Super User / 2012 ஜனவரி 08 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன, அண்மையில் ஊடகப் பேட்டியொன்றின்போது இனப்பிரச்சினை விடயமாக மிக முக்கிய கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.
அரசாங்கம் ஒன்றில் 13ஆம் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்குரிய காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டும். அல்லது அரசியலமைப்பில் இருக்கும் அந்த அதிகாரங்களை தமது நாடாளுமன்ற பலத்தைக் கொண்டு இரத்து செய்துவிட வேண்டும் என்பதே அவரது வாதமாக இருந்தது.
இதன் மூலம் அவர் அரசியலமைப்பில் இருக்கும் மாகாணங்களுக்கான பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை இரத்துச் செய்ய வேண்டும் என்று கருதியிருக்க மாட்டார். அவ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க வேண்டும் என்றே வாதிட்டு இருக்க வேண்டும். சட்டத்தில் மட்டும் அவ் அதிகாரங்கள் இருப்பதில் அர்த்தம் இல்லை என்பதே அவரது வாதத்தின் சாராம்சமாகும்.
ஆனால், அவரது கருத்தை ஐக்கிய தேசிய கட்சியின் ஏனைய தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை போலும். ஐ.தே.க.வின் தவிசாளர் காமினி ஜயவிக்கிரம பெரேரா, மேற்படி கருத்து ஜயலத் ஜயவர்தனவின் கருத்தேயன்றி, தமது கட்சியின் கருத்தல்ல என்று கூறியிருந்தார்.
ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவும் இந்த கருத்தை வெளியிட்ட ஜயலத் ஜயவர்தனவை விமர்சித்து இருந்தார். இதுபோன்ற மிகவும் சிக்கலான விடயங்களை சம்பந்தப்பட்ட சகலரும் ஒன்று சேர்ந்தே தீர்க்க வேண்டும் என அவர் கூறியிருந்தார். உத்தேச நாடாளுமன்றத் தெரிவுக்குழு இந்த விடயம் தொடர்பாக ஆராயும் எனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இரு பிரதான கட்சிகளும் ஜயலத் ஜயவர்தனவின் வாதத்தின் கருவைத் தொட்டுப் பேச முன்வரவில்லை. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் ஏற்கனவே மாகாண சபைகளுக்கு பரவலாக்கப்பட்டு இருக்கின்றன. அது ஏற்கெனவே நாட்டில் சட்டமாக்கப்பட்டுள்ளது.
ஆனால், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களின் பரவலாக்கல் செயலுருவம் பெறுவதாயின் அது தொடர்பான வர்த்தமானி அறிக்கையில் ஜனாதிபதி கையொப்பமிட வேண்டும். அதனை 1987ஆம் ஆண்டு முதல் பதவியில் இருந்த எந்த ஜனாதிபதியும் செய்யவில்லை.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, 1990களின் ஆரம்பத்தில் மேல் மாகாணசபையின் முதலமைச்சராகவிருந்தபோது மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
ஆனால், அவரும் சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிக்கையில் கையெழுத்திட வேண்டிய ஜனாதிபதியாக பதவியேற்றபோது அவ்வாறு கையெழுத்திட மறுத்துவிட்டார். மொத்தத்தில், செயற்படுத்தப்படாத சட்டம் ஒன்று இப்போது நாட்டில் இருக்கிறது. எனவே, அச்சட்டத்தை செயற்படுத்து, இல்லாவிட்டால் அது நாட்டுக்கு பாதகமானது என கருதுவதாக இருந்தால் இரத்துச் செய்துவிடு என்று கோருவதில் தவறில்லை.
ஆனால், அது தொடர்பாக தற்போதைய அரசாங்கம் தெளிவானதோர் நிலைப்பாட்டில் இல்லை. இந்த அதிகாரங்களை செயற்படுத்த முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அண்மையில் இரண்டு முறை கூறியிருந்தார். கடந்த வருடம் ஜூன் மாதம் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவ், பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் இலங்கைக்கு வந்து ஜனாதிபதியை சந்தித்தபோது ஒருமுறை அவர் காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்றார்.
அதன் பின்னர், கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி அலரி மாளிகையில் வைத்து பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்தபோதும் அவர் அக்கருத்தை திட்டவட்டமாக வெளியிட்டிருந்தார்.
எனவே அமைச்சர்களும் அதனையே ஊடகங்களுக்கு கூறி வந்தனர்.
ஆனால் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இம்மாதம் 16ஆம் திகதி கொழும்புக்கு வரவிருக்கும் நிலையில் அரசாங்கம் தமது தாளத்தை மாற்றிக்கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
அண்மையில் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியொன்றின்போது காணி மற்றும் பொலிஸ் விடயங்களில் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கமுடியும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியிருந்தார்.
சில நாட்களுக்குப் பின்னர் பி.பி.சி.யின் சிங்கள சேவையான 'சந்தேசய'வுக்கு அளித்த பேட்டியொன்றின்போது அவர் மேலும் முன்நோக்கிச் சென்று வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பது சம்பந்தமாகவும் தமது நிலைப்பாட்டை தளர்த்திக் காட்டினார்.
காணி, பொலிஸ் அதிகாரங்கள் மட்டுமன்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மீளிணைப்பைப் பற்றியும் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் பேசத் தயார் என அவர் அப்போது கூறியிருந்தார்.
மாகாண இணைப்பு எவ்வாறாக இருந்தபோதிலும், பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கி 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பூரணமாக செயற்படுத்துவதற்கு அரசாங்கம் விருப்பம் தெரிவித்த முதலாவது முறை இதுவல்ல.
2008ஆம் ஆண்டு ஜனவரி மாதமும் அரசாங்கம் இவ்வாறு கூறியது. இந்திய என்.டி. டி.ரி.வி. தொலைக்காட்சியின் 'வோக் த டோக்' நிகழ்ச்சிக்காக வழங்கப்பட்ட பேட்டியொன்றின்போது ஜனாதிபதி ராஜபக்ஷ கூறிய கருத்து இதற்கு உதாரணமாகும்.
மாகாண சுயாட்சி கோரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு பொருத்தமான நடைமுறைத் தீர்வு 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பூரணமாக அமுல் செய்வதேயாகும் என அவர் அதில் கூறியிருந்தார்.
ஒருவாரம் தான் சென்றது, அப்போது இனப்பிரச்சினைக்கு தீர்வு தேடிக்கொண்டு இருந்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவும் அதனையே கூறத் தொடங்கியது. அக்குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண 2008ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளித்த குழுவின் இடைக்கால அறிக்கையிலும் அது குறிப்பிடப்பட்டு இருந்தது.
அவ்வளவு தான். சில நாட்களில் அக்கருத்தும் அரசாங்கத்தினாலேயே எதிர்க்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின் இறுதிக்கட்டத்தில் அரசாங்கத்தின் போர் வெற்றி தெளிவாக தெரிய ஆரம்பித்தபோது பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவது மட்டுமல்ல எவ்வித தீர்வையும் வழங்கப் போவதில்லை என்பதைப் போல் அரச தலைவர்கள் நடந்து கொண்டனர்.
அப்போது அதனை எதிர்த்து பேசும் நிலைமை எவருக்கும் இருக்கவும் இல்லை.
ஆனால், நிலைமை படிப்படியாக மாறி இப்போது தமிழ் தலைவர்கள் பழைய கோரிக்கைகளையே விடுக்க முற்பட்டுள்ளனர். மேலே கூறியதைப் போல் சில வாரங்களுக்கு முன்னர் வரை ஏதேதோ கூறிக்கொண்டிருந்த அரசாங்கம் இப்போது காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பற்றி மட்டுமல்ல வடக்கு, கிழக்கு இணைப்பைப் பற்றியும் பேசலாம், வாருங்கள் என்கிறது.
எனவே தான் அதிகாரங்களை வழங்குவதாக இருந்தால் வழங்குங்கள், இல்லாவிட்டால் அவ்வதிகாரங்களை சட்டப் புத்தகங்களில் இருந்தே நீக்கி விடுங்கள் என ஜயலத் ஜயவர்தன கூறுகிறார். நியாயம் தான்.
ஆனால், 13ஆவது அரசியலமைப்பை தந்த இந்தியா கவனித்துக்கொண்டு இருக்கும் நிலையில் அரசாங்கம் அத்திருத்தத்தில் உள்ள அதிகாரங்களை நீக்கிவிட முற்படும் என்று கூற முடியாது. அதேவேளை அரசாங்கம் அவ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கும் வகையில் உரிய வர்த்தமாணி அறிக்கையை வெளியிடும் என்றும் கூறமுடியாது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீளிணைப்புச் செய்வதைப் பற்றி இந்தியா அவ்வளவு அக்கறை கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. 2006ஆம் ஆண்டு இணைப்பு இரத்துச் செய்யப்பட்டபோதும் இந்தியா பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
உண்மையிலேயே வடக்கு, கிழக்கு இணைப்பும் அதிகாரப் பரவலாக்கலும் ஒத்துப்போகும் கருத்துருவங்கள் அல்ல. இரு மாகாணங்களும் இணைக்கப்பட்ட நிலையில் அதிகாரப் பரவலாக்கலை மேற்கொண்டால் மாகாணத் தலைநகராக அனேகமாக திருகோணமலையே ஏற்றுக்கொள்ளப்படும். பிரிந்து இருந்தால் யாழ்ப்பாணத்தையும் மட்டக்களப்பையும் மாகாண தலைநகரங்களாக கொள்வதே நியாயமாகும்.
எனவே, மாகாணங்கள் இணைக்கப்பட்டால் யாழ். தீவுப்பகுதி மக்களும் கிழக்கில் குமணப் பகுதி மக்களும் மாகாண தலைநகருக்கு வருவதாயின் கூடுதல் தூரத்தை கடக்கவேண்டி வரும்.
மாகாண இணைப்பு என்பது தனி நாட்டுக்கான முன் நிபந்தனையாகவே 1970களிலும் 1980களிலும் முன்வைக்கப்பட்டது. இப்போது அதிகாரப் பரலாக்கத்தின் நோக்கங்களோடு எவ்வளவு தான் ஒத்துப்போகாவிட்டாலும் இது தமிழர்களுக்கு கௌரவப் பிரச்சினையாகியுள்ளது.
டாக்டர் ஜயலத் ஜயவர்தன சிலவேளை அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்குவதற்காகவே அதிகாரங்களை கொடு, இல்லாவிட்டால் அவற்றை இரத்துச்செய் என்று கூறுகிறார் போலும். ஏனெனில் அவர் பிரதிநிதிப்படுத்தும் ஐ.தே.க.வும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் 7 ஆண்டுகள் பதவியில் இருந்தது. அப்போது அவ் அரசாங்கமும் அவர் கோருவதை செய்யவில்லை.
இப்போதும் கூட ஐ.தே.க. தவிசாளர் இது ஜயலத் ஜயவர்தனவின் சொந்தக் கருத்து என்கிறார். ஜயவர்தனவும் அதை எதிர்த்து எதுவும் கூறவில்லை. எல்லாம் அரசியல் தான்.
43 minute ago
2 hours ago
neethan Monday, 09 January 2012 04:08 PM
அரசியலாளர்கள், அதிகாரத்தில் இருக்கும்போது தீர்வு வழங்குவதில் அக்கறை செலுத்துவதை விட எதிர்தரப்பில் இருக்கும்போது அதை கொடு, இதை கொடு என்று சொல்வர். இது இன்று நிகழ்கிறது, பாட்டு வாய்த்தால் கிழவியும் பாடுவாள். அதையே ஜயலத் செய்கிறார். அரசோ இதில் அரசியல் இலாபம் தேடுகிறது. தீர்வு என்பது தொலை தூரத்திலயே உள்ளது என்பது மட்டும் உண்மை.
Reply : 0 0
Kethis Monday, 09 January 2012 09:39 PM
அரசியல்வாதிகள் பேச்சு ஆட்சிக்கு வந்தால் போச்சு
Reply : 0 0
muhammath Ranoos Tuesday, 17 January 2012 05:53 PM
காணி மற்றும் போலீஸ் அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது அவசியமானது. ஆனால் வடகிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்பது மேலதிக விளக்கங்களை அவசியப்படுத்துகிறது. இன்னும் இனங்களுக்கு இடையில் விரிசல்களை உருவாக்க வேண்டாம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago