Super User / 2011 டிசெம்பர் 03 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
• மப்றூக்
'அந்த நாளை என்னால் மறக்க முடியாது. எனது வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட சம்பவம் அன்றுதான் நடந்தது. எனது தொழிலுக்குத் தேவையான மூலப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக கல்முனை நகருக்குச் சென்றேன். எதிர்பாராத ஒரு கணப்பொழுதில் பாரிய சத்தம் கேட்டது. மக்கள் சிதறி ஓடினார்கள். என்ன நடந்தது என்பதை உடனடியாக என்னால் அனுமானிக்க முடியவில்லை. சில கணங்களின் பின்னர்தான் அது குண்டு வெடிப்பு என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. கல்முனை நகரில் இருந்த பொலிஸ் காவலரண் ஒன்றினை இலக்கு வைத்து துவிச்சக்கர வண்டியொன்றில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த குண்டொன்று வெடித்ததாகப் பேசிக் கொண்டார்கள். அந்தக் குண்டு வெடிப்பின்போது ஏற்பட்ட காயத்தின் விளைவாகத்தான் எனது கால்கள் இரண்டினையும் நான் இன்று இழந்துள்ளேன்!'
ஏ.பி. தஸ்லீம் பெருமூச்சுடன் சொல்லி முடித்தார். தஸ்லீமுடைய சொந்த இடம் அட்டாளைச்சேனை! தற்போது சம்புநகர் கிராமத்திலுள்ள 25 ஆம் இலக்க வீட்டில் வசித்து வருகின்றார். அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஒரு பகுதியே சம்புநகர் கிராமமாகும். இங்கு - சுமார் 04 வருடங்களுக்கு முன்னர் தொண்டு நிறுவனமொன்று விசேட தேவையுடையோருக்கென வீட்டுத் தொகுதியொன்றினை அமைத்துக் கொடுத்தது. அந்த வீடுகளில் ஒன்றில்தான் தஸ்லீம் வாழ்கிறார்!
தஸ்லீம் பாதிக்கப்பட்டதாகக் கூறும் அந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம் 1992 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. 'அப்போது எனக்கு 36 வயது. ஒரு பெண் குழந்தையிருந்தது. அந்த வயதில்தான் எனது ஒரு காலை இழந்தேன். பிறகு – 08 வருடங்களின் பின்னர் என்னுடைய இரண்டாவது காலும் அகற்றப்பட்டது' என்றார் தஸ்லீம்.
விசேட தேவையுடையோர் என்றால், உடல் அவயக் குறைபாடுடையோர் என்றே நம்மில் அதிகமானோர் எண்ணிக் கொண்டிருக்கின்றோம். மன ரீதியான குறைபாடுடையோரும் விசேட தேவையுடையோர் எனும் வகைக்குள்ளேயே வருகின்றனர்.
விளக்கமாகச் சொன்னால், பிறவியில் அல்லது இடையில் ஏற்படும் குறைபாடு காரணமாக, தனது கருமங்களைச் சுயமாக மேற்கொள்ள முடியாதவர்கள் அனைவரும் விசேட தேவையுடையோர்தான்!
அந்தவகையில், தற்போது உலக சனத்தொகையின் 15 வீதமானோர், அதாவது, 01 பில்லியனுக்கும் அதிகமானோர் விசேட தேவையுடையோராக இனங்காணப்பட்டுள்ளனர்.
இலங்கையைப் பொறுத்தவரை 2001 ஆம் ஆண்டளவில் 1.6 வீதமானோர் விசேட தேவையுடையோராகக் காணப்பட்டதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அதாவது மொத்தச் சனத்தொகையில் 02 லட்சத்து 74 ஆயிரத்து 711 பேர் விசேட தேவையுடையோராக இருந்தனர். ஆனால், 2003 ஆம் ஆண்டு இந்தத் தொகையானது 07 வீதமாக உயர்ந்தது.
இந்தப் புள்ளி விபரம் இப்போது மேலும் அதிகரித்துள்ளது!
விசேட தேவையுடையோரும் நமது சக ஜீவன்கள்தான். சாதாரண மனிதர்களிலிருந்து விசேட தேவையுடையோரை எந்தவொரு விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது!
அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது உறுப்புரைகளில் விசேட தேவையுடையோருக்கான உரிமைகள் உறுதி செய்யப்படுகின்றன.
உறுப்புரை 01:
மனிதப் பிறவியினர் சகலரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர். அவர்கள் மதிப்பிலும் உரிமைகளிலும் சமமானவர்கள். அவர்கள் நியாயத்தையும், மனச்சாட்சியையும் இயற் பண்பாகப் பெற்றவர்கள். அவர்கள் ஒருவருடன் ஒருவர் சகோதர உணர்வுப் பாங்கில் நடந்து கொள்ளல் வேண்டும்.
உறுப்புரை 02:
இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் அல்லது வேறு அபிப்பிராயமுடைமை, தேசிய அல்லது சமூகத் தோற்றம், ஆதனம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்து என்பன போன்ற எத்தகைய வேறுபாடும் இன்றி இப் பிரகடனத்தில் தரப்பட்டுள்ள எல்லா உரிமைகளுக்கும், சுதந்திரங்களுக்கும், எல்லோரும் உரித்துடையவர் ஆவர். மேலும், எவருக்கும் அவருக்குரித்துள்ள நாட்டின் அல்லது ஆள்புலத்தின் அரசியல், நியாயாதிக்க அல்லது நாட்டிடை அந்தஸ்த்தின்அடிப்படையில் - அது தனியாட்சி நாடாக, நம்பிக்கைப் பொறுப்பு நாடாக, தன்னாட்சியற்ற நாடாக அல்லது வேறேதேனும் வகையில் இறைமை மட்டுப்படுத்தப்பட்ட நாடாக இருப்பினும் சரி – வேறுபாடு எதுவும் காட்டப்படலாகாது.
எழுத்துக்களில் எவ்வளவுதான் இருந்தாலும், நமது எண்ணங்களில் மாற்றம் நிகழும் வரை எதுவும் ஆகாது என்கிறீர்களா? உண்மைதான்!!
.jpg)
தஸ்லீமுக்கு இப்போது 56 வயது. இள வயதில் தனது கால்களை இழந்தாலும், அந்த மனிதர் நம்பிக்கையினை இழக்கவேயில்லை என்பதை அவரின் பேச்சு, இயல்பான செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைளிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
தஸ்லீமும் அதை உறுதி செய்தார். 'உடல் அங்கத்தினை இழந்து விடுவதால், வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. என்னுடைய மன தைரியம்தான் எனது பலமாகும். எனக்குக் கால்கள் இல்லை என்பதை நான் இப்போது பொருட்படுத்துவதேயில்லை. எனது காரியங்கள் அனைத்தினையும் நானே செய்து கொள்கிறேன். எனது வருமானத்துக்குரிய தொழிலை இப்போதும் மேற்கொள்கிறேன். இதுதான் வாழ்க்கை என்றான பிறகு – அதை ஏற்று வாழ்வதிலேயே நமது சந்தோசங்கள் உள்ளன'! என்கிறார்.
உடற்குறைபாடுகள் உள்ளோரில் ஒரு சாரார் - தமது தேவைக்காகவும், வருமானத்துக்காகவும் அடுத்தவரை நம்பியும், மற்றவர்களிடம் இரந்தும் வாழ்கின்ற இந்த உலகில் - தஸ்லீம் ஓர் ஆச்சரியக்குறியாகவே நமக்குத் தெரிகிறார்!!!
தஸ்லீமுடைய மனைவியும், மகளும் அட்டாளைச்சேனையில் உள்ளனர். அவ்வப்போது அவர்கள் - தஸ்லீமைப் பார்த்து விட்டுப் போகிறார்கள். தஸ்லீமும் தனக்கு விரும்பிய போது அட்டாளைச்சேனை சென்று குடும்பத்தைப் பார்த்து விட்டு வருகின்றார்.
சம்புநகரிலுள்ள - தனது வீட்டு வளவினுள் தஸ்லீம் - சோளத் தோட்டமொன்றினைச் செய்து வருகின்றார். நாம் அவரைச் சந்திக்கச் சென்ற காலை வேளையில் - தனது தோட்டத்தில் தஸ்லீம் களை பிடுங்கிக் கொண்டிருந்தார்.
.jpg)
தோட்ட வேலைகளை முடித்த பின்னர், கொஞ்ச நேரம் நம்முடன் பேசினார். இடையில் அவரின் கைப்பேசிக்கு வந்த அழைப்புக்குப் பதிலளித்தார். பின்னர், தனது தொழிலிடத்துக்குக் செல்வதற்கு தயாரானார். நாமும் தஸ்லீமைப் பின் தொடர்ந்தோம்.
தஸ்லீமுடைய 25 ஆம் இலக்க வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 300 மீற்றர் தொலைவிலுள்ள ஒரு வளவினுள் - அவரோடு நுழைந்த நமக்கு ஆச்சரியம் காத்திருந்தது. சொன்னால் நம்புவீர்களா? இரண்டு கால்களும் அற்ற நிலையிலுள்ள தஸ்லீம் - கொங்றீட் தூண்களை உற்பத்தி செய்யும் தொழிலைத் தனியாளாக மேற்கொண்டு வருகின்றார்.
தனது கால்களை இழந்தமையினை - தான் ஒரு குறைபாடாகவே எண்ணவில்லை என்றும், தான் இப்படி சுறுசுறுப்பாக வாழ்வதற்கு மனத் தைரியமே காரணம் என்று தஸ்லீம் கூறியதன் அர்த்தத்தை அப்போது புரிந்து கொள்ள முடிந்தது.
.jpg)
இதேவேளை, சம்புநகர் கிராமத்திலுள்ள விசேட தேவையுடையோரை ஒன்றினைத்து அமைப்பொன்றினை உருவாக்கியுள்ள தஸ்லீம் - அந்த அமைப்பின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.
மட்டுமல்ல, தமது அமைப்பிலுள்ளோரின் தேவைகள், பிரச்சினைகள் குறித்துப் பேசும் பொருட்டு, தூர இடங்களிலுள்ள அலுவலகங்களுக்கெல்லாம் போய்வருகிறார்.
மூன்று சக்கர சைக்கிள் ஒன்றினைத் தனது போக்குவரத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளும் தஸ்லீம் - நீண்ட தூரப் பயணங்களின் போது மட்டும் ஓட்டோக்களில் பயணிக்கிறார்.
.jpg)
சம்புநகர் கிராமத்தில் விசேட தேவையுடையோருக்கென நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீட்டுத் தொகுதிக்கு இன்னும் மின்சாரம் கிடைக்கவில்லை. குடிநீருக்காக இவர்கள் அலைகிறார்கள். அத்தோடு - இருளானதும் யானைத் தொல்லைகளும் உள்ளதால், இவர்களின் பகல் பொழுதுகள் கஸ்டங்களுடனும், இரவுகள் - அச்சங்களோடுமே கழிகின்றன.
இதில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விடயம் என்னவென்றால், சம்புநகர் கிராமம் அமைந்துள்ள அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில்தான் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையும் இருக்கின்றார். குறிப்பிட்டுச் சொல்ல இதில் - என்ன இருக்கிறது என்கிறீர்களா? மின்சாரம், மற்றும் குடிநீர் வழங்கலுக்குப் பொறுப்பான கிழக்கு மாகாண அமைச்சர் இந்த - உதுமாலெப்பைதான்!!
.jpg)
உடற் குறைபாடுகளோடு வாழ்வோருக்கு – தஸ்லீம் ஓர் உதாரண மனிதராவார். உடல் அவயங்களை இழப்பதுடன் வாழ்க்கை முடிந்து போவதில்லை!! அங்கயீனத்தினையும் தாண்டி வாழ்வதற்கு எவ்வளவோ உள்ளன என்பதை தனது ஒவ்வொரு கணப்பொழுதுகளாலும் தஸ்லீம் உணர்த்திக் கொண்டிருக்கிறார்!!
ஆம், 'எழுந்து நிற்பதற்கு' கால்கள் தேவையில்லை!!!
.jpg)
2 hours ago
6 hours ago
7 hours ago
shajahan Saturday, 03 December 2011 07:08 PM
நம்பிக்கை தரும் ஆக்கம் இது. பாராட்டுக்கள் மப்ரூக்.
Reply : 0 0
சிறாஜ் Saturday, 03 December 2011 08:53 PM
உண்மையில் நம்பிக்கை தரும் கட்டுரை. இந்த நபரையும் பாராட்ட வேண்டும். தனது இரண்டு கால்களையும் இழந்தும் தைரியமாக தனது அன்றாட வேலைகளை தைரியமாக திறமாக செய்கிறாரே. மனம் உறுதியாக இருக்கிறது பாராட்டுக்கள். அத்துடன் திறமையான கட்டுரையாளர் மப்றூக் வாழ்த்துக்கள்.
Reply : 0 0
baskaran Saturday, 03 December 2011 10:12 PM
கால் இருந்தும் நடக்க விரும்பாத எத்தனையோ மனிதருக்கு இடையே இவர் ஒரு அதிசய பிறவி என்றுதான் சொல்லவேண்டும். இவரது தன்னம்பிக்கை கை கால்கள் இருந்தும் சோம்பேறிகளாக இருக்கும் நமது சகோதரர்களுக்கு ஒரு முன் மாதிரி ஆகும். இவர் எந்த நோய் நொடியும் இல்லாமல் வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்.
Reply : 0 0
zuhair Saturday, 03 December 2011 11:28 PM
அகத்தின் அழகு முகத்தில் தெரியும். பெரியவரின் முகம் இதற்கு சாட்சி.
Reply : 0 0
A B M ZAWAHIR Wednesday, 07 December 2011 02:27 PM
mabrook ungalai santhikka asaipadukiren, Naan ungal palaya nanpan. pottuvil zawahir. call pannawum.
Reply : 0 0
mansoor a. cader Wednesday, 07 December 2011 06:28 PM
நம்பிக்கையால் வாழும் தஸ்னீம் வாழ்க. நம்பிக்கையை பிறருக்கு உண்டாக்கும் மப்ரூக்கின் எழுத்துக்கள் வாழ்க.
Reply : 0 0
ஜெஸீம் Friday, 16 December 2011 12:07 PM
உளத் தைரியத்தை ஊட்டிய அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும். தஸ்லீம் சகோதரரின் வாழ்வு அனைவருக்கும் சிறந்த முன்னுதாரணம்.
தேடித் திரிந்து தரமான தகவல்களை புடம் போட்டு எழுதும் மப்ரூகின் விபரணக் கட்டுரைகள் தரமானவைகள். தொடர்க உங்கள் பணி.
Reply : 0 0
ummpa Friday, 16 December 2011 11:07 PM
வாழ்க்கை என்பது பலவடிவம் அதில் இந்த மனிதர் நமக்கு ஓர் உதாரண புருசர் . நாம் உழைத்து இறைவனுக்கு பொருந்தாத விடயங்களில் செலவு செய்கிறோம். இவர் தனது குடும்பத்துக்காக தான் இழந்த கால் என்பதை மறந்துவிட்டா.ர் உண்மையில் மனிதன் என்பவன் எப்படி வாழலாம் என்பதுக்கு இவர் ஓர் உதாரணம்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago