2025 நவம்பர் 05, புதன்கிழமை

ஷாபியாவின் தங்கப் பதக்கங்களும் ஆடை சர்ச்சையும்

R.Tharaniya   / 2025 நவம்பர் 05 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஐயூப்

இந்தியாவில் ஜார்காந்த மாநிலத்தின் தலைநகரான ரான்சியில் நடைபெற்ற தெற்காசியத் தடகள போட்டிகளில் கலந்துகொண்ட இலங்கை வீரர்கள் வீராங்கனைகள் தமது நாட்டுக்காக 16 தங்கப் பதக்கங்களையும் 14 வெள்ளிப் பதக்கங்களையும் 10 வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.

ஆனால், இலங்கையில் ஊடகங்கள் ஒரு வீராங்கனை மட்டுமே இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டதைப் போல, ஏனைய வீரர்களையும் வீராங்கனைகளையும் மறந்து அந்த ஒரு வீராங்கனையை மட்டுமே புகழ்ந்து பாராட்டுவதைக் காணக்கூடியதாக இருந்தது.

கண்டியைச் சேர்ந்த கண்டி விகார மகாதேவி மகா வித்தியாலத்தின் மாணவியான ஷாபியா யாமிக் என்ற அந்த வீராங்கனையே இம்முறை தெற்காசியத் தடகள போட்டிகளில் இலங்கைக்காக அதிக பதக்கங்களை வென்றார் என்பது உண்மையாகும்.

அவர் தாமாக 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களையும் அஞ்சல் ஓட்டப் போட்டியொன்றில் கூட்டாக மற்றொரு தங்கப் பதக்கத்தையும் வென்றார்.

மற்றொரு வீராங்கனையான ஊவா மாகாணத்தைச் சேர்ந்த மதுஷானி ஹேரத்தும் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார். மிகவும் கஷ்டப் பிரதேசமான அம்பாறையைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனையான மெத்மி விஜேசூரிய ஒரு தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.

ஆனால், ஊடகங்கள் ஷாயியாவை மட்டும் போற்றிப் புகழ்வதற்குக் காரணம் திறமை மட்டுமல்ல. அவர் அசாதாரண திறமையாளர் என்பது உண்மையாயினும், முஸ்லிம் யுவதியான அவர் இஸ்லாமிய மரபுகளை உதறித்தள்ளிவிட்டு ஏனைய வீராங்கனைகளைப் போல, கட்டை காற்சட்டை அணிந்து தலையைத் திறந்து போட்டிகளில் கலந்து கொண்டமையே பலர் ஏனைய வீரர்களையும் வீராங்கனைகளையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு இவரைப் புகழ்வதற்குக் காரணமாகும்.

அவரது திறமையைப் பாவித்து இஸ்லாத்தை மட்டந்தட்டுவதே பலரது நோக்கமாகத் தெரிந்தது. இஸ்லாம் இது போன்ற திறமையானவர்களுக்கு வளர்வதற்கு இடமளிப்பதில்லை என்றும் விளையாட்டுத்துறையில் பெண்கள் மிளிர இடமளிப்பதில்லை என்றும் நிரூபிப்பதற்காக அவரை ஊடகங்களில் பயன்படுத்தினர்.

முஸ்லிம் பெண்கள்சமயத்தை உதறித் தள்ளிவிட்டு விளையாட்டுத்துறையில் முன்னேற முயற்சிக்க வேண்டும் என்றும் அவர்கள் உபதேசம் செய்கின்றனர்.
ஆரம்பத்தில் ஒரு நேர்காணலில் தமது முன்னேற்றத்துக்கு தமது பிரதேச பள்ளிவாசல் தடைளை ஏற்படுத்தியதாக ஷாயியா கூறியிருந்தார்.

இதனையடுத்து, அவர் அப்பிரச்சினையை எழுப்பாத போதிலும், பல ஊடகங்கள் ஏதோ அவர் எதிர்நோக்கிய ஒரே பிரச்சினை அதுவே என்பதைப் போல் அவரிடம் அதனை மென்மேலும் கேட்க முயன்றன.

ஆயினும், ஷாபியா கல்வி கற்கும் போது, விகார மகாதேவி மகளிர் பாடசாலையின் அதிபராக இருந்து தற்போது கொழும்பு தேவி பாலிகா மகளிர் பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றும் நிலக்ஷி ஹபுகொடவிடம் திவயின பத்திரிகையின் நிருபர் ஒருவர் இந்த பள்ளிவாசல் விடயத்தைப் பற்றிக் கேட்ட போது, அவர் தெரிவித்த கருத்து மிகவும் முக்கியமானதாகும்.

பள்ளிவாசல் தடைகளைப் போட்டதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், கல்வி மற்றும் விளையாட்டுத்துறையின் அதிகாரிகள் விதித்த தடைகளால் அம்மாணவி வெகுவாக பாதிக்கப்பட்டார் என்று அவர் தெரிவித்தார். பின்னர் அவர் அத்தடைகளை விவரித்தும் இருந்தார். ஆயினும், அதிகாரிகளின் அத்தடைகளை அம்பலப்படுத்த எவரும் முயன்றதாகத் தெரியவில்லை.

ஷாபியா ஒரு முஸ்லிம் பாடசாலையில் கல்வி கற்றிருந்தால், அவர் சர்வதேச ரீதியில் பெற்ற இந்த வெற்றிகளைப் பெற்றிருக்க மாட்டார் என்று சிலர் சமூக ஊடகங்களில் தெரிவித்து இருந்தனர். இது உண்மையே. ஏனெனில், அந்த முஸ்லிம் பாடசாலையின் ஆசிரியர்கள் இஸ்லாமிய கலாசார வரையறைகளை மீறி ஆடை அணிந்து ஓட ஷாபியாவுக்கு இடமளித்து இருக்க மாட்டார்கள்.

அதேவேளை, இஸ்லாமிய வரையறைகளை மீறாமல் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதைப் பற்றி அவர்கள் சிந்தித்து இருக்கவும் மாட்டார்கள். அதைப் பற்றிய அறிவு அவர்களிடம் இருந்திருக்கும் என்று நம்பவும் முடியாது. அவர்கள் அதைப் பற்றிச் சிந்தித்து இருந்தாலும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கி இருப்பார்கள்.

முஸ்லிம் மாணவிகளிடையே விளையாட்டுத் துறையில் அபார திறமைகள் உள்ளவர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக, கடந்த பல ஆண்டுகளாக (கடந்த வருடம் தவிர) கொழும்பில் சர்வதேச பாடசாலைகளிடையிலான வலைபந்தாட்டப் போட்டிகளில் ஒரு முஸ்லிம் மகளிர் பாடசாலை தொடர்ந்து இரண்டாம் இடத்தை பெற்று வந்துள்ளது. அவ்வாறாயின், முஸ்லிம் மகளிர் பாடசாலைகளில் திறமையான விளையாட்டு வீராங்கனைகளை வெளிக்கொணர்வது எவ்வாறு  என்பதைப் பற்றி அதிகாரிகள் சிந்திக்க வேண்டும்.

அவர்களது திறமைகள் இலைமறைக்காய் போல் எவரும் அறியாத நிலையில், அழிந்து போக வேண்டுமா?இந்த விடயத்தில் இஸ்லாமிய மரபுகளும் மேற்கத்திய கலாசாரமும் மோதுவதைக் காணலாம். இந்த நிலையில், முஸ்லிம் பெண்கள் ஒன்றில் குறிப்பாக, தடகள போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருக்க வேண்டும்.

அல்லது இப்போட்டிகளின்போது, அணியும் ஆடைகள் விடயத்தில் முஸ்லிம் பெண்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும். அதாவது தற்போது சர்வதேச போட்டிகளில் அணியப்படும் கட்டை காற்சட்டைக்குப் பதிலாக முஸ்லிம் பெண்களுக்கு அவர்களது உடலை மறைக்கக் கூடிய ஆடையை அணிய அனுமதி வழங்க வேண்டும்.

இது ஒன்றும் புதிய விடயமோ நகைப்புக்குரிய விடயமோ அல்ல. சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் முஸ்லிம் பெண்கள் தமது கலாசாரத்தை பேணியவாறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஒலிம்பிக் போட்டிகளிலும் அவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பஹ்ரைன் சேர்ந்த ருகையா அல் கஸாரா என்ற யுவதி 2004ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டில் அதன்ஸ் நகரிலும் 2008ஆம் ஆண்டு சீனாவில் பெய்ஜிங் நகரிலும் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் நீண்ட காற்சட்டையையும் முழுக் கையையும் மூடக்கூடிய ரீ-சேர்ட்டையும் ‘ஹிஜாப்’ என்னும் தலை மறைப்பையும் அணிந்து போட்டிகளில் கலந்து கொண்டார்.

2004ஆம் ஆண்டு அவர் 100 மீட்டர் போட்டியிலும் 2008ஆம் ஆண்டு 200 போட்டியிலுமே கலந்து கொண்டார். அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றே அவரது ஒலிம்பிக் ஆடையை வடிவமைத்து இருந்தது.

அதே விளையாட்டு வீராங்கனை 2006ஆம் ஆண்டு கத்தார் நாட்டில் தோஹா நகரில் நடைபெற்ற ஆசியத் தடகள போட்களில் 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார். அவர் மேலும் பல சர்வதேச போட்டிகளில் இந்த ஆடையுடன் கலந்து கொண்டுள்ளார். எனவே, சர்வதேச போட்டிகளில் கட்டை காற்சட்டையும் கையில்லா கட்டை மேலாடையும் கட்டாய அங்கங்கள் அல்ல.

பாகிஸ்தானைச் சேர்ந்த நஸீம் ஹமீத் என்னும் பெண் 2010ஆம் ஆண்டு வங்காளதேசத்தில் டாக்கா தலைநகரில் நடைபெற்ற 11ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார். அவரும் உடலோடு கால்களையும் கைகளையும் மறைக்கும் வகையிலான ஆடையை அணிந்தே போட்டியில் கலந்து
கொண்டார். ஆயினும், அவர் தலையை மறைத்திருக்கவில்லை.

இலங்கையிலும் தேசமான்ய விருதைப் பெற்ற பாதூம் இஸ்ஸதீன் என்ற ஸ்குவொஷ் விளையாட்டு வீராங்கனை 2019, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் இஸ்லாமிய கலாசாரத்தின் படி, ஆடையணிந்து விளையாடி இலங்கையின் சம்பியன் கின்னத்தை வென்றார். 

அவர் 2016ஆம் ஆண்டு இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தின் தலைநகரான குவஹாத்தியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் 
2019ஆம் ஆண்டு நேபாளத்தில் நடைபெற்ற பொட்டிகளிலும் ஸ்குவொஷ் விளையாடி வெண்கலப் பதக்கத்தை வென்றார். அப்போதும் அவர் அதே ஆடையையே அணிந்திருந்தார்.

ஓட்டப் போட்டிகளின்போது, இந்த ஆடை விளையாட்டு வீரர்களின் வேகத்தைப் பாதிக்கலாம் என்றும் கூற முடியாது. அவ்வாறாயின் கிரிக்கெட் விளையாட்டின் போது நீண்ட காற்சட்டை வேகத்தைப் பாதிக்காதா? என்ற கேள்வி எழுகிறது.

கிரிகெட்டின்போது, ஒருவர் விக்கெட்டுகளிடையே ஓடும்போது, 
ஒரு செக்கனில் பத்தில் ஒரு பகுதி நேர தாமதம் ஒருவரை ஆட்டமிழக்கச் செய்து விடலாம். அந்த ஒரு சம்பவத்தினால் அவரது நாடு தோல்வியடையலாம்.

விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களின் ஆடையைப் பார்கிலும் பெண்களின் ஆடை உடலைக் கூடுதலாக வெளிக்காட்டும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒருவித பாலியல் சுரண்டல் என்பது 2021ஆம் ஆண்டு நோர்வேயில் இடம்பெற்ற ஒரு சம்பவம் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

அவ்வாண்டு நோர்வே நாட்டுக் கடற்கரை கைப்பாந்தாட்ட (Beach volleyball) அணிக்கும்ஸ்பானிய அணிக்கும் இடையிலான போட்டி பல்கேரியாவில் நடைபெற்றது. நோர்வே நாட்டு அணி போட்டிக்குரிய பிக்கினி உடையை அணியாது காற்சட்டையை அணிந்து விளையாடியது. அதற்காக ஐரோப்பிய கைப்பந்தாட்ட சங்கம் அவ்வணிக்கு1,500 யூரோ அபராதம் விதித்தது. 

பின்னர் எழுந்த எதிர்ப்பினால் அரசாங்சம் காற்சட்டையுடனான ஆடையை ஏற்றுக் கொண்டது.பெண்களுக்கு மட்டும் பிக்கினி ஆடையை விதிப்பதன் மூலம் அமைப்பாளர்கள் இலவசமாகப் பெண்களின் உடலை ரசிக்க வாய்ப்பை பெற்றுக்கொள்கிறார்கள் என்றும் அது பாலியல் சுரண்டல் என்றும் நோர்வே அணி பின்னர் குற்றஞ்சாட்டியிருந்தது.

பிரான்ஸ் கடந்த வருடம் அந்நாட்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் தலையை மறைக்கும் ஹிஜாபுக்கு தடை விதித்தபோது, சர்வதேச மன்னிப்புச் 
சங்கம் அதனை இனவாதம் என்றும் மனித உரிமை மீறல் என்றும் வேற்றுமை காட்டுதல் என்றும் விமர்சித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X