Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஞாலசீர்த்தி மீநிலங்கோ
காலம் யாருக்காகவும் எதற்காகவும் நிற்பதில்லை. அது எம்மைக் கடந்து போய்க்கொண்டே இருக்கிறது. போகையிற் சில வலிய செய்திகளைச் சொல்லிச் செல்கிறது. அவை மனிதகுலத்தின் எதிர்காலத் திசைவழிக்கானவை. கடந்து முடியும்; இவ்வாண்டும் அவ்வாறே. கடந்து ஒழியும் ஆண்டின் கடைசி நாளில், ஆண்டு தந்து செல்லும் செய்திகளை மீட்டுப் பார்ப்பது பயனுள்ளது.
குறிப்பாக, ஊடகங்களின் கவனத்துக்கு வராத போதும் மக்கள் இன்னமும் அதிகாரத்தை எதிர்த்து நிற்கிறார்கள். உலகின் எல்லா மூலைகளிலும் உள்ள, அன்றாட உயிர்வாழ்வுக்காகப் போராடும் சாதாரணமான மக்கள் இவ்வாண்டும் விடாது போராடினார்கள். அவர்களின் போராட்டங்களும் அவை பெற்ற வெற்றிகளும் தந்த பாடங்களும் பெறுமதியானவை.
கடந்தாண்டு நடந்த மக்கள் போராட்டங்களில் அதிமுக்கியமானவையும் ஒவ்வொன்றும் நிகழ்ந்த நாட்டைத் தாண்டி நாடு அமைந்த கண்டத்திலும் சில சமயம் அப்பாலும் மாற்றத்துக்கும் போராட்டத்துக்கும் வழிவகுக்கக்கூடிய ஐந்து போராட்டங்களையும் அவற்றின் தாக்கங்களையும் கொள்கையுருவாக்கத்தில் அவை முக்கியம் பெறுங் காரணங்களையும் நோக்குவோம்.
முதலாவதாகத், தண்ணீரின்; தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டங்கள் உலகளாவிய வெற்றி கண்ட ஆண்டாகக் கடந்த ஆண்டைக் கொள்ளலாம். உலகின் 37 நாடுகளின் நகராட்சிகள் தண்ணீரை மீண்டும் சமூகவுடமையாக்கி அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததால், தண்ணீர் அனைவரைக்கும் கிடைக்கக் கூடிய பண்டமாக மீண்டதுடன் அது தனியார்மயத்துக்கெதிரான பாரிய வெற்றியுமானது.
இதனால் உலகின் 100 மில்லியன் மக்களுக்குத் தண்ணீர் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தனியார் கம்பெனிகளுடன் செய்த உடன்படிக்கைகளை விலக்கியதன் மூலம், இந்தோனியாவின் ஜகார்த்தா நகரம் அங்கு வாழும் 10 மில்லியன் மக்களின் மனித உரிமையை உறுதிப்படுத்தியது. இவ்வாறு தண்ணீரின் தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டங்கள் வளர்ச்சியடைந்த நாடுகள் பலவற்றில் வென்றமை உலகுக்குப் புதிய வழியைக் காட்டுகிறது.
இரண்டாவதாக, நெல்சன் மண்டேலாவின் வானவில் தேசமெனப்படும் தென்னாபிரிக்காவில் கல்விக் கட்டண உயர்வை எதிர்த்து ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் வீதியில் இறங்கி விடாது போராடினர். 1976இல் நிகழ்ந்த சொவெட்டோ எழுச்சிக்குப் பின் இவ்வளவு தொகையான மாணவர்கள் நாடு முழுதும் வீதியில் இறங்கிப் போராடியது இதுவே முதல் முறை. இம் மாணவர் போராட்டத்தின் சிறப்பு யாதெனின் அதைத் தலைமையேற்று வழிநடத்திய பெரும்பாலோர் பெண்கள் என்பதாகும். பெண்களின் பிரச்சனைகள் பின்தள்ளப்படும் ஒரு சமூகத்திற் பெண்கள் தலைமை தாங்குவதும் விடாது போராடுவதும் முக்கியமானது.
போராட்ட இறுதியில் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சூமா கட்டண உயர்வை மீளப்பெற்றார். இது தென்னாபிரிக்காவின் நிகழ் நிலைகளைக் கோடிட்டுக் காட்டப் போதியது. 1994இல் மண்டேலாவின் விடுதலையுடனும்; நாட்டின்; ஜனநாயமயமாதலுடனும் இணைப்புற்ற நவதாரளவாதத்தைத் தென்னாபிரிக்கா முழுமையாக உள்வாங்கியதன் தீய விளைவுகளை மக்கள் தொடர்ந்து அனுபவிக்கிறார்கள்.
உலக ஊடகங்கள் கவனமாக இருட்டடிக்கும் நிகழ்வுகள் தென்னாபிரிக்காவில் தொடர்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளிற் சராசரியாக நாளொன்றுக்கு, 2.9 சதவீதமான அரச எதிர்ப்புக் கூட்டங்களோ, ஆர்ப்பாட்டங்களோ நடந்துள்ளன. அவை தன்னெழுச்சியான ஆர்ப்பாட்டங்களாகவும் எதிர்ப்பு ஊர்வலங்களாகவும் தொடர்கின்றன. அரசு மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும் என்று கோரியே இவை முன்னெடுக்கப்படுகின்றன.
ஊடகவியலாளர்கள் அவற்றைப் பொப்கோன் எழுச்சிகள் எனக் குறிப்பர்;. சரியான வழிநடத்தலின்றி, மக்கள் தமது அடிப்படைப் பிரச்சனைகளை முன்வைத்துத் தொடராக எழுந்து அடங்கும் போராட்டங்களாக அவை உள்ளன. அவற்றுக்குத் தலைமையேற்கப் பொருத்தமான தலைவர்களோ தொழிற் சங்கங்களோ அரசியல் அமைப்புக்களோ இல்லாமை போகப், போராட்டத் தலைமையேற்கும் பாங்கில் அரசசார்பற்ற நிறுவனங்கள் அவற்றைக் மழுங்கடிக்கின்றமை கவனிப்புக்குரியது. இப் பின்னணியில் இம் மாணவர் போராட்டம் தொகை அளவிலும் அதிற் பெண்களின் தலைமைதாங்கியதிலும் வெற்றி கண்டதிலும் தென்னாபிரிக்க மக்களுக்குப் புதிய நம்பிக்கையை ஊட்டுகின்றன.
மூன்றாவதாக, நைஜீரிய விவசாயிகள் நால்வர், உலகின் இராட்சத எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான ஷெல் நிறுவனத்துக்கெதிராக வழக்குத் தொடுத்து விடாது போராடி வென்றுள்ளனர். நெதர்லாந்து நிறுவனமான ஷெல் மீது நெதர்லாந்து நீதிமன்றில் பெற்ற வெற்றி முக்கியமானது. ஷெல் நெடுங்காலமாக நைஜீரியாவில் எண்ணெய் எடுத்து வருகிறது. அதன் விளைவாகப் பல கிராமங்கள் முழுதாகப் பாதிக்கப்பட்டன.
அவற்றின் குடிநீரில் மாசு கலந்தது. நிலம் பயிர்ச்செய்கைக்குப் பயனிழந்தது. சுற்றுச்சூழல் வாழப் பொருத்தமற்றதாயிற்று. இந் நிலையில் ஒரு பல்தேசியக் கம்பெனிக்கெதிராகச் சாதாரண விவசாயிகள் வழக்காடி வென்றிருக்கிறார்கள். இதுவே நெதர்லாந்து கம்பெனியொன்றுக்கு எதிராக நடந்த சுற்றுச்சூழல் மாசடைதல் வழக்காகும். இவ் வெற்றி ஒரு வலிய செய்தியைச் சொல்கிறது.
நான்காவதாக, இவ்வாண்டில் ஊடகங்கள் புறக்கணித்து மறைத்த ஒரு போராட்டம் எமக்கு அருகாமையில் நடந்தது. இந்தியாவின் கேரளாவில் உள்ள மூணார் பகுதியில் 6,000 பெண் தேயிலைத் தொழிலாளர்கள் ஊதிய மறுப்புக்கும் குறைந்த சம்பளத்துக்கும் எதிராகப் போராடிப் பெற்ற வெற்றி முக்கியமானது.
இந்தியாவின் மிகப் பெரிய பல்தேசியக் கம்பெனிகளில் ஒன்றான டாட்டா குழுமத்தினருக்குரிய தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் பெண்கள், தங்கள் உரிமைகட்காகப் போராடி அடிப்படைச் சம்பள உயர்வையும் உறுதியளித்த ஊக்க ஊதியத்தையும்; வென்றிருக்கிறார்கள். மூணார் பிரதேசம் சுற்றுப் பயணிகள் அதிகம் வருகின்ற பகுதியாகும். இப் பெண்கள் தொடர்ந்து வீதிகளை மறித்து மேற்கொண்ட போராட்டம் இப் பகுதியின் வர்த்தக நடவடிக்கைகளை முடக்கியதோடு சுற்றுலாத் துறைக்கும் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியது.
கடந்தாண்டின் நிகழ்வுகளில் இப் போராட்டம் முக்கியம் பெறச் சில முக்கிய காரணங்கள் உள்ளன. போராட்டத்திற் பங்குபற்றிய பெண்களை ஒப்பிடின், அவர்கள் கல்வியறிவிற் குறைந்த, இவ்வாறான போராட்டங்களில் அனுபவமற்ற சாதாரண உழைக்கும் பெண்கள். அவர்கள் தமக்குள் ஒன்றிணைந்து ஆண்கள் தலைமைதாங்கும் தொழிற்சங்கங்களை மீறி இப் போராட்டத்தை நடாத்தினார்கள். இப் போராட்டத்தை தொழிற்சங்கத் தலைமைகள் தம்வசமாக்க முனைந்த போது அதையும் எதிர்த்துப் போராடியிருக்கிறார்கள்.
தொழிற்சங்கங்கள் தோட்ட நிர்வாகத்துடன் இணங்கிப் போவதாகக் குற்றஞ்சாட்டி அவர்களைப் புறந்தள்ளி, அத் தோட்டத்திற் பணியாற்றும் பெண்களனைவரையும் ஒன்றுதிரட்டி ஆண்களை ஒதுக்கிப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்தியாவின் தலையாய பல்தேசியக் கம்பெனிகளில் ஒன்றுக்கெதிராக தேயிலைக் கொழுந்து பறிக்கும் பெண்களின் போராட்ட வெற்றி மெச்சத்தக்கது. ஐந்தாவதாகவும் நிறைவாகவும் கவனிப்புக்குரியது ஸ்பெயின்.
ஜரோப்பாவெங்கும் உக்கிரமாயுள்ள பொருளாதார நெருக்கடி பல நாடுகளில் புதிய மாதிரியுருக்கள் தோன்ற வழிவகுத்தது. இப் பொருளாதார நெருக்கடியால் மிகப் பாதிக்கப்பட்ட ஸ்பெயினின் இரு பிரதான நகரங்களான பார்சிலோனாவிலும் தலைநகர் மெட்ரிட்டிலும் மாநகராட்சி அதிகாரத்தை இவ் வருட முதலில் அரசியற் கட்சி சாராத, மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும் அரசியற் செயற்பாட்டாளர்கள் இணைந்து கைப்பற்றியமை பாரம்பரிய அரசியற் கட்சிகட்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
கடந்த வாரம், ஸ்பெயினின் நாடாளுமன்றத் தேர்தலில் இச் சமூக இயக்கங்களின் கூட்டமைப்பு 20 சதவீத ஆசனங்களைப் பெற்றதால், இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளில் எதுவும் ஆட்சியமைக்கவியலாதுள்ளது. இது பாரம்பரியக் கட்சிகளுக்கு அப்பால் மக்கள் மாற்று அரசியலைத் தேடுவதைக் குறிக்கிறதுடன் மேற்குலகப்; நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு நெருக்கடியையும் விளைக்கிறது.
இவ்வைந்து போராட்டங்களும் பெற்ற வெற்றிகட்கு மேலாக அவை கோட்பாட்டு முறையிலும் கொள்கைவகுப்பு முறையிலும்; விளைத்துள்ள தாக்கம் பெரிது. ஒவ்வொரு போராட்டமும் வௌ;வேறு வகைகளில் வௌ;வேறு அளவுகளில் அதிகாரத்தின் மீது போர் தொடுத்து, அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது. அனைத்தினும் மேலாகத், தேச அரசுகள் தம் முக்கியத்தை இழந்து பல்தேசியக் கம்பெனிகள் உலகை ஆளுகிற சூழலிற் பல்தேசியக் கம்பெனிகளை நெருக்கடிக்குள்ளாக்கித் தேச அரசுகளின் தேவையை மீள வலியுறுத்துகின்றன.
அதேவேளை, மக்கள் போராட்டங்களின் ஊடு, இத் தேச அரசுகளின் மீள் வருகை அரசுகட்குப் புதிய சவால்களை முன்வைக்கிறது. பல்தேசியக் கம்பெனிகளுக்கு சேவகம் செய்யும் அரசாக இருந்த நிலைமை சவாலுக்குள்ளாகிறது. பாரம்பரிய நாடாளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குள்ளாவதும் மாற்று அரசியலை மக்கள் விரும்புவதும் தேச அரசுகளின் தன்மையை புதிய திசையில் நகர்த்த முயல்கின்றன. அவ் வகையில் மக்கள் நல அரசுகளின் உருவாக்கத்துக்கான அடிப்படைகளை இவ்வாண்டு வழங்கியுள்ளது.
இவ்வாண்டு சமூக இயக்கங்களின் ஊடும் மக்கள் திரளாக ஒன்றுகூடிப் போராடிப் பெற்ற வெற்றிகளின் மூலமும் கற்ற பாடங்கள் பயனுள்ளவையெனினும், அடுத்தாண்டு நிகழச் சாத்தியமானற்றையும் கருதுதல் தகும். ஒடுக்கப்பட்டோரை விட ஒடுக்குமுறையாளர்கள் விரைவாகப் பாடங்களைக் கற்கிறார்கள். எனவே, இவ்வாண்டின் சமூக இயக்கங்களின் முன்தள்ளுகை எதிர்கால ஆட்சி மாற்றத்துக்கான முக்கிய கருவியாகலாம். உலக அரசியல் அரங்கிற், போரிடும் கலை எக்காலத்தும் ஒரேவகையினதாய் இருந்ததில்லை.
அது காலந்தோறும் மாறி வந்துள்ளது. இரண்டாம் உலகைப் போரையடுத்து உருவான இரு-மைய உலகிற் போர் என்பது கெடுபிடியுத்தமாகக் கட்டமைக்கப்பட்டது. பெர்லின் சுவரின் வீழ்ச்சியின் பின் உருவான ஒரு-மைய உலகம், உலகப் பொலிஸ்காரன் என்ற வடிவத்தை எடுத்து அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதல்களை அடுத்துப்; 'பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம்' 'நாகரிகங்கட்கிடையிலான மோதல்' என்ற கருத்தமைவால் உருவாக்கப்பெற்றது.
உலகப் பொருளாதார நெருக்கடியுடன் தொடங்கிய ஒரு-மைய உலகின் தேய்வு பல்-மைய உலகின் தோற்றத்துக்கு வழிசெய்தது. இந் நிலையில், நேரடியான யுத்தம், எதிர்காலத்தில் ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் தக்கவைக்க நல்ல வழிமுறையல்ல என்பதை முடிவற்று நீளுகிற சிரிய யுத்தம் தெளிவாகக் காட்டியுள்ளது.
இந் நிலையில் சமூக இயக்கங்களும் மக்கள் திரள் போராட்டங்களும் ஆட்சி மாற்றங்களுக்கும் வேறுபல அதிகாரத்தின் தேவைகளுக்கும் இனி வரும் காலத்தில் பயன்படுத்தப்படலாம். மேற்குலகின் அதிகார வர்க்கத்துக்கு இது மூன்று வழிகளில் பயனுள்ளது. முதலாவதாக, இவற்றை முன்தள்ளுவதனூடு புதிய வழியில் மக்களின் பங்குபற்றுதலுடன் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவது நின்றுநிலைக்கக்கூடிய ஆட்சி மாற்றமான இருக்கும். அதேவேளை, மக்களின் அங்கிகாரத்தைப் பெற்றதாகவும் இருக்கும்.
இரண்டாவதாக, இவ் வழிமுறை யுத்தத்தைத் தவிர்ப்பதால் ஆட்சியாளர்கட்குப் படைகளை அனுப்பவோ, போரில் ஈடுபடவோ தேவை இல்லை. இது உள்நாட்டு அரசியில் எதிர்ப்பைக் குறைக்க உதவும். மூன்றாவதாக, இவ் வழிமுறையைக் கையாள்வததால், துனிசியாவிலும் யெமனிலும் எகிப்திலும் எதிர்பாராமல் ஏற்பட்ட எழுச்சிகள் போல மேலும் எழாமல் பார்க்க முடியும்.
கடந்து போகும் ஆண்டு புதிய ஆண்டுக்கான சவால்களை விட்டுச் செல்கிறது. காலம், பதில்களைக் காத்து நிற்பதில்லை. அது கடந்து போகும். அதைக் கடந்து போவதுதான் நம் முன்னுள்ள சவால்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 May 2025