Super User / 2012 மார்ச் 17 , பி.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசிய கட்சிக்குள் உருவாகியிருக்கும் தலைமைத்துவப் பிரச்சினைதீரும் அறிகுறிகளே இல்லை. ஆரம்பத்தில் கட்சியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்லக் கூடிய தலைவர் யார் என்பது பிரதான சர்ச்சையாக இருந்த போதிலும் இப்போது பிரச்சினைக்குள் கொள்கை ரீதியான சர்ச்சைகளும் புகுந்து விளையாடுகின்றன.
குறிப்பாக ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 19ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை விடயத்தில் ஐ.தெ.கவுக்குள் இப்பொது இரண்டு கருத்துக்கள இருக்கின்றன. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அப்பிரேரணையை சூசகமாக ஆதரிக்கிறார். ஆனால் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவரான சஜித் பிரேமதாச அதனை பகிரங்கமாக எதிர்க்கிறார்.
கட்சி தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியடைந்து வருவதற்கு ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவமே காரணம் என பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே கட்சியின் பல தலைவர்கள் கூறி வருகிறார்கள். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னரும் முன்னாள் ஐ.தே.க. பொதுச் செயலாளராகவிருந்து காலஞ்சென்ற காமிணி அத்துகோரளவின் தலைமையிலும் இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்திற்கு எதிராக உட்கட்சி கிளர்ச்சியொன்று வெடித்தது.
விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்திற்கு எதிராக இது போன்று பல முறை எதிர்ப்புகள் வந்த போதிலும் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்க எவராலும் முடியாமல் போய் விட்டது. ஐ.தே.கவின் யாப்பின் மூலம் கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்டு இருக்கும் அதிகாரங்களும் அந்தஸ்;துமே இதற்குக் காரணமாகியது.
எனவே கட்சிக்குள் இருக்கும் அவரது போட்டியாளர்கள் கட்சியின் யாப்பை மாற்றி விக்கிரமசிங்கவை தலைமைத்துவத்திலிருந்து தூக்கியெறிய முயற்சித்தனர். ஆனால் விக்கிரமசிங்கவோ அதே யாப்பினை பாவித்து தமக்கு வேண்டியவர்களை கட்சியின் செயற் குழுவில் சேர்த்தும் வேண்டாதவர்களை அதிலிருந்து நீக்கியும் செயற் குழு வாக்கெடுப்பின் போது தமது பதவியை பாதுகாத்துக் கொண்டார்.
கட்சிக்குள் அவருக்கு எதிராக இருப்பவர்களில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாசவே பிரதான போட்டியாளராக இருக்கிறார். சஜித்தைப் போலவே கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவராகவிருக்கும் கரு ஜயசூரிய மற்றுமொரு போட்டியாளராவார்.
சஜித், தான் கட்சிக்குள் இருக்கும் தலைமைத்துவப் பிரச்சினைகளுக்கு கொள்கை முரண்பாடுகளையும் சேர்த்து வருகிறார். நாட்டின் அதிபாரதூரமான பிரச்சினையாகவும் பிரதான பிரச்சினையாகவும் இருக்கும் இனப் பிரச்சினை விடயத்திலேயே இந்தக் கொள்கைப் பிரச்சினையும் உருவாகியிருக்கிறது.
அரச படைகக்கும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில் புலிகள் தோல்வியடைந்த பின்னரே இந்தப் புதிய கொள்கைப் பிரச்சினை கட்சிக்குள் உருவாகியுள்ளது. அதற்கு முன்னர் ஆளும் கட்சிகள் நேர்மையாவோ இல்லாமலோ இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காகவென ஏதாவது நடவடிக்கை எடுத்தால் எதிர்க்கட்சிகள் அதனை எதிர்க்கும். அந்த எதிர்ப்பின் ஓரம்சமாக இனவாதத்தையும் தூண்டும்.
ஆனால் போரின் பின்னர் அரசாங்கம் இனப் பிரச்சினைக்கு தீர்வு தேவை இல்லை என்பதைப் போல் தான் நடந்து கொள்கிறது. பிரதான எதிர்க்கட்சியே தீர்வை வலியுறுத்தி வருகிறது.
போர் நடந்து கொண்டு இருந்த காலத்தில் அரசாங்கத்திற்கு அது பெரும் தலையிடியாக விருந்தது. போரில் அரசாங்கத்திற்கு வெற்றி பெற முடியாது என்ற கருத்தும் பரவியிருந்தது. எனவே முன்னைய அரசாங்கங்கள் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு தீர்வுத் திட்டங்களை முன் வைத்தன. பல முறை புலிகளுடன் சமாதான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டன. அப்போதெல்லாம் எதிர்க்கட்சிகள் அம் முயற்சிகளை நாட்டுக்கெதிரான துரோகமாகவே எடுத்துக் காட்டின.
ஜே.ஆர் ஜயவர்தன மற்றும் பிரேமதாச ஆகிய ஐ.தே.கவின் ஜனாதிபதிகள் முறையே இலங்கை இந்திய ஒப்பந்தம் மற்றும் 1989 ஆண்டு சமாதான பேச்சு வார்த்தைகள் மூலம் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முற்பட்ட போதும் ஐ.தே.கவின் பிரதமராக ரணல் விக்கிரமசிங்க 2002 புலிகளுடன் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்த போதும் எதிர்க்கட்சியில் இருந்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அம்முயற்சிகளை தேசத்துரோகமாக காட்டியது.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 1995, 1996, 1997 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் பல்வேறு தீர்வுத் திட்டங்களை முன் வைத்த போது ஐ.தே.கவும் அவ்வாறே நடந்து கொண்டது.
ஆனால் போரின் இறுதிக் கட்டத்தின் போது நிலைமை தலை கீழாக மாறியது. அரசாங்கம் சமாதானத் தீர்வே தேவை இல்லை எனக் கூறாவிட்டாலும் போர் வெற்றி நிச்சயமாக இருந்ததால் தீர்வுக்கான வழிகளை புறக்கணித்தே வந்தது. எதிர்க்கட்சியில் இருந்த ஐ.தே.க. போரை ஏளனம் செய்தது. படையினர் தொப்பிக்கல மலையைக் கைப்பற்றி முழு கிழக்கு மாகாணத்தையும் கைப்பற்றிக் கொண்ட போது தொப்பிக்கல என்பது வெறும் காடு எனக் கூறி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் போர் வெற்றியை சிறுமைப்படுத்தினார்.
எந்தவொரு மாடும் யுத்தம் செய்யும் என ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல அரச படைகள் வடக்கிலும் முன்னேறிச் செல்லும் போது அவ் வெற்றிகளை ஏளனம் செயதார். அரச படைகள் 2008ஆம் ஆண்டு கிளிநெச்சியை கைப்பற்ற நீண்ட நாட்கள் எடுத்தன. எனவே படைகளை ஏளனம் செய்த ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க படைகள் கிளிநொச்சிக்குப் போவதாகக் கூறிக் கொண்டு மதவாச்சிக்குப் போவதாகவும் அலிமங்கட (ஆனையிறவு) போவதாகக் கூறிக் கொண்டு பாமன்;கடைக்குப் போவதாகவும் கூறினார்.
போர்க் காலத்தில் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு சிங்கள மக்களிடம் மென்மேலும் ஆதரவு பெருக இவையும் காரணமாகின. அப்போது ஐ.தே.க.வின் சாதாரண சிங்கள உறுப்பினர்களின் மன நிலைமையும் பேர் வெற்றிகளை ஏளனம் செய்யும் நிலையில் தான் இருந்தது. மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அரச படைகள் போரில் பூரண வெற்றி பெற்றால் தமது கட்சிக்கு அது எதிர்க்கால தேர்தல்களின் போது பேரிடியாக அமையும் என்பதனாலேயே அவர்கள் அவ்வாறு சிந்தித்தார்களேயல்லாமல் வேறு நல்ல நோக்கங்கள் அவர்களிடம் இருக்கவில்லை.
அவர்கள் அப்போது வடக்கில் மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேசிய போதிலும்; அரசாங்கத்தை அசௌகரித்திற்குள்ளாக்க வேண்டும் என்பதற்கே அவ்வாறு பேசினார்களே அல்லாமல் வேறு நல்ல நோக்கம் அவர்களிடம் இருக்கவில்லை. போரின் இறுதிக் கட்டத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்டனவா என்ற விடயத்தில் ஐ.தே.கவின் தற்போதைய தடுமாற்றம் அதனையே எடுத்துக் காட்டுகிறது.
கடந்த வருடம் வரை ஐ.தே.க.வின் சகல தலைவர்களும் உறுப்பினர்களும் இந்த நிலைப்பாட்டிலேயே இருந்தார்கள். ஆனால் கடந்த வருடம் சஜித் பிரேமதாச திடீரென 'தேசபக்தர்' ஆகிவிட்டார். தொப்பிக்கல காடு என்றும் எந்த மாடும் போர் செய்யும் என்றும் கிளிநெச்சிக்குப் போவதாகக் கூறிக் கொண்டு மதவாச்சிக்குப் போவது என்றும் கூறியது பிழையென அவர் பகிரங்கமாக கூறத் தொடங்கினார்.
ஆனால் போரில் அரச படைகள் வெற்றி பெற்றும் இரண்டு வருடங்கள் செல்லும் வரை அவர் இக் கூற்றுக்கள் பிழையெனக் கூறவில்லை. எனவே இது விக்கிரமசிங்கவுடனான தலைமைத்துவ போட்டியின் போது கட்சியின் சிங்கள உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதற்காக அவர் பாவிக்கும் ஒரு உத்தி என்றே சிந்திக்கக் தோன்றுகிறது.
ஐ.தே.க அண்மையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையைப் பற்றிய தமது விளக்கததை வெளியிட்டு இருந்தது. அவ் அறிக்கையின் குறை நிறைகளை சுட்டிக் காட்டியிருந்த போதிலும் தாம் அதனை ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா என்பதைப் பற்றி தெளிவாகவும் நேரடியாகவும் எதனையும் அதில் கூறாத ஐ.தே.க. ஆணைக்குழுவை கடுமையாக விமர்சித்து இருந்தது.
போரின் போது சில கிராமங்களில் இருந்த மக்கள் முழுமையாகவே காணாமற் போயுள்ளதாகவும் 10,000 மக்கள் விபத்துக்குள்ளாவது அத்தியாவசிய தியாகமாகியிருந்ததாக அமைச்சர் நவின் தஸாநாயக்க கூறியதாகவும் அதைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் ஐ.தே.க. அதில் மேலும் குறிப்பிட்டுள்ளது. ஜெனீவா பிரேரணை வர இருக்கும் நிலையில் இவை நிச்சயமாக அரசாங்கத்தை சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பைப் போலவே ஐ.தே.க தலைமையும் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையை நிராகரித்துவிட்டு இப்போது எல்லோருடனும் சேர்ந்து அவ்; அறிக்கையை அமுலாக்குமாறு கூறுகிறது. ஐ.தே.க. தலைமை ஜெனீவா பிரேரணையை ஆதரிக்கும் தோரனையில் தான் கருத்து வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் சஜித் பிரேமதாச அப்பிரேரணையை எதிர்த்து கருத்து வெளியிட்டு வருகிறார்.
சாதாரண ஐ.தே.க. உறுப்பினர்கள் இவ்விடயத்தில் எந்த நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்கள் என்பதே இங்கு முக்கியமாக இருக்கிறது. அனேகமாக அவர்கள் ஜெனீவா பிரேரணையை ஆதரிக்கும் மன நிலையில் இருப்பதாகவே தெரிகிறது. அது மனித உரிமை விடயத்தில் அவர்களுக்குள்ள அக்கறையை காட்டுவதாக எடுத்துக் கொள்ள முடியாது. அரசாங்கம் அசௌகரியத்துக்குள்ளாக வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. எனவே சஜித்தின் நிலைப்பாட்டை பெருமபாலான ஐ.தே.க. காரர்கள் ஆதரிக்க மாட்டார்கள்.
ஆனால் அரசியலில் கொள்கைகளுக்கு மிகச் சிறிய இடமே இருக்கிறது. எனவே தலைமைத்துவ போட்டி என்று வரும் போது சஜித்தின் ஆதரவாளர்கள் தொடர்ந்தும் அவரையே ஆதரிப்பார்கள் என ஊகிக்க முடியும்.
2 hours ago
6 hours ago
7 hours ago
ஜெமீல் ஓட்டமாவடி Sunday, 18 March 2012 02:48 PM
நிதா்சனமான கட்டுரை. ஆக மொத்தத்தில் ஐக்கிய தேியக் கட்சியின் தலைமைத்துவப் பிரச்சினை, இலங்கை இனப்பிரச்சினைக்குச் சமனாக உள்ளது.(தீா்வு காண்பதில்)
Reply : 0 0
jeyarajah Monday, 19 March 2012 05:36 AM
ஜனநாகம் நிலைக்க நல்ல ஒரு எதிர்க்கட்சி தேவை என்று சொல்வார்கள். நிலைமையைப் பார்க்கும் நல்ல ஒரு எதிர்க்கட்சி அமையும் என்ற நம்பிக்கை போய் விட்டது. இடையில் சஜித் புகுந்து காரியத்தைக் கெடுத்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
" Peeping through the window darling what will the people say " என்ற மாதிரி சஜித் இடையில் புகுந்தது.இவரையும் லட்சுமி கெடுத்துவிட்டா போலத்தான் தெரிகின்றது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago