Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2012 பெப்ரவரி 21 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டியில் நடந்தேறிய பிராந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், மாநிலங்களுக்கு வேண்டிய அதிகாரங்கள் பதிமூன்றாவது சட்டதிருத்தத்திலேயே உள்ளன எனவும், அவற்றை சரியாக செயல்படுத்தினாலேயே போதும் எனவும் கூறியதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
அதாவது, தமிழ் தேசிய கூட்டமைப்பு கோருவது போல், மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் தேவையில்லை என்ற தொனியில் பிள்ளையான் என்று அறியப்படும் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் கருத்து அமைந்துள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
கிட்டத்தட்ட கண்டியில் முதல்வர் சந்திரகாந்தன் பேசிய அதே நாளில், வவுனியாவில் கூட்டமைப்பு தலைமை - தமிழ் சமூக தலைவர்களை சந்தித்து, அரசுடன் தாங்கள் இதுவரை நடத்திய பேச்சுவார்த்தைகள் குறித்து விவாதித்துள்ளனர். இத்தகைய பேச்சுவார்தையின் அவசியத்தை, தமிழ் சமூகத்தின் தலைமை கூட்டமைப்பிடம் எழுத்து மூலமாக தெரிவித்த பின்னரே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
தமிழ் சமூகம் இத்தகைய கோரிக்கையை முன் வைத்தபோது, கூட்டமைப்பு அதனை ரசித்ததாக தோன்றவில்லை. ஆனால், அரசுடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்லமுடியாத தற்போதைய சூழ்நிலையில், தமிழ் சமூகத்தை முன்னிறுத்த கூட்டமைப்பு முன்வந்துள்ளதாகவே எண்ணத் தோன்றுகிறது. அடுத்த கட்டத்தில், ஏதாவது போராட்டம் நடத்தும் முடிவிற்கு கூட்டமைப்பு வரவேண்டிய சூழ்நிலை உருவானால் அப்போது கூட்டமைப்பிற்கு தமிழ் சமூகம் தேவைப்படும்.
வவுனியா பேச்சுவார்த்தைகளில் கூட்டமைப்பின் குழுவிற்கு கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சம்பந்தன் தலைமை தாங்கியுள்ளார். தமிழ் சமூக குழுவிற்கு மன்னார் பிஷப் இராயப்பு ஜோசப் தலைமை ஏற்றிருந்தார். பேச்சுவார்த்தை சுமுகமாகவே நடைபெற்றது என்று இரு தரப்பினரையும் மேற்கோள் காட்டி பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. இந்த கூட்டம் குறித்தும் இதற்கு வழிகோலிய தமிழ் சமூகத்தின் முந்தைய கூட்டம் குறித்தும் சில நெருடலான கேள்விகள் எழுகின்றன.
ஒன்று, அரசுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்ததாக கூட்டமைப்பு கூறிவந்துள்ளது. இந்த இரகசியம் பேணப்பட வேண்டும் என்ற எண்ணத்திலேயே அது குறித்த விவரங்களை முழுவதுமாக கூட்டமைப்பின் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் கட்சி தலைமை பகிர்ந்து கொள்ளவில்லை. இந்த சூழ்நிலையில் அரசுடனான பேச்சுவார்த்தை குறித்து தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவது சரியான வரைமுறை தானா?
அதாவது, ஐந்தாறு பேர் மட்டுமே அறிந்திருக்க வேண்டிய பேச்சுவார்த்தையின் போக்கை அறுபது பேர் முன்னிலையில் பகிர்ந்து கொள்வது, எப்போதாவது அரசுடனான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கினால் அதற்கு முட்டுக்கட்டையாக அமையாதா? அதிலும் குறிப்பாக, தேர்ந்தெடுக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட கூட்டமைப்பு தலைமை, மீண்டும் ஒரு சமுதாய பிரதிநிதி குழுவின் ஒப்புதல் பெற்றே செயல்பட வேண்டும் என்றால், இதில் யார், யாரை வழிநடத்தப் போகிறார்கள்?
எது எப்படியோ, அரசுடனான பேச்சுவார்த்தையை தொடங்கிய போது, கூட்டமைப்பு தலைமை சமுதாய பிரதிநிதிகளுடன் இப்படியொரு ஏற்பாட்டை செய்து கொண்டிருக்கவில்லை. கடந்த 1987ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தம் குறித்து இந்திய அரசுடன் தனிப்பட்ட பேச்சுவார்த்தை நடத்தி வந்த தமிழ் அரசியல் தலைமை, பின்னர் மக்களின் மனநிலை குறித்து பேசி, ஏற்றுக்கொண்ட முடிவுகளை இல்லாதாக்கியது சமகால சரித்திரம்.
இந்த பின்னணியில், பதின்மூன்றாவது சட்டதிருத்தம் குறித்து முதலமைச்சர் சந்திரகாந்தன் கூறிய கருத்துக்கள் முக்கியம் பெறுகின்றன. அவரது கருத்துகளுக்கும் அப்பாற்சென்று நோக்கினால், கூட்டமைப்பு தலைமை பொறுப்புகளில் உள்ள தலைவர்களைப் போலவே, அவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர்களில் பலரைப் போலவும் அரசுக்கு எதிரான போராளியாக பல ஆண்டுகள் இருந்தவர்.
கட்சி மாறினால் காட்சி மாறும் என்பது அவர் விடயத்தில் உண்மையானால், அதுவே கூட்டமைப்பு தலைவர்களுக்கும் பொருந்தும். அதிலும் குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தால் ஒரு காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களே தமிழ் அரசியல் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றால், இவர்களில் பலரையும் விடவும் பிள்ளையானும் 'கேணல்' கருணா என அழைக்கப்பட்டு வந்த விநாயகமூர்த்தி முரளிதரனும் மட்டுமே மிஞ்சுவர்.
இவ்வாறெல்லாம் கூறுவதால் பிள்ளையானுக்கு தமிழ் சமூகத்தின் அறுதி பெரும்பான்மையினரின் ஆதரவு இருப்பதாக அர்த்தம் இல்லை. நாடாளுமன்றம் மற்றும் மாவட்ட அளவிலான தேர்தல்களின் முடிவுப்படி அவரது கிழக்கு மாகாணத்தில் கூட கூட்டமைப்பிற்கே தமிழ் சமூகத்தின் அதிக ஆதரவு இருக்கிறது என்று கூறலாம். அப்படியென்றால், கிழக்கு மாகாணம் மற்றும் கொழும்பு நகரம் உள்ளடங்கிய மேற்கு மாகாணம் ஆகிய பகுதிகளில் பரவலாக உள்ள தமிழ் மக்களின் எண்ணவோட்டத்தை கூட்டமைப்பும், கூட்டமைப்பு மட்டுமே பிரதிபலிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
இதுபோன்ற குதர்க்கமான முறைகளிலேயே முன்பு தமிழ் தலைமையின் பிரதிநிதித்துவத்தனம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை மாற்றி, எல்லா தமிழ் பிரதிநிதித்துவங்களையும் இணைத்தே இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே இந்த அரசின் நிலைப்பாடு என்று கூறப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் வடக்கில் இருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. கட்சி மட்டுமல்ல, வடக்கிலும் கிழக்கிலும் உள்ள முஸ்லிம் இனத்தவர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் பல்வேறு கட்சிகளும் பங்குபெற வேண்டும் என்பதே சரியான நிலைப்பாடாக இருக்கும்.
அதே சமயம், எப்படி இந்த கட்சிகள் எல்லாம் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் பேசும் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்களோ அதற்கும் ஒருபடி மேல் போய், தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பெரும்பாலானவர்களை பிரதிநிதிபடுத்துகிறது என்பதே உண்மை. ஆனால், எந்த ஒரு சாராரும் மட்டுமே தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைமைத்துவம் பெற்றுள்ளவர்கள் என்று கருதி செயல்படுவது, 'பழைய குருடி, கதவை திறடி' என்ற நிலைமையிலேயே தமிழ் சமூகத்தை கொண்டு செல்லும், கொண்டு தள்ளும்.
இதற்கு முடிவு தான் என்ன? எப்படி இனப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசு, பேச்சுவார்த்தைக்கான முஸ்தீபுகளை தொடங்க வேண்டும் என்று கூட்டமைப்பும் சர்வதேச சமூகமும் எதிர்பார்க்கிறதோ, அதுபோன்றே வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் பேசும் அனைத்து மக்களையும் அவர்களது உள்ள கிடக்கையையும், அவர்களது அரசியல் தலைமைகளையும் உள்ளடக்கிய ஓர் நிலைப்பாட்டை எடுக்க கூட்டமைப்பு முயற்சி செய்ய வேண்டும்.
வடக்கு - கிழக்கு இணைப்பு, பொலிஸ் அதிகாரம் போன்ற பல்வேறு பிரச்சினைகளில் வௌ;வேறு நிலைப்பாட்டை கொண்டுள்ள இந்த கட்சிகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு அரசியல் செய்யலாம் என்று கூட்டமைப்பு தொடர்ந்து கருதி வருமேயானால், அவர்களை எப்போதும் ஆதரித்து வரும் சர்வதேச சமூகமும் உண்மை நிலையை உணர்ந்து செயல்பட அதிக நாளாகாது. கூட்டமைப்போடு உள்ளாட்சி தேர்தல் தொடங்கி செயல்பட்டு வரும் ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் சித்தார்த்தன் தலைமையிலான 'புளட்'; போன்ற சரித்திரம் படைத்த கட்சிகளையே 'வேண்டா விருந்தாளி'யாக கருதி வீட்டுக்கு வெளியே வைத்து மிச்சம், மீதி உணவை அளித்தே வந்துள்ள கூட்டமைப்பு தங்களை எப்படி நடத்தும் என்ற முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் சந்தேகப்பட்டால், அதில் உண்மை உள்ளது.
பதின்மூன்றாவது சட்டதிருத்தம் குறித்து முதலமைச்சர் சந்திரகாந்தன், தான் கூறவருவது என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். உதாரணத்திற்கு, மாநிலங்களுக்கு பொலிஸ் அதிகாரம் தேவையா, இல்லையா? என்பது போன்ற கேள்விகளுக்கு தனது நிலைப்பாட்டை அவரும் சரி, டக்ளஸ் தேவானந்தா போன்ற கூட்டமைப்பிற்கு வெளியே உள்ள தமிழ் தலைவர்களும் சரி, வெளிப்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக, வடக்கு - கிழக்கு இணைப்பு குறித்து அவர்களது நிலைமை என்ன? தமிழ் பேசும் முஸ்லிம் கட்சிகளின் நிலைமை என்ன?
எப்படி, 'தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்' என்று அரசு இருக்க கூடாது என்று கூட்டமைப்பு எதிர்பார்க்கிறதோ, அதுபோன்றே அதன் எண்ணவோட்டமும் செயல்பாடுகளும் இருக்க வேண்டும். அல்லாது, தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டு, தங்களது நிலைப்பாட்டையே பொதுவாக வரவேற்கும் தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் மட்டுமே சந்தித்து பேசிவருவது, 'குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும்' வகையாகவே அமையும். பின்னர், அரசு தங்களை மீண்டும் ஏமாற்றி விட்டது, சிங்கள பேரினவாதம் தங்களை ஏமாற்றிவிட்டது என்று மட்டும் கூறுவதெல்லாம், தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு, அதில் ஒருவித 'கொடூர திருப்தி' (vicarious satisfaction) அடைவதற்கு சமமாகும். இது தான் சமகால சரித்திரம் படிப்பித்துள்ள பாடமும் ஆகும்.
jeyarajah Tuesday, 21 February 2012 11:55 PM
இந்த சிவில் சமூகத்தில் தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமை மதிக்கப்பட வேண்டும் என்று கருதும் பல வேற்றின புத்தி ஜீவிகள் உள்வாக்கப்படவேண்டும் என்பது என் அபிப்பிராயம். முஷ்லீம், தோட்ட ,சிங்கள பல புத்தி ஜீவிகள் உண்டு. ஏன் பல சிங்கள பெளத்த குருமாரே இருக்கின்றார்கள்.அ டிப்படை மனித உரிமையையை மதிக்கும் சகல இன மக்களும் இதில் உள்வாங்கப்பட வேண்டும். அது இந்த சமூகம் ஆக அரசியலில் மட்டும் நில்லாமல் மற்ற பொருளாதார சமூக, கலாசார மேம்பாடுகளிலும் பங்குபற்ற வழி சமைக்கும்.
Reply : 0 0
ummpa Wednesday, 22 February 2012 02:03 AM
ஜயா! 13 ஆவது திருத்தத்தை தாண்டி அதிகாரங்கள் பகிரப்படலாம் என்று தெரிவித்தவர்கள் இப்போது, 13 ஆவது திருத்தத்தை விட குறைவான அதிகாரங்களைக்கூட பகிர தயாராக இல்லை. 13 ஆவது திருத்தத்தையும் தாண்டிய அதிகாரத்தையும் தமிழர்களுக்கு பகிர்வதாக உங்களுக்கு, தந்த உறுதி மொழிகள் எவையும் காப்பாற்றப்படவில்லை. மாறாக 13ஆவது திருத்தத்தைவிட குறைந்த அதிகாரத்தை பகிர்வதற்குக் கூட தயாராக அவர்கள் இல்லை எனவே பேச்சு இப்படியே போக முடியாது. " இப்படி இந்திய அமைச்சரிடம்" இன்றுடன் 52 நாட்கள்.
Reply : 0 0
sarithan Wednesday, 22 February 2012 04:36 AM
நீங்கள் சொல்வது சரிதான். தமிழ் தேசிய கூட்டமைப்பு எல்லோரையும் உள்வங்கி பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வருவதை இருந்தால்கூட, தமிழ் மக்களின் உரிமைகளை அவர்களின் தேவைகளை உணர்ந்துகொண்டு கூட்டமைப்புடன் ஒத்து செல்வார்களா? கிடையாது அவர்கள் யார் ? என்ன செய்கிறார்கள் தற்போது? யாருடன் சேர்ந்து இருக்கிறார்கள் இப்போது ? இவர்களின் நோக்கம் நம் தமிழ் மக்களுக்கு இறைமையுள்ள ஒரு தீர்வை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் உள்ளது யார்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago