Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 நவம்பர் 11 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
றிப்தி அலி
எப்பாடு பட்டேனும் மக்கள் குறைநிறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய பிரதிநிதியொருவரை தெரிவு செய்ய வேண்டும் எனும் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியிலேயே மக்கள் வாக்களிக்கின்றனர். அவ்வாறான ஒருவருக்காக வாக்களிப்பதில் அந்த அப்பாவி மக்கள் காட்டும் அக்கறையைக்கூட வாக்குகளைப் பெற்று பதவிகளைக் கைப்பற்றும் அந்த பிரநிதிநிதிகள் பொருட்டாகக் கருதுவதில்லையே என்று என்னும் போது வாக்களித்த மக்கள் பாரிய ஏமாற்றத்துக்குள் தள்ளப்படுகின்றனர்.
'நாங்கள் வாக்களித்த எங்கள் பிரதிநிதிகள் எங்கே? எந்தவொரு நல்லது கெட்டதுக்கும் அவர்கள் வருவதில்லையே. இதற்காகவா நாங்கள் அவர்களைத் தெரிவு செய்தோம்' என வாக்களித்த மக்கள் மன வேதனைப்படுகின்றனர். இவ்வாறானதொரு வேதனையில் தான் அஷ்ரப்நகர் மக்களும் இருக்கின்றார்கள்.
திருமணத்திற்கு அழைப்பு விடுத்தாலும் வருகின்றார்கள் இல்லை. எங்களுக்கு எதுவும் பிரச்சினை ஏற்படும் போது அதற்கு தீர்வு பெற்றுத்தராவிட்டாலும் ஆறுதல் கூறுவதற்கேனும் வருகிறார்கள் இல்லை. எங்களின் வாக்குகளினால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அந்தளவிற்கு பலத்த வேலைப்பளுவுடன் இருக்கின்றார்களா? என மேற்படி கிராமத்து மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அண்மைய நாட்களாக ஊடகங்களில் பரவலாக பேசப்படுகின்ற இடமாக அஷ்ரப்நகர் காணப்படுகின்றது. அஷ்ரப்நகர், அஷ்ரப்நகர் என்கிறார்களே அது அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒலுவில் - 01 என்கிற கிராம சேவகர் பிரிவுக்குளேயே காணப்படுகிறது. இது நூறு வீதம் முஸ்லிம் குடும்பங்களை கொண்ட ஒரு கிராமமாகும்.
ஆலிம்சேனை என அழைக்கப்பட்ட இக்கிராமம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் மறைவிற்கு பின்னர் அவரின் ஞாபகார்த்தமாக அஷ்ரப் நகர் என பெயர் மாற்றம் பெற்றது.
இந்த அஷ்ரப் நகர் கிராமம் சர்ச்சைக்குரிய தீகவாபியின் எல்லைக் கிராமமாகும். இதனாலேயே அடிக்கடி அஷ்ரப் நகரையும் சர்ச்சைகள் தொற்றிக் கொண்டே வருகின்றன.
இந்த கிராமத்தின் குறித்ததொரு பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு கடந்த புதன்கிழமை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இவ்வாறு மக்கள் வெளியேற்றப்படவுள்ள பகுதியில் இரண்டு இராணுவ முகாம்களை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
'அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நாம் இராணுவ முகாம்களை அமைத்து வருகின்றோம். அது போன்றதொரு முகாமையே அஷ்ரப் நகரத்திலும் அமைத்து வருகின்றோம்' என குறித்த பிரதேச இராணுவ உயர் அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
'இப்பிரதேசத்தின் பாதுகாப்பினை பலப்படுத்தும் நோக்குடனேயே நாம் இங்கு இராணுவ முகாம்களை அமைத்துள்ளோம். மேலும், இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள இடம் அரசாங்கத்துக்கு சொந்தமானது என மாவட்ட செயலாளரால் எமக்கு அடையாளம் காட்டப்பட்டமையால்தான் நாம் இங்கு நிலைகொண்டுள்ளோம்' என்றும் குறித்த பிரதேச இராணுவ உயரதிகாரி கூறியிருந்தார்.
இராணுவ உயர் அதிகாரி தெரிவிப்பதைப் போன்று குறித்த பகுதி அரசாங்கத்திற்கு சொந்தமானதாக இருந்தால் இராணுவ முகாம் அமைப்பதில் எந்த தவறும் இல்லை.
இதேவேளை, இராணுவத்தினர் அத்துமீறி முகாம்களை அமைத்து வருவதாக குற்றம் சுமத்தி அஷ்ரப் நகர் கிராம மக்கள் அண்மையில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இதன்போது, குறித்த இராணுவத்தினரை அங்கிருந்து உடனடியாக வெளியேறும் படியும் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
அஷ்ரப் நகரிலுள்ள காணிகளுக்கான அனுமதிப் பத்திரம் தங்களிடம் உள்ளதாக காணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பகுதியில் 150இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த பல தசாப்தங்களாக காணி அனுமதி பத்திரத்துடன் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த காணிகளுக்கான அனுமதிப் பத்திரத்தில் அம்பாறை மாவட்ட செயலாளர் மற்றும் அட்டளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.எம்.நசீர் ஆகியோர் கையொப்பமிட்டே வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், வன பரிபாலனத்துறை அதிகாரிகள், இராணுவத்தினர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.எம்.நசீர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட உயர் மட்டக் குழுவொன்று கடந்த புதன்கிழமை அஷ்ரப் நகரின் குறித்த பகுதிக்கு கடந்த புதன்கிழமை விஜயம் மேற்கொண்டது.
இதன்போது, சில காணிகளுக்கான அனுமதிப் பத்திரம் தன்னால் தவறுதலாக வழங்கப்பட்டு விட்டதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தெரிவித்ததுடன், குறித்த அனுமதிப் பத்திரங்களை உடனடியாக ரத்து செய்வதாகவும் குறிப்பிட்டார்.
இதனையடுத்து குறித்த பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு கடந்த புதன்கிழமை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தற்போது நடுத்தெருவிலுள்ள இந்த மக்களை இவர்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் இதுவரை நேரில் சென்று பார்வையிடவுமில்லை, இதற்காக குரல் கொடுக்கவுமில்லை.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் கூட்டு சேர்ந்திருப்பது ஆளும் அரசாங்கமான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடனேயே. இந்நிலையில், இந்த மக்களின் பிரச்சினைக்காக அரசாங்கத்துடன் ஒட்டியிருக்கும் மக்கள்
பிரதிநிதிகளே குரல் கொடுக்காவிடின் இவர்களின் பிரச்சினையை யாரிடம் தெரிவிப்பது.
தேர்தல் காலங்களில் வாக்குகளுக்காக இந்த மக்களை தேடி வரும் அரசியல்வாதிகள், குறித்த பிரதேச மக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ள போது ஏன் ஓடி ஒழிகின்றனர்?
இப்பிரச்சினைக்கு ஏதிராக குரல்கொடுத்தால் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவி பறி போய் விடுமோ அல்லது விரைவில் இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் பிரதியமைச்சர் பதவி பறி போய் விடும் என்ற பயமோ தெரியவில்லை.
இதேவேளை, வட மாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதில் சில அரச அதிகாரிகள் அசமந்தம் காட்டுவதாக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிசாட் பதியுதீன் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு ஓர் அமைச்சர் அரச அதிகாரிகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் போது, காணிகளுக்கான அனுமதிப் பத்திரத்தினை வழங்கிவிட்டு தற்போது ரத்து செய்துள்ள அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீருக்கு ஏதிராக ஏன் அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது.
எவ்வாறாயினும், தேர்தல் காலங்களில் வீராப்பு பேச்சு பேசும் இந்த அரசியல்வாதிகளின் தைரியம் வாக்களித்த மக்களுக்கு பிரச்சினை ஏற்படும் போது எங்கு செல்கின்றது? என்ற கேள்வி எழுகின்றது.
அரசியல்வாதிகள் ஓடி ஒழிந்தால் இவர்களுக்காக குரல் கொடுக்க முன்வருவது யார்? பிரதேச சபை முதல் நாடாளுமன்றம் வரை குறித்த பகுதி மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இதுவரை சென்று பார்வையிடவில்லை.
இதேவேளை, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக பெரும்பான்மையினத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி ஓரிரு மணித்தியாலயங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் வினோ நோகதாரலிங்கம் ஆகியோர் உடனடியாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக வடக்கு கிழக்கில் காணிகளை நவம்பர் 20ஆம் திகதிக்கு முன் பதிவுசெய்யுமாறு அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட பகிரங்க அறிவித்தலுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
கடந்த புதன்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த சுற்றறிக்கையின் பகிரங்க அறிவித்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இவ்வாறான செயற்பாடுகள் மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும். தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் இவ்வாறான விடயங்களை மேற்கொள்ளும் போது முஸ்லிம்களின் அதிகபடியான வாக்குகளை பெற்றவர்கள் என கூறி திரியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாய்மூடி மௌனியாக இருப்பது எதற்காக என்ற கேள்வி எழுகிறது.
இதேவேளை, குறித்த பிரச்சினை தொடர்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து நியாயம் பெற முடியும். எனினும் குறித்த பிரதேச மக்கள் கல்வி அறிவு குறைந்தவர்கள், பண வசதியற்றவர்கள் என்பதனால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதில் அக்கறையின்றி இருக்க முடியும்.
இந்த மக்களை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்கான தூண்டும் வகையில் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளோ, அரச சார்பற்ற இயக்கங்களோ, தனவந்தர்களோ சட்டத்தரணிகளோ இதுவரை ஈடுபடவில்லை.
குறித்த அஷ்ரப் நகர் கிராமம் அமைந்துள்ள அட்டளைச்சேனை பிரதேச சபையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியின் கீழ் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அக்கட்சியின் தலைவரான நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமாவது அக்கறை காட்டியிருக்கலாம். இப்பிரச்சினை தொடர்பில் அவர் இதுவரை கவனம் செலுத்தியதாக தெரியவில்லை.
இதற்கு மேலதிகமாக குறித்த பிரதேச சபையின் உறுப்பினர்களும் கூட இந்த மக்களின் பிரச்சினை தொடர்பில் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.
அதாவது, விசேட கூட்டமொன்றை கூட்டி கண்ட தீர்மானத்தையும் கூட அட்டளைச்சேனை பிரதேச சபை இதுவரை மேற்கொள்ளாமை மன வேதனையளிக்கும் விடயமாகும்.
இவ்வாறு பிரதேச சபை உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என அரசியல் அதிகாரமுள்ளவர்கள் கைவிட்ட நிலையில் குறித்த கிராம மக்களுக்கு உதவுவது யார்? (படங்கள்:ஹனீக் அஹமட்)
kalmunaiyaan Saturday, 12 November 2011 12:42 AM
ஹக்கீம் அவர்களுக்கு பகிரங்க கடிதம்.....
இந்த அஷ்ரப் நகரினில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறச் சொல்லுவது பற்றி உடனடியாக உங்கள்து நிலைப்பாடு தெரிந்தாக வேண்டும்..
இந்த மக்கள் அவ்வாறு மிகக்குறுகிய காலத்தில், அவர்களது காணியில் இருந்து வெளியேறி எங்கு செல்வது...? இதன் உள் நோக்கம் என்ன?? யார் இந்த அம்பினை ஏய்தவர்?
DS தவறுதலாக அனுமதி பத்திரம் வழங்கி இருந்தால், இந்த DS இணை பதவி நீக்கம் செய்வதில் இன்னும் ஏன் தாமதம்.....??
உங்களது உடனடி பதில் அதிவேகமான நடவடிக்கை மூலம் தெரிந்தாக வேணும்....
Reply : 0 0
jaleel Saturday, 12 November 2011 12:55 AM
இவை எல்லாம் எதிர்பார்த்தவை தான் . தமிழர்களுக்கு என்ன நடந்ததோ அது இப்போது முஸ்லிம்களுக்கு நடக்கிறது.
Reply : 0 0
makkal 1st Saturday, 12 November 2011 01:06 AM
உடன் நடவடிக்கை எடுங்கள். பாவம் மக்கள்... வியாபாரிகள் தான் பல அரசியல்வாதிகள் .... எப்பதான் விடிவு வருமோ ... எப்பதான் சுயநல அரசியல் ஒழியுமோ?
Reply : 0 0
razeek kalmunai Saturday, 12 November 2011 01:07 AM
யாருக்கும் விளங்காமல் கிடந்தது தீகவாபி...... அதனை நாட்டுக்கு காட்டியது யார்? பழைமைவாய்ந்த ஆளிம்நகரை ..... அஸ்ரப் நகர் என்று புதிய புதிய நகராக்கியது யார்? இவர்கள் தான் இதற்கெல்லாம் பதில்கூறனும் ........ அம்பாறை முஸ்லிம் எம்பி மார்கள் சரியான தூக்கம்.
Reply : 0 0
muray Saturday, 12 November 2011 02:12 AM
தேர்தல் என்று வந்தால் ஓட்டு கேட்டு அலையத் தெரியும். ஓட்டு போட்ட மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் இருந்த இடமே தெரியாம ஓடி ஒளியிரிங்க. நீங்கல்லாம் அரசியல்வாதி என்று சொல்றதுக்கு உங்களுக்கு நாவு கூசல்ல?
Reply : 0 0
ali Saturday, 12 November 2011 03:40 AM
முதுகு எலும்பு இல்லாத அரசியல்வாதிகள் நீங்க நல்லா இருக்கமாட்டியள். இந்த மக்களை யார் பார்ப்பது?
Reply : 0 0
ullooran Saturday, 12 November 2011 03:47 AM
ஐயோ பாவம் இந்த முஸ்லிம் டம்மி அமைச்சர்களுக்கு ......! இவர்களால் ஒன்றுமே செய்ய முடியாதப்பா ..! இவர்களுக்கு வாக்குப்போட்ட மக்களுக்கும் பாவமப்பா..! எங்கிட நீதி அமைச்சருக்கும் இப்ப ஒன்றுமே விளங்காது........!!!!!!!!!!!
Reply : 0 0
UMMPA Saturday, 12 November 2011 05:33 AM
ஒன்று திரண்டால் என்ன நடக்கும்? அதுதான் இப்போது தேவை.
Reply : 0 0
avathaani Saturday, 12 November 2011 05:43 AM
மு.கா.ஆதரவாளர்கள் மன்னிக்கவும்,உங்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள்,உங்களுக்கு எதுவுமே செய்யமாட்டார்கள் சுயநல அரசியலின் உச்சத்தில் உள்ளனர். சட்டியுடன் போகுமாம் பிலால் நாற்றம் என்பது போல, மு காங்கிரசுக்கு மாற்றீடு ஒன்றினை முயன்றால் என்ன?
Reply : 0 0
ஓட்டமாவடி ஜெமீல் Saturday, 12 November 2011 02:21 PM
நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பல்வேறு ( பொருளாதார, கலாச்சார ரீதியான) நெருக்குதல்களில் இதுவும் ஒன்றாகும். ஆங்காங்கே சிறுபான்மையாய் அவர்கள் வாழ்வதால் அவர்களது நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்படுவதில்லை. சிலவேளை எதிர்காலத்தில் அரேபிய நாடுகளைப்போன்று மக்கள் கிளர்ந்தெழுந்துதான் தமது நியாயங்களைப் பெற்றுக்கொள்ளல் வேண்டுமோ தெரியாது.
Reply : 0 0
சிறாஜ் Sunday, 13 November 2011 05:09 AM
எங்கட தவிசாளர் நசீர் உறுப்பினர் முனாஸ் மற்றும் யாசிர் ஐமன் மூவரும் இது விடயத்தில் கடுமையாக ஓடித்திரிகிறார்கள். ஆனால் வால் பிடித்து தலை தடாவி கூட்டிக்கொடுப்பவர்கள் பிள்ளையும் கிள்ளி தொட்டிலும் ஆட்டாமல் சும்மா இருந்தால் எல்லாம் சரியா நடக்கும்.
Reply : 0 0
addalaichenai urran Sunday, 13 November 2011 12:38 PM
டம்மி அரசியல்வாதிகளால் ஒன்றும் நடக்காது. இதற்காக நாம் ஒன்று படுவோம்.
Reply : 0 0
abdul Monday, 14 November 2011 02:28 AM
ஏன் இன்னும் தாமதம்? மக்கள் எசெலேம்சீ க்கு ஓட்டு போட்டதென்று ஒன்றும் அவர்கள் செய்யமாட்டார்கள் ஏன் யா மைசூருக்கு எம்பி தாரேன் என்று எத்தனை தடவை தலைவர் சொல்லி இருக்கார் ஹி ஹி ஹி...... நீங்கள் அவருக்குத்தானே இன்னும் ஓட்டு பண்ணுறீங்க. உங்களை அல்லா காப்பாற்றுவானாக.
Reply : 0 0
ஹில்மு Monday, 14 November 2011 03:22 PM
பில்டப் காட்டப் புறப்படுவாங்கள்... வருவாங்கள், மக்களே என்பார்கள்.. போராளிகளே என்பார்கள் நம்மடவனுகளுக்கு மேல் சிலிர்க்கும். அவருக்கோ மேல் அரிக்கும்.... கூட சொரண்ட ஒராள் கல்முனையில இருந்து ஓடிடுவாரு... ஐயோ தலைவர்ர பேருல இருக்குற ஊரையே காப்பாத்த முடியல. அதுக்குள்ள ஒரு சமூகத்துக்கு தலைவராமில்ல...
Reply : 0 0
M.B.M.Nazeem Thursday, 17 November 2011 06:07 PM
முஸ்லிம்களுக்கு என கட்சி ஆரம்பித்தவருக்கே இவ்வளவு வேதனயும்.
Reply : 0 0
fazal Friday, 18 November 2011 12:34 AM
பிரச்சினை என்றதும் காங்கிரஸ் காரர் தான் தீர்க்கணும் என்று எல்லாரும் எழுதுறாங்கள். ஏன் அதாவுல்லாக்கும் ரிசாத்துக்கும் சேர்த்து ஏசுறது தானே?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
39 minute ago
43 minute ago
45 minute ago