2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

வேற்றுமையில் ஒற்றுமை

என்.கே. அஷோக்பரன்   / 2018 செப்டெம்பர் 24 , மு.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

   
தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 162)

பிரிந்து நின்றவர்கள்

நோக்கம் ஒன்று; ஆனால், அதை அடைவதற்காகப் பல பாதைகளில் புறப்பட்ட பல அமைப்புகள் ஒன்றோடொன்றும், தமக்குள்ளும் முரண்பட்டு, எதிரும் புதிருமாகத் திசைமாறிப் பயணிக்க ஆரம்பித்தன.   

ஈழத் தமிழ் மக்களுக்காகத் தனிநாடொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக, ஆயுதப்போராட்டமே ஒரேவழி எனத் தீர்மானித்த தமிழ் இளைஞர், ஆயுதம் தரித்த அமைப்புகளாக இயங்கினார்கள்.   

இவை ஒவ்வொன்றினதும் உருவாக்கம், செயற்பாடுகள், பின்புலம் என்பன, தனித்து ஆராயப்படவேண்டியதொரு விடயம். அவற்றின் அடிப்படை நோக்கம், ஒன்றாக இருப்பினும், அதன் அரசியல், ஆதரவுப் பின்புலங்கள், அவை கொண்டிருந்த அரசியல் கொள்கைகள், கரிசனைகள் வேறுபட்டிருந்தன. இது பற்றிக் கருத்துரைக்கும் சிலர், இவற்றில் சில அமைப்புகள், முழுமையாக இந்திய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாகச் சுட்டிக் காட்டுவதுடன், சில அமைப்புகள் இந்திய எதிர்ப்புப் போக்கைக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிடுகிறார்கள்.     

 மேலும், இந்த இயக்கங்களுக்கு இடையேயான எதிர்ப்பிலும், முரண்பாட்டிலும் பல உயிர்கள் பலியானதும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது. அவை, வரலாற்றில் கறுப்புப் பக்கங்களாக இடம்பிடித்து விட்டன. 

இந்தியா பற்றிய இந்த இயக்கங்களின் நிலைப்பாடுகள், எவ்வாறு இருந்தாலும், கிட்டத்தட்ட எல்லா அமைப்புகளுமே, தென்னிந்தியாவில், தமிழகத்தை மய்யமாகக் கொண்டே செயற்பட்டுக் கொண்டிருந்தன.   

இந்திய அரசாங்கத்தினது பின்புலமும், தமிழகத்தின் ஆதரவும், இந்திய உளவுத்துறையின் அரவணைப்புமின்றி இது சாத்தியமாகி இருக்காது. அரசியல் தந்திரோபாய ரீதியில் நோக்கினால், ஒன்றுக்கொன்று முரணான ஆயுதக் குழுக்களை வளர்த்துவிடுவது, ஆதரிப்பது இந்திய நலன்களுக்குச் சாதகமானதாகவே இருக்கும்.  

ஏனெனில், இந்தியா ஒரேயோர் இயக்கத்தை நம்பியிருக்க வேண்டியதில்லை. இப்படியாக, ஈழத் தமிழரின் விடுதலை என்றொரு குறிக்கோளை முன்வைத்து, உருவான தமிழ் இளைஞர் ஆயுத அமைப்புகளுக்குள்  1985களில், தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), ஈழப் புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ்), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ) ஆகியவை பலம் பொருந்திய, முக்கிய தமிழ் இளைஞர் ஆயுத அமைப்புகளாக விளங்கின.   

இவற்றில், 1984ஆம் ஆண்டு ஏப்ரல் காலப்பகுதியில், ஸ்ரீ சபாரட்ணம் தலைமையிலான ‘டொலோ’, பாலகுமாரன் தலைமையிலான ‘ஈரோஸ்’, பத்மநாபா தலைமையிலான ‘ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய மூன்று அமைப்புகளும் ஒன்றிணைந்து, ‘ஈழத் தேசிய விடுதலை முன்னணி’ என்ற ஒன்றுபட்ட முன்னணியை ஸ்தாபித்திருந்தன.   

1984ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் பிரிந்து, தனித்துச் செயற்படுவதைவிட, ஒன்றிணைந்து ஒரே நிகழ்ச்சி நிரலில் செயற்படுவது தான், அக்காலப்பகுதியில் எழுந்திருந்த சூழலை, எதிர்கொள்வதற்கேற்ற பொருத்தமான தந்திரோபாயம் என்று, அவை கருதியிருக்கக்கூடும்.   

மேலும், இதுபற்றித் தன்னுடைய நூலொன்றில் கருத்துரைக்கும் நாராயண்சுவாமி, ‘ஈழத் தேசிய விடுதலை முன்னணி என்ற இந்தக் முன்னணியானது, இந்திய உளவுத்துறையான ‘றோ’வினுடைய குழந்தை என்று குறிப்பிடுகிறார்.   

தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களை ஒருங்கிணைப்பதில், நிறையச் சிக்கல்கள் இருந்ததாகவும் அதை நிவர்த்திக்கும் வகையில், அனைத்து அமைப்புகளையும் ஒரே குடையின் கீழ், ஒரு புள்ளியில் ஒன்றிணைக்கத் திட்டமிட்டு, ‘றோ’ அமைப்பே, இந்த முன்னணியை ஸ்தாபித்ததாக அவர் குறிப்பிடுகிறார்.   

இந்த அமைப்பு உருவானபோது, அது பற்றிக் கருத்துரைத்த, ‘ஈரோஸ்’ இயக்கத்தின் தலைவர் பாலகுமாரன், “அரசியல்வாதிகளின் தலையீடுகளின்றி, தமிழ் இளைஞர் ஆயுத அமைப்புகளால் உருவாக்கப்பட்டது” என்று கூறியிருந்தார்.   

“தமிழ்ப் போராளிகளிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்ற கருத்து உருவானபோது, பாக்கு நீரிணையின் இரு மருங்கிலுமுள்ள அரசியல்வாதிகளின் தலையீடு, அதில் நிறையவே ஏற்படத் தொடங்கியது. இந்த அரசியல்வாதிகளை, இதிலிருந்து தள்ளி வைக்க, நாம் உறுதி கொண்டிருந்தோம். அவர்களுக்குத் தேவைப்பட்டதெல்லாம், இந்த ஒற்றுமையை உருவாக்கியது ‘நான்தான்’ என்று சொல்வதனூடாக, அரசியல் இலாபத்தைப் பெற்றுக் கொள்வது மட்டும்தான்” என்று பாலகுமாரன் மேலும் குறிப்பிட்டிருந்தார்.  

1984இல் இந்த முன்னணி உருவானபோது, இதில் மிக முக்கியமான இரண்டு அமைப்புகளான வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் அமைப்பும், உமா மகேஸ்வரன் தலைமையிலான ‘புளொட்’ அமைப்பும் இணைந்திருக்கவில்லை. அவற்றை இணைத்துக்கொள்வதில் நிறையச் சிக்கல்கள் இருந்தன.   

ஆரம்பத்தில், இதுதொடர்பில் விடுதலைப் புலிகள் அமைப்பை அணுகுவதைவிட, ‘புளோட்’ அமைப்பை அணுகுவது, இலகுவாக இருந்தாக, பாலகுமாரன் குறிப்பிட்டதாகத் தன்னுடைய கட்டுரையொன்றில், அனிதா பிரதாப் மேற்கோள் காட்டுகிறார்.   

விடுதலைப் புலிகள் அமைப்பைப் பொறுத்தவரையில், அவர்கள் இந்த ஒற்றுமையை வரவேற்றிருந்தாலும், தம்மைப் பலம்வாய்ந்த அமைப்பாகக் கருதியதுடன், தனித்துப் போராடும் எண்ணத்திலேயே இருந்தார்கள் என அனிதா பிரதாப் குறிப்பிடுகிறார்.   

மேலும், ‘டெலோ’வுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே நேரடி முரண்பாடுகள் நிறைய இருந்தன. ஆகவே, விடுதலைப் புலிகள் அமைப்போடு, ஓரளவு இணக்கமான உறவைக் கொண்டிருந்த ‘ஈரோஸ்’, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புகளே, விடுதலைப் புலிகளுடன் பேச வேண்டிய நிலையில் இருந்தன.  

மேலும், விடுதலைப் புலிகள், ‘புளொட்’ ஆகிய இரண்டு அமைப்புகளையும் இந்த முன்னணிக்குள் கொண்டு வருவது சாத்தியமாக இருக்கவில்லை. இதற்கு அந்த அமைப்புகளின் தலைவர்களான வேலுப்பிள்ளை பிரபாகரன், உமா மகேஸ்வரன் ஆகியோருக்கு இடையிலான தனிப்பட்ட வேறுபாடுகள், பகைமை உருவாகக் காரணங்களாகின என்று கூறப்படுகிறது. இந்தக் காரணங்கள், அனைவருக்கும் மிக வெளிப்படையாகத் தெரிந்தவையாகும்.

பிரபாகரனும் உமா மகேஸ்வரனும்  விடுதலைப் புலிகள் அமைப்பிலேயே ஆரம்பத்தில் இருந்தார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பின் இராணுவத் தளபதியாகப் பிரபாகரன் இருந்தபோது, 1977 முதல் 1980 வரை, அந்த அமைப்பின் மத்திய குழுவின் தலைவராக (தவிசாளராக) உமா மகேஸ்வரன் இருந்தார்.   

இருவரிடையேயும் தனிப்பட்ட ரீதியில் உருவான முரண்பாட்டின் விளைவாக, அந்த அமைப்பிலிருந்து விலகிய உமா மகேஸ்வரன், 1982இல் ‘புளொட்’ அமைப்பை உருவாக்கியிருந்தார். இவர்களுக்கு இடையேயான பகையின் வௌிப்பாடு, 1982 மே 19ஆம் திகதி, சென்னை, பாண்டிபஸார் பகுதியில் நேரடியாகத் துப்பாக்கிச் சூட்டு மோதலுக்கும் வழிவகுத்தது.   

இந்தப் பகையின் காரணமாக, இந்த இரு அமைப்புகளையும் ஒன்றிணைப்பதென்பது சாத்தியக் குறைவானதொரு விடயமாகவே இருந்தது.  

கைகோர்த்துக் கொண்டார்கள்  

1985இன் ஆரம்பப் பகுதியில், இலங்கை விவகாரம் தொடர்பில், ராஜீவ் காந்தியின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டிருந்தமையானது, தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்கள் தொடர்பிலான, இந்தியாவின் ஆதரவு நிலைப்பாட்டையும் சற்றே மாற்றியிருந்தது.   

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் முழுமையாக ஒன்றிணையாவிட்டாலும், குறைந்தபட்சம் அவை ஒருங்கிணைந்து செயற்பட வேண்டிய தேவையை, புதிதாக எழுந்துள்ள சூழல், உருவாக்கியிருந்தது. 

இந்தச் சூழலில்தான், 1985 ஏப்ரல் 10ஆம் திகதி, வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் இணைந்து கொண்டது.   

தமிழகத்தின் சென்னையில் பாலகுமாரன், ஸ்ரீ சபாரட்ணம், பத்மநாபா, பிரபாகரன் ஆகியோர் இந்த அமைப்பின் கீழ் கைகோர்த்துக் கொண்டனர்.   

இது தொடர்பில், அவர்கள் வௌியிட்டிருந்த ஊடக அறிக்கையில், ‘அதிகரித்து வந்த அரச பயங்கரவாதமும், இன அழிப்பும் நாம் ஒன்றாக வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளதுடன், ஒன்றுபட்ட இராணுவ, அரசியல் தந்திரோபாயத்துக்கான அவசியத்தையும் உருவாக்கியுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.   

இந்த ஒன்றுபட்ட அமைப்பின் நிகழ்ச்சி நிரலானது, மூன்று அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டமைந்ததாக, தன்னுடைய கட்டுரையொன்றில் அனிதா பிரதாப் விவரிக்கிறார்.   

முதலாவது, ஆயுதப் போராட்டம் மூலமாக, விடுதலைக்கான தந்திரோபாயத்தை, இணைந்து முன்னெடுத்தல்.   

இரண்டாவது, அதன் மூலம் சுதந்திர தனிநாட்டை ஸ்தாபித்தல்.   

மூன்றாவது, அந்தச் சுதந்திர நாட்டை, சோஷலிச நாடாக வடிவமைத்தல் என்பனவாகும்.  

விடுதலைப் புலிகள் அமைப்பு, ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் இணைந்தது பற்றி, தன்னுடைய நூலொன்றில் விவரிக்கும் அடேல் பாலசிங்கம், ‘அதிகரித்து வந்த இந்தியாவின் அழுத்தமும், இந்திய அரசாங்கத்துக்கும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கும் இடையில் அதிகரித்து வந்த கருத்து வேற்றுமைகளும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தி இருந்தன என்று, விடுதலைப் புலிகள் அமைப்பின் தத்துவாசிரியரான அன்டன் பாலசிங்கம் உணர்ந்ததாகவும், மேலும், இந்தியாவிடமிருந்து எதிர்காலத்தில் வரக்கூடிய அரசியல், இராஜதந்திர அழுத்தங்களையும் சவால்களையும் விடுதலைப்புலிகள் அமைப்பால் தனித்து எதிர்கொள்வது சாத்தியமில்லை என்று அவர் கருதியதாகவும் அதனால், ஏலவே உருவாகியிருந்த ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் இணைந்துகொள்வதன் மூலம், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்துக்கு வலுச்சேர்க்க முடியுமென்றும், அந்த ஒற்றுமையே இந்தியாவால் வரக்கூடிய அரசியல், இராஜதந்திர சவாலுக்கேற்ற கேடயமாக அமையுமென்றும் அன்டன் பாலசிங்கம் கருதியதாகப் பதிவு செய்கிறார்.   

ஆகவே, இந்த ஒருங்கிணைப்பானது காலச்சூழலின் தேவை கருதி அமைக்கப்பட்டது என்பது வௌிப்படையாகிறது. எது எவ்வாறாயினும், ஈழத் தேசிய விடுதலை முன்னணியில், ‘புளொட்’ அமைப்பு இணைத்துக் கொள்ளப்படவில்லை. இதற்குப் பரவலாக, இருவேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.   

ஈழத் தேசிய விடுதலை முன்னணி என்பது, இந்திய உளவுத்துறையின் உருவாக்கம் என்று கருத்துரைப்பவர்கள், இந்தியா, ‘புளொட்’ அமைப்பை விரும்பி இருக்கவில்லை என்றும், இதற்கு அவர்களிடையே இருந்த, பரஸ்பர வெறுப்புணர்வு காரணமாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்கள்.   

மறுபுறத்தில், உமா மகேஸ்வரன் தலைமையிலான ‘புளொட்’ அமைப்பு, ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் இணைவதை, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் விரும்பி இருக்கவில்லை என்று, சிலர் கருத்துரைக்கிறார்கள்.   

அரசியல் முக்கியத்துவம்  

தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களின் இந்த ஒருங்கிணைவு பற்றி, சற்றேனும் விவரமாக இங்கு ஆராய்ந்தமைக்கான முக்கிய காரணம், இந்தக் கட்டுரைத் தொடரின் நோக்கமான, ‘இலங்கைத் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?’ என்ற தேடலில், அந்த அபிலாஷைகளை வரையறுத்ததில், இந்தத் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களின் பங்கு மிக முக்கியமானது.   

அவை, 1985இல் திம்புவில் வரையறுத்த நான்கு அடிப்படைக் கொள்கைகள்தான் இன்று வரை, தமிழ் மக்கள் முன்னெடுக்கும் அரசியலின் அடிநாதமாக இருந்து வருகின்றன.  

ஆகவே, இந்தத் தேடலில், தமிழ் இளைஞர் ஆயுத அமைப்புகளின் இந்த அரசியல் பங்களிப்பு, முக்கியமானது மட்டுமல்லாது தவிர்க்க முடியாததும் ஆகும்.  

(அடுத்த திங்கட்கி​ழமை தொடரும்)  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .