2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கட்சி மாறினேன் என்பதற்காக மக்களின் வாக்குகளை துஷ்பிரயோகம் செய்யவில்லை: முஸம்மில்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 28 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'கட்சி மாறினேன் என்பதற்காக மக்களின் வாக்குகளை துஷ்பிரயோகம் செய்யவில்லை. மக்களின் வாக்குகளுக்கு ஒருபோதும் கலங்கம் ஏற்படுத்தவுமில்லை. ஐ.தே.க.வுக்குள் இருந்த பெருந்தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளேன். இந்த அரசாங்கமானது பெரும்பான்மையினரை மாத்திரமே நம்பி இயங்கும் கட்சியான இயங்குகிறது.

இவ்வாறிருக்க அதில் நான் ஒருபோதும் இணைந்துகொள்ள மாட்டேன். ஐ.தே.க. என் மீது நம்பிக்கை கொண்டுள்ளது. அதேபோல், நானும் கட்சி மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளேன். இதனால் கட்சி மாற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என ஐ.தே.வின் கொழும்பு மேயர் வேட்பாளர் முஸம்மில் கூறினார்.

தமிழ்மிரருக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே முஸம்மில் மேற்படி கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் மேயர் வேட்பாளர் முஸம்மில் - தமிழ்மிரருக்கு வழங்கிய செவ்வியினை முழுமையாக இங்கு தருகிறோம்.
கேள்வி :-  கொழும்பு மாநகரசபைக்கான ஐ.தே.க.வின் மேயர் வேட்பாளராக தன்னை நிறுத்துவதாக ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார் என்று ராம் தெரிவித்திருந்தார். அவருடனான போட்டியில் நீங்கள் எவ்வாறு வெற்றி கண்டீர்கள்?

பதில் :-
கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் பதவிக்கு போட்டியிட நான், ராம் உட்பட 6 பேர் விண்ணப்பித்திருந்தோம். இந்நிலையில், ஐ.தே.க.வின் வேட்புமனுக் குழு எங்கள் அறுவரையும் அழைத்து நேர்க்காணல் செய்தது. இந்த வேட்புமனுக் குழுவில் ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதித் தலைவர்களான கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச மற்றும் திஸ்ஸ அத்தநாயக்க, காமினி ஜயவிக்கிரம பெரேரா, ஜோசப் மைக்கேல் பெரேரா, ஜோன் அமரதுங்க, சுவாமிநாதன், கபீர் ஹாசிம், ரவி கருணாநாயக்கா, பியசீலி ரத்நாயக்கா உட்பட 12 பேர் உள்ளடங்கியிருந்தனர்.

அறுவரையும் நேர்காணல் செய்த வேட்புமனுக் குழு, இரகசிய வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. அதன்போது, மேற்படி 12பேரும் ஏகமனதாக என்னைத் தெரிவு செய்தார்கள். மேற்படி குழுவினர், நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் மிகவும் ஆளமாகச் சிந்தித்தே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்கள்.
கேள்வி    :- பல கட்சிகள் மாறிய வரலாறு கொண்ட நீங்கள் ஐ.தே.க.வுக்குள் தொடர்ந்தும் நிலைத்திருப்பீர்களா என்ற சந்தேகம் பலர் மத்தியிலும் காணப்படுகிறதே... இதற்கு நீங்கள் கொடுக்கப்போகும் பதில் என்ன?

பதில்  :-  நான் கட்சி மாறினேன். இல்லையென்று கூறவில்லை. இருப்பினும், குறிப்பிட்டவொரு கட்சி எனக்கு ஏதேனும் பொறுப்பினைக் கையளித்திருந்த வேளையில்  நான் அக்கட்சியிலிருந்து மாறவில்லை. 2000ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது, ஐ.தே.க.வுக்குள் நான் எந்தவொரு பதவியினையும் வகிக்கவில்லை.

அக்கட்சியின் தேசிய செயற்குழுவின் உறுப்பினராகக் கூட நான் இருக்கவில்லை. அதனால் மறைந்த அஷ்ரபின் அழைப்பின் பேரில் நான் தேசிய ஐக்கிய முன்னிணியில் இணைந்துகொண்டேன். சுமார் 30 ஆயிரம் வாக்குகளைப் பெற்று எம்.பி.யாகத் தெரிவு செய்யப்பட்டேன்.

அதன்பின்னர், நாங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து சிறிது காலம் செயற்பட்டோம். அக்கட்சியில், ரவூப் ஹக்கீமுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மீண்டும் ஐ.தே.க.வுடன் இணைந்துகொண்டேன். 2004ஆம் ஆண்டு மத்திய கொழும்பின் ஐ.தே.க பிரதிநிதியாகச் செயற்பட்டேன். அதன்போது மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரினேன்.

