Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Thipaan / 2016 நவம்பர் 15 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
முதல் முறையாக இரு முக்கியத் தலைவர்கள் தேர்தல் களத்தில் பிரசாரம்செய்யாமல் மூன்று தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது. அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நடைபெறும் இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியும் பிரசாரம்செய்யவில்லை; அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் பிரசாரம்மேற்கொள்ளவில்லை.
கடந்த காலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் இரு தலைவர்களில் ஒருவர் பிரசாரத்துக்கு செல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் இந்த முறைதான் இரு தலைவர்களுமே பிரசாரத்துக்கு செல்லாமல் இருக்கிறார்கள். இருவருமே உடல் நலக்குறைவால் தேர்தல் பிரசாரத்துக்கு செல்லவில்லை.
ஆனால், இரு கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.கவுக்கு அமைச்சர்கள் குழுவும்
தி.மு.கவுக்கு முன்னாள் அமைச்சர்கள் குழுவும் எதிரும் புதிருமாக நின்று தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டுகிறார்கள். ஆனால், பிரதமர் மோடி அறிவித்துள்ள 500ரூபாய், 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு இந்த இடைத் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக இரு திராவிடக் கட்சிகளும் இதுவரை அவரவர் ஆட்சியில் இருந்த போது பல்வேறு நடைமுறைகளைக் கடைப்பிடித்துள்ளார்கள்.
அதன் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு இடைத் தேர்தல் வெற்றி என்பது வாக்காளர்கள் இயல்பாக வாக்களிக்கும் தேர்தல் அல்ல என்பது தமிழகத்தில் ஏறக்குறைய நிலை நிறுத்தப்பட்டு விட்டது. இந்த முறை 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டதால், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு அரசியல் கட்சிகள் தவிக்கின்றன. இந்த சூழ்நிலையில் தி.மு.கவுக்கு அதன் பொருளாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் பிரசாரம்மேற்கொண்டிருக்கிறார்.
திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் முதல் பிரசாரத்தை தொடக்கிய அவர், இப்போது இரண்டாம் கட்டப் பிரசாரத்தை அரவக்குறிச்சி தொகுதியிலும் தஞ்சாவூர் தொகுதியிலும் மேற்கொண்டிருக்கிறார். இந்த தேர்தல் பிரசாரத்தில் அ.தி.முகவின் பிரசார வியூகம் என்பது இன்னும் வெளிப்படையாக தலை காட்டவில்லை. ஆனால், தி.மு.க சார்பில் இடைத் தேர்தல் பிரசாரத்தில் மிக முக்கியமான குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். “முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் இருப்பதைப் பயன்படுத்தித் தமிழக அரசாங்கத்தை மத்திய அரசாங்கம் மிரட்டி காரியம் சாதிக்கிறது” என்று பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
முன்பு முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்த்த பல திட்டங்களுக்கு இப்போது தமிழக அரசாங்கம் ஒப்புதல் அளித்திருப்பதால் இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் ஸ்டாலின். அப்படி முன்பு எதிர்த்து தற்போது ஆதரிக்கும் திட்டங்கள் வரிசையில் மின்சார சீர்திருத்தம் தொடர்பான ‘உதய் திட்டம்’, பொது விநியோகத் திட்ட சீர் திருத்தம் தொடர்பான ‘தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்’ ஆகியவை அடங்கும். இவை தவிர சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம், மத்திய அரசாங்கம் கொண்டு வந்துள்ள மருத்துவக் கல்லூரி பரீட்சைக்கான நீட் நுழைவுப் பரீட்சை, புதிய கல்விக் கொள்கை ஆகிய திட்டங்களும் அடங்கும். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்கு இதுவரை அ.தி.மு.க தரப்பிலிருந்தும் பதில் சொல்லவில்லை. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதீய ஜனதா கட்சி தரப்பிலிருந்தும் பதில் சொல்லவில்லை.
தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுக்கான போட்டி இப்படியிருக்க, தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் விஜயகாந்தும் இதுவரை பிரசாரத்துக்குச் செல்லவில்லை. தேர்தல் களத்தில் பிரசாரப் பீரங்கியாக வலம் வந்து கொண்டிருந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொது செயலாளர் வைகோவும் பிரசாரம்செய்யவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரும் பிரசாரம்செய்யவில்லை. இப்படி இடைத் தேர்தல் பிரசாரம்செய்யாத தலைவர்களின் பட்டியல் இந்த மூன்று இடைத் தேர்தலைப் பொறுத்தமட்டில் அதிகரித்து விட்டது. இதுவே தமிழகம் கண்டு கொண்டிருக்கும் வித்தியாசமான இடைத் தேர்தலாகக் கருதப்படுகிறது.
இந்தத் தேர்தலின் முடிவுகள் ஆச்சர்யப்படும் வகையில் இருக்குமா அல்லது வழக்கமான தேர்தல் முடிவாக இருக்குமா என்பதுதான் அனைவரின் கேள்வியாக இருக்கிறது. அ.தி.மு.க ஆட்சியிலிருந்தாலும் அது அதிகாரம் செலுத்தும் அளவுக்கு இல்லை. வழக்கமான பணிகள் நடைபெறுகிறதே தவிர ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு உள்ள தைரியத்துடன் அந்தக் கட்சியின் நிர்வாகிகள் தேர்தல் களத்தில் இல்லை. அதனால் அதிகாரிகள் மட்டத்தில்- போலீஸ் அதிகாரிகள் அளவில் இடைத் தேர்தலில் எப்போதும் ஆளுங்கட்சிக்கு இருக்கும் ஆதரவு இந்த முறை இருக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மூன்று இடைத் தேர்தல் தொகுதியிலும் தி.மு.க வேட்பாளர்களுக்கோ, அல்லது தி.மு.க.வுக்குத் தேர்தல் பணியாற்றுவோருக்கோ எவ்வித கெடுபிடியும் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் கொடுக்காத போதே இந்த மாற்றத்தை நன்கு உணர முடிகிறது. இந்தச் சூழ்நிலைகளால் ஆளும்கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சிக்கு உள்ள செல்வாக்குத் தேர்தல் பணிகளில் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறது அ.தி.மு.கழகம்.
அதே நேரத்தில் தி.மு.க தரப்பில் “ஆளுங்கட்சி செய்ய வேண்டிய பணிகளை எதிர்கட்சியாக நாங்கள்தான் செய்கிறோம்” என்று மக்களிடம் பிரசாரம்செய்து வருகிறார்கள். 89 சட்டமன்ற உறுப்பினர்கள் தி.மு.கவுக்கு இருப்பதும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் அரசாங்க அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் தி.மு.கவுக்கு ஆதரவைப் பெற்றுக் கொடுத்துள்ளது. தமிழகத்தில் நிலவும் அரசியல் தட்ப வெட்ப நிலையில் மிகவும் நிதானமாகவே செயல்படுவோம் என்று அரசாங்க அதிகாரிகள் முடிவு எடுத்திருப்பது போல்தான் இடைத் தேர்தல் பணிகளும் அரசாங்க பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த இடைத் தேர்தலைப் பொறுத்தமட்டில் இவையெல்லாம் தி.மு.கவுக்குச் சாதகமான அம்சங்கள் என்றாலும் ‘வாக்காளர்களுக்கு பண விநியோகம்’ என்ற அந்தக் காலகட்டத்தில் நிலைமை எப்படி மாறப் போகிறது என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மூன்று இடைத் தேர்தல்களில் வெற்றி என்பது அ.திமுகவிற்கு ஆறுதலாக இருக்கும். ‘மருத்துவமனையில் இருந்தாலும் அதி.மு.கவை வெல்ல முடியாது’ என்ற இமேஜ் அக்கட்சிக்கு கிடைக்கும். 2011, 2014, 2016 ஆகிய மூன்று தேர்தல்களில் அ.தி.மு.கவுக்குக் கிடைத்த மக்கள் செல்வாக்கைப் பார்த்து அ.தி.மு.கவின் உள் கட்சி விவகாரங்களில் அதிகம் தலையிட வேண்டாம்’ என்று ஒதுங்கியிருக்கும் பா.ஜ.க மேலும் தமிழக அரசியலில் இருந்து சற்று விலகியே நிற்கும். ‘தொடர் வெற்றி’ என்பதை அ.தி.மு.க தக்க வைத்துக் கொள்ளும். இடைத் தேர்தல் வெற்றியை வைத்துக் கொண்டு அடுத்த உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கும்.
ஆனால், தி.மு.கவுக்கு மூன்று இடைத் தேர்தல்களில் ஏதாவது ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாலும் புதிய சாதனையாக பேசப்படும். இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என்ற வழக்கமான எதிர்பார்ப்பு அடிபடும். அதை விட, ஸ்டாலின் தலைமைக்கு மக்கள் வாக்களிக்க விரும்புகிறார்கள் என்ற பிரசாரத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தொடங்குவார்கள். அதிமுகவிற்கு தி.மு.க.தான் மாற்று என்பது சென்ற சட்டமன்ற தேர்தலில் நிர்ணயிக்கப்பட்டது போல் இந்த இடைத் தேர்தலுக்குப் பிறகும் நிச்சயிக்கப்படும். மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாரதீய ஜனதா கட்சியும் ‘எதிர்கால கூட்டணிக்கு’ தி.மு.க. பயன்படும் என்ற எண்ணவோட்டத்துடன் தி.மு.கவுடன் நெருங்கிச் செல்வதற்கு வாய்ப்புகள் உருவாகும்.
ஆனால், இரு திராவிடக் கட்சிகளுக்கும் ‘மாற்று’ என்று உருவான அணிகள் இன்னும் ஒரு ‘மெகா அணியை’ உருவாக்கினால் மட்டுமே ‘மாற்றாக வர முடியும்’ என்ற எண்ணவோட்டத்துக்குச் செல்வார்கள். ஆகவே, இடைத் தேர்தல் வெற்றி அ.தி.மு.கவுக்கும், தி.மு.கவுக்கும் வெவ்வேறு அரசியல் பலன்களைக் கொடுக்கும் என்றாலும் தமிழக அரசியல் 1967 இல் தொடங்கிய அதே நீரோட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பது, புதிய மாற்றத்துக்கு தடைக்கல்லாக நிற்கும். தமிழகத்தில் இந்த இரு கட்சிகளையும் தவிர்த்து புதிய கட்சிகள் ஆட்சியைப் பிடிப்பது தொடர்ந்து எட்டாக்கனியாகவே இருக்கும் என்ற தோற்றத்தை உருவாக்கும். இடைத் தேர்தலின் முடிவுகள் தமிழகத்தில் உள்ள அரசை புரட்டிப் போடாது. எதிர்கட்சி வரிசையில் இருக்கும் தி.மு.கவுக்கு எதிர்பாராத திருப்பத்தை தந்து விடாது. ஆனால் மாற்று அரசியல் வேண்டும் என்ற தாகத்துக்கு தண்ணீர் கிடைப்பதற்கு இன்னும் பல வருடங்கள் பிடிக்கும் என்ற நிலை நிச்சயமாகும். மாற்றம் காண வேண்டி அணி மாறி அணி அமைத்தவர்கள் மீண்டும் அங்கும் இங்கும் சிதறிப் புதிய அணியா அல்லது மீண்டும் அ.தி.மு.க அல்லது தி.மு.க அணியில் சங்கமமா என்ற கேள்விக்கு பதில் தேடுவார்கள்!
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago