Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 நவம்பர் 23 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
• றிப்தி அலி
-இரண்டாவது தொடர்-
இலங்கையிலுள்ள பல வீதிகளில் நாய்கள் மற்றும் மாடுகள் உல்லாசமாக உலாவித் திரிவதை நாம் அடிக்கடி காண்பதுண்டு. நமது நகரப்புற வீதிகளில் அதிகமானவை இரவு வேளைகளில் பலரின் உறைவிடமாக மாறுகின்றன. ஆனால், வைத்தியர்கள், ஆசிரியர்கள் போன்றோர் மாத்திரமே பயணிக்க முடியும் என்கின்ற நிபந்தனையினைக் கொண்டதொரு வீதி ஈரானில் உள்ளது என்றால் நம்புவீர்களா? கஷ்டமாக இருந்தாலும் நம்பியே ஆக வேண்டும்.
ஏன் இந்த நிபந்தனை, எங்கு உள்ளது இந்த வீதி என்பதை கட்டுரையின் இடையில் கூறுகிறேன்.
தெஹ்ரான், கும், மஷ்ஹாட், அடாபில், கிலான், ஹமடன் மற்றும் புஷ்ஷர் உள்ளிட்ட 30 மாகாணங்கள் ஈரானில் உள்ளன. ஒவ்வொரு மாகாணமும் பாரிய பரப்பளவைக் கொண்டது. 30 மாகாணங்களுக்குள்ளும் சுமார் 257 நகரங்கள் உள்ளன.
இலங்கைகையை போன்று ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தான் அரசியல் மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட விடயங்களைக் கையாள்கின்றனர்.
ஆனால், நமது நாட்டிலுள்ள மாகாண சபை முறைமையோ, முதலமைச்சர் பதவியோ ஈரானில் இல்லை. கிட்டத்தட்ட இலங்கையில் முதலமைச்சருக்குள்ள அதிகாரங்களை ஒத்த அதிகாரங்களே ஈரானிய ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
தெஹ்ரான் நகர் :
ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் சனத்தொகை சுமார் 17 மில்லியன்களாகும். இது கிட்டத்தட்ட இலங்கையின் சனத்தொகைக்கு நெருக்கமானது.
தெஹ்ரானில் தான் ஜனாதிபதி மாளிகை, விமான நிலையம், நூதனசாலை, முக்கிய பல்கலைக்கழகங்கள், அரச காரியாலயங்கள், தேசிய நூலம் மற்றும் பிரபல்யமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் உள்ளன.
நமது நாட்டில் வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை தொடங்குவது போல், ஈரானில் சனிக்கிழமையிலிருந்தே வாரத்தின் முதலாவது நாள் ஆரம்பமாகின்றது. வியாழக்கிழமை நண்பகல் 12 மணி முதல் வெள்ளிக்கிழமை வரையான கால பகுதி வார இறுதி நாளாகும்.
எனவே, வெள்ளிக்கிழமைகளில் நிறுவனங்கள், காரியாலயங்கள் என அனைத்து இடங்களும் மூடப்பட்டிருக்கும். அதாவது எமது கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை போன்று முழு ஈரானிலும் வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாகும். இதனை அரசாங்கமும் அங்கீகரித்துள்ளது.
போக்குவரத்து :
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் சுமார் 8 மில்லியன் கார்கள் பாவனையிலுள்ளதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 4 மில்லியன் மோட்டார் சைக்கிள்களும் பாவனையிலுள்ளன. இதனால், கடுமையான வாகன நெரிசல் ஏற்படுவது வழமையாகும்.
சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரையான நாட்களில் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை அதிக வாகன நெரிசல் காணப்படும்.
இதனால், அரச காரியாலயங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்கள் அமையப்பெற்றுள்ள சில வீதிகளை கடப்பதற்கு சுமார் 2 மணித்தியாலங்கள் கூட எடுக்கும் என ஈரானிய நண்பரொருவர் தெரிவித்தபோது ஆச்சரியமாக இருந்தது.
குறித்த போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக ஈரானிய போக்குவரத்துப் பொலிஸார் பல்வேறு செயற்றிட்டங்களை வகுத்துள்ளனர்.
இதன் ஒரு நடவடிக்கையாக, சன நெரிசல் அதிகமாக காணப்படும் 'சிற்றி சென்டர்' எனும் பகுதிக்குள், காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாகனங்கள் பயணிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய குறித்த வீதியினுள் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரையான நேரத்தில் வைத்தியர்கள், ஆசிரியர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் மாத்திரமே, வாகனங்கள் மூலம் நுழைய முடியும். ஏனையவர்கள் எக்காரணம் கொண்டும் அந்த வீதியினுள் நுழைய முடியாது. மீறும் பட்சத்தில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் ஈரான் றியால்கள் வரை அபராதமாக விதிக்கப்படும்.
இதற்கு மேலதிகமாக வாரத்தில் மூன்று தினங்களில் ஒற்றை இலக்க வாகனங்களும் ஏனைய மூன்று நாட்களில் இரட்டை இலக்க வாகனங்களும் 'சிற்றி சென்டருக்குள்' நுழைய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, சனி, திங்கள் மற்றும் புதன் ஆகிய நாட்களில் ஒற்றை இலக்க வாகனங்கள். ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் இரட்டை இலக்க வாகனங்கள். வாகனங்களின் இலக்கத்தின் அடிப்படையில் ஒற்றை மற்றும் இரட்டை இலக்கங்கள் கணிக்கப்படுகின்றன.
மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் எனும் தலைக்கவசம் அணியாமல் பயணிப்பது இலங்கை போக்குவரத்துச் சட்டத்தின் படி குற்றமாகும். இதற்காக 1,000 ரூபாய் அபராதமாக அறவிடப்படுகின்றது.
ஆனால், ஈரானில் மோட்டார் சைக்கில் ஓட்டுவோர் தலைக்கவசம் அணிய வேண்டும் என்கிற கட்டாயமில்லை. அணிந்தால் நல்லது. அவ்வளவு தான். இதற்கு மத்தியில், பெரும்பாலானவர்கள் தலைக்கவசம் அணியாமலேயே பயணிப்பது வழக்கமாக உள்ளது.
இவை ஒருபுறமிருக்க, இலங்கையில் பாதைகளைக் கடப்பது போன்று தெஹ்ரான் நகரில் முடியாது. இலங்கையிலுள்ள பழக்கத்தில் பாதை மாற முற்பட்ட சந்தர்ப்பங்களில் - வீதி விபத்துக்களிலிருந்து பல தடவை நூலிழையில் தப்பித்தேன்.
காரணம், இலங்கையில், வீதியின் இடது பக்கமாகவே வாகனங்கள் பயணிக்கும். ஆனால், ஈரானில் வலது பக்கமே வாகனங்கள் பயணிக்கின்றன. இலங்கை நினைப்பில் இடது பக்கம் பார்த்தவாறு வீதியை கடக்க முற்பட்ட வேளைகளில், வலது பக்கத்திலிருந்து வாகனங்கள் எதிரே வந்ததால் - பலமுறை தடுமாற நேர்ந்தது.
ஆனால், வாகன சாரதியின் இருக்கை, ஏனைய நாடுகளை போன்று ஈரானிலும் இடது பக்கத்திலேயே உள்ளது. வாகனத்தின் முன் ஆசனங்களில் பயணிப்போர் பாதுகாப்பு பட்டியினை அணிந்து செல்ல வேண்டும் என்று எமது நாட்டில் அண்மையில் கட்டாயமாக்கப்பட்ட சட்டமானது, ஈரானில் கடந்த பல வருடங்களாக அமுலிலுள்ளது.
பாதுகாப்பு பட்டியினை அணியாதோர், அதிக தொகையினை தண்ட பணமாக செலுத்த நேரிடும். நமது நாட்டில் வீதியைக் கடப்பதற்காக மஞ்சள் நிற கோடுகள் இருக்கின்றமை போல, ஈரானில் வெள்ளை நிற கோடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாகன உற்பத்தி :
ஈரானில் உள்ள கார்களில் அதிகமானவை அந்த நாட்டில் தயாரிக்கப்பட்டவைகளாகும். அங்கு சுமார் 10 இற்கும் மேற்பட்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. ஐரோப்பிய நாடுகளுக்கு போட்டியாக வாகனங்களை உற்பத்தி செய்வதே இந்த கம்பனிகளின் பிரதான நோக்கமாகும். இவற்றில் அதிக நிறுவனங்கள் கார்களை உற்பத்தி செய்கின்றன.
சுமாட், பேர்ஜோ போன்ற பல்வேறு ரக வாகனங்கள் ஈரானில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த வாகனங்கள் வெனிசுவேலா, சீனா மற்றும் லெபனான் உள்ளிட்ட 20இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஐரோப்பிய கார்களின் தொழில்நுட்பங்களோடு போட்டியிடும் வகையில் நவீன நுட்பங்களை ஈரானியர்கள் கையாள்கின்றனர்.
இதனால், ஈரானிய கார்களுக்கு வெளிநாடுகளில் அதிக கேள்வி உள்ளது. ஈரானிலும் சொந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள் தான் அதிகம் புழக்கத்தில் உள்ளன.
இதேவேளை, ஒரு சில ரகத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் சீனா போன்ற சில நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு ஈரானிய தொழிநுட்பத்தில் பொருத்தப்படுகின்றன.
ஈரானில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களுக்கு, அந்த நாட்டில், ஏனைய நாட்டு வாகனங்களை விடவும் விலை குறைவாகும்.
அப்படியென்றால், ஈரானிய வாகனங்களை இலங்கைக்கும் இறக்குமதி செய்யலாமே என்று நீங்கள் யோசிக்கிறீர்களா?
இலங்கை நிலைவரப்படி பார்த்தால் ஈரானிய கார்கள் இங்கு அதிக விலைக்கே வரும். அதாவது, ஈரானிய நாணயத்துக்கும் இலங்கை நாணயத்துக்குமிடையிலான ஏற்றத்தாழ்வு, மற்றும் இலங்கைக்கு ஒரு காரைத் தருவிக்கும் போது செலுத்த வேண்டிய சுங்கத் தீர்வை உள்ளிட்ட அனைத்தையும் கூட்டிப் பெருக்கிப் பார்த்தால் - ஈரானிய கார்களுக்கு இலங்கையில் அதிக விலை செலுத்த வேண்டியிருக்கும்.
இதேவேளை, வெளிநாட்டு வாகனங்களை ஈரானில் இறக்குமதி செய்யும் போது, அவற்றுக்கு அதிக வரி விதிக்கப்படுகின்றது.
உதாரணமாக 2700 சீ.சீக்கு மேற்பட்ட வாகனங்களை வெளிநாடுகளிலிருந்து ஈரானுக்கு இறக்குமதி செய்யும் போது - சுமார் 90 சதவீதமான சுங்க வரியினை, குறித்த வாகனங்களுக்காகச் செலுத்த வேண்டும்.
உள்நாட்டு வாகன உற்பத்தியினை மேம்படுத்துவதற்காகவே வெளிநாட்டு வாகன இறக்குமதிகளுக்கு அதிக வரி விதிக்கப்படுவதற்கான பிரதான காரணமாகும் என்கிறது அராங்கம்.
திருத்தம்:
சவூதி அரேபியாவுக்குள் நுழையும் இஸ்லாமியரல்லாத பெண்கள் சவூதி அரேபிய பெண்களை போன்று தலையை மூடுவதோடு, உடல் முழுவதும் மறைக்கும் வகையிலான ஹபாயா எனும் ஆடையினை அணிய வேண்டும் என கடந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.
சவூதி அரேபியாவுக்குள் நுழையும் இஸ்லாமியரல்லாத பெண்கள் உடலை மாத்திரம் மூடினால் போதும் தலையை மூட வேண்டிய அவசியமில்லை என்பதே சரியாகும். இதைச் சுட்டிக்காட்டிய தமிழ்மிரர் இணையத்தளத்தின் சவூதி அரேபிய வாசகரான அன்சாருக்கு மிக்க நன்றி.
கடந்த மாதம் (ஒக்டோபர்) ஈரானில் நடைபெற்ற 18ஆவது ஊடக மற்றும் செய்தி சேவைகள் தொடர்பிலான காண்காட்சியில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த எனது ஈரான் தொடர்பான அனுபவத்தினை அடுத்தவாரமும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இக்கட்டுரை தொடர்பான உங்கள் விமர்சனங்களை rifthy.ali@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தொடர்புடைய செய்திகள்:
பிச்சைக்காரரில்லா ஈரான்! (தொடர் - 6)
பெண்களுக்கும் சமவுரிமை கொடுக்கும் ஈரான் (தொடர் - 5)
வட்டியை விரும்பும் ஈரானியர்கள் (தொடர் - 4)
Miyad Thursday, 24 November 2011 03:30 PM
நீங்கள் சொல்லியதில் அனேகமானது அரபு நாடுகளுக்கு பொதுவானது.
பின்வரும் விடயங்கள் தவிர
வாகன நெரிசல், வைத்தியர்களுக்கு பயணிக்க முதல் அனுமதி, ஈரானின் கார் உற்பத்தி, ஆட்சிமுறை.
Reply : 0 0
sano Thursday, 24 November 2011 04:00 PM
சுவாரசியமாக உள்ளது. தொடரட்டும் உங்களது அனுபவங்கள்.
Reply : 0 0
faiz Thursday, 24 November 2011 08:19 PM
நல்ல விடையங்கள் தொடரட்டும்
Reply : 0 0
mansoor a. cader Saturday, 26 November 2011 01:07 PM
நாம் நிறைய அறிந்துகொள்ளவேண்டியுள்ளது. keep it up.
Reply : 0 0
jd Sunday, 27 November 2011 12:11 PM
ஈரானின் இன்றைய நிலை பற்றியும், அமெரிக்காவின் போர்வெறி எதில் பொய் முடியும் என்பது பற்றியும் எழுதுங்கள்.
நன்றி.
Reply : 0 0
mohamed Tuesday, 29 November 2011 09:24 PM
சூப்பர்..........
Reply : 0 0
jwsn Friday, 02 December 2011 05:51 AM
iranai partri nam natteverkel kattaayem arivathu nanrahe irukkum yene ninaikkiran. malum muthelavathil kurippittethil avarkalin jumma tholuhai sammanthemanethu.
einku ullethu aalukku oru palli. aalukku oru sattem. aalukku oru islam. pothakkuraikku markkathethai viyafaram pannurathu. eiverkalai vide iran makkel yawwolowo maal. nanperkalay.
Reply : 0 0
Essa...! Monday, 26 December 2011 06:15 PM
தங்களது விடயங்கள், விளக்கங்கள் மிக்க அருமை..
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
35 minute ago
39 minute ago
41 minute ago