மூவர் மாத்திரமே போட்டியிட முடியும் என்று கூறி என்னை நிராகரித்தார். சரி, நான் தனியாகவேனும் தேர்தலில் போட்டியிட்டு அரசியலுக்கு வருவேன் என்று கூறி வெளியேறி, துவா என்ற கட்சியை உருவாக்கி அதன் மூலம் போட்டியிட்டு மாகாணசபை உறுப்பினரானேன்.

இருப்பினும் ஐ.தே.க.வின் மாகாணசபை உறுப்பினராகவே நான் செயற்பட்டு வந்தேன். அரசாங்கத்திடமிருந்தும் வேறு கட்சிகளிடமிருந்து பல அழைப்புக்கள் வந்த போதிலும் நான் தொடர்ந்தும் ஐ.தே.க.விலேயே இருந்தேன். அக்கட்சியிலிருந்து விலகி இருந்த காலங்களில் கூட அக்கட்சியின் தலைமைத்துவத்தையோ அல்லது கொள்கைகளையோ நான் ஒருபோதும் விமர்சித்தது கிடையாது.

அதேபோல, கட்சி மாறினேன் என்பதற்காக மக்களின் வாக்குகளை துஷ்பிரயோகம் செய்யவில்லை. மக்களின் வாக்குகளுக்கு ஒருபோதும் கலங்கம் ஏற்படுத்தவில்லை. ஆகவே, ஐ.தே.க.வுக்குள் இருந்த பெருந்தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளேன்.

இந்த அரசாங்கமானது பெரும்பான்மையினரை மாத்திரமே நம்பி இயங்கும் கட்சியான இயங்குகிறது. இவ்வாறிருக்க அதில் நான் ஒருபோதும் இணைந்துகொள்ள மாட்டேன். ஐ.தே.க. என் மீது நம்பிக்கை கொண்டுள்ளது. அதேபோல், நானும் கட்சி மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளேன். இதனால் கட்சி மாற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
கேள்வி   :-  ஐ.தே.க.சார்பில் மேயர் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற பௌசி, பின்னர் அரசாங்கத்துடன் இணைந்துகொண்டார் என்றும் அதே வழியினை நீங்களும் பின்பற்றவுள்ளீர்கள் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறதே?

பதில்   :-   அரசாங்கத்துடன் இணைய வேண்டிய அவசியம் எனக்கு ஒருபோதும் இல்லை. தவிர, அரசாங்கத்துடன் இணைந்துகொண்டவர்கள் தங்களது சொந்த நலன்களுக்காகவே அவர்களுடன் இணைந்துகொண்டுள்ளனர்.

அவரவர் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்காகவும், அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு பயந்தும், கடன்களைத் தீர்த்துக்கொள்வதற்கும், பணத்துக்காகவும் பொலிஸ் பிரச்சினைகளிலிருந்து தப்புவதற்கும் அதிகார ஆசைகளிலும் அவர்கள் அரசுடன் இணைந்துகொண்டுள்ளனர். இருப்பினும் எனக்கு இவ்வாறான தேவைகள் எதுவும் இல்லை. அரசாங்கம் என்னை அச்சுறுத்துவதற்கான அவசியமும் இல்லை.

இதேவேளை, ஒரு மேயராக மஹிந்த ராஜபக்ஷவிடம் சென்று நான் எந்தப் பதவியினைப் பெற்றுக்கொள்ள முடியும்? அவரால் எனக்கு எந்த அதிகாரத்தைத்தான் தந்துவிட முடியும். ஆகவே, அந்தப் பதவிகளுக்கோ, பணத்துக்கோ, பயமுறுத்தல்களுக்கோ நான் கட்சி மாறப்போவதில்லை. 
கேள்வி :- ஐ.தே.க.வின் வாக்குவங்கி கடந்த காலங்களில் பாரிய சரிவினை சந்தித்து வருகிறது. இவ்வாறானதொரு நிலையில், இந்தத் தேர்தலில் அக்கட்சி வெற்றியடையும் என்ற நம்பிக்கை உள்ளதா?

பதில்  :-   கொழும்பு மாநகர எல்லைக்குள் ஐ.தே.க.வுக்கான ஆதரவு இன்னமும் பலமாகவே இருக்கின்றது. கடந்த அனைத்துத் தேர்தல்களிலும், என்ன பிரச்சினை வந்தாலும் அரசாங்கம் எவ்வாறான அதிகாரங்களைப் பயன்படுத்தினாலும் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆகவே கொழும்பு மாநகரில் ஐ.தே.க.வுக்கு வாக்கு குறைந்தது கிடையாது. இனியும் குறையாது.

