A.P.Mathan / 2012 பெப்ரவரி 28 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தின் தலைநகரான சென்னையை கலக்கிய வடமாநில வங்கி கொள்ளையர்கள் ஐந்து பேரை ஒரே தினத்தில் “என்கவுன்டர்“ செய்தது தமிழக காவல்துறைக்கு பெரும் சோதனையை ஏற்படுத்தியுள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் எல்லாம் இந்த பொலிஸ் என்கவுன்டரை விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார்கள். தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவரும் முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியுமான கே.ஜி.பாலகிருஷ்ணன் "பொலிஸ் என்கவுன்டர் பற்றி விசாரிக்க டெல்லியில் இருந்து தேசிய மனித உரிமை ஆணையக் குழு சென்னை செல்லும். உண்மை என்ன என்பதை வெளிக்கொண்டு வரும்" என அறிவித்திருப்பது காவல்துறை அதிகாரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையின் புறநகர் பகுதிகளில் இருக்கிறது கீழ்கட்டளை மற்றும் பெருங்குடி என்ற இரு பகுதிகள். இங்குள்ள பரோடா வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பட்டபகலில் புகுந்து துப்பாக்கியை காட்டி கொள்ளையடித்தார்கள் வட மாநில கொள்ளையர்கள். அனைத்து வங்கி அதிகாரிகளையும் ஒரு அறையில் அடைத்து விட்டு, காசாளரிடம் இருந்த சாவியை பறித்து சுமார் 25 லட்சம் ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்துச் சென்று விட்டார்கள். இந்த கொள்ளை - மக்கள் மத்தியில் பெரும் பீதியையும் குறிப்பாக வங்கிக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் மத்தியில் கலக்கத்தையும் ஏற்படுத்தியது. கொள்ளையடிக்கப்பட்ட வங்கிகளுக்கு உடனே சென்ற வாடிக்கையாளர்கள் தங்கள் பணம் இருக்கிறதா என்றே வங்கி மானேஜர்களிடம் கேட்டு பதற்றத்தில் மூழ்கியிருந்தார்கள். இந்தியாவின் மெட்ரோபாலிட்டன் சிட்டியாக இருக்கும் சென்னையில் பட்டப்பகலில் நடந்த வங்கி கொள்ளை பொலிஸ் அதிகாரிகளின் தூக்கத்தை தொலைத்தது. சென்னை மாநகர பொலிஸ் கமிஷனராக இருக்கும் திரிபாதி இதற்கென தனிப்படையை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் இறங்கினார். குறிப்பாக கொள்ளையடிக்கப்பட்ட இரு வங்கிகளிலும் சி.சி.டி.வி. கெமராக்கள் இல்லை. அதனால் வந்து கொள்ளையடித்த கொள்ளையர்கள் பற்றிய துப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் சென்னை புறநகர் பகுதியில் சி.சி.டி.வி. கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ள வங்கிகளில் உள்ள போட்டோ காட்சிகளை கேட்டுப் பெற்றது பொலிஸ். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்த படங்களை - இக்கொள்ளைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட துணை பொலிஸ் கமிஷனர் சுதாகர் ஐ.பி.எஸ். தலைமையில் பார்வையிட்டு, இறுதியில் ஒரு வங்கியை நோட்டமிடும் ஆசாமியின் படத்தை கண்டுபிடித்தது. அவன்தான் தற்போது பொலிஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சுஜய்குமார் ராய்.
