2025 மே 16, வெள்ளிக்கிழமை

விளையாட தெரியாதவர்களிடம் சிக்கிய பந்து

Thipaan   / 2016 ஏப்ரல் 17 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மப்றூக்

தேசியப்பட்டியல்' என்கிற சொற்பதமானது, அண்மைக் காலமாக ஒரு கால்பந்தாக மாறியுள்ளது. பந்தினை, ஆளாளுக்கு உதைத்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர். கொஞ்ச நாட்களாக, மைதானத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மட்டுமே பந்தை விரட்டி, விரட்டி உதைத்துக் கொண்டிருந்தார்கள். பின்னர், மைதானத்தின் ஓரத்தில் நின்று விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் பந்தினை உதைத்துப் பார்க்கத் தொடங்கினார்கள். அதன் பிறகு, வீதியால் போய்க் கொண்டிருந்தவர்களும் மைதானத்துக்குள் அடாத்தாகப் புகுந்து, தங்கள் பங்குக்கு பந்தை உதைக்கலானார்கள்.

'தேசியப்பட்டியல்' என்று மேலே பொத்தாம் பொதுவாகக் குறிப்பிட்டிருந்தாலும், 'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி'க்குத்தான், இந்தப் பந்துக் கதை, மிகவும் பொருத்தமாக அமையும். கால்பந்து விளையாடுவது எப்படி என்கிற ஆகக்குறைந்த அறிவு இல்லாதவர்கள் கூட, இந்தப் பந்தினை உதைத்து விளையாடும் ஆவலுடன் களத்தில் குதித்திருக்கின்றார்கள் என்பதுதான், இந்தக் கதையிலுள்ள மிகப்பெரும் சோகமாகும். இன்னொருபுறம், பந்துகளைக் கட்டிப் பிடித்துக் கொள்ள நினைத்து, சில முன்னாள் வீரர்கள் ஆடும் நடனம், இந்தக் கதைக் களத்தில் நிகழும் நகைச்சுவையாகும்.

கதைச் சுருக்கம்

முஸ்லிம் காங்கிஸுக்கு இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் கிடைத்தன. அந்தப் பதவிகளுக்கு யார்யாரை நியமிப்பது என்கிற உடனடி முடிவுக்கு மு.கா. தலைவரால் வர முடியவில்லை. அதனால், டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் மற்றும் எம்.எச்.எம். சல்மான் ஆகியோரை, நம்பிக்கையின் அடிப்படையில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு தற்காலிகமாக நியமித்ததாக மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் கூறினார்.

இந்த நிலையில், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்களில் ஒருவரான டொக்டர் ஹபீஸ், மு.கா. தலைவரின் உத்தரவுக்கிணங்க, தனது பதவியை இராஜினாமாச் செய்தார். அதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எஸ். தௌபீக் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இதேவேளை, மற்றைய தற்காலிக நாடாளுமன்ற உறுப்பினரான சல்மான் எப்போது இராஜினாமாச் செய்வார்? அந்த வெற்றிடத்துக்கு யார் நியமிக்கப்படுவார்? என்கிற கேள்விகள் மு.கா.வின் அரசியல் அரங்கிலும், அதற்கு வெளியிலும் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன. இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் மு.காங்கிரஸுக்குள் மில்லியன் டொலர் பெறுமதியானவையாக உள்ளன.

பங்கீடு

இந்த நிலையில், சல்மானின் கைவசமுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை, தமக்கு வழங்குமாறு ஏராளமான பிரதேசங்கள் மற்றும் நபர்கள் சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கோரிக்கைகளில் பல நியாயமற்றவை. சில அபத்தமானவை. இன்னும் சில கோமாளித்தனமானைவயாகும்.

முஸ்லிம் காங்கிரஸுக்கு, இம்முறை தேர்தல் மூலம் 05 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்தனர். இவர்களில் மூவர் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்த மூவரில் இருவருக்கு பிரதியமைச்சர் பதவிகளும் கிடைத்துள்ளன.

இவ்வாறானதொரு நிலையில், மு.காங்கிரஸுக்குக் கிடைத்துள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினையும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவதென்பது, எந்த வகையிலும் நியாமான பங்கீடாக அமைய மாட்டாது. அப்படி வழங்கினால், அம்பாறை மாவட்டத்துக்குள் மு.காங்கிரஸ் முடங்கிப் போகும் நிலைவரமொன்று ஏற்படும். ஏனைய மாவட்டங்களில் மு.கா.வுக்குள்ள ஆதரவும் கைநழுவிச் செல்லும் அபாயமும் அந்தக் கட்சிக்கு ஏற்படும்.

மு.காங்கிரஸுக்குக் கிடைத்துள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை சுழற்சி முறையில் வழங்கவுள்ளதாக, அந்தக் கட்சியின் தலைவர் ஹக்கீம் கூறிவருகின்றார். அதன்படி பார்த்தால், ஒவ்வொரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையின் பதவிக் காலத்துக்கும் இருவரை அல்லது மூவரை நியமிப்பதன் மூலம், இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கும் நால்வரை அல்லது ஆறு பேரை நியமிக்க முடியும். இதை இன்னும் கூட அதிகப்படுத்தலாம். ஓர் ஆண்டுக்கு ஒருவர் எனும் அடிப்படையிலும், தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்புரிமையினைப் பங்கு வைக்க முடியும். அவ்வாறு பங்கிடப்பட்டால், ஆகக்குறைந்தது 10 பேரின் நாடாளுமன்ற உறுப்பினர் பசிக்குத் தீனி போடலாம்.

ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றினை இவ்வாறு மலினப்படுத்துவதென்பது, மிகவும் அபத்தமானதொரு செயற்பாடாகவே பார்க்கப்படும். கட்சிக்கு வெளியில் இந்தச் செயற்பாடு எள்ளிநகையாடப்படும். எனவே, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை சுழற்சி முறையில் வழங்குவதென்றாலும், ஒரு பிரதிநிதித்துவத்துக்கு இருவர் என்று, நான்கு பேருக்குள் அதை மட்டுப்படுத்தி விட வேண்டும்.

தெரிவு வரிசை

சல்மானிடமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினைப் பெற்று, அதை யாருக்கு அல்லது எந்தப் பிரதேசத்துக்கு மு.கா. தலைவர் வழங்குவார் என்கிற கேள்விகள் ஒருபுறமிருக்க, அதனை எங்கு வழங்குவது பொருத்தமாக அமையும் என்கிற அபிப்பிராயங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தற்போது கையிலிருக்கும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை முதலில் வன்னி மாவட்டத்துக்கு வழங்குவதுதான் சாதுரியமான முடிவாக அமையும் என்பது பெரும்பான்மைக் கருத்தாக உள்ளது.

மு.காங்கிரஸுக்கு எதிராக நேரடி அரசியல் செய்யும் முஸ்லிம் அரசியல்வாதிகளில், ரிஷாட் பதியுதீன் முக்கியமானவர். மு.காங்கிரஸின் இருதயமான அம்பாறை மாவட்டத்தில், கடந்த பொதுத் தேர்தலின்போது, ரிஷாட் பதியுதீன், தனது கட்சியின் மயில் சின்னத்திலேயே வேட்பாளர்களை இறக்கி விட்டிருந்தார். இன்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை அம்பாறை மாவட்டத்தில் வென்றெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை, ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சுமார் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் இழந்தது.

இதனையடுத்து, ரிஷாட் இன்னும் அதிகமாகவே அம்பாறை மாவட்டத்தைக் குறிவைத்து இயங்கி வருகின்றார். அம்பாறை மாவட்டத்துக்கு மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் வருகின்ற நாட்களில் அல்லது அதற்கு அடுத்த நாட்களில், அம்பாறை நோக்கி தனது பரிவாரங்களுடன் ரிஷாட் படையெடுத்து வருகின்றார். அமைச்சர் ரிஷாட்டின் வன்னி மாவட்டத்தில், அவருக்கு எதிராக அரசியல் செய்வதற்கு அங்கு பெரிதாக யாருமில்லை. குறிப்பாக, முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இல்லை. ஆனால், கடந்த காலங்களில் மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வன்னியில் இருந்தனர்.

இதனால்தான் மு.காங்கிரஸின் அடித்தளமான அம்பாறை மாவட்டத்துக்குள் வந்து, மு.காங்கிரஸுக்கு எதிரான அரசியலை அமைச்சர் ரிஷாட் செய்து கொண்டிருக்கின்றார். வன்னியில் ரிஷாட் பதியுதீனுக்கு அரசியல் ரீதியான குடைச்சல்களைக் கொடுப்பதற்கு மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் இருப்பாராயின், வன்னிக்குள்ளேயே ரிஷாட் பதியுதீனை முடக்கி விட முடியும் என்கின்றார் முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர் ஒருவர்.

நமது தளங்களை நோக்கி எதிராளி படையெடுப்பதைத் தடுக்க வேண்டுமாயின், எதிராளியை தற்காப்பு நடவடிக்கைக்குள் முடக்க வேண்டும். அதற்கு, எதிராளியின் தளத்தில்; தொடர்சியான தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டும். இது யுத்த தந்திரம். அரசியல் சமருக்கும் இந்த உபாயம் பலிக்கும் என்பதும் உண்மைதான்.

அட்டாளைச்சேனை 

'தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவம் வழங்குவேன்' என்று, மு.கா. தலைவர் வாக்குறுதியளித்த பிரதேசங்களில் அட்டாளைச்சேனை பிரதானமானது. தான், வாக்குறுதியளித்தமைக்கு இணங்க, அட்டாளைச்சேனைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவேன் என்று, மு.காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மிக அண்மையில் கூட, ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார்.

அட்டாளைச்சேனை, அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரதேசமாகும். அம்பாறை மாவட்டத்தில் ஏற்கனவே மு.காங்கிரஸ் சார்பில் 03 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என்றும், இந்த நிலையில், மு.கா.வுக்குக் கிடைத்திருக்கும் தேசியப்பட்டியல் நியமனத்தினையும் அம்பாறை மாவட்டத்துக்கு வழங்கினால், அம்பாறை மாவட்டத்துக்குள் மு.காங்கிரஸ் முடங்கி விடும் நிலை ஏற்படும் என்றும் மேலே குறிப்பிட்டுள்ளோம்.

ஆக, அட்டாளைச்சேனை விவகாரத்தில் மெல்லவும் முடியாத, விழுங்கவும் முடியாத ஒரு நிலைவரம், மு.கா. தலைவருக்கு உள்ளது. இதனை மு.கா. தலைவர் ஹக்கீம் எவ்வாறு கையாளுவார் என்கிற கேள்விகளும், எதிர்பார்ப்புகளும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றன. தேசியப்பட்டியல் நியமனங்கள், சுழற்சி முறையில் வழங்கப்படும் என்று ஹக்கீம் அறிவித்துள்ளமையின் அடிப்படையில், இரண்டாவது காலப்பகுதியின்போது அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் அதிகமாக உள்ளன.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியானது, அட்டாளைச்சேனைக்கு சுழற்றி முறையின் அடிப்படையில் சற்றுப் பிந்திக் கிடைப்பதால், அந்தப் பிரதேசம் நஷ்டமடைந்து விடப் போவதில்லை. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவியானது தற்போது அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நசீர் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் மு.காங்கிரஸ்காரர். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவியின் மூலம் இவர் தனது பிரதேசத்துக்கும் முழு மாகாணத்துக்கும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு இந்த வருடம் 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தொகையில் கால்வாசியினையாவது அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த முடியும். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வருடமொன்றுக்கு ஒன்றரைக் கோடி ரூபாயினை மட்டுமே அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகப் பெற்றுக் கொள்கிறார்.

விதி விலக்கு

புதிய அரசியலமைப்பு ஒன்றைத் தயாரிப்பதற்கான முன்னேற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. முழு நாடாளுமன்றமும் அரசியலமைப்புப் பேரவையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசியலமைப்புப் பேரவைக்கான உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் முஸ்லிம்கள் சார்பில் பேரவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், மு.காங்கிரஸ் சார்பாக, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிக்கும் போது, அரசியலமைப்பு மற்றும் சட்டத்துறையில் நிபுணத்துவம் கொண்ட ஒருவரை நியமிப்பது சாலச் சிறந்ததொரு நடவடிக்கையாக அமையும். புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை முஸ்லிம் சமூகம் சார்பாக முன்வைப்பதற்கு, இவ்வாறான நபர்களின் தேவை நாடாளுமன்றத்தில் அவசியமாக உள்ளது. இவ்வாறான ஒருவர் தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது மு.கா. தலைவருக்கும் பெரும் உதவியாகவும் அமையும்.

எனவே, மு.காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை பகிர்ந்தளிக்கும் போது, ஊர் வாதம் மற்றும் தனிநபர் ஆசைகளை அந்தக் கட்சி புறம் தள்ள வேண்டும். தேசிய அரசியலின் தற்போதைய நிலைவரத்துக்கு ஏற்ற வகையில், அந்தக் கட்சியின் தேசியப்பட்டியல் நியமனம் மேற்கொள்ளப்படுதல் வேண்டும் என்பது சமூகம் சார்ந்த கோரிக்கையாக இருக்கிறது. ஆகக்குறைந்தது அந்தக் கட்சியினை வளர்ப்பதற்காகவேனும் தேசியப்பட்டியல் நியமனம் பயன்படுதல் வேண்டும் என்பது கட்சியினை நேசிப்போரின் அவாவாக உள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .