2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஐரோப்பாவில் தேவாலயங்களுக்குச் செல்லும் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை குறைகிறது

A.P.Mathan   / 2011 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(என்.கிருஷ்ணராஜா)

தேவாலயங்களுக்குச் செல்லும் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக ஐரோப்பிய நாடுகளில் வீழ்ச்சியடைந்து வருவது 16ஆவது பாப்பரசர் பெனடிக் எதிர்கொள்ளும் ஒரு பாரிய பிரச்சினையாகவுள்ளது.

இத்தாலி, பிரான்ஸ், அயர்லாந்து, போர்த்துக்கல், ஸ்பெயின்  என்பன கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாகவுள்ள ஐரோப்பிய நாடுகளாகும். பல நூற்றாண்டுகளாக உறுதியான கத்தோலிக்க நாடுகளாக இருந்த அயர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் தேவாலயங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை தீவிரமாக குறைந்து வருகின்றது. 

ஸ்பெயினில் 80 சதவீதமானவர்கள் தம்மை கத்தோலிக்கர்கள் என அடையாளப்படுத்தினும் இவர்களில் மூன்றிலிரண்டு பங்கினர் மிக அருமையாகவே தேவாலயத்திற்கு செல்கின்றனர். பலர் தேவாலயத்திற்கு செல்வதேயில்லை. குறைந்தபட்சம் ஞாயிற்றுக்கிழமை பூசைக்காவது செல்வோர் தற்போது அயர்லாந்தில் 50 சதவீதமாகவுள்ளனர். 20 வருடங்களுக்கு முன்னர் இங்கு 80 சதவீதமான கத்தோலிக்கர்கள் ஞாயிற்றுக்கிழமை பூசைக்கு சென்றனர்.

இத்தாலியில் 95 சதவீதமானோர்கள் தம்மை கத்தோலிக்கர்கள் என கூறிக்கொண்டாலும் 30 சதவீதமானோரே தேவாலயத்திற்கு செல்கின்றனர்.

பிரான்ஸ் தேவாலயங்களிலும் கத்தோலிக்கர்களின் வருகை பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. பெரிய புகழ்பெற்ற தேவாலயங்களுக்கு வருகை தருவோரில் விசுவாசிகளை விட சுற்றுலாப் பயணிகளே அதிகமாக காணப்படுகின்றனர்.

அமெரிக்காவில் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களே பெரும்பான்மையாக இருப்பினும் இங்கு கணிசமான கத்தோலிக்கர்களும் உள்ளனர். இங்கு 2008இல் மாத்திரம் 400,000 பேர் கத்தோலிக்க திருச்சபையை விட்டு விலகியுள்ளனர்.

கத்தோலிக்க திருச்சபையின் நற்பெயரை பாதித்த விடயங்கள் பல அடையாளம் காணப்பட்டுள்ளன. கத்தோலிக்க குருமார்களின் சிறுவர் துஷ்பிரயோகங்களும் இதனை மூடிமறைக்க வத்திக்கான்  மேற்கொண்டதாக கூறப்படும் முயற்சிகளும் இதற்கு பிரதான காரணமென கூறப்படுகிறது.

பெண் குருமார், கர்ப்பத்தடை, கருக்கலைப்பு ஆகிய பிரச்சினைகளில் வத்திக்கான் கடைப்பிடிக்கும் பழமைவாதக் கருத்துக்களும் மக்கள் தேவாலயங்களை புறக்கணிப்பதற்கு காரணங்களாக அமைகின்றன.

பிரேஸில், மெக்ஷிக்கோ போன்ற இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் பாலியல் தொடர்பான ஊழல்களால் திருச்சபை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆபிரிக்க, ஆசிய நாடுகளில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வத்திகானுக்கு ஆறுதல் தருவதாக உள்ளது. இப்போது ஆபிரிக்க ஆசிய நாடுகள் ஐரோப்பாவுக்கு கத்தோலிக்க குருமார்களை அனுப்புகின்றன. உலகில் 110 கோடி கத்தோலிக்கர்களும் 60 கோடி புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களும் 150 கோடி முஸ்லிம்களும் உள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X