வங்கியில் கொள்ளையடித்து விட்டு தமிழக கவர்னரின் இல்லமான ராஜ்பவனுக்கு ஒரு கிலோ மீற்றர் தொலைவில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்தனர் கொள்ளையர்கள். பொலிஸ் வசம் கிடைத்த கொள்ளையன் போட்டோவை டி.வி.களில் போட்டுக் காட்டத் தொடங்கியதும், தாடியுடன் இருந்த கொள்ளையன் ஷேவ் செய்து விட்டு வந்திருக்கிறான். இதைப்பார்த்த வீட்டை வாடகைக்கு கொடுத்தவர் சந்தேகப்பட்டார். அடுத்த சில மணி நேரங்களில் இந்த கொள்ளையர்கள் வீடு வாடகைக்கு கொடுத்தவரிடம் சென்று, "நாங்கள் ஊருக்குப் போகிறோம். 20 நாட்கள் கழித்து வருகிறோம்" என்று கூறிவிட்டு வாடகை பணத்தை கொடுத்திருக்கிறார்கள். இதில் சந்தேகப்பட்டு இவர்கள் வங்கிக் கொள்ளையர்களோ என்று சந்கேகப்பட்டு பொலிஸுக்கு தகவல் கொடுத்தார். "தகவல் கொடுப்போருக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் கொடுக்கப்படும்" என்று ஏற்கனவே சென்னை மாநகர பொலிஸ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலின் அடிப்படையிலேயே பொலிஸ் அந்த கொள்ளையர்கள் இருந்த இடத்தை சுற்றி வளைத்தது. ஆனால் மஃப்டியில் சென்ற பொலிஸாரைப் பார்த்து ஏதோ தங்கள் பணத்தை கொள்ளையடிக்க லோக்கல் ரவுடிகள் வந்து விட்டார்கள் எனக்கருதி அவர்களை நோக்கி கொள்ளையர்கள் சுட்டார்கள். அதைத் தொடர்ந்து நடந்த என்கவுன்டரில் சுஜய்குமார் ராய் (கொள்ளையர்களின் தலைவன்) உள்ளிட்ட ஐந்து பேர் கொல்லப்பட்டார்கள். இவர்களில் நான்கு பேர் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவன் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவன். இந்த என்கவுன்டர் தமிழகத்தில் மட்டுமின்றி பீஹாரிலும் பிரச்சினையை கிளப்ப, அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் டி.ஜி.பி., தலைமைச் செயலாளர் ஆகியோர் இது பற்றி விசாரித்து அறிக்கை தருமாறு உத்தரவிட்டார். இதற்கிடையில் தேசிய மனித உரிமை ஆணைய வழிகாட்டுதலின் படி லோக்கல் பொலிஸ் இது பற்றிய விசாரணையை மேற்கொள்ளாமல் என்கவுன்டர் வழக்கை தமிழக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் டி.ஜி.பி. ராமானுஜம்.
"தமிழக மக்களை சூறையாடிய வடமாநில கொள்ளையர்களை தமிழக பொலிஸ் சூறையாடியது தவறா" என்று கேள்வி எழுப்பி, பொலிஸ் என்கவுன்டரை ஆதரித்து சென்னை மாநகரம் முழுவதும் பொதுமக்கள், பொது நல அமைப்புகள் போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளன. குறிப்பாக என்கவுன்டர் நடந்த இடம், அதை விசாரிக்கும் வேளச்சேரி காவல் நிலையம், மாநில மனித உரிமை ஆணையம், அமைச்சர்கள் இருக்கும் பகுதிகளில் இந்த போஸ்டர்களை அதிகம் காண முடிகிறது. இதற்கிடையில் மனித உரிமை அமைப்புகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளன. ஆனால் பொலிஸ் தரப்பில் என்கவுன்டர் நடந்த வீட்டினை பார்வையிட எந்தக் குழுவையும் அனுமதிக்காமல் இருப்பது பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. "நீதி விசாரணை நடப்பதால் அனுமதிக்கவில்லை" என்று பொலிஸ் தரப்பில் கூறினாலும், சம்பவம் நடைபெற்று நான்கு நாட்களுக்கு மேலாகியும் என்கவுன்டர் நடந்த இடத்தை பத்திரிக்கையாளர்களும், மனித உரிமை அமைப்புகளும், ஏன் சாதாரண அப்பகுதி மக்களே கூட பார்க்காதவாறு பொலிஸ் காவல் போட்டுக் கொண்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. இதற்கிடையில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட ஐந்து பேரில் இருவரின் அடையாளங்கள் தெரிந்து விட்டது. மீதிப் பேருடைய அடையாளங்களை அவர்களின் உறவினர்கள் பீஹார் மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் இருந்து வந்து அடையாளம் காட்ட வேண்டும். சென்னை மாநகர பொலிஸ் கமிஷனர் திரிபாதி, "அவர்கள் வங்கி கொள்ளையர்கள்தான். அவர்கள் இருக்கும் இடத்திற்கு விசாரணைக்கு போனோம். எங்களை நோக்கியே துப்பாக்கியால் சுட்டதால் நாங்களும் திருப்பிச் சுட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. மற்றபடி நான் அவர்களை உயிருடன் பிடிக்கவே விரும்பியிருப்பேன்" என்று "தி இந்து" நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். இந்த கொள்ளையர்கள் மும்பையில் உள்ள வங்கியிலும், சட்டிஷ்கர் மாநிலத்தில் உள்ள வங்கியிலும் கொள்ளையடித்துள்ள விவரங்களையும், நிலுவையில் உள்ள வழக்குகளையும் தமிழக காவல்துறை சேகரித்துள்ளது.
பொலிஸ் என்கவுன்டர் என்பது தமிழகத்தில் நடப்பதுதான். ஒரு காலகட்டம் வரை பிரபல தாதாக்கள், கொலை செய்யும் கும்பலைச் சேர்ந்த தலைவன் போன்றோரை பொலிஸ் குறி வைத்து என்கவுன்டர் செய்வார்கள். அதன் பிறகு சென்னை மாநகரில் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்தது. அந்த நேரத்தில் சென்னை மாநகர பொலிஸ் கமிஷனராக விஜயகுமார் இருந்த போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் கொள்ளையடித்த முருகன் என்பவனை என்கவுன்டர் செய்தார். அதன்பிறகு "பாவரியா" என்ற மோசமான கொள்ளைக்கும்பல் தமிழகத்தில் புகுந்து பல்வேறு நகரங்களில் கொள்ளையடித்தது. குறிப்பாக முன்னாள் அமைச்சர் சுதர்ஸனன், காங்கிரஸ் தலைவர் தமிழரசன் போன்றோர் உள்ளிட்ட 11 பேரை கொலை செய்து கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள். வடமாநில கொள்ளையர்களின் இந்த அட்டகாசம் தமிழக மக்களை பெரும் பீதியில் உறைய வைத்தது. அப்போது தமிழகத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த ஜாங்கிட் இந்த பவாரியா கேங்க் கொள்ளையர்களை தேடி வந்தார். உத்தரபிரதேச மாநிலத்தில் அந்த கொள்ளையர்கள் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து, அங்கேயே சென்று என்கவுன்டர் செய்தது ஜாங்கிட் தலைமையிலான பொலிஸ் குழு. இப்போது அதே வடமாநில கொள்ளையர்கள் ஐந்து பேர் தமிழக கவர்னர் தங்கியிருக்கும் ராஜ்பவனுக்கு மிக அருகில் நடந்த பொலிஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இதுவரை நடந்த என்கவுன்டர்கள் பெரும் பிரச்சினையை பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்த என்கவுன்டரில் செத்தவர்களின் எண்ணிக்கை ஐந்து என்பதால் மனித உரிமை அமைப்புகள், ஏன் தேசிய மனித உரிமை ஆணையமே இதை கடுமையாக எடுத்துக் கொண்டுள்ளது. அதன் தலைவரான சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தனி குழுவே அனுப்பி உண்மையை வெளிக்கொண்டு வருவோம் என்று அறிவித்து இருக்கிறார். இன்னொரு புறம் வழக்கறிஞர்கள், மனித உரிமை அமைப்புகள் இந்த என்கவுன்டர் பற்றி நடக்கும் தமிழக பொலிஸின் விசாரணையில் நம்பிக்கையில்லை. ஆகவே சி.பி.ஐ. (மத்திய அரசின் கீழ் வரும் அமைப்பு) விசாரணைக்கு உத்தரவிட என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்பு கோரிக்கை வைத்துள்ளார்கள். இதுபோன்ற என்கவுன்டர்கள் நடக்கும் போது தேசிய மனித உரிமை ஆணையம் பொதுவாக "இத்தனை வாரங்களுக்குள் பதில் கொடுங்கள்" என்று நோட்டீஸ் மட்டுமே அனுப்பும். குழுக்களை அனுப்பி விசாரிக்காது. ஆனால் இந்த முறை தேசிய மனித உரிமை ஆணைய குழுவே நேரடியாக வந்து பொலிஸ் என்கவுன்டர் பற்றி விசாரிக்கும் என்று அறிவித்திருப்பது சென்னை மாநகர பொலிஸ் மட்டுமின்றி, தமிழக காவல்துறையையும் கவலையில் மூழ்க வைத்திருக்கிறது.
2 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago