2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வெட்கமே இல்லாமல் பேசும் அரசியல்வாதிகள்

Thipaan   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னணி சோஷலிஸக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பிரேம்குமார் குணரத்னத்துக்கு இலங்கையில் பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அவருக்கு, இலங்கையில் அரசியலில் ஈடுபட உரிமை இருக்கிறது என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலஹப்பெரும கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது கூறியிருக்கிறார்.

கடந்த வருடம் நாடு கடத்தப்பட்ட குணரத்னம், கடந்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற காலத்தில் மீண்டும் இலங்கைக்கு வந்திருந்தார். அவரது விஸா காலம் ஜனவரி மாதம் முடிவடைந்த போதும்,  மீண்டும் தமக்கு பிரஜாவுரிமை இருக்கும் அவுஸ்திரேலியாவுக்கு அவர் செல்லவில்லை. எனவே, கேகாலையிலுள்ள அவரது தாயாரின் வீட்டில் இருக்கும் போது கடந்த நவம்பர் மாதம் 4ஆம் திகதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

அன்றே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, குணரத்னத்தை நாடுகடத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். கடந்த வாரம் டலஸ் அலஹப்பெரும கருத்துத் தெரிவிக்கையில், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கும் போது இரட்டைக் குடியுரிமை வழங்கும் முறையொன்று இருக்கவில்லை என்றும் இப்போது இவ்வாறானதோர் முறை இருப்பதால் குணரத்னத்துக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

இலங்கையில் அரசியல்வாதிகளுக்கு எந்தளவு வெட்கமின்றி பகிரங்கமாக கருத்து வெளியிட முடியும் என்பதை எடுத்துக் காட்டவே இந்தச் சம்பவங்களை இங்கு குறிப்பிட்டோம். ஏனெனில், இதே

டலஸும் தினேஸும் அமைச்சர்களாக இருக்கும் போதே, கடந்த வருடம் ஏப்ரல் மாதம் குமார் குணரத்னம் பொலிஸார் என நம்பக்கூடிய சிரலரால் கடத்தப்பட்டு இருந்தார். பின்னர், அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தலையிட்டதை அடுத்து, அவரை கொழும்பு தெமட்டகொடையில் உள்ள கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் அருகே கடத்தல்காரர்கள் விட்டு விட்டுச் சென்றிருந்தனர்.

அக் காலத்தில், மஹிந்தவின் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்த டலஸ் மற்றும் தினேஷ் உட்பட சகலரும் இந்தக் கடத்தலை நியாயப்படுத்தும் வகையில் குணரத்னத்துக்கு எதிராக வசை பாடினர். கடத்தல்காரர்கள் ஒருபோதும் கைது செய்யப்படவுமில்லை. அரச படைகளே குணரத்னத்தைக் கடத்தியதாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அண்மையில்  சூசகமாகக் கூறியிருந்தார்.

டலஸும் தினேஸும் இன்று கூறுவது உண்மையே. குமார் குணரத்னம் பிறப்பில் இலங்கைப் பிரஜை. அவர், 1988ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியில் பங்கு கொண்டவர். அதன் பின் ஏற்பட்ட பாதுகாப்பின்மை காரணமாகவே அவர் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் சென்று, அந்நாட்டின் பிரஜாவுரிமையைப் பெற்றார். அங்கு இருந்தும் அவர் ஒரு காலம் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியலிலும் ம.வி.முவிலிருந்து சிலர் பிரிந்து சென்று முன்னணி சோஷலிசக் கட்சியைத் தோற்றுவித்ததன் பின்னர், அக்கட்சியின் அரசியலிலும் ஈடுபட்டார்.

எனவே, அவர் தொடர்ந்தும் இலங்கையின் அரசியலில் ஈடுபட்டவர். அத்தோடு அவர், இலங்கையை வெறுத்து வெளிநாடு செல்லவில்லை. மாறாக, பாதுகாப்புக்காகவே வெளிநாடு சென்றார். எனவே, அவருக்கு பிரஜாவுரிமை வழங்குவதும் அவருக்கு இலங்கையில் அரசியலில் ஈடுபட இடமளிப்பதும் நியாயமானதே. ஆனால், அரசியலில் ஈடுபடுவதற்காக அவர் கடந்த முறை இலங்கைக்கு வந்தபோது அவரை கடத்தியவர்கள் இப்போது அவருக்காகப் பரிந்து பேசுவது ஒரு புறம் வெட்கமின்மை, மறுபுறம் நேர்மையின்மை.

இன்று நடக்கும் வேறு பல விடயங்களைப் பார்த்தாலும் இந்த வெட்கமின்மை சகல கட்சிகளிடமிருந்தும் காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக அதை ஐ.ம.சு.கூ தலைவர்களிடம் காணக்கூடியதாக இருக்கிறது.

நவம்பர் முதல் வாரத்தில் தமது பாடநெறியைப் பட்டப் பாடநெறியாக மாற்றுமாறு கோரி கணக்கியல் உயர் தேசிய தொழில்நுட்ப டிப்ளோமா கற்கை நெறியை (ர்Nனுயு) பயிலும் மாணவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொலிஸார் மிக மூர்க்கமாக அந்த ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கினர். இதனையடுத்து, ஐ.ம.சு.கூவின் மஹிந்த குழுவினர், அதற்கு எதிராக நாடாளுமன்றத்துக்குள்ளேயே சுலோக அட்டைகளை உயர்த்திக் கொண்டு ஆர்ப்பட்டம் செய்தனர். மஹிந்தவின் காலத்தில், ஆர்ப்பாட்டக்காரர்கள் இதை விட மோசமாகத் தாக்கப்பட்டார்கள். அக் காலத்தில், எல்லாவற்றுக்குமான அரசாங்கத்தின் பதிலாக அடக்குமுறையே இருந்தது. ஊழியர் சேம லாப நிதியைப் பாவித்து தனியார் துறையினருக்கு ஓய்வூதியத் திட்டமொன்றை தயாரிக்க மஹிந்தவின் அரசாங்கம் முற்பட்ட போது, தனியார் துறை ஊழியர்கள் அதனை எதிர்த்தனர். கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் ஊழியர்கள் நடத்திய அவ்வாறானதோர் ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்து ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார்.

அக் காலத்தில், மண்ணெண்ணெய் விலையைக் குறைக்குமாறு கோரி, சிலாபத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது, மஹிந்தவின் அரசாங்கம் அதனையும் கொடூரமாக அடக்கியது. அதிலும் இளம் மீனவர் ஒருவர் கொல்லப்பட்டார். வெலிவேரியவில், ரத்துபஸ்வல பகுதி மக்கள் சுத்தமான தண்ணீர் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்த போது, மஹிந்தவின் அரசாங்கம் அதற்கு எதிராக இராணுவத்தை ஏவியது. அங்கு மூவர் கொல்லப்பட்டனர்.

அப்போதெல்லாம் அந்த அடக்கு முறைகளை நியாயப்படுத்திய அல்லது மௌனம் காத்த ஐ.ம.சு.கூ தலைவர்கள் தான், எச்.என்.டி.ஏ மாணவர்கள் தாக்கப்பட்ட போது, அதற்கெதிராக குரல் எழுப்புகிறார்கள். மாணவர்கள் மீதான அடக்கு முறையைப் பற்றி அவர்கள் கூறுவது உண்மையாயினும், தமது பதவிக் காலத்தில் அவ்வாறான எதுவுமே நடைபெறாததைப் போல் பேசுவது வெட்கமின்மையல்லாது வேறென்ன?

நிபந்தனையின்றி மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி, அவர்களது பாடநெறியைப் பட்டப் பாடநெறியாக மாற்ற வேண்டும் என மஹிந்த குழுவின் சார்பில், அலஹப்பெரும் அறிக்கையொன்றை வெளியிட்டார். அது ஏற்றுக் கொள்ளக்கூடியதே. ஆனால், அது முன்னர் பட்டப் பாடநெறியாகத் தான் இருந்தது. மஹிந்தவின் காலத்தில் கடந்த வருடம் ஏப்ரல் மாதமே அது டிப்ளோமா பாடநெறியாக மாற்றப்பட்டது. அதைப் பற்றி எதுவுமே தெரியாதவரைப் போல் மாணவர் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அக் காலத்தில் இருந்த மூத்த அமைச்சர் ஒருவர் அறிக்கையிடுவதாக இருந்தால் அதற்கு என்ன பெயர்?

அண்மையில், தற்போதைய அரசாங்கம் இஸ்ரேலுடனான தமது உறவை பலப்படுத்திக் கொள்ளும் சில முயற்சிகளில் ஈடுபட்டது. அப்போது மஹிந்தவும் அவரது ஆதரவாளர்களும் அதனை எதிர்த்துக் கருத்து வெளியிட்டிருந்தனர். இது இலங்கை வாழ் முஸ்லிம்களை புண்படுத்தும் செயலெனவும் அவர்கள் கூறினர். உண்மை தான். ஆனால், அவர்களும் இதனையே செய்துவிட்டுத் தான் இவ்வாறு கூறுகிறார்கள். தமது முதலாவது பதவிக் காலத்தில், தமது பிரதமராகவிருந்த ரத்னசிறி விக்கிரமநாயக்கவை மஹிந்த இஸ்ரேலுக்கு அனுப்பியிருந்தார். அதுவும் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதற்காகவே. இந்த விடயத்திலும் அவர்கள் இப்போது சொல்வது உண்மை தான். ஆனால், தமது பதவிக் காலத்தில் நடந்தவைப் பற்றி வெட்கப்படாமலேயே அந்த உண்மையை அவர்கள் கூறுகிறார்கள்.

தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் பாரிய அமைச்சரவை ஒன்று இருந்ததை விமர்சித்தனர். தாம் பதவிக்கு வந்தால் 25 அமைச்சர்களே இருப்பர் என வாக்குறுதியளித்தனர். ஆனால், தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் எத்தனை அமைச்சர்களாயினும் நியமித்துக் கொள்ளத் தற்போதைய தலைவர்கள் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் ஏற்பாடுகளைச் செய்து கொண்டனர்.

இதனை மஹிந்தவின் ஆதரவாளர்கள் விமர்சிக்கின்றனர். அவர்களது விமர்சனம் சரியானதே. தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டிய நெருக்கடி நிலைமை நாட்டில் இருந்தால் அதற்காக ஆளும் கட்சி இலஞ்சம் கொடுத்து எதிர்க்கட்சியின் ஆதரவைப் பெற வேண்டியதில்லை. ஆனால், இதனை விடப் பாரிய அமைச்சரவையொன்றை வைத்திருந்தவர்கள், இந்த உண்மையைக் கூறுவதில் கூச்சப்பட வேண்டுமே. அது தான் இல்லை.

இந்த விடயத்தில் இரு சாராருக்கும் வெட்கம் இல்லை என்றே கூற வேண்டும். ஏனெனில், மஹிந்தவின் பாரிய அமைச்சரவையை விமர்சித்த தற்போதைய தலைவர்களும் அதனையே செய்திருக்கிறார்கள். அவர்களுக்கும் அந்த விடயத்தில் வெட்கம் இல்லை.

தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் மாணவர்கள் தாக்கப்பட்ட போது அதனை எதிர்த்த ஐக்கிய தேசிய கட்சித் தலைவர்களால், தமது ஆட்சிக் காலத்தில் மாணவர்கள் தாக்கப்படுவதை தடுக்க முடியாமல் போய்விட்டது. மஹிந்தவின் காலத்தில் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க இஸ்ரேலுக்குச் செல்லும் போது, இதோ பலஸ்தீன நல்லுறவுச் சங்கத் தலைவரின் ஆட்சிக் காலத்திலும் இஸ்ரேலுடனான உறவு பலப்படுத்தப்படுகிறது என்று ஐ.தே.க தலைவர்கள் நையாண்டி செய்தனர். ஆனால், அவர்களும் வெட்கமில்லாமல் தாமும் இஸ்ரேலுடனான உறவைப் பலப்படுத்த முயற்சி செய்கின்றனர்.

அமைச்சர் அர்ஜுன ரணதுங்க துறைமுக அதிகார சபையின் தலைவராக, தமது மூத்த சகோதரரை நியமித்து இருக்கிறார். அதனை மஹிந்தவின் அதரவாளர்கள் விமர்சிக்கிறார்கள். சரி தான். ஆனால், இதனையே மஹிந்தவும் செய்தார். தமக்கு நம்பிக்கையானவர் என்பதனாலேயே தம் சகோதரரைத் துறைமுக அதிகார சபையின் தலைவராக நியமித்ததாக அமைச்சர் அர்ஜுன கூறுகிறார். கோட்டாபய ராஜபக்ஷவை பாதுகாப்புச் செயலாளராக நியமித்த போது, மஹிந்தவும் இவ்வாறே கூறினார். அதனை எதிர்த்தவர்கள் இன்று அர்ஜுனவை விமர்சிக்கவில்லை. இன்று அர்ஜுனவை விமர்சிப்பவர்கள், அன்று மஹிந்தவின் குடும்ப ஆட்சி நடைபெறும் போது அதற்கு மண்டியிட்டு கும்பிட்டுக் கொண்டு இருந்தனர்.

அரசியல் கைதிகள் விடயத்திலும் இரு கட்சிகளும் இதேபோல் தான் நடந்து கொள்கிறார்கள். இன்று, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் போது, மஹிந்தவின் ஆதரவாளர்கள் நாட்டின் பாதுகாப்புக்கும் மஹிந்தவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுவிட்டது எனக் கூக்குரலிடுகின்றனர். இந்த விடயத்தில் அவர்கள் வெட்கமில்லாமல் நடந்து கொண்டாலும் உண்மையைக் கூறவும் இல்லை.

தற்போது சிறையில் இருக்கும் புலிச் சந்தேக நபர்கள், மிகப் பயங்கர புலிகள் என்பதால் அவர்களைத் தமது காலத்தில் விடுதலை செய்யவில்லை என மஹிந்தவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அவ்வாறாயின் அவர்கள் பயங்கரமானவர்கள் என்பதற்காகவா, அவர்களில் பலருக்கு எதிராக குற்றச்சாட்டுகளாவது சுமத்தப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. பிரபாகரனுக்குப் பின்னர் புலிகள் அமைப்பின் தலைமையை ஏற்று ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முற்பட்ட கே.பி. எனப்படும் செல்வராசா பத்மநாதனே, மஹிந்தவின் தம்பியான முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு ஒரே நாளில் பூனைக் குட்டியாகிவிட்டார். மஹிந்தவைக் கொலை செய்ய வந்த தற்கொலைக் குண்டுதாரியும் மஹிந்தவின் காலத்தில் விடுதலை செய்யப்பட்டதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ அண்மையில் கூறினார்.

அவ்வாறிருக்கத் தான், மஹிந்தவின் ஆதரவாளர்கள் அதிலும் குறிப்பாகப் புலிகளுடன் சமஷ்டி ஆட்சி முறையொன்று தொடர்பாக இணக்கம் ஏற்படுத்திக் கொண்டவர்களும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கூச்சலிடுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X