சண்டை போடுவதா என்பதை விட, இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து ஏழ்மையை விரட்ட, வறுமையை விரட்ட சண்டை போட வேண்டும்' என்று மதச்சார்பின்மையை உரக்கப் பேசினார்.

அதற்கு முதல் நாள் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, 'நாட்டின் சகிப்புத்தன்மையை போற்றி பாதுகாக்க வேண்டும்' என்று அழுத்தம் திருத்தமாக அறிவித்தார். 'ஜாதியில் தொடங்கிய பீஹார் சட்டமன்றத் தேர்தலின் பிரசாரம் இப்போது மதச்சார்பின்மையில் வந்து நிற்கிறது' என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

பீஹார் தேர்தல் முடிவுகளில் இரு விஷயங்களுக்கு விடை கிடைக்கும். முதலாவதாக பா.ஜ.க தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாற்றாக உருவாகும் அணி எவ்வளவு தூரம் வெற்றிகரமாக இருக்கும் என்பதாகும்.

ஏனென்றால், பா.ஜ.கவை தனித்தனியாக எதிர்கொண்டு களத்தில் தோல்வியடைந்து விடக்கூடாது என்பதற்காகவே பரம எதிரிகளாக இருந்த லாலு பிரசாத் யாதவும், நிதிஷ் குமாரும் கைகோர்த்து அணி அமைத்தார்கள். வழக்கில் தண்டனை பெற்றதால் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை லாலு பிரசாத் யாதவ் இழந்ததால், இந்த அணி அமைவது சாத்தியமானது. எதிரும் புதிருமாக பாலிடிக்ஸ் செய்தவர்கள் இணைந்து தேர்தல் களத்தில் நிற்பதால்  வெற்றி கிடைக்குமா என்பது இந்த தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கும். இங்கு வெற்றி கிடைத்தால், இதே மாதிரி அணிகள் மற்ற மாநிலங்களில் உருவாகும். இல்லையென்றால் பா.ஜ.கவுக்கு எதிராக அணி அமைப்பது என்பதும் பீஹார் சட்டமன்றத் தேர்தலுடன் முதலும், முடிவுமாக ஆகி விடும்.

 மற்றொன்று 'ஜாதி அரசியலா' அல்லது 'வளர்ச்சி அரசியலா' என்பதற்கும் உரிய விடை இந்த பீஹார் தேர்தலில் கிடைக்கும். ஜாதி அரசியல் வெற்றி பெற்றால், ராஜ்ய சபையில் பா.ஜ.கவுக்கு மேலும் சிக்கலாகும். 'வளர்ச்சி அரசியல்' வெற்றி பெற்றால் ராஜ்ய சபையில் பா.ஜ.கவின் கை வலுப்படும். அதனால் நாட்டுக்குத் தேவையான பல முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்படும் வாய்ப்பு உருவாகும்.

பீஹார் தேர்தலில் 'பிற்படுத்தப்பட்ட மக்கள்' மற்றும் 'சிறுபான்மை மக்களை' வளைக்கும் முயற்சியில் லாலு பிரசாத் யாதவும், 'உயர்ஜாதி வாக்காளர்களை தன் பக்கம் சேர்க்கும் முயற்சியில் நிதிஷ்குமாரும்' மும்முரமாக பிரசாரத்தில் இருக்கிறார்கள். அதே நேரத்தில் பிரதமர் மோடி 'வளர்ச்சி' என்ற முழக்கத்தில் அனைத்து தரப்பு மக்களையும் இழுக்கும் முயற்சியிலும், முன்னால் முதல்வர் மாஞ்சியும், மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானும் 'தாழ்த்தப்பட்ட மக்களை' பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவாக கொண்டு வரும் முயற்சியிலும் தீவிரப் பிரசாரத்தில் இருக்கிறார்கள்.

'நல்லாட்சி' என்ற கோஷத்தில் பிரதமர் மோடிக்கும், ஏற்கெனவே பீஹார் முதல்வராக இருந்த நிதிஷ் குமாருக்கும் சம மதிப்பெண்கள் இருப்பதால், அந்த கோஷம் மட்டுமே பா.ஜ.கவுக்கு வெற்றியை தேடித் தராது என்பதே கள நிலவரம். அதனால்தானோ என்னவோ பிரதமர் மோடி சிறுபான்மையினர் வாக்குகளையும் தன் பக்கம் இழுப்பதற்காக 'இந்துக்களும், முஸ்லிம்களும் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. இருவரும் சேர்ந்து வறுமையை ஒழிக்க சண்டை போட வேண்டும்' என்று கூறியிருக்கிறார். மோடியின் இந்த அப்பீல் பா.ஜ.கவுக்கு வெற்றியைத் தேடித் தருமா என்பதுதான் இப்போது பீஹார் தேர்தல் பிரசாரத்தின் திருப்பு முனை.

 வெற்றி பெற்றால் பா.ஜ.க கூட்டணிக்கு ஒட்சிசன் கிடைக்கும். தோல்வியடைந்தால் 'லாலு- நிதிஷ்குமார்' மாடல் கூட்டணி நாடு முழுவதும் பா.ஜ.கவுக்கு எதிராக உருவாகும். இதுதான் பீஹார் சட்டமன்றத் தேர்தல் கொடுக்கப் போகும் முடிவுகளின் தாக்கமாக இருக்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .