A.P.Mathan / 2011 டிசெம்பர் 15 , பி.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியல் என்பதும், அது பெற்றுக்கொடுக்கும் அதிகாரம் என்பதும் மிகப் பெரும் போதையாகும். அரசியலுக்காக அநேகமானோர் எல்லாவற்றையும் செய்கின்றார்கள். தேவையானால், செய்யாமலும் விடுகின்றார்கள்!
அரசியலில் நிலைக்க வேண்டுமானால் மக்களுக்கு நல்லது எதையாவது செய்ய வேண்டும் என்று நினைப்போர் ஒருவகையினர்! ஆனால், தனது எதிராளி மக்களுக்கு நல்லவை எதையும் செய்துவிடக் கூடாது என்று நினைப்போரும் - அதைத் தடுப்போரும் இன்னொரு வகையினர்.
இந்த ஆலாபனை எதற்கு என்கிறீர்களா? சொல்கிறேன் - கட்டுரையைப் படியுங்கள்!!
அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனைப் பிரதேசம் பற்றி முதலில் உங்களுக்குக் கூற வேண்டும். இந்தப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, தீகவாபி என்று இந்தப் பிரதேசத்தில் பல ஊர்கள் உள்ளன. இவற்றில் அட்டாளைச்சேனையானது பெரிய ஊராகும். இங்கு மட்டும் சுமார் 25 ஆயிரம் மக்கள் வசிக்கின்றார்கள். பல்வேறு குறை – நிறைகளோடு உள்ள இந்த ஊரில் - சந்தைக் கட்டிடமொன்று இல்லாமையானது நீண்டகாலக் குறைபாடாகும்.
ஆனாலும், அட்டாளைச்சேனையின் பிரதான வீதியோரத்திலுள்ள குறித்ததொரு பகுதியினை பல்லாண்டு காலமாக மக்கள் சந்தையாகப் பயன்படுத்தி வருகின்றார்கள். வீதியோரங்களில் தற்காலிகக் கடைகளை அமைத்தும், தட்டிகளை வைத்தும் இங்குள்ளோர் தமது வியாபாரத்தினை நடத்தி வருகின்றனர். இங்குதான் மக்கள் தமது கறிகளை வாங்குகின்றனர். இதுதான் இந்த ஊர் மக்களின் சந்தையாகும்!
இவ்வாறானதொரு நிலையில், அட்டாளைச்சேனைப் பிரதேச சபையானது, வடக்கு - கிழக்கு உள்ளூர் சேவைகள் மேம்படுத்தல் திட்டம் எனப்படும் நெல்சிப் திட்டத்தின் கீழ் சந்தைக் கட்டிடமொன்றினை அமைப்பதற்குத் திட்டமிட்டது.
அதற்கு - பொருத்தமானதொரு காணி தேவைப்பட்டது. யோசித்துப் பார்த்ததில் - இதுவரை காலமும் சந்தை இயங்கி வந்த இடத்தில் - பிரதான வீதிக்கு அருகாமையில் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியொன்று உள்ளது. அந்த இடத்தில் சந்தைக் கட்டிடத்தை நிர்மாணிப்பதென பிரதேச சபையினர் தீர்மானித்தனர்.
இதற்கிணங்க, மேற்படி சந்தைக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான முதற்கட்ட நிதியாக அட்டாளைச்சேனைப் பிரதேச சபைக்கு நெல்சிப் திட்டத்தின் கீழ் 71 லட்சத்து 26 ஆயிரத்து 356 ரூபாய் 92 சதம் கிடைத்தது. அதேவேளை, குறித்த சந்தைக் கட்டிடத்தை உரிய இடத்தில் நிர்மாணிப்பதற்கான அங்கீகாரத்தினை அம்பாறை மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எழுத்து மூலமாக வழங்கியியுமிருந்தார். மேற்படி கடிதம் இவ்வருடம் மார்ச் 14ஆம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அப்போதைய விசேட ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் சந்தைக் கட்டிடத்தை அமைப்பதற்கான அனுமதி கிடைத்ததற்கமைய, அட்டாளைச்சேனைப் பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.எம்.நசீர் கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி செய்திப் பத்திரிகைகளில் மேற்படி கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான பகிரங்க கேள்வி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில்தான் - அந்தக் கூத்து நிகழ்ந்தது. அதாவது, குறித்த சந்தைக் கட்டிடத்தை - அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குச் சொந்தமான குறித்த காணியில் நிர்மாணிக்கக் கூடாது என்று கடந்த ஜூலை மாதம் 12ஆம் திகதி இடம்பெற்ற கிழக்கு மாகாண அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த இடத்தில் குறித்த கட்டிடத்தை நிர்மாணிப்பதை தாம் ஆட்சேபிப்பதாகவும் அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது!
உண்மையில் இது ஓர் ஆச்சரியமான விடயம்தான்! ஒரு சந்தைக் கட்டிடம் நிர்மாணிப்பதை எதிர்த்து ஒரு மாகாணசபையின் அமைச்சரவைக் கூட்டத்தில் - வேலை மெனக்கெட்டு ஒரு தீர்மானத்தினை நிறைவேற்றியிருக்கின்றார்கள் என்றால் - இதற்குப் பின்னால் ஒரு கதை இருக்க வேண்டுமல்லவா? ஆம், இருக்கிறது!!
கிழக்கு மாகாணசபையின் அமைச்சர்களில் ஒருவரான எம்.எஸ்.உதுமாலெப்பை – அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர். இவர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சிக்காரர். அந்தக் கட்சியில் தேசிய அமைப்பாளராகவும் பதவி வகிக்கின்றார்.
அட்டாளைச்சேனையானது முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதொரு பிரதேசமாகும். அட்டாளைச்சேனைப் பிரதேச சபையும் முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியிலேயே உள்ளது. அதாவது, 09 அங்கத்தவர்களைக் கொண்ட (தவிசாளரையும் சேர்த்து) அட்டாளைச்சேனை பிரதேச சபையில் 02பேர் தேசிய காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். ஏனைய 07 பேரும் மு.காங்கிரஸ் பிரதிநிதிகளாவர்.
இதனால், கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பைக்கும் - அட்டாளைச்சேனைப் பிரதேச சபைக்குமிடையில் ஒத்துவருவதேயில்லை. எப்போதும் - பனிப் போர்தான்!
அப்படியான போர்களில் ஒன்றாகவே - அட்டாளைச்சேனை சந்தைக் கட்டிட நிர்மாணம் தொடர்பில் கிழக்கு மாகாணசபையில் எடுக்கப்பட்டிருக்கும் தீர்மானத்தினைப் பார்க்க முடிகிறது!
“அட்டாளைச்சேனையில் மு.காங்கிரஸின் ஆட்சியின் கீழுள்ள பிரதேச சபையின் முயற்சியினால் சந்தைக் கட்டிடமொன்று நிர்மாணிக்கப்படுவதை அமைச்சர் உதுமாலெப்பை விரும்பவில்லை. அதனால், அதைத் தடுத்து நிறுத்துவதற்கான அனைத்து வழிமுறைகளையும் அவர் பிரயோகித்து வருகின்றார். அண்மையில், இந்தச் சந்தைக் கட்டிடமானது – குறித்த இடத்தில் அமையக் கூடாது எனத் தெரிவித்து, அமைச்சர் உதுமாலெப்பை துண்டுப் பிரசுரமொன்றினையும் வெளியிட்டிருந்தமையானது இதற்கான சாட்சியாகும்” என்கிறார் அட்டாளைச்சேனைப் பிரதேச சபைத் தவிசாளர்!
மேலும், அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் சந்தைக் கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டு, நிலையானதொரு சந்தை உருவாக்கப்படுமானால், அது – ஏனைய ஊர்களின் வர்த்தகத்தில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. அதாவது, அட்டாளைச்சேனையில் நிலையானதொரு சந்தை அமையுமாயின் - இங்குள்ளவர்கள் - வெளிப் பிரதேசங்களுடனான தமது வர்த்தகத்தினைக் குறைத்துக் கொள்வார்கள். அதன்போது - குறிப்பாக, அட்டாளைச்சேனைப் பிரதேசத்திலிருந்து அதன் அயல் பிரதேசமான அக்கரைப்பற்றுக்கு வர்த்த ரீதியாகக் கிடைக்கும் வருமானத்தில் சடுதியான வீழ்ச்சி ஏற்படக் கூடிய நிலையொன்று ஏற்படும்.
இதனால், அட்டாளைச்சேனையில் நிலையானதொரு சந்தை உருவாவதை அதன் அண்மைய பிரதேசங்களைச் சேர்ந்த வர்த்தகர்களும் விரும்பமில்லை. அவ்வாறு பார்த்தால், அட்டாளைச்சேனையில் நிர்மாணிக்கப்படவுள்ள சந்தைக் கட்டிடத்தைத் தடுக்கும் கரங்களின் பின்னால் அட்டாளைச்சேனையின் அயற் பிரதேச வர்த்தகக் குழுக்களின் அழுத்தங்களும் இருக்கலாம் என்கிறார் - அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முன்னணி வர்த்தகர் ஒருவர்!
இதேவேளை, இந்த சந்தைக் கட்டிடத்தைக் குறித்த இடத்தில் நிர்மாணிப்பதாயின் கிழக்கு மாகாண முதலமைச்சரின் அனுமதியினைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும், அவ்வாறு - முதலமைச்சரின் அனுமதி பெறப்பட்டால் மாத்திரமே - குறித்த கட்டிடத்தினை நிர்மாணிப்பதற்கான அங்கீகாரத்தினை தம்மால் வழங்க முடியும் எனவும் தெரிவித்து, அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளருக்கு நெல்சிப் திட்டத்தின் பிரதித் திட்டப் பணிப்பாளர் கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி கடிதமொன்றினையும் அனுப்பி வைத்துள்ளார்!
எவ்வாறாயினும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரும், அந்தச் சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களும், பொதுமக்களும் மேற்படி சந்தைக் கட்டிடமானது, ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டதன் பிரகாரம், பிரதான வீதியருகேயுள்ள பிரதேச சபைக் காணியில்தான் அமைய வேண்டுமெனக் கூறுகின்றனர்.
அதேவேளை, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாயல் மற்றும் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளம் ஆகியவையும் - குறித்த இடத்திலேயே சந்தைக் கட்டிடம் அமைய வேண்டுமெனத் தீர்மானிதுள்ளதோடு, தமது தீர்மானத்தினை அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளருக்கு எழுத்து மூலமாகவும் அறிவித்துள்ளன.
எனவே, இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதோடு, அட்டாளைச்சேனைப் பிரதேச மக்கள், பொது நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து தீர்மானமொன்றினைக் காணும் பொருட்டு, கிழக்கு மாகாண முதலமைச்சரால் கிழக்கு மாகாண அமைச்சர் ரி.நவரட்ணராஜா தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்தக் குழுவினர், கடந்த வாரங்களில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பல்வேறு அமைப்புக்களைச் சந்தித்து – கருத்துக்களைக் கேட்டறிந்து கொண்டதாகத் தெரியவருகிறது. இருந்தபோதும், மாகாண அமைச்சர் ஒருவரின் தலைமையிலான இந்தக் குழுவானது – தனது சக அமைச்சரான உதுமாலெப்பையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யுமா? பெரும்பான்மை மக்களின் வேண்டுதலை நிலைவேற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் - பார்க்க முடியும்!
மேற்படி சந்தைக் கட்டிடத்தை குறித்த இடத்தில்தான் அமைக்க வேண்டும் என்பதில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரும் பெரும்பான்மை உறுப்பினர்களும் உறுதியாக உள்ளனர் என்பதை வைத்தே – இவ்விவகாரத்தில் பெரும்பான்மை மக்களின் விருப்பினை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
அதேவேளை, குறித்த கட்டிடத்தினை தீர்மானிக்கப்பட்ட இடத்தில் நிர்மாணிப்பதற்கு, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு ஆரம்பத்தில் உத்தியோகபூர்வமான அனுமதியினை வழங்கிய அதிகாரிகள் - தற்போது அந்த அனுமதியினை மீளப் பெற்றுக் கொண்டதற்கான சட்டரீதியிலான காரணங்கள் எவை என்பதை வெளிப்படுத்தியே ஆக வேண்டும்!
ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களின் விருப்பு, வெறுப்புகளுக்கேற்ப நடந்து கொள்வதாகும். அந்தவகையில், அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் சந்தைக் கட்டிட நிர்மாணம் தொடர்பில், அந்தப் பிரதேசத்தின் பெரும்பான்மை மக்களினதும், அமைப்புக்களினதும் விருப்பத்துக்கு மதிப்பளிக்க வேண்டியது – ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மாகாண சபையின் கடமையாகும்!
எங்கோ உள்ள ஓர் ஊரில், அதுவும் - ஒரு சந்தைக் கட்டிட நிர்மாணம் என்கிற சிறியதொரு விடயத்துக்காக - இவ்வாறானதொரு ஊடகத்தில் கட்டுரையொன்று எழுதுவது குறித்து, சிலவேளை உங்களில் யாரேனும் வியப்படையலாம் அல்லது இது தேவைதானா என்று கூடக் கேட்கலாம்!
எங்கோ உள்ள ஓர் ஊரில், அதுவும் - ஒரு சந்தைக் கட்டிட நிர்மாணம் என்கிற சிறியதொரு விடயத்தை முன்னிறுத்தி – கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவையே கூடி முடிவொன்றினை எடுத்திருப்பதை வைத்துப் பார்க்கும் போது - இது சிறியதொரு விடயமாக எனக்குத் தோன்றவில்லை!!
•
2 hours ago
6 hours ago
7 hours ago
Ramzan Sunday, 18 December 2011 12:10 AM
மப்றூக் நீங்கள் கூறி இருப்பது மிகவும் சரி, இதற்கு இன்னும் பெரிய கட்டுரை எழுதி இருந்தால் கூட வியப்பதற்கில்லை,
இங்கே சிலரின் சில்லறை அரசியலை கானக்கூடியதாக இருக்கிறது, வேறு சில கிராமங்களை பற்றியும் கூறி அவர்களின் விதன்டா வாதத்தையும் காட்டி இருக்கிறார்கள். வேறு சில ஊரில் அவ்வாறன சம்பவங்கள் நடை பெறும் போது அந்த ஊர் அரசியல் வாதிகள் வாயை மூடி இருந்தார்கள், இன்று அவ்வாறு இல்லை அவ்வாறு இருந்தாலும் அதை பத்தி இப்போது பேசுவதிலும் எந்த வித அர்த்தமும் இல்லை, அது அவர்களின் கோழைத்தனம், அதற்கு நீங்கள் தயங்காமல் இன்னும் முயற்சி செய்யுங்கள்.
பள்ளி வாயல் ஒன்றும் ஆடம்பர பொருள் அல்ல, அதில் தொழுதால் போதும். மக்கள், சில ஊர்களில் கூட பிரதான வீதியில பள்ளிவாயல் உன்டு, ஆனல் அவர்களின் முக்கால் வாசிப்பேரின் நிலமையை சற்று யோசித்து பாருங்கள்.
---------------
பொத்துவிலான்
Reply : 0 0
thenkilakku Saturday, 17 December 2011 06:21 AM
அமைச்சரினால் அட்டாளைச்சேனையில் பெறுமதி இல்லாத காணிகளை பல இலட்சங்களாக பெறுமதியாக்கியது அமைச்சர் செய்யவில்லையா? மனம் திறந்து சொல்லுங்கள்.
Reply : 0 0
senaiyuraan Saturday, 17 December 2011 06:28 AM
தலைவர் அஸ்ரப் காலத்தில் முதலாவது மீலாதுன்நபி தூபி அமைத்துள்ள இடம் சுத்தமாக இருப்பதை விரும்பாதவர்களின் செயல் கண்டிக்கனும் ஒரு பக்க சார்பை நிறுத்தி நடுநிலையாக எழுதுங்கள் வரவேற்கத்தக்கது.
Reply : 0 0
senaiyuraan Saturday, 17 December 2011 06:36 AM
தலைவர் அஸ்ரப் காலத்தின் பிறகு அட்டளைச்சேனையில் செய்த அபிவிருத்தி என்ன என்பதை எழுதுங்கள் மப்ரூக்.
அபிவிருத்தியில் இருந்து தேசிய பட்டியல் ஏமாற்றப்பட்டது வரைக்கும் எழுதினால் சுகமாகவும் நடுநிலையாகவும் இருக்கும்
Reply : 0 0
senayuraan Saturday, 17 December 2011 06:53 AM
அமைச்சருக்கு வாக்கு போட்ட மக்கள் அவரின் சொந்த ஊர் மக்கள் அவருடனும் இருக்குறார்கள். என்றும் நமக்கு கிடைத்ததை கொண்டு திருப்தியடைய வேண்டும்.
Reply : 0 0
munayuraan Saturday, 17 December 2011 03:30 PM
பக்க சார்பை விட்டு அமைச்சரின் பக்கம் சென்று அவரின் கருத்தையும் எழுதினால் நல்லா இருக்குமே. இருந்தும் எமது ஊரின் நீண்ட நாள் தேவையாக இருக்கும் சந்தை கட்டிடம் கட்டி முடியுமா இல்ல, ஊரின் 10000 கால் மண்டபம் மாறி 10 வருடம் எடுக்குமா ???
Reply : 0 0
avathani Saturday, 17 December 2011 06:24 PM
பெறுமதி இல்லாத காணி பெறுமதியானது உண்மை. அமைச்சருக்கு என்ன இலபாம் கிடைத்தது என்றும் எழுதுங்கள்.
Reply : 0 0
zaro Saturday, 17 December 2011 07:25 PM
அன்பின் மப்றுக் பெறுமதிகள் இல்லாமல் அட்டாளைச்சேனையில் கிடந்த உங்கள் சம்புகலப்பு காணிகளை அஷ்ரப் வீதியை போட்டு பல கோடிகளுக்கு துண்டு துண்டாக விற்பனை செய்ய காரணமாக இருந்த அமைச்சர், ஊரின் அபிவிருத்தியை தடுக்கின்றாரா ?? சந்தை விடயத்தில் முரண்பாடு என்பதால் ஊரின் நலவை அமைச்சர் விரும்பவில்லை என்பது பொருளாகுமா?? அமைச்சரின் அபிவிருத்தி காற்றை எதிர்கட்சியில் இருந்தும் ரசித்து சுவைத்து பாராட்டியதும் நீங்கள்தான். இன்று அமைச்சர் ஒன்றும் செய்ய விடுகின்றார் இல்லை என்பதும் தாங்களே!
Reply : 0 0
zaro Saturday, 17 December 2011 07:31 PM
senaiyuraan தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் பின் வந்த முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அட்டளைச்சேனை மண்ணுக்கு ஒண்டும் செய்ய இல்லை எண்டாலும் பரவாயில்லை
தேசியபட்டியல் என்று சொல்லி உபத்திரம் செய்யாமல் இருந்தால் போதும். " மக்கள் மடையர்கள் இல்லை "
Reply : 0 0
janoovar Saturday, 17 December 2011 07:53 PM
அமைச்சர் உதுமாலெப்பை அவர்கள் செய்த சேவையை பற்றி தம்பி மப்றூக் அவர்களுக்கும் தெரிந்த விடயம். உங்களுக்கு அமைச்சரின் சேவையை தெரிந்து கொள்ள வெளி உலகத்துக்கு வந்து பாருங்கள். இப்படியான பக்கசார்பான செய்திகளை பிரசுரிக்காதீர்கள்.
Reply : 0 0
senaiyuraan Saturday, 17 December 2011 08:51 PM
அவதானி அஷ்ரப் வீதியை போட்டதில் எந்த இலாபமும் அமைச்சருக்கு கிடைக்கவில்லை. ஒரு துண்டு காணியும் இல்லை. இலாபம் அடைந்தவர்கள் தம்பி மப்ரூக் போன்ற காணி சொந்தகாரர்கள் மட்டுமே !
அமைச்சர் ஊரின் நலனில் அக்கரை கொண்டு அபிவிருத்தி செய்துள்ளார் 4000/- க்கும் பெறுமதி இல்லாத சம்புகலப்பு காணி 4 கோடிகளாக மாறியது அஸ்ரப் வீதியின் அபிவிருத்தியால்.
Reply : 0 0
zarjoon Saturday, 17 December 2011 08:58 PM
அமைச்சர் சந்தை கட்டிடம் அந்த இடத்தில் அமைய கூடாது என்று ஒருபோதும் கூறவில்லை. பள்ளிவாசலின் அழகு தோற்றத்தை மறைக்காமல் சந்தையை அமையுங்கள் என்றே கூறி வருகின்றார். முதலில் அதில் தெளிவு படுங்கள் மப்ரூக்.
Reply : 0 0
zarjoon Saturday, 17 December 2011 09:10 PM
janoovar அமைச்சரின் சேவையை பார்க்க வெளி இடங்கள் செல்ல தேவை இல்லை. அவரின் சொந்த இடத்திற்கு சென்றால் போதும் jica திட்டத்தினால் அட்டளைச்சேனை பிரதேசசபைக்கு சொந்தமான பாதைகள் போடப்படுவது அமைச்சரின் அபிவிருத்தி இல்லையா?? அதை அமைச்சர் தடுக்க வில்லைதானே!
ஏன் சந்தையை மட்டும் தடுக்கின்றார் என்பதை நடு நிலையாக நின்று சிந்தியுங்கள்............... சிந்தியுங்கள்............... சிந்தியுங்கள் ........
Reply : 0 0
uvaishameed Saturday, 17 December 2011 10:20 PM
மப்ரூக் நானா உங்கள் கட்டுரையை படிப்பதற்கு முன் அமைச்சரின் நோடீஸ் பார்த்திருந்தேன். அதில் ஒன்றும் அவர் துவேசம் காட்டுவதாக நான் உணரவில்லை. உண்மையில் அட்டளைச்சேனைக்கு இயற்கை அழகு பள்ளியின் அமைப்பும் அந்த குரானும் தான். இன்னும் ஓர் விடயம் ஒரு பத்திரிகையாளனுக்கு அழகு நடுநிலையாக எழுதுவது இப்படியல்ல. தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்
Reply : 0 0
தம்பி Saturday, 17 December 2011 11:05 PM
தம்பிகளா, அட்டாளைச்சேனை கரைச்சைப் பகுதியில் நீங்கள் கூறும் அஸ்ரப் வீதி என்பது - உண்மையில் வீதியே அல்ல. வேளாண்மைக் காணிகள் உவர் நீரால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அமைக்கப்பட்ட உவர் நீர் தடுப்பு அணையாகும்.
மற்றது, அந்த வீதிக்கான பணம் நெக்டப் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டது. அமைச்சர் உதுமாலெப்பை ஊரான் பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பது போல் - நெக்டெப், நெல்சிப், ஜெய்கா போன்ற திட்டங்களினால் மேற்கொள்ளப்படும் வேலைகளை இவர் நாடா வெட்டித் திறந்து வைக்கிறார்.
Reply : 0 0
தம்பி Saturday, 17 December 2011 11:33 PM
இப்போதைய இடத்தில் சந்தையைக் கட்டாமல், வேறு இடத்தில் கட்டினால் - அங்கு சனங்கள் பெரிதாகப் போகமாட்டார்கள். வியாபாரம் நடக்காது.
அதனால்தான் சன நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் சந்தையைக் கட்டச் சொல்கிறார். இது அக்கரைப்பற்றின் பொருளாதாரத்தைக் காப்பாற்றுவதற்கான சூழ்ச்சி.
கட்டுரையாளர் மப்றூக் எழுதியிருப்பது அப்பட்டமான உண்மை.
Reply : 0 0
thenkilakku Saturday, 17 December 2011 06:19 AM
அமைச்சரினால் அட்டளைச்சேனையில் செய்த அபிவிருத்தி புரட்சியை ஏன் மப்ரூக் மறந்திட்டார்? அஷ்ரப் வீதியை ரசித்து சுவாத்தீர்களே.
Reply : 0 0
nanpan, add Sunday, 18 December 2011 12:31 AM
ஊறாண்ட கோழியை அறுத்து தனது தாயின் பெயரில் கத்தம் ஓதியது போன்றுதான் இந்த அமைச்சர் எங்களது ஊருக்கு செய்த சேவை, இதுவும் அனைவருக்கும் தெரியும், அவ்வாறாயின் சும்மா கிடந்த ஆதங்கரையை மூடுவதும் ஒரு அபிவிருத்தியா? தனது சொந்த இலாபத்திற்காக செய்கின்ற வேலைகளை நீங்கள் அபிவிருத்தி என்கிறீர்கள். ஐயோ ஐயோ..
Reply : 0 0
nanpan, add Sunday, 18 December 2011 12:37 AM
பள்ளிவாசலின் அழகைக்காட்டி எவரும் வருமானம் பெறவில்லை.. பள்ளிவாசலுக்கு சென்று தொழுவதுதான் அந்த பள்ளிவாசலுக்கே அழகு.. மாறாக நீங்கள் கூறுவது போன்று கட்டிடம் அமைக்கவேண்டுமானால் ஆகாயத்தில்தான் அமைக்க வேண்டும்.
சிறு பிள்ளைத்தனமான பேச்சுக்களை விட்டுவிட்டு, நடைபெறும் அபிவிருத்திக்கு தடையாக இருக்காமல் இருப்பது நல்லது..
Reply : 0 0
zarjoon Sunday, 18 December 2011 01:37 AM
நானா மப்ரூக் உண்மையில் அது உவர்நீர் அனைக்கட்டுதான் அந்த கட்டுக்கு அஸ்ரப் வீதி என பெயர் சூட்டியதால் தான் உங்களுக்கு உரிய காணி பல இலட்சம் பெறுமதியானது என்பதைதான் சொன்னேன்.
எதிர்காலத்தில் அது ஒருவழி பாதையாக மாறும் என்பது அமைச்சரின் கனவு.
nectep jica திட்டங்கள் யாவும் கிழக்கு மாகாண அமைச்சின் அனுமதியில் நடக்கும் திட்டங்களே என்பதையும் தெரிய படுத்துகின்றேன் அத்திட்டங்களுக்கு பொறுப்பான அமைச்சர் நாடா வெட்டாமல் ???? அமைச்சர் உதுமாலெப்பை ஆரம்பித்ததை அவரே நாடா வெட்டினார்.
Reply : 0 0
jes Sunday, 18 December 2011 01:39 AM
எல்லோரும் நல்லவர்கள், விட்டுக்கொடுப்புக்கு நல்ல கூலி உள்ளது, சந்தையையும் கட்டலாம், நல்லதொரு அழகாண மினரா உடன் Gateway ஒன்றை பள்ளிவாசல் என்ற்றன்சில் பிரதான வீதிக்கு அண்மையில் கட்டினால் முடிந்து விட்டது.
Reply : 0 0
zarjoon Sunday, 18 December 2011 02:22 AM
கட்டிட நிர்மாண வேலைக்கு முன் கொட்டிய மண்ணினால் பள்ளிவாயலின் அழகு மறைக்கிறது.
இதில் நிரந்தர கட்டிடம் அமைத்தால் மறையாமலா விடும்?
Reply : 0 0
ummpa Sunday, 18 December 2011 04:35 AM
தெளிவான விளக்கம் . இதற்கு தானைத் தலைவர் அவரின் பங்கு என்ன ? எல்லா விடயத்திலும் எதிரியாக இவர்கள் இருந்தால் வரப்போகின்ற தேர்தலில் எப்படி உங்கள் முன் தோன்றுவார்கள். நீங்கள் இனிமேலும் பொறுமை காக்க தேவை இல்லை. எனவே உடன் சட்டம் இருக்கிறது . நிசாம் காரியப்பர் தான் இருக்கிறார். அவரை நாடுங்கள்.
Reply : 0 0
Nawas Sunday, 18 December 2011 01:23 PM
sarjoon, சந்தைக் கட்டிட விடயம் சம்பந்தமாக எழுதப்பட்டிருக்கும் கட்டுரைக்கு கருத்து எழுதுவதென்றால் - அது பற்றித்தான் பேச வேண்டும். அதை விட்டு, அமைச்சர் உதுமான் அதைப் போட்டார், இதைத் தோண்டினார், என்றெல்லாம் ஏன் வாப்பா எழுதுறாய்?
இதைத்தான் நம்ம மூத்தாக்கள் சொல்லியிருக்காங்க.... ஆடு அறுக்கும் போது, ...... அறுக்கக் கூடாது என்டு.
Reply : 0 0
Nawas Sunday, 18 December 2011 01:28 PM
sarjoon, ஊரு கோபப்பட்டா தாங்க மாட்டியள் மக்காள். அட்டாளைச்சேனை சேமனும் மார்கட் கட்டட விசயத்தில நிறையப் பொறுமை காத்திட்டாரு.
ஊரோட ஒத்தோடுங்க. முடியவில்லையண்டா - மூடிக்கிட்டு இருங்க மக்காள்.
Reply : 0 0
senaiyuraan Thursday, 22 December 2011 05:41 AM
தவிசாளரையும் அமைச்சரோடு ஒத்து ஓட சொல்லுங்க இல்லாவிட்டால் அபிவித்தியை எமது பிரதேசம் காணாது.
Reply : 0 0
Fairoos Thursday, 22 December 2011 03:24 PM
Still Hakeem lives he is the grade leader of muslim congress as the way Athaulla lives , leader of National congress but if election comes again they will come and tell their justification in front of the people of Addalaichenai about the matter of market complex construction....to solve this problem find a another new suitable location for market construction it will be satisfied the both parties supporters other wise the case will be filled in court....i hope that u know the court procedure
Reply : 0 0
sharmee Friday, 30 December 2011 05:16 AM
மார்க்கெட் தொடர்பா எழுதுவதற்கு முதல் நான் ஒரு SLMC தீவிர ஆதரவாளர் என்று தொடங்க வேண்டும் ....பள்ளியை மறைக்க மார்க்கத்தில் ஆதாரம் சொல்லுமளவுக்கு நீங்கள் ஒன்றும் இஸ்லாமிய வாதி இல்லை .. நீங்கள் அழகான வீடு ஒன்றுக்கு முன்னால் toilet ஒன்றை கட்ட விரும்புவிர்களா ???. அதுமட்டுமல்ல LUKAR ,ASAR தொழுகைக்கு பாதிப்பு ஏற்படும். இது தொழுபவர்களுக்கு மட்டும் தெரியும். அடுத்த விடயம் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை ஒருவரினால் மார்க்கெட் கட்டப்படுவது தடுக்கப்படுமானால் SLMC தலைமைத்துவம் என்ன செய்கிறது சகோதரர் மப்றுக்?
Reply : 0 0
senaiyuraan Tuesday, 03 January 2012 01:20 AM
பள்ளிக்கு அருகாமையில் அமைச்சரினால் கட்டப்பட்ட கலாசார மண்டபத்தில் என்று பிரதேச சபையா ??? அதுவும் அமைச்சரினால் அட்டளைசேனைக்கு செய்யப்பட்ட அபிவிருத்திதான் மப்ரூக். அதை ஏன் அமைச்சர் தடுக்கவில்லை தாங்கள் கூறுவது போல்?
அமைச்சர் அபிவிருத்தியை தடுக்கவில்லை என்பதை நிருபிக்க இதுவும் ஒரு காரணம்
Reply : 0 0
ooraan Thursday, 05 January 2012 04:54 PM
சகோதரர் சர்ஜூன் !நல்லது செய்யாவிட்டாலும் தீமை செய்வதயாவது கைவிட வேண்டும். நாங்களும் அந்த ஊரான் தான். ஒருநாளும் சந்தையினால் பள்ளிவாசலுக்கு எந்த பதிப்பும் இடம் பெறபோவதில்லை....
Reply : 0 0
Minwar Friday, 06 January 2012 06:32 PM
sharmee அவர்களே... பள்ளிவாசலை மறைக்கும் வகையில் கட்டிடங்களைக் கட்ட வேண்டாம் என்று இஸ்லாத்தில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. இதைச் சொல்வதற்கு கட்டுரையாளர் மார்க்க அறிஞராக இருக்க வேண்டும் என்று இல்லையே?
அதுமட்டுமன்றி, ஊரின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் ஒரு சந்தையை கக்கூசோடு ஒப்பிடும் உங்கள் கேவலமான புத்தியை விளக்குமாறால் அடிக்க வேண்டும்!
Reply : 0 0
மப்றூக் Friday, 16 December 2011 02:52 PM
Mohammed Hiraz அவர்களுக்கு, தெரிந்த விடயங்கள் பற்றித்தான் எழுத முடியும்.
கிழக்கு மாகாணத்தில் பொய்யாக பள்ளிக் கட்டிடங்கள் உடைக்கப்படுவதாக நீங்கள் குறிப்பிடும் இடம் காத்தான்குடியாக இருக்க வெண்டும் என நினைக்கிறேன்.
அதைப் பற்றி எழுதலாம், ஆனால் - அங்கு தமிழ் மிரருக்காக தீவிரமாய் செயற்படும் ஊடகவியலாளர்கள் உள்ளனர்.
நான் எழுதும் விடயங்களில் - எனது ஊடக தர்மத்தினையும், நேர்மையினையும் அவதானியுங்கள்! எழுதாத விடயத்தை வைத்துக் கொண்டு - உங்கள் மதிப்பெண்களை என் மீது கிறுக்கி விடாதீர்கள்!
நன்றி!
Reply : 0 0
min from qatar Friday, 16 December 2011 06:16 AM
ரொம்ப நன்றாக விளக்கி சொல்லிருக்கின்றீர்கள் மப்றூக். இது சிறியதொரு விடயம் இல்ல மாகாண அமைச்சருக்கு அட்டளைச்சேனை மக்களின் விருப்பம் வெறுப்பாக உள்ளது. அமைச்சரே மக்களின் விருப்பம். அதை நிறைவேற்ற வேண்டியது உங்களின் கடமை அல்லவா மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுங்கள் !!!!!!!!!!!!
Reply : 0 0
meenavan Friday, 16 December 2011 06:24 AM
சந்தை விவகாரதிற்க்கு சிறப்பு கட்டுரை எழுதிய மப்ரூக்,அஸ்ரப் நகர மக்களின் இருப்பு பற்றி அக்கறை எடுக்கவில்லை? அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்குள் வரும் ஊர் தான் அஸ்ரப் நகரம் என்பதை அறியாரோ?
Reply : 0 0
Suresh Friday, 16 December 2011 07:15 AM
மப்ரூக் உங்க கருத்து நியாயம் இருந்தாலும் நீங்க இதுல உடன் படுற மாதிரியும் பள்ளிவாசல மறைக்கணும் என்டா மாதிரியும் கருத்த சொல்லாதது கொஞ்சம் உதைக்கிதே. நீங்களும் ஏதும் கட்சி சார்போ.... அது சரி இந்த அமைச்சருக்கு இன்னும் விளங்கலையோ அட்டாளைச்சேனைய அவரோட தலைவர் ஒரு முடிவு கட்டாம விடமாட்டார் எண்டது. எல்லத்துக்கும் வருகிறது மாகாண சபை தேர்தல் ...... நானும் வாறன்...
Reply : 0 0
Mohammed Hiraz Friday, 16 December 2011 08:20 AM
சொந்த ஊர் எங்கையும் ஊரு விஷயத்தை தான் பணியாற்றும் ஊடகத்தில் ஊதி பெருக்கி இருக்கிறார்!!!இதனைபோல் எத்தனையோ கிழக்கு மாகாண ஊர்களில் பள்ளிக்கடைகள் சட்டவிரோத கட்டிடம் என்ற பச்சை பொய்யுடன் உடைக்கபட்ட போதெல்லாம் இந்த ஊடகவியளாலர் எங்கே இருந்தாரோ..? எல்லாம் நாம் நல்ல இருந்தா சரிதான் என்ற நினைப்புத்தான்... தனக்கு தனகென்றா சுளகு படக்கு படக்கெங்குமாம்... ஊடகவியலாளருக்கு எங்கென்றாலும் அநீதியையும் அதிகார துஸ்பிரயோகத்தையும் வெளி கொண்டுவர வேண்டும் தன்... ஊரு விடயத்தை மட்டும் எழுதுபவரை எப்படி ஊடக தர்மத்தை பேணக் கூடியவர் என்று நம்ப முடியும்???
Reply : 0 0
AW Hussain Friday, 16 December 2011 08:34 AM
உண்மையில் தனது ஊருக்கு வரும் ஒரு நல்ல ப்ராஜெக்ட் ஐ தடுப்பவன் தன் தாயை மறுப்பதுக்கு சமன்.
Reply : 0 0
ripthi Friday, 16 December 2011 10:34 AM
பிரச்சினைகளை வளர்ப்பதுதான் மப்றுக் தம்பியின் தொழில் ... அது எப்போதோ தெரியும் பொதுமக்களுக்கு. உதுமாலெப்பைக்கும் இவருக்கும் முரண்பாடு உள்ளது என்றுதான் விளங்குகிறது தம்பி மாப்றுக்.
Reply : 0 0
Dr.M.Inamullah PhD Friday, 16 December 2011 11:51 AM
அட்டாளைச்சேனை மக்கள், பள்ளிவாயல் நிர்வாக சபைகள், சிவில் தலைமைத்துவங்கள் எடுத்த முடிவு எதுவாயினும் அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் அரசியல் வாதிகள் அவற்றை அமுல் படுத்த வேண்டும், உள்ளூராட்சி மன்ற விவகாரத்தை மாகாண சபை மட்டத்திற்கு எடுத்துச் சென்று அதை முதலமைச்சரின் அனுமதிக்காக தொக்க வைப்பது, நாய்களுக்கு கிடைத்த மாமிசத்தினை நரியிடம் எடுத்துச் செல்வது போன்று எனக்குப் படுகிறது.
Reply : 0 0
ali Friday, 16 December 2011 01:04 PM
நீங்கள் ஒரு விடயத்தை மறந்து விட்டீர்கள். இந்த இடத்தில மார்க்கெட் அமையும்போது எமது ஊரின் பள்ளிவாயல் மறையும் என்பதை நீங்கள் சுட்டிக் காட்டவில்லையா? இது உங்களின் சுய நலத்தை காட்டுதல்லவா மப்றூக் அவர்களே?
Reply : 0 0
imam Friday, 16 December 2011 01:12 PM
மப்ரூக் சரியான முறைல theliwu படுத்திட்டிங்க. இதுக்கு மேல அல்லா தான் தீர்ப்பு தருவான். நிச்சயம்.
Reply : 0 0
umarkmusammil Friday, 16 December 2011 01:36 PM
santhaikku pooi parteen akkaraipattu santhail vanki addalaichenaieil kudiya vilaikku vikkranka. ithukku santhai thevaiya
Reply : 0 0
மப்றூக் Friday, 16 December 2011 02:30 PM
அன்பின் Meenavan,
அஷ்ரப் நகர் குறித்து - தமிழ் மிரரில் 02 கட்டுரைகளை எழுதியுள்ளேன். அவை -
01) நிலம் விழுங்கும் பூதம்
http://www.tamilmirror.lk/2010-08-31-14-50-37/13453-2010-12-22-07-45-44.html
02 யானை களவாடும் நிலங்கள்
http://www.tamilmirror.lk/2010-08-31-14-50-37/11219-2010-11-15-17-23-38.html
இவை தவிர, தேசிய தினசரிப் பத்திரிகையொன்றில் 'தீகவாபி வெட்கப்படவைக்கும் கதை' எனும் தலைப்பிலும் கட்டுரையொன்றினை எழுதியுள்ளேன்.
மேலும், தனியால் தொலைக்காட்சி செய்தியில் - அஷ்ரப் நகர் பிரச்சினையை கதையாக ஒரு தடவையும், செய்தியாக பல தடவைகளும் கொண்டு வந்துள்ளேன்.
அஷ்ரப் நகர் குறித்து தமிழில் தொடர்ச்சியாகவும், அதிகமாகவும் எழுதி வருபவர்களில் நானும் ஒருவர்!
Reply : 0 0
Faazil Friday, 16 December 2011 02:40 PM
ஒரு வேலையும் இல்லாத இந்த மாகாண அமைச்சருக்கு ஊரைக் குலைக்கும் வேலையையாவது செய்ய விடுங்கள் !!!!!!
Reply : 0 0
pasha Friday, 16 December 2011 02:41 PM
மாண்பு மிகு மாகாண அமைச்சர் பக்கத்துக்கு ஊர் மக்களால் வாக்கு வழங்கப்பட்டு மாகாண அமைச்சர் ஆனவர்... சொந்தஊருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எந்த பொறுப்பும் அவருக்கு இல்லை ஏனெனில் சொந்த ஊர் மக்கள் அவருக்கு வாக்கு அளிக்க வில்லை...
Reply : 0 0
மப்றூக் Friday, 16 December 2011 02:44 PM
அன்பின் ali, இஸ்லாத்திலோ அல்லது சட்டத்திலோ - பள்ளி வாசலின் தோற்றத்தை மறைக்கும் வகையில் - கட்டிடங்களை அமைக்கக் கூடாது என்று எங்காவது சொல்லப்பட்டிருந்தால் - அதை ஆதாரங்களுடன் எழுதுங்கள்!
மட்டுமன்றி நீங்கள் சொல்வது போல் பார்த்தால், நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள், பன்சலைகள், கோயில்களை மறைக்கும் வகையில் கட்டிடங்களை அமைக்கக் கூடாது என்று ஒவ்வொரு சமயத்தவரும் கிளம்பினால், அவைகளைச் சுற்றியுள்ள லட்சக் கணக்கான ஏக்கர் நிலங்கள் பயன்பாடின்றி சும்மா கிடக்கும் நிலை ஏற்படும்!
யதார்த்தங்களோடு சிந்திக்க பழகுவோம்!
Reply : 0 0
meenavan Friday, 16 December 2011 05:53 AM
அட்டாளைச்சேனை சந்தை விவகாரம் மு.கா., தே.கா., கையிலிருக்கின்றது. மல்லுகட்டும் இருதரப்பு தலைவர்களும் மத்திய அரசில் அமைச்சர் பதவி வகிக்கிறார்கள், என்னே சமூகமும் அதன் தலைவர்களும் இவர்கள்தான் சமுக உரிமைகளின் காவலர்கள்.
Reply : 0 0
சிறாஜ் Friday, 16 December 2011 03:28 PM
வாவ் சிறந்த கட்டுரை ஒன்றை தந்திருக்கார் செய்தியாளர் மப்றூக். சரியான
100% உண்மையைச் சுமந்து வந்திருக்கும் இக்கட்டுரைக்கும் பிரசுரித்த தமிழ் மிரருக்கும் மற்றும் மப்றூக் அவர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
அந்த வகையில் அட்டாளைச்சேனை சந்தை விடையத்தில் மாகாண அமைச்சர் தேவை இல்லாமல் மூக்கை நுளைத்து மூக்குடந்து போயுள்ளது எல்லோருக்கும் தெரியும் முதலமைச்சர் இதி சம்மந்தமாக தலையிட்டு இங்கு மார்க்கட் கட்டலாமா இல்லையா என்று பார்க குழு அமைத்ததில் மார்கட் கட்டலாம் என்று முடிவானது இப்ப என்ன பதில் ஹி ி
Reply : 0 0
சிறாஜ் Friday, 16 December 2011 03:32 PM
இன்று வக்காளத்தும் கூட்டிக்கொடுப்பும் அதிகரித்துள்ள இந்த வேளையில் ஊருக்கு வந்திருக்கும் இச்சேவையினை சிறப்பாக செய்வதக்கு அனைவரும் அணிதிரண்டு செயற்பட வேண்டியது அனைவர் பொறுப்புமாகும். எனவே ஒன்று படுவோம் வென்று விடுவோம். இன்னும் சில மாதங்களில் ஆட்ட ஓட்டம் எல்லாம் மாகாண சபை கலைப்புடன் முடிந்து விடும். இனிமேல் கால் பிடிப்பும் கைப்பிடிப்பும் ஆரம்பிக்கும் மக்கள் உசாராக இருக்கிறார்கள்.
மக்களுக்கே அரசியல் தவிர அரசியலுக்காக மக்கள் இல்லை. எனவே மக்களின் தேவையை கணக்கில் எடுக்கவும் இல்லையேல் மூக்குடைவதுதான்.
Reply : 0 0
செம்பகம் Friday, 16 December 2011 03:34 PM
இதில எந்தப் பக்கம் பிழை சரி பார்க்கின்ற விடயமில்லை. இது அபிவிருத்தி என்று வந்திட்டா மக்களுக்காக செய்யத்தான் வேண்டும். இல்லாட்டி மா.கா. சபைத் தேர்தலில் காட்டுவாங்க அதல்லாம் சரி, தம்பி மப்றுக் ஒருபக்கமாகவே ஆராயமே அந்த அமைச்சர்ர பக்கம் விசாரித்து உங்கட பிரச்சினை என்னவாப்ப என்று கேட்டிருக்கலாம் தானே அதவிட்டிட்டு ஒரு பக்கமா பாருங்கோ...
Reply : 0 0
kamal Friday, 16 December 2011 04:21 PM
சகோதரா பொது சந்தை தற்போது உள்ள இட வசதி குறைவான இடத்தில் அமைப்பதை விட இடவசதி உள்ள இடத்தில் அமைப்பது சிறந்தது. எமது பிரதேசத்தில் உயர்ந்து நிற்கும் பள்ளிவாசல் தோற்றம் மறையாமல் இருப்பதுடன் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் பொது கட்டிடத்திற்கு இடைஞ்சல் இல்லாமலும் இருக்கும். சிறுபிள்ளைத் தனமாக சிந்திக்காமல் அக்கரைபற்றையும் அட்டளைச்சேனையையும் மூட்டிவிடாதீர்கள்.
Reply : 0 0
Rusaith Friday, 16 December 2011 09:24 PM
ஊரை அபிவிருத்தி செய்றே வழியை யோசிங்கே
Reply : 0 0
mam.fowz Friday, 16 December 2011 10:20 PM
நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். 8:46
Reply : 0 0
senaiyuraan Saturday, 17 December 2011 12:10 AM
அயல் ஊரின் கூடுதலான வாக்குகளை பெற்றுதான் அமைச்சர் பதவி எங்க ஊருக்கு கிடைத்தது என்பது ஊர் அறிந்த உண்மை. இந்த அமைசு பதவிக்கு பலகோடிகள் செலவு செய்து எடுக்கவில்லை. மாறாக நம்பிக்கைக்கும் அரசியல் முதிர்ச்சிக்கும் கிடைத்த அமானிதம் எமது ஊரின் அதே இடத்தில் பல வருடங்களுக்கு முன் நாட்டிய கல்லுக்கு இன்னும் கட்டிடம் இல்லை கல்லு மேல் கல்லு வைத்ததுதான் மிச்சம் எந்த பயனும் இல்லை.
Reply : 0 0
zarjoon Saturday, 17 December 2011 12:15 AM
மப்றுக் நானா உங்க கட்டுரைகளை தமிழ் மிரர் ஊடாக தொடர்ந்து பார்த்து வருபவன். ஆனால் சில கட்டுரைகள் சரியாக இருந்தாலும் பல கட்டுரைகள் பக்க சார்பானவை என்பதை உறுதி செய்கின்றது. எதிர் வரும் காலத்தில் 2 பக்கத்தின் பிழைகளையும் சுட்டி எழுதுங்கள்.
Reply : 0 0
zarjoon Saturday, 17 December 2011 12:22 AM
பிரதேசவாதத்தை கிளப்பி எம்மக்களையும் அழிவு பாதையில் இட்டுசெள்ள வேண்டாம் (உங்களின் விமர்சனத்தால் ). யாவரும் மனிதர்களே. அவர்களில் பிரிவினை எல்லை மார்க்கம் பிரதேசவாதத்தை toonda சொல்லி இருக்கா?
Reply : 0 0
meenavan Saturday, 17 December 2011 12:51 AM
அன்பின் மப்ரூக் நீங்கள் தொழில்சார் ஊடகவியலாளர் உங்கள் ஆக்கங்களை திகதியுடன் குறிப்பிட்டு இருந்தீர்கள் நன்றி. இன்னும் அஸ்ரப் நகர ஆக்கங்கள் வரட்டும், மன உளைச்சலுக்கு ஆளானால் தயை கூர்ந்து மன்னிக்கவும்.
Reply : 0 0
fareek Saturday, 17 December 2011 01:12 AM
சர்ஜுன், அது அவரின் (மப்ருகின்) வழமையான போக்கு. மாத்த முடியாது. அப்படி என்றால் மப்புறுக் செய்தியாளர் தொழிலில் இருந்து விலகுவது சிறந்தது ( பக்கச் சார்பினை தவிர்ப்பதற்கு).
Reply : 0 0
nanpan, add Saturday, 17 December 2011 01:24 AM
Mr. Senaiyuraan, நீங்க கூறிய விடயம் முற்றிலும் உண்மைதான், சொந்த ஊரிலேயே மக்களுடைய ஆதரவில்லாமல் அமைச்சு பதவி வகித்துக்கொண்டு சொந்த ஊர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவரால் மேட்கொள்ளப்படும் அபிவிருத்திக்கு தடையாக இருப்பது மிகவும் கோழைத்தனமான, வெட்கப்படவேண்டிய ஒரு விடயம்....
அதுவும் இறைவனின் இல்லத்தினை காரணம் காட்டி ஊரின் அபிவிருத்திக்கு தடையாக இருப்பவர்கள் இஸ்லாமியர்கள் என்று சொல்வது ஒரு வெட்ககக்கேடான விடயம்...
Reply : 0 0
nanpan, add Saturday, 17 December 2011 04:10 AM
Mr. Fareek மப்ரூக் ஒரு சிறந்த ஊடகவியலாளர் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம், அவர் எந்த விடயத்திலும் பக்கச்சார்பாக நடப்பவறல்ல, இது அவருடைய துறைசர்ந்தவர்களுக்கு ஒரு நியதியும் கூட.. மாறாக ஊரிலே நடைபெறும் அட்டூழியங்களை உலகுக்கு வெளிப்படுத்தினால் அது பக்கசார்பல்ல.. இந்த செய்தி உங்களுக்கு சார்பாக இருந்தால் மப்ரூக்கை வாழ்த்தியிருப்பீர்களா?
அப்படியானால் ஊரின் சேவைகளை தடுப்பவர்களை நீங்கள் எவ்வாறு அழைப்பீர்கள் (மாண்புமிகு அமைச்சர்) அப்படிதானே, இதிலேயே விளங்குகிறது உங்களுடைய அரசியல் வங்கரோத்து..
Reply : 0 0
ala Saturday, 17 December 2011 05:43 AM
அழகான முறையில் விளக்கியமைக்கி உங்களுக்கு வாழ்த்துக்கள் .. முஸ்லிம் மக்களே முஸ்லிம் மக்களை கேவலப்படுத்துகிறார்கள். இத்தனைக்கும் முஸ்லிம்களின் ஒற்றுமை இன்மையை நன்றாகவே காட்டுகிறது. எலக்சன் காலம்களில் மக்கள் நலம் பத்தி வாய் கிழிய பேசுபவர்கள் இன்று மக்கள் நலன் பத்தி சிந்திப்பதே இல்லை அரசியல் லாபம் தேடுவதற்காக மக்களின் நலன்களில் கைவைப்பது சரியல்ல ....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago