2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பிச்சைக்காரரில்லா ஈரான்!

Super User   / 2011 டிசெம்பர் 21 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

•    றிப்தி அலி

- ஆறாவது  தொடர் -

உலகில் எங்கு சென்றாலும் நமக்கு இலகுவாகக் காணக் கிடைப்பவர்கள் பிச்சைக்காரர்கள் எனப்படுகின்ற யாசகர்கள். காகங்கள் இல்லாத தேசம் உண்டென்றாலும் நம்பலாம். ஆனால், பிச்சைக்காரர்களைப் பார்க்கக் கிடைக்காத இடமொன்று உள்ளதென்றால் நம்புவதற்குச் சற்றுக் கடினமாகத்தான் இருக்கும்.

இருந்தாலும், உண்மை அதுவெனில் நம்பியே ஆக வேண்டும்! ஆமாம், ஈரானில் நான் தங்கிருந்த காலப் பகுதியில் ஒரு பிச்சைக்காரரைக் கூட காணவில்லை.

நமது நாட்டிலென்றால் வீதிகள், வணக்கஸ்தலங்கள் என்று அநேகமாக எல்லாச் சூழலிலும் பிச்சைக்காரர்களைக் காண முடியும். ஆனால், ஈரானில் நான் இருந்த அந்த ஏழு நாட்களும் ஒரு பிச்சைக்கரரைக் கூட, காணக் கிடைக்கவில்லை என்பது வியப்பினை ஏற்படுத்தியது.

அடக்க முடியாத ஆச்சரியத்தோடு, இது பற்றி ஈரானியவாசி ஒருவரிடம் கேட்டேன். அவர் சொன்ன பதில் எனது ஆச்சரியத்தை இன்னும் அதிகப்படுத்தியது.

விடயம் இது தான். அதாவது, நமது நாட்டு வீதியோரங்களில் தபால் பெட்டிகள் இருக்கின்றன அல்லவா? அவைபோன்று ஈரானிய வீதிகளில் வெள்ளை, நீல மற்றும் மஞ்சள் ஆகிய நிற பொட்டிகள் காணப்படுகின்றன.

இந்த பெட்டிகளுள் விரும்பியோர் தம்மால் முடிந்த பணத் தொகையினை இட முடியும். அவ்வாறு குறித்த பெட்டிகளுள் இடப்படும் பணம், மாதத்திற்கு இரு தடவைகள் ஒரு குழுவினரால் சேகரிக்கப்படும்.

ஈரானியர்கள் ஒவ்வொரு நாளும் குறித்த பொட்டியினுள் ஸதகா போட்டு கொண்டே நாளை ஆரம்பிக்கின்றனர். இது ஈரானிய மக்களின் அன்றாட விடயங்கோடு கலந்துள்ளது. ஏழை எழியவர்களுக்கு தனவந்தர்கள் உதவுவதையே இஸ்லாத்தில் சதகா என்று அழைக்கப்படுகின்றது.

இவ்வாறு நாடு முழுவதிலுமுள்ள இந்த வெள்ளை நிறப் பெட்டிகளில் இடப்படும் பணம் சேகரிக்கப்பட்டு, அவை ஈரானிலுள்ள ஏழை எழியவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.

இந்நடவடிக்கையினை மேற்கொள்வது "இமாம் கொமெய்னி நிவாரண நிதியம்" ஆகும். கடந்த பல வருடங்களாக இந்தப் பணியினை குறித்த நிதியம் சிறந்த முறையில் செய்து வருகிறது என்றார் அந்த ஈரானியர்.

"இமாம் கொமெய்னி நிவாரண நிதியமானது" இந்த உதவியினை ஈரானிலுள்ளவர்களுக்கு மாத்திரம் என மட்டுப்படுத்தாமல், உலக நாடுகளிலுள்ள ஏழைகளுக்கும் தன்னாலான உதவிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த ரமழான் (நோன்பு) மாதத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட ஈரானிய பேரீச்சம் பழங்களை இந்நிறுவனமே அன்பளிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.

இமாம் கொமெய்னி:

இந்த இடத்தில், இமாம் கொமெய்னி தொடர்பில் பதிவிடுவது பொருத்தமாகும். ஈரானிய மக்களின் இஸ்லாமிய புரட்சி வரலாற்றில் இமாம் கொமெய்னியின் வகிபாகம் முக்கியமானதாகும். ஈரானிய சுகந்திரத்தினதும் விடுதலையினதும் உண்மையான சின்னமாக அவர் திகழ்கிறார்.

ஈரானின் மத்திய மாநிலத்திலுள்ள கொமைன் எனும் நகரத்தில் அறிவுச் செழிப்பும் அர்ப்பணிப்பும் கொண்ட ஸாதாத் குடும்பத்தில் 1902.10.24ஆம் திகதி பிறந்த இமாம் கொமெய்னி, அறிவுத்துறை சார்ந்த மற்றும் பாரம்பரிய கலைகளில் தேர்ச்சி பெற்றார். தனது 27ஆவது வயதில் தத்துவஞானத்தை கற்பிக்க தொடங்கினார்.

30ஆவது வயதில் திருமணம் செய்துகொண்ட கொமெய்னிக்கு, ஆண் மக்கள் இருவரும் பெண் பிள்ளைகள் மூவரும் இருக்கின்றனர். இக்காலகட்டத்தில், ஈரானிய அரசாங்கம் அமெரிக்காவின் கைபொம்மையாக செயற்பட்டது. இதன்போது, ஈரானிய நாடாளுமன்றத்தில் வரப்பிரசாத மசோதாவொன்று சமர்ப்பிக்கக்கப்பட்டு, அது அங்கீகரிக்கப்பட்டது.

இந்த சட்டத்தின் மூலம் ஈரானியர்களை விடவும் அமெரிக்கர்களுக்கு ஈரானில் கூடுதலாக உரிமைகள் கிடைக்க வாய்ப்பேற்பட்டன.
இதனால், குறித்த சட்டத்தினை இமாம் கொமெய்னி எதிர்த்தார். அதற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டார்.

கொமெய்னியின் நடவடிக்கைகளால் தனது ஆட்சிக்குப் பாதிப்பு ஏற்படுமோ என அப்போதைய மன்னராக இருந்த ஷா என்றழைக்கப்படும் றிஸா கான், 1964ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் திகதி இமாம் கொமெய்னி கைது செய்யப்பட்டு துருக்கிக்கு நாடு கடத்தப்பட்டார்.

இதனையடுத்து, துருக்கியின் அங்காரா நகரில் உள்ள புல்வார் ஹோட்டலில் நான்காம் மாடியில் 514 இலக்க அறையில் இமாம் கொமெய்னி அமர்த்தப்பட்டார்கள்.

அங்கிருந்து தன் புரட்சிகர மக்களை வழி நடாத்தினார்கள். இதனால் அவர்களது அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்து மென்மேலும் தனிமைப்படுத்துவதற்காக அங்காராவின் மேற்குப் பகுதியில் 26 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பூர்ச்சா எனும் இடத்திற்கு இடமாற்றம் செய்தனர்.

இந்தக் காலப்பகுதியில் இமாம் கொமைனியால் எவ்வித அரசியல் பணிகளையும் செய்யமுடியவில்லை. ஏனெனில் இமாமும் அவர்களுடனிருந்தவர்களும் துருக்கிய படையினரின் முழு கண்காணிப்பின் கீழ் இருந்தனர்.

பின்னர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள மார்க்க நிலையங்களினதும் உலமாக்களினும் தொடர் நெருக்கடி மற்றும் இமாமை விடுதலை செய்ய வெளிநாட்டிலுள்ள மாணவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சி அதிகரித்தது.

இதனால், துருக்கியிலும் பிரச்சினை ஏற்படுத்தாதிருக்கும் வண்ணம் இமாமை ஈராகிலுள்ள நஜப் நகரத்திற்கு அனுப்பினர். ஈராக் சென்ற கொமெய்னி பல நூல்களை எழுதினார். இக் காலகட்டத்தில், ஈராக்கின் நஜாப் பகுதியில் கொமெய்னி ஒரு பேரறிஞராக மதிக்கப்பட்டார். ஈராக்கிலிருந்து கொண்டே ஈரானிய ஆட்சிக்கு எதிராகச் செயற்பட்டார்.

இந்த நிலையில், 1978ஆம் ஆண்டு இமாம் கொமெய்னியை இழிவுபடுத்தும் வகையில் ஈரானின் தெஹ்ரான் பத்திரிகையில் செய்தியொன்று வெளியாகியது.

இதனையடுத்து இமாம் கொமெய்னிக்கு ஆதரவாக ஈரானில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. பின்னர் அந்த ஆர்பாட்டங்கள் நாடு முழுவதும் பரவியது. ஆர்ப்பாட்டத்தினை அடக்கும் நடவடிக்கையில் அரச படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் காரணமாக, பல நூற்றுக்காணக்கானோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், தான் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என்ற நம்பிக்கையில் பக்தியாரை பிரதம மந்திரியாக நியமித்துவிட்டு றிஸா கான் நாட்டை விட்டு வெளியேறினார்.

இதனையடுத்து 1979ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி இமாம் கொமெய்னி ஈரான் திரும்பினார். நாடு திரும்பி 10 நாட்களுக்குள் மெஹ்தி பாஸர்கான் பிரதமராக நியமித்து இஸ்லாமிய புரட்சியை மேற்கொண்ட அவர், ஈரான் ஆன்மீக தலைவராகவும் செயற்பட்டார்.

1989ஆம் ஆண்டு இமாம் கொமெய்னியின் மறைவின் பின்னர் ஆயதுல்லா கமேனி ஆன்மீக தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஈரானின் தற்போதைய ஆன்மீக தலைவரான ஆயதுல்லா கமேனி, இமாம் கொமைனியின் குடும்பத்தை சேர்ந்தவரல்ல. அத்துடன் இமாம் கொமைனியின் பிள்ளைகள் அல்லது பேர பிள்ளைகளோ அல்லது தற்போதைய ஆன்மீக தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் எவருமே அரச தொழிலில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈரானின் அனைத்து இடங்களிலும் இமாம் கொமெய்னியின் உருவப்படத்தினைக் காண முடிந்தது. மேலும், நாங்கள் கலந்துகொண்ட காண்காட்சியின் உள்நாட்டு கண்காட்சிக் கூடத்திலுள்ள எல்லா இடங்களிலும் இமாம் கொமெய்னியின் உருவப் படங்கள் இருந்தன.

இவை மட்டுமல்ல, இமாம் கொமெய்னி சர்வதேச விமான நிலையம், இமாம் கொமெய்னி முசல்லா என்று – எங்கும் எதிலும் கொமெய்னியின் நாமம் தான்.

கண்காட்சியை பார்வையிட வந்த ஈரானியர் ஒருவரிடம் இமாம் கொமெய்னி பற்றிக் கேட்டேன். "எங்கள் நாட்டில் இஸ்லாமிய புரட்சியினை ஏற்படுத்துவதற்கு கொமெய்னி தான் பிரதான காரணம்.

அமெரிக்காவின் பொம்மையாகச் செயற்பட்ட எமது நாட்டை கொமெய்னி தான் இஸ்லாமிய நாடாக மாற்றினார். அதனால் தான் நாங்கள் இவரை மிகவும் மதிக்கின்றோம்" என்றார்.

இமாம் கொமெய்னியின் ஜனாஸா (சடலம்) தெஹ்ரான் நகரின் எல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. குறித்த இடத்தினை ஈரானிய அரசாங்கம் இன்று வரை பாதுகாத்துள்ளதுடன் பராமரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த இடத்தை நானும் சென்று பார்த்தேன்.

ஆன்மீக தலைவர் நியமனம்:

இதேவேளை, ஈரானிய ஆன்மீக தலைவரின் நியமனம் தொடர்பில் சில விடயங்களை முன்வைக்கின்றேன். ஆன்மீக தலைவரைத் தெரிவு செய்வதற்காக நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு சபை ஈரானில் உண்டு. இச்சபையின் மூலமே ஆன்மீகத் தலைவர் தெரிவு செய்யப்படுவார்.

தலைசிறந்த மார்க்க அறிஞர் மற்றும் உலக மற்றும் இஸ்லாமிய அரசியலின் விஞ்ஞாபனங்களை நன்கு தெரிந்தவரே இக்குழுவினால் ஆன்மீக தலைவராக தெரிவு செய்யப்படுவார். இவர் சட்டத்தின் முன்னிலையில் சாதாரண பிரஜையாகவே கணிக்கப்படுவார்.

இராணுவத்தினருக்கு கட்டளையிடல், உயர் பதவிகளுக்கு ஏற்ற நபர்களை நியமித்தல், விலக்கல், இராஜினாமா கடிதங்களை ஏற்றல், பொதுஜன வாக்கெடுப்புக்கு உத்தரவிடல், தேர்தலின் பின்னர் ஜனாதிபதிக்கான நியமன கடிதத்தில் கையொப்பமிடல்,

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு வெற்றி பெற்றால் அல்லது உயர் நீதிமன்றத்தினால் ஜனாதிபதி குற்றமிழைத்தவர் என தீர்ப்பு வழங்கப்பட்டால் அவரை நீக்கல் உள்ளிட்ட பல அதிகாரங்கள் ஆன்மீக தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆன்மீக தலைவருக்கு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்ற முடியாமல் போதல் அல்லது ஆன்மீக தலைவருக்கான நிபந்தனைகளில் ஒன்றையாவது இழத்தல் அல்லது இறத்தல் அல்லது பதவியை இராஜினாமா செய்தல் அல்லது நிபுணர் குழுவினால் இடைநிறுத்தினால் புதிய ஆனமீக தலைவரை மேற்குறிப்பிட்ட நிபுணர்கள் சபை தெரிவு செய்யும்.

புனித கும் நகர்:

இமாம் கொமெய்னியின் திருமணம் முடிந்த பின்னர் கல்வி பணியாற்றிய இடமே புனித கும் நகராகும். ஈரானின் புனித "இஸ்பஹாமி"ற்கு அடுத்து இரண்டாவது புனித நகராக இது மதிக்கப்படுகிறது.

தலைநகர் தெஹ்ரானிலிருந்து சுமார் 120 கிலோ மீற்றர் தூரத்தில் கும் நகர் உள்ளது. நமது நாட்டில் அண்மையில் திறக்கப்பட்டது போன்ற அதிவேக நெடுஞ்சாலை வழியாக மேற்படி 120 கிலோ மீற்றர்களையும் கடப்பதற்கு சுமாராக ஒன்றரை மணி நேரம் பயணிக்க வேண்டும்.

குறித்த வீதியில் ஒரே நேரத்தில் ஆறு வாகனங்கள் மணித்தியாலயத்திற்கு சுமார் 120 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க முடியும்.
கும் நகரின் பண்பாட்டு, மரபு, கைவினை பொருட்கள் மற்றும் சுற்றுலா அமைப்பு ஆகியனவே ஒரு புராதன இடமாக பதிவு செய்துள்ளது.

இந்நகரில் இமாம் கொமெய்னி வாழ்ந்த வீடு இன்னுமுள்ளது. அந்த வீட்டினை நூதனசாலையாக மற்றும் முயற்சியில் இமாம் கொமெய்னியின் குடும்பத்தார்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

இமாம் கொமெய்னியின் வீட்டுக்குச் செல்லும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அங்கு சென்றபோது அந்த வீட்டினை நூதனசாலையாக மாற்றும் நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது.

இதற்கு மேலதிகமாக ஆயாதுல்லா மர்அஷி நஜஃபி நூலகம், நூர் கணினி நிலையம் உள்ளிட்ட பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இந்நகரில் உண்டு.

இஸ்லாமிய கற்கைகளை மேற்கொள்வதற்கு உலகில் சிறந்தவொரு இடமாக இந்த நகரம் காணப்படுகின்றது. ஏனென்றால் பல இஸ்லாமிய முக்கியஸ்தங்கள் மற்றும் சுமார் 200இற்கும் மேற்பட்ட துறைசார்ந்த பொது நூலகங்கள் இந்நகரில் காணப்படுகின்றமையேயாகும்.

பல வெளிநாட்டு மாணவர்கள் இந்நகரிலுள்ள பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய கற்கையை மேற்கொண்டதை எனது விஜயத்தின் போது காண முடிந்தது.

அத்துடன் ஆயாதுல்லா மர்அஷி நஜஃபி நூலகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கையெழுத்துக்களால் எழுதப்பட்ட பல குர்ஆன்கள் இன்று வரை பாதுகாக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

குறித்த குர்ஆன்கள் இன்றுவரை எந்தவித சேதமுமின்றி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் உலகில் மிக சிறிய குர்ஆனை இந்ந நூலகத்தில் காண முடிந்தது.    

கும் நகரில் பெரும்பாலான ஆண்கள் ஜுப்பா மற்றும் தலைப்பாகை அணிந்தவர்களாக காணப்பட்டனர். அந்த தலைப்பாகைகள் கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களினால் ஆனவை.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பரம்பரையை சேர்ந்தவர்கள் மாத்திரம் கறுப்பு நிறத்திலான தலைப்பாகையை அணிவர். மற்றோர் வெள்ளை நிறத்திலான தலைப்பாகையை அணிவார்கள்.

கடந்த ஒக்டோபர் மாதம் ஈரானில் நடைபெற்ற 18ஆவது ஊடக மற்றும் செய்தி சேவைகள் தொடர்பிலான காண்காட்சியில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த எனது ஈரான் தொடர்பான அனுபவத்தினை அடுத்தவாரமும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். 

தொடர்புடைய செய்திகள்:

பெண்களுக்கும் சமவுரிமை கொடுக்கும் ஈரான் (தொடர் - 5)

வட்டியை விரும்பும் ஈரானியர்கள் (தொடர் - 4)

ஈரான்: உலகின் ஓர் ஆச்சரியக்குறி (தொடர் - 3)

ஈரான்: உலகின் ஓர் ஆச்சரியக்குறி (தொடர் - 2)

ஈரான்: உலகின் ஓர் ஆச்சரியக்குறி (தொடர் - 1)


You May Also Like

  Comments - 0

  • சிறாஜ் Thursday, 22 December 2011 04:23 AM

    மிகவும் பெறுமதியான கட்டுரை சிறப்பாக உள்ளது கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    Rumi Thursday, 22 December 2011 03:08 PM

    the writer cleverly says he has not seen any beggars, all the beggars from iran are begging in the streets of GCC countries.

    Reply : 0       0

    Azam Thursday, 22 December 2011 04:02 PM

    இமாம் கொமைனி அவர்களின் கொள்கைகள், மத நம்பிக்கை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களன். நன்றி

    Reply : 0       0

    Nishath Thursday, 22 December 2011 06:58 PM

    ithaithan islam soliyum irukkirathu. nam naatu mathath thalaivarhalum ithap pin pattra venndum.

    Reply : 0       0

    kanna Saturday, 24 December 2011 08:00 PM

    நல்ல விடயம்

    Reply : 0       0

    Mohamed Haniffa Irshath Sunday, 25 December 2011 06:47 PM

    கட்டுரையாளர் ஈரானை இயலுமானவரை புனிதப்படுத்தியிருக்கிறார்.

    ஆனால் பல உண்மைகளை நாம் பகிரங்கமாக விமர்சித்தால் மாற்று மதத்தவர்கள் சிரிப்பார்கள்.

    ஈரானில் குறுகிய கால திருமணங்கள் காரணமாக பலபிள்ளைகள் ஏதிலிகளாக இருக்கிறார்கள்.

    குறுகிய கால திருமணங்களை ஈரான் அனுமதித்துள்ளதால் அங்கு விபச்சாரம் இல்லை என்று ஈரானியர்கள் பெருமை பேசுவார்கள்.

    ஈரானிய ஷீயாக்கள் இஸ்லாமிய வட்டத்திலிருந்து விலகிச்சென்றுள்ளபோதும் முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்தப்படுவதால் பல தர்ம சங்கடமான உண்மைகளை நாமும் எதிர்நோக்க வேண்டியேற்படுகின்றது.

    Reply : 0       0

    anees Friday, 30 December 2011 12:13 AM

    இந்த கட்டுரையை எனக்கு மெயில் பண்ணினால் மிக உதவியாக இருக்கும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X