கேள்வி :- உட்கட்சி பூசல்களினால் மக்கள் ஐ.தே.க. மீது நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். இதனை எப்படி சமாளிக்கப்போகிறீர்கள்?

பதில்  :-  ஐ.தே.க.வுக்குள் எவ்வித குழப்பமும் கிடையாது. கட்சிக்குள் உள்ளவர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. அது மறுப்பதற்கில்லை. ஜனநாயக கட்சிகளுக்குள் இவ்வாறான கருத்து வேறுபாடுகள் வருவது சகஜம்.

இந்த கொழும்பு மாநகரசபைத் தேர்தலின் போது கட்சிக்குள் என்ன பிரச்சினையைக் கண்டீர்கள். தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கட்சியின் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றார்கள். ஆகவே மக்களுக்கு எந்தவித சந்தேகமும் ஏற்படத் தேவையில்லை. 
கேள்வி :- மேயராக தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர், நீங்கள் மக்களுக்காக செய்ய எதிர்ப்பார்க்கும் சேவைகள் என்ன?

பதில்  :- 
நான் மக்களின் நலன் கருதி செய்ய திட்டமிட்டுள்ள விடயங்களை எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியுள்ளேன். தவிர, கொழும்பு மாநகரை சிங்கப்பூராக மாற்றுவேன் என்றெல்லாம் பொய் வாக்குறுதிகளை நான் வழங்க மாட்டேன். கொழும்பு மாவட்டத்தில் ஓர் அடிப்படைப் பிரச்சினை நிலவுகிறது. அதாவது, கொழும்பு மாவட்டத்தில் வாழ்கின்ற 65ஆயிரம் குடும்பங்களின் வீடுகளை அரசாங்கம் உடைத்து வருகின்றது.

அரசாங்கத்தின் இந்நடவடிக்கையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தமிழ், முஸ்லிம் மக்களே. பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த மக்களை அவ்விடங்களிலிருந்து வெளியேற்றுவதற்கான திட்டத்தில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. இதனால் அப்பாவி மக்கள் நிர்க்கதி நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இருப்பினும் அரசாங்கம் இந்த வீடுகளை உடைக்கும் நடவடிக்கையிலிருந்து பின்வாங்கவில்லை. மாறாக, தேர்தல் காலங்களில் வழங்கும் பொய் வாக்குறுதிகளின் அடிப்படையில், இனி நாங்கள் வீடுகளை உடைக்க மாட்டோம் என்ற பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றது.

தேர்தல் காலங்களில் அரசாங்க தரப்பினரால் வழங்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. ஆகவே, மக்களின் வாக்கு இந்தத் தேர்தலின் போது அரசாங்கத்துக்கு கிடைக்காது. கடந்த 4 வருடங்களாக இந்த கொழும்பு மாநகரசபை அரசாங்கத்தின் கீழேயே இயங்கியது.

இந்த நான்கு வருட காலங்களில் மக்களுக்கு எவ்விதச் சேவைகளும் செய்யப்படவில்லை என்று அரசாங்கத்தின் மேயர் வேட்பாளரான மிலிந்த மொரகொடவே தற்போது கூறி வருகின்றார்.  ஆகவே, எங்களால் செயற்படுத்தக்கூடிய, ஒரு வேலைத்திட்டத்தையே தேர்தல் விஞ்ஞாபனமாக நாம் முன்வைத்துள்ளோம். அதன் உள்ளடக்கங்களை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
கேள்வி  :-  கடந்த காலங்களில் பல வாங்குறுதிகளை மக்களுக்கு வழங்கி மாநகரசபை ஆட்சியினையும் கைப்பற்றியிருந்தீர்கள். ஆனால், இதுவரையும் சாதனை மிக்க நகராக கொழும்பை உங்களால் மாற்ற முடியவில்லை. இந்நிலையில் மீண்டும் வாக்குறுதிகளை வழங்குவதன் மூலம் மக்களை திருப்திப்படுத்த முடியுமென நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்   :-  கடந்த நகரசபைத் தேர்தலின் போது, மக்களின் அடிப்படைத் தேவைகளை ஐ.தே.க. நிறைவேற்றிக் கொடுத்தது. கரு ஜயசூரிய மேயராக இருந்த காலகட்டங்களில் கொழும்பு மாநகரம் சிறந்த மாநகரம் என்று விருதுகளையும் பெற்றது. இவ்வாறிருக்க மக்களுக்கு ஐ.தே.க. வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

கேள்வி :- கொழும்பில் தமிழ் மக்களின் வாக்குகள் அதிகமாகக் காணப்படுகின்றன. அந்த வாக்குகளைப் பெறுவதில் நீங்கள் பாரிய சவாலை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனை எவ்வாறு சமாளிக்கப்போகிறீர்கள்?

பதில் :-
தமிழ், முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில், இந்த மாநகரசபைத் தேர்தலானது மிகவும் சோதனையான தேர்தலாகவே காணப்படுகின்றது. தமிழ், முஸ்லிம் கட்சிகளைப் பயன்படுத்தி அம்மக்களின் வாக்குகள் எங்களுக்கு கிடைக்காமல் செய்வதற்கு அரசாங்கம் சதி முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. தமிழ் மக்களின் வாக்குகளை அரசாங்கத்தால் பெற்றுக்கொள்ள முடியாது. அதனை நன்கு உணர்ந்துள்ள அரசாங்கம் சில கட்சிகளைத் தூண்டிவிட்டு அதன் மூலம் இலாபமடைவதற்கு பார்க்கின்றது.

இதேவேளை, தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பாகுபாட்டுடன் நாம் எமது மக்களைப் பார்க்கவில்லை. அனைவரும் எமது மக்களே. இலங்கைத் தாயின் மக்களே. அதனால் எமது மக்கள் தங்களது வாக்குகளைத் தவறானவர்களுக்கு வழங்கி தங்களைத் தாமே அழித்துக்கொள்ளும் நிலைமைக்குச் செல்லக் கூடாது என்பதை நான் வலியுறுத்துகின்றேன். இம்மக்கள், ஐ.தே.க.வுக்கு அல்லாமல் வேறு ஏதேனும் கட்சிகளுக்கு வாக்களிப்பார்களாயின் அவர்கள் அரசாங்கத்தின் சூழ்ச்சிக்குள் அகப்பட்டு விடுவார்கள் என்பதில் ஐயமில்லை.

அரசாங்கத்தின் கைக்கூலிகளாகச் செயற்படும் சில கட்சிகள் ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அக்கட்சியினர் அரசாங்கத்தின் சொந்தத் தேவைகளுக்காகச் செயற்படுகிறார்கள். இதனை தமிழ் மக்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பாவித்தே அம்மக்களை அழிப்பதற்கான கோடரிக் கம்புகளாக சில கட்சியினர் செயற்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, எமது கட்சியினர் ஜாதி, மத வேறுபாடு இன்றி செயற்படுவோம். இதனைக் கருத்திற்கொண்டு மக்கள் இந்தத் தேர்தலில் மக்கள் கவனமாக வாக்களிக்க வேண்டும். அரசாங்கத்தின் சதிக்குள் சிக்கிவிடாது, ஐ.தே.க.வுக்கு வாக்களிப்பதே மக்களுக்குள்ள ஒரே நிவாரணமாகும்.

சுமார் 3 இலட்சம் தமிழ், முஸ்லிம் மக்களை கொழும்பிலிருந்து வெளியேற்றுவதற்கான திட்டத்தை அரசாங்கம் தீட்டியுள்ளது. ஆகவே தமிழ் பேசும் மக்கள் இந்த அரசாங்கத்தின் பேரினவாத நடவடிக்கைக்கு பலம் கொடுக்காது, பலாத்காரங்களுக்கு இடமளிக்காது சிந்தித்து செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.  

கேள்வி :- சொந்தத் தேவைகளுக்காக தலைநகர தமிழ் மக்களைப் பயன்படுத்தாதீர்கள் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதம வேட்பாளரான மனோ கணேசன் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளாரே? அவருக்கு நீங்கள் கொடுக்கும் பதில் என்ன?

பதில் :- அவரது குற்றச்சாட்டு ஒரு வார்த்தை மாத்திரமே. ஆதாரத்துடன் அவருக்கு என் மீது குற்றஞ்சாட்ட முடியாது. நான் எனக்காக வாக்களிக்குமாறு அம்மக்களைக் கோரவில்லை. அவர்களின் நன்மைக்காகவே வாக்குகளைக் கேட்கிறேன். என் மீது நம்பிக்கை கொண்டவர்கள் எனக்கு தவறாது வாக்களிப்பார்கள். ஆனால் மனோ கணேசன் அவரது சொந்தத் தேவைகளுக்காகவே தமிழ் பேசும் மக்களின் வாக்குகளைப் பயன்படுத்தப் பார்க்கிறார். அதற்கு பல உதாரணங்களையும் என்னால் முன்வைக்க முடியும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அவருக்கு ஐ.தே.க இரண்டு ஆசனங்களைக் கொடுத்தது. கொழும்பில் தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை அதிகம். அதனால் தமிழ் பிரதிநிதிகள் தேவை என்பதற்காக இரண்டு ஆசனங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் அவர், கொழும்பில் தனது தம்பியைத் தேர்தலில் நிறுத்தி நாடாளுமன்றத்தில் தனது குடும்பத்தினரின் அங்கத்துவத்தை அதிகரிக்க விரும்பினார். இது அவர் தனது சொந்த நலனுக்காகச் செய்த செயற்பாடு இல்லையா?

மற்றொரு விடயம் என்னவெனில், கொழும்பில் தேர்தலில் நிற்குமாறு நாம் அவரிடம் கோரினோம். ஆனால், அவர் கொழும்பில் தனது தம்பியை நிறுத்திவிட்டு கண்டிக்கு சென்று போட்டியிட்டார். அங்குள்ள மக்கள் அவரை நிராகரித்து விட்டனர். இது அவரது சொந்த நலனுக்காக செய்த அரசியல் இல்லையா? சொந்த நலனைக் கருத்திற்கொண்ட  ஆவேசமான அரசியல் நடவடிக்கையால் அவர் சாதித்தது என்ன?

இப்போது மட்டும் அவர் என்ன செய்கிறார்? தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரித்தெடுத்துக்கொண்டு அரசாங்கத்துக்குத் தாவிச் சென்ற அவரது தம்பி இப்போது, மனோ கணேசனுக்கு வாக்களியுங்கள் என்று பிரசாரத்தில் ஈடுபடுகின்றார். ஆனால் சகோதரர்களுக்கு இடையில் தொடர்பு இல்லை என்று கூறித் திரிகிறார் மனோ கணேசன். அவர்கள் வீடுகளில் சந்தித்துக்கொள்கிறார்களா? இல்லையா? என்பது பற்றி எங்களுக்கு எப்படி தெரியும். நாங்கள் அவர்களை அவதானித்துக்கொண்டுதான் இருக்கிறோமா?

இவர்களின் நடவடிக்கைகளை நோக்குமிடத்து, இவர் உண்மையிலேயே அரசாங்கத்தின் பிரதிநிதியா என்ற சந்தேகம் எழுகின்றது. அப்பாவித் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு சுயநலத்துக்காக செயற்படும் இவர் எப்படி என் மீது குற்றஞ்சாட்ட முடியும்? எங்களில் யார் சுயநல அரசியல் நடத்துகிறோம் என்பதை புத்திஜீவிகளான தமிழ் மக்களே முடிவெடுப்பார்கள்.
கேள்வி :- ஐ.ம.சு.மு.வின் மேயர் வேட்பாளரை நேரடி விவாதத்துக்கு அழைத்திருந்தீர்கள். அவரும் அதற்கு தயார் என்று கூறியுள்ளாரே... அவரை எதிர்கொள்ள நீங்கள் தயாரா?

பதில் :-
மிலிந்த மொரகொட என்னுடன் விவாதத்துக்கு வரத் தயார் என்று எனக்கு அறிவிக்கவில்லை. மக்கள் அனைவரும் பார்க்கக்கூடிய வகையில் என்னுடன் விவாதத்துக்கு வாருங்கள் என்று நான் அவருக்கு எழுத்து மூலமாகவே அழைப்பு விடுத்தேன். ஆனால் அதற்கான பதிலை அவர் இன்னமும் தரவில்லை.

மாறாக சிரச தொலைக்காட்சியில் இடம்பெறும் 'சட்டன' நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், மிலிந்த மொரகொட, விவாதத்துக்கு தயார் என்று கூறி எனக்கு அழைப்பு விடுத்தார்கள். மிலிந்தவுக்கு பதிலாக சிரச ஊடகத்தினர் எனக்கு அழைப்பு விடுக்கிறார்கள் என்றால் அவர்களா மிலிந்தவின் முகவர்கள்? மிலிந்த மொரகொடவுக்காக பிரசாரம் செய்யும் ஒரு தொலைக்காட்சியில் அவருடன் விவாதம் செய்ய நான் தயாரும் இல்லை.

என்னுடனான விவாதத்தைத் தவிர்ப்பதற்காக மிலிந்த மொரகொட சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளார். விவாதத்திலிருந்து தப்பி ஓடுவதற்காக அவருக்கு சாதகமான தொலைக்காட்சி அலைவரிசையொன்றைத் தேர்ந்தெடுத்துள்ளார். நான் விடுத்த சவாலை எதிர்க்கொள்ள முடியாத அவர் தப்பி ஓடுவதற்கு முயற்சிக்கின்றார்.
கேள்வி :- தேர்தலில் போட்டியிடும் ஐ.ம.சு.மு மற்றும் ஜ.ம.மு. ஆகியவற்றிடமிருந்து நீங்கள் எதிர்நோக்கியுள்ள சவால் எந்தளவில் உள்ளது?

பதில் :- நான் யாரிடமிருந்தும் எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கவில்லை. அதேபோல நானும் யாருக்கும் சவால் விடவில்லை. ஆனால், அவர்களுக்கு வாக்களிப்பதால் மக்கள் எவ்வாறான ஆபத்துக்களைச் சந்திப்பார்கள் என்பதை மக்களுக்கு நான் தெளிவுபடுத்தியுள்ளேன். இதை விட எனக்கு சவால் தேவையில்லை.

சாதாரணமாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுபவர்கள் அதைச் செய்து தருகிறோம், இதைச் செய்து தருகிறோம் என்ற வாக்குறுதிகளையே வழங்குவார்கள். ஆனால் இந்த அரசாங்கம் 'நாங்கள் வீடுகளை உடைக்க மாட்டோம். வீடுகளை உடைக்க மாட்டோம்' என்றே பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. இது மக்களை ஏமாற்றும் பிரசாரமாகவே காணப்படுகின்றது.

கேள்வி :- ஐ.தே.க.வின் வாக்குகளைப் பிரிக்கும் அரசாங்கத்தின் சதியில் சிறுபான்மையின கட்சிகள் விழுந்துள்ளதான குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளீர்களே. இதன்மூலம் நீங்கள் ஏனைய கட்சியினருக்கு தெரிவிக்க விரும்புவது என்ன?


பதில்   :- அரசாங்கத்தின் கைக்கூலிகளாகச் செயற்பட வேண்டாம் என்று கூறி எங்களோடு இணைந்து தேர்தலில் போட்டியிடுங்கள் என மனோ கணேசனுக்கு அழைப்பு விடுத்தோம். இது தொடர்பில் அவருடன் நீண்ட நேரம் கலந்துரையாடினோம். ஐ.தே.க.வுக்கு கிடைக்கும் வாக்குகளைப் பிரித்து அரசாங்கத்தை வெற்றியடைச் செய்தீர்கள் என்றால் அதன் மூலம் தமிழ் மக்களுக்கு பாரிய ஆபத்து நேரிடும். அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால், தமிழ் மக்கள் உங்களுக்கு கல்லெறிவார்கள் என்றும் அவருக்கு விளக்கிக் கூறினோம்.

தமிழ் மக்கள் அனாதைகளாக்கப்பட்டு, கொழும்பிலிருந்து விரட்டப்படும் போது உங்களது அரசியல் அன்று தோற்றுப்போய்விடும். மக்களை நிர்மூலமாக்கினீர்கள் என்ற குற்றச்சாட்டு உங்கள் மீது வரும். அதனால் ஆவேசப்பட்டு அரசியல் நடத்த வேண்டாம். நிதானமாக, தூரப் பார்வையுடன் அரசியலில் ஈடுபடுங்கள் என்று வலியுறுத்தினோம். ஆனால் நாம் கூறும் எதையும் ஏற்றுக்கொள்ள அவர் தயாரில்லை. அவருடைய அவசரத்தன்மையாலும், நிதானமற்ற அரசியல் போக்காலும் இன்று அவர் அரசியலில் எதனையும் சாதிக்கவில்லை.
கேள்வி :- தமிழ் தேசிய கூட்;டமைப்பின் ஆதரவு ஜ.ம.மு.வுக்கு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறதே? அதன் உண்மைத்தன்மை என்ன? கூட்டமைப்பின் ஆதரவினைத் திரட்ட நீங்கள் ஏதேனும் முயற்சிகள் எடுத்ததுண்டா?

பதில் :- இந்தத் தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முடிவெடுக்கவில்லை. அக்கட்சியினரிடையே காணப்படும் சில மாறுபட்ட கருத்துக்கள் காரணமாக யாருக்கு ஆதரவு என்ற கூற்று இதுவரையில் வெளிவரவில்லை. ஆனால், மனோ கணேசன் கூட்டமைப்பினரையும் பயன்படுத்தி தேர்தலில் வெற்றிகொள்ளப் பார்க்கிறார்.

கேள்வி :- நகர அபிவிருத்தி அதிகாரசபை போன்ற நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாரென தெரிவித்துள்ளீர்களே? இதன் மூலம் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பதாகவே அர்த்தப்படுகிறதே?

பதில் :- இந்த மாநகரசபைக்குள் அரசாங்க அதிகாரங்களுடன் அதிகார சபைகள் உள்ளன. அவர்களுடைய சேவை மக்களுக்கு சார்ப்பானவையாக, மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் அமைந்தால் அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்க நாம் தயார். அவர்களுடைய திட்டங்கள் மக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்துமானால் நாம் அவற்றை நிராகரிப்போம். இது அரசாங்கத்துக்கு வால் பிடிப்பதோ அல்லது அரசுக்கு சார்பாகச் செயற்படுவதாகவோ அர்த்தப்படாது.
கேள்வி :- மத்திய அரசாங்கத்தின் ஆதரவு இன்றி நகர அபிவிருத்தியை நோக்கி பயணிக்க முடியாது என்று அரசாங்கத் தரப்பினர் கருத்து வெளியிட்டு வருகின்றனரே?

பதில் :- சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கொழும்பு மாநகரசபை ஐக்கிய தேசிய கட்சி வசமே இருந்தது. இதன் போது கரு ஜயசூரிய மேயராக பதவி வகித்தார். அவர் நகரின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக மத்திய அரசாங்கத்தின் ஆதரவை நாடவில்லை.

இவ்வாறான நிலையில், ஆசியாவிலேயே சிறந்த நகரம் என்ற இரு விருதுகளை கொழும்பு மாநகரம் பெற்றுக்கொண்டது. இவ்வாறான சரித்திரம் கொண்ட நாங்கள் அரசாங்கத்திடம் கையேந்தாமல் நகரை அபிவிருத்திக்கு உட்படுத்துவோம். உண்மையைச் சொல்லப்போனால், நகரின் அபிவிருத்திகளுக்கு செலவளிப்பதற்கு அரசாங்கத்திடம் பணம் இல்லை என்பதே வெளிப்படையான உண்மை.

கேள்வி :- இணை நகர அபிவிருத்தி அதிகாரசபையொன்றை உருவாக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்கான சட்டவரைபை தயாரிக்கும் முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றதே. அரசின் இந்த தீர்மானத்தை ஐ.தே.க. ஆதரிக்கப் போகிறதா? அல்லது எதிர்க்கப்போகிறதா?

பதில் :- கொழும்பு மாநகரசபைக்குள் தங்களது அதிகாரத்தைப் பலப்படுத்திக் கொள்வதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை முன்னெடுக்கப் பார்க்கிறது. இருப்பினும் அவற்றை எங்களுடைய ஆதரவு இன்றி அமுல்ப்படுத்த முடியாது.
கேள்வி :- சிலவேளை, இந்த தேர்தலிலும் ஐ.தே.க. தோல்வியை தழுவுமேயானால் உங்களின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்?

பதில் :- நிச்சயமாக நாம் தோல்வியடைய மாட்டோம். இந்தக் கேள்வி அரசாங்கத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மிலிந்த மொரகொடவிடமே கேட்க வேண்டும்.

கேள்வி :- வெற்றியடையும் பட்சத்தில் பிரதி மேயராக யாரை நியமிக்கவுள்ளீர்கள்?

பதில் :- ஆகக்கூடிய வாக்குகளை எடுக்கும் சிங்களப் பிரதிநியொருவரையே பிரதி மேயராக நியமிக்க வேண்டும் என்று கட்சியின் தலைவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கேள்வி :- ஐ.தே.க.வுடன் சிறுபான்மையினக் கட்சிகளை இணைத்துக்கொள்ளும் உத்தேசம் உள்ளதா?

பதில் :-  இந்த கொழும்பு மாநகரசபையில் கூட்டணிக் கட்சிகளை அமைக்கும் திட்டம் எனக்கு இல்லை. எங்களுக்கு எவருடைய ஆதரவும் இன்றி மக்களுக்காக சேவை செய்ய முடியும். எவருக்காவது எங்களுடன் இணைந்து செயற்பட விருப்பம் உள்ளதாயின் அதனை ஏற்றுக்கொள்ளவும் நாம் தயார்.

நேர்காணல் :- எம்.மேனகா
படப்பிடிப்பு :- இந்திரரத்ன பாலசூரிய

ஏ.ஜே.எம்.முஸாம்மிலின் தேர்தல் விஞ்ஞாபனம்


You May Also Like

  Comments - 0

  • ruban Thursday, 29 September 2011 04:53 AM

    இதுதான் இந்த வருடத்துக்குரிய நகைச்சுவை !!

    Reply : 0       0

    ghethan Thursday, 29 September 2011 07:27 AM

    மனோ கணேசனை குறை சொல்வதை முதலில் விடவும் அவர் தமிழருக்காக தனது உயிரை விடவும் தயாரானவர். உண்மையான ஸ்ரீலங்கன் ஒவ்வொருவரும் அவருக்கு வாக்களிக்க வேண்டும். அவர் எல்லா மக்களும் அரவணைத்து செல்லக்கூடிய நல்லவர். நம் எல்லோரும் அவருக்கு வாக்களிப்போம்.

    Reply : 0       0

    S.K Thursday, 29 September 2011 07:22 PM

    மனோ அண்ணா தமிழருக்காக செய்கின்ற சேவைகள் அளப்பரியது. பா மன்றத்தில் இருக்கும் போதோ இல்லாத போதோ அவர் செய்யும் சேவை ஒருவராலும் ஆற்றபடவில்லை. தமிழ் பேசும் மக்கள் அனைவரும் கட்டாயம் மனோ அண்ணாவுக்கே வாக்களிக்க வேண்டும்.

    Reply : 0       0

    pasha Thursday, 29 September 2011 07:47 PM

    முசம்மில் உண்மையான ஒரு விடயம் கூறியுள்ளார். அது தான் மனோ கணசேன் தனது தமயனை கொழும்பில் எம் பீ ஆக்கி தன்னை கண்டியில் எம் பீ ஆக்க பார்த்தது. கண்டி மக்கள் நல்ல பாடம் புகட்டினார்கள். இம்முறை கொழும்பு மக்களும் அதை செய்வார்கள்.

    Reply : 0       0

    xlntgson Thursday, 29 September 2011 09:08 PM

    தோற்றுப் போவதற்கென்றே சிலர் போட்டி இடுகின்றனர், அதனால் நீண்ட வாக்குச் சீட்டு கொழும்பில்! வேட்பாளர்கள் யார் சின்னம் எங்கே என்று தட்டுத் தடுமாறித் தான் வாக்களிப்பர் மக்கள்!
    எப்படியோ மிக அதிகமான செல்லாத வாக்குகளைப் பார்க்கலாம்!
    பல கட்சி ஜனநாயகம் வாக்குப் பிரிவதைப் பற்றிக் கவலை கொள்கிறார், ஒரு வேளை அதுவே இவருக்கு சாதகமாக அமைந்து விட்டால்? இனவாதம் இல்லாவிடில் அமைதியான வாக்கெடுப்பில் யார் வென்றாலும் ஜனநாயகம் வென்றதே போலத்தான்!
    கட்டம் கட்டமாக தேர்தல் வைப்பதில் ஆளும்கட்சி வேட்பாளருக்கு கூடுதல் வாய்ப்பு?

    Reply : 0       0

    siraj Friday, 30 September 2011 05:14 AM

    முசம்மில் அவர்களே வெற்றி நிச்சயம் யார் என்ன சொன்னாலும் முதல்வர் நீங்கள் தான். ஐக்கிய தேசிய கட்சி எண்டாலே தலைநகரம்தான். மறைத்த பிரேமதாசா அவர்களுக்கு நன்றிகடன் செய்யவேண்டும் எண்டால் யானைக்கு உங்கள் வாக்கை கொடுங்கள். வாழ்க முசம்மில்.

    Reply : 0       0

    Ossan Salam - Doha Sunday, 02 October 2011 12:04 AM

    ஐக்கிய தேசியக் கட்சியின் ஒட்டு மொத்த ஒற்றுமையும் கூட்டுறவும் அக்டோபர் எட்டாம் திகதி வரையும் தான். அதன் பின்னர் மீண்டும் அவர்களுக்குள் சேறு வீசிக் கொள்ளும் படலம் ஆரம்பம் ஆவதை எல்லோரும் பார்க்கலாம். இப்போதைக்கு மக்களை ஏமாற்ற ஒரு பிரச்சினையும் இல்லாதவர்கள் போல் நடிக்கிறார்கள்.... யூஎன்பியின் முஸ்லிம் வாக்குகள் பல முஸ்லிம் காங்கிரசுக்கும் யூஎன்பியின் தமிழ் வாக்குகள் பல மலையாக முன்னணிக்கும் சென்றால் நீங்கள் தோல்வி காண்பது நிச்சயம். யூஎன்பியில் சகல இன மக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    Reply : 0       0

    azzuhoor Monday, 10 October 2011 08:15 AM

    எல்லோரும் இப்போ என்ன சொல்லுறீங்க?

    Reply : 0       0

    SSS Monday, 07 November 2011 03:12 AM

    You ஆர் தி ரியல் man டு டெவலோப் தி கொலோம்போ. carry on.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X