A.P.Mathan / 2012 மார்ச் 08 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐநா மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தில் அண்டை நாடான இந்தியாவின் நிலைமை என்ன என்பது ஒரு முக்கியமான கேள்வியாக ஆரம்பம் தொட்டே இருந்து வந்துள்ளது. இது இரு நாட்டு தமிழர்களின் தொப்புள் கொடி உறவை மட்டுமோ, இருநாட்டு அரசியல் சார்ந்து மட்டுமோ அல்லது சீனா சார்ந்த இந்தியாவின் பாதுகாப்பு காரணங்களையோ மட்டுமே ஒட்டிய விடயம் அல்ல. இவை அனைத்தோடும் சேர்ந்து தென் ஆசிய பிரதேசத்தின் அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஸ்திர தன்மைகளுக்கு இந்தியாவின் பங்களிப்போடும் மற்றும் பொறுப்புணர்வோடும், அவை சார்ந்த உலகநாடுகளின் எதிர்பார்ப்புகளோடும் கூட சம்மந்தப்பட்ட விடயம்.
முதலில் இலங்கையையே எடுத்துக் கொண்டால், தற்போது ஜெனிவாவில் அரங்கேறி வரும் காட்சிகளுக்கு, அதிலும் குறிப்பாக 'போர் குற்றங்கள்' குறித்து இலங்கைக்கு எதிராக சர்வதேச சமூகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கும் நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் அரசியல் ஸ்திரதன்மை பாதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுகிறது. அரசாங்கம் என்ற அமைப்பை எதிர்த்தோ, அல்லது அதில் செயலாற்றும் தனி மனிதர்களுக்கு எதிராகவோ சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்குமேயானால், அது போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் சமூகத்திற்கு பயன்கொடுக்குமா? அல்லது அவர்களது பிரச்சினைகளை மீண்டும் அதிகமாக்குமா? என்ற கேள்வியும் எழுகிறது. இதில் இரண்டாவது நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட கருதுகிறது. அதனால் தான் ஜெனிவாவிற்கு தனது பிரதிநிதி குழுவை அனுப்புவதில்லை என்று அதன் தலைமை முடிவு செய்தது.
இதற்கு அப்பால் சென்று, சர்வதேச சமூகம் இலங்கை மீது நடவடிக்கை எடுக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். அத்தகைய நடவடிக்கை அரசுக்கு எதிராக அமைந்தால், அது பொருளாதார தடையாக உருவெடுக்கலாம். அரசின் அலகுகளுக்கு எதிராக அமையுமானால், அது இராணுவத்திற்கு எதிரான முடிவாக அமையலாம். இந்த இரண்டுமே இலங்கை வாழ் தமிழ் சமூகத்திற்கு நன்மை பயக்குமா? அல்லது துன்ப பயணமாக முடியுமா? என்பதை உணர்ந்து கொள்வதற்கு யாரும் பெரும் கல்விமானாகவோ அல்லது அரசியல் அறிவுஜீவியாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை.
அதேசமயம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கட்டுக்குள் இலங்கை இல்லை என்றும், அத்தகைய முடிவை தான் பிரதமராக இருந்தபோது தான் எடுத்ததாகவும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மார்தட்டிக் கொண்டுள்ளார். அதே வேகத்தில் ஜெனிவாவில் அரசின் நிலைப்பாட்டை தனது கட்சி ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவரே கூறியுள்ளார். அதாவது, இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் போர் குற்றங்கள் குறித்த அரசின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்பட்டு விடமுடியாது என்பதே நாட்டின் 'மாற்றுக் கட்சி'யின் நிலைப்பாடு.
ஆளும் மக்கள் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி ஆகிய இரண்டிற்கும் அப்பாற்பட்டு மூன்றாவது ஓர் அரசியல் சக்தியை நினைத்துப் பார்க்கும் நிலைமையில் நாடு இல்லை. ஏன், அப்படியொரு மூன்றாவது சக்தியாக உருவாக நினைத்த சரத் பொன்சேகாவிற்கு அவரது சொந்த ஊரிலேயே 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்குகள் கிடைக்கவில்லை. அப்போது அவருக்கு கிடைத்த வாக்குகள் எல்லமே அவரை ஆதரித்த கட்சிகளின் அடிப்படை வாக்குவங்கியின் கூட்டுத்தொகையே. அவரது போர்க்கால வெற்றியை ஒட்டி அவரை ஓர் அரசியல் தலைவராக ஏற்றுக் கொள்ளாத அவரது மக்கள், வேறு ஒருவரை தேசத்தின் மாற்று தலைமையாகவும் புதிய தலைவராகவும் ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
இலங்கையில் எந்தவிதமான அரசியல் ஸ்திரமற்ற தன்மையும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றோ, அதனால் மட்டுமே இந்தியா இது குறித்து கவலைப்படுகிறது என்றோ பொருள் அல்ல. ஆனால் இன்றைய சூழலில், இலங்கையில் அரசியல் ஸ்திரமின்மை உருவாகுமேயானால், அது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக்கே நல்லதல்ல. கூட்டிகழித்து எந்தவிதத்தில் கணக்குப் போட்டாலும் அது இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு ஏற்ற நிலை அல்ல. இதுவே இந்திய அரசின் கணக்கு கூட்டல்களின் முக்கிய அம்சமாக இருக்கலாம். மற்றபடி, சீனாவை காட்டி அதனோடு இந்தியாவின் இலங்கை கொள்கையை இணைத்துக் கொச்சைபடுத்துவது, அறியாமையால் ஏற்பட்ட தவறு என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும்.
இதனால் எல்லாம், இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு கடந்த காலங்களிலோ அல்லது இனப்போர் முடிந்த பின்னரோ பிரச்சினைகள் இல்லை என்றல்ல பொருள். அவர்களது இழப்புகள் ஈடு செய்ய முடியாதவை. அவர்களது அரசியல் அபிலாஷைகள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவை. அல்லது ஒன்றுமில்லை என்று ஒதுக்கி தள்ளிவிட முடியாதவை. பேச்சுவார்த்தைகள் மூலம் தமிழ் இனத்திற்குள்ளும் அரசுடனும் ஒருமித்த கருத்து உருவாக்கப்பட வேண்டியவை. ஆனால் அதற்கான முஸ்தீபுகளை தாண்டி, முடிவு எட்டப்படாதது வருத்தப்பட வேண்டிய விடயம்.
ஜெனிவா முடிவு எதுவாக இருந்தாலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் குறித்த இலங்கை அரசின் சமகால சந்தேகங்கள் அதிகப்படுமே தவிர குறைந்து விடாது. அதாவது, விடுதலை புலிகள் இயக்கத்தின் அப்பாவி மக்களை குறிவைக்கும் தீவிரவாதம் ஒழித்த இலங்கைக்கு எதிரான தமிழ் பிரிவினைவாதத்தை மேற்குலகு ஆதரிப்பதாகவே அரசு கருதி செயல்படும். அதன் முடிவு யாருக்கு எப்படியாக அமைந்தாலும் இலங்கைவாழ் தமிழினத்திற்கு நன்மை பயக்காது. இதனை உணர்ந்து கொள்ளாத, இலங்கை அரசியல்போக்கை அடுத்திருந்தும் உணர்ந்திராத தமிழ் நாடு அரசியல்வாதிகள் மூலமும் இந்தியாவின் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது, புலம்பெயர்ந்த சில இலங்கை தமிழ் தலைவர்களுக்கு வேண்டுமென்றால் உடன்பாடான விடயமாக இருக்கலாம். இதன் எதிர்கால தாக்கங்கள் குறித்து இந்திய அரசு ஒருதலைப்பட்சமாகவோ அல்லது மெத்தனமாகவோ செயல்பட கூடாது.
ஜெனிவாவில் ஆகட்டும், அல்லது ஐநா சபையில் ஆகட்டும், அல்லது அண்மையில் உள்ள தலைநகர் கொழும்பில் ஆகட்டும், தனி நாடு கனவுகளுடன் அரசியல் செய்யும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் எச்சமாக விட்டுவிட்டு வந்த இலங்கையில் உறையும் தமிழ் சமூகத்தின் பாதுகாப்பையும் அவர்களது உடனடி தேவைகளையும் அடுத்தகால அரசியல் எதிர்பார்ப்புகளையும் மட்டுமே மனதில் வைத்து தங்களது முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். அதோடு, 'வீரம் விலை போகாது, விவேகம் துணைக்கு வாராவிட்டால்' என்ற பழமொழியின் அறிவுறுத்தலையும் அவர்கள் மறந்து விடக்கூடாது. அதனை உணர்ந்து செயல்பட மறுத்ததால் தான், விடுதலை புலிகள் இயக்கம் தானும் அழிந்து, தன்னை மட்டுமே நம்பியிருந்த தமிழ் சமுதாயத்தின் இருண்ட எதிர்காலத்தையும் கேள்விக்குறி ஆக்கிவிட்டது.
2 hours ago
6 hours ago
7 hours ago
NAKKIRAN Friday, 09 March 2012 03:58 PM
கம்பனி செய்தது சர்வதேச சட்டத்தை மீறிய செயல். அதை சர்வதேசம் கண்டுகொள்ளாமல் விடமுடியாது . இதற்காக
உலகில் பலர் நீதியின் முன் நிறுத்தபட்டுள்ளனர்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago