2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

தேவதைகளின் காயம்!

A.P.Mathan   / 2012 மார்ச் 29 , மு.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதலில் அநாமிகாவைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவள் ஒரு பாலகி. எப்படிப் பார்த்தாலும் 09 அல்லது 10 வயதுக்குள்தான் இருக்கும். கொஞ்சம் வெள்ளை குறைந்த நிறம். முதுகின் நடுப்பகுதி வரை வளர்ந்த முடி. அவளின் வயதுக்கேயுரிய உடல் வளர்ச்சி!
அநாமிகா - வீட்டின் தலைப்பிள்ளை. ஒரு தம்பியும் ஒரு தங்கையும் உள்ளார்கள். தங்கைதான் கடைசிப்பிள்ளை - நான்கு வயது.

அநாமிகாவின் வீட்டில் மிக மோசமான வறுமை. அப்பா தினக் கூலித் தொழிலாளி. உழைக்கும் காசில் முக்கால்வாசியைக் குடித்தே அழித்து விடுவார். இதனால் - அநாமிகாவின் அம்மா மத்திய கிழக்கு நாடொன்றுக்கு பணிப் பெண்ணாகச் சென்று விட்டார். இதனால், அநாமிகாவும் அவளின் சகோதரர்களும் தங்கள் வீட்டில் வயதுபோன பாட்டியுடன்தான் இருக்கின்றார்கள்.

அநாமிகாவின் அம்மாவைப் போல் - நமது நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண்களாக சுமார் 06 லட்சம் பேர் சென்றுள்ளார்கள் என்கிறது ஒரு புள்ளி விபரம். இவர்களில் அரைவாசிப் பேர், 05 வயதுக்கும் குறைந்த பிள்ளைகனின் தாய்மார்கள். அதாவது, சுமார் 03 லட்சம் பெண்கள் தமது கைக்குழந்தைகளை விட்டு விட்டே – வெளிநாடுகளுக்குப் பணிப் பெண்களாகச் செல்கின்றார்கள்.

ஒருநாள், அநாமிகாவின் வீட்டுக்கு வந்து போகும் - மாமா உறவு முறையான ஒருவனால் அந்தப் பிள்ளை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது. தனக்கு நடந்ததை அநாமிகாவால் புரிய முடியவில்லை. ஆனால் - ஏதோவொன்று தனக்கு நடந்துவிட்டதாக மட்டும் அந்தக் குழந்தையால் உணர முடிந்தது!


இலங்கையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் என்பது இப்போது மிக மோசமாக அதிகரித்துள்ளது. சொன்னால் நம்புவீர்களா? நமது நாட்டில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 05 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகின்றார்கள். இந்த 05 பேரில் 03 பேர் சிறுமிகளாவர்!

2005ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பொன்று அதிர்ச்சி தரும் வகையானது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினர் வெளியிட்டுள்ள தரவொன்றின் படி, 2005ஆம் ஆண்டில் 46 சிறுவர்கள் மீது அவர்களின் ரத்த உறவினர்களே பாலியல் துஷ்பிரயோகம் புரிந்துள்ளனர். இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் அதில் 15 பிள்ளைகள் அவர்களின் தந்தையர்களாலேயே துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்கள்.

வீட்டில் வறுமை காரணமாக தாய்மார்கள் பணிப் பெண்களாக வெளிநாடு செல்கின்றனர். இதன்போது, பிள்ளைகளுக்கு போதிய பாதுகாப்புக் கிடைப்பதில்லை. தவிரவும் தந்தையர்களின் குடிப் பழக்கம் போன்ற சூழ்நிலைகள் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதற்கான ஏதுநிலைகளை அதிகம் ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

சில தரவுகளைக் கேட்டால் தலைசுற்றும். கடந்த வருடத்தில் மாத்திரம் 1165 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது. 2010ஆம் ஆண்டு 1054 சிறுமிகள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளனர். இவற்றில் பொலநறுவை, அநுராதபுரம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலேயே அதிகமான சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு நடத்திய ஆய்வொன்றின்படி, இலங்கையிலுள்ள நீதிமன்ற வழக்குகளில் 25 வீதத்துக்கும் அதிகமானவை சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. 

இவ்வாறு சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் அதிகமாக இடம்பெற்றமைக்கு யுத்தமும், அதன் விளைவுகளும் கூட, காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. யுத்தத்தால் இடம்பெயர்தல், இடவசதியற்ற ஒரே இடத்தில் ஏராளமானோர் தங்க வேண்டிய நிலைவரம் போன்ற பல்வேறு சூழ்நிலைகள் சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் புரியப்படுவதற்கான ஏதுநிலைகளை ஏற்படுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், யுத்தம் தீர்ந்து போன பிறகும் அதன் கோர விளைவுகள் இன்றும் குறைந்து போகவில்லை. யுத்த காலத்தில், யுத்தத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஈடாக இன்றும் அங்கு பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று வருகின்றன.

உதாரணமாக, யாழ்ப்பாணத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு மட்டும் 102 பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறுகிறார் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.சிவரூபன். அதேவேளை, தொடர்ந்து வந்த 2011ஆம் ஆண்டில் இந்தத் தொகை 182 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

உலகளாவிய ரீதியிலும், உள்நாட்டிலும் சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான பல்வேறு சமவாயங்களும், சட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ள போதும், சிறுவர் துஷ்பிரயோகங்கள் நமது நாட்டில் நாளுக்கு நாள் அதிகதித்துக் கொண்டே செல்வது மிகவும் துயரம் மிகு செய்தியாகும்.

முதலில் இவை தொடர்பான விடயங்களில் நாம் தெளிவு பெற்றிருப்பதோடு, மற்றோரை விழிப்பூட்டும் வகையிலும் அறிவு பெற்றிருத்தல் அவசியமாகும்.

பிள்ளையொன்று துஷ்பிரயோகத்துக்குள்ளானதாக நாம் தெரிந்து கொள்ளும் போது, ஆகக்குறைந்தது நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து நம்மில் எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளோம்?

பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாவோரில் பலர் - அது குறித்து முறைப்பாடு செய்வதற்கு அஞ்சுவதாகக் கூறப்படுகிறது. தமது குடும்ப கௌரவத்துக்கு இழுக்கு ஏற்பட்டு விடுமோ எனும் பயம், சட்ட ரீதியான செயற்பாடுகளில் இறங்கும் போது ஏற்படும் மன உளைச்சல் உள்ளிட்ட பல விடயங்களால் - பாதிக்கப்பட்டவரின் தரப்பினர் அது குறித்து முறைப்பாடு செய்வதற்கு அஞ்சுகின்றனர்.

அதுபோலவே, சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் குறித்து தெரிந்து கொண்டோரும், தாம் சாட்சியாகச் செல்வதற்கு நேரிடுமோ? தமக்கு ஏதாவது பிரச்சினைகள் வந்துவிடுமோ? என்கிற அச்சத்தினால் அவைகளைக் கண்டும் காணாதது போல் சென்று விடுகின்றனர்.

ஆனாலும், இவை அனைத்துக்கும் அப்பால் நம் ஒவ்வொருவருக்குமுள்ள தார்மீக சமூகப் பொறுப்புக் குறித்து சிந்திப்பது அவசியமாகும்!

உங்கள் அயல் வீட்டில் வேலைக்கமர்த்தப்பட்டுள்ள சிறுவர்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த பிள்ளையொன்று துஷ்பிரயோகத்துக்குள்ளாவதாக நீங்கள் அறியவரும் போது அவை குறித்து உங்கள் பிரதேசத்து பொலிஸ் நிலையத்திலோ அல்லது உங்கள் பகுதியிலுள்ள சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தரிடமோ தெரியப்படுத்த முடியும். இவ்வாறு நேரடியாக உங்களை அடையாளப்படுத்தி குறித்த முறைப்பாட்டினைச் செய்வதற்கு நீங்கள் விரும்பாது விட்டால், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் முறைப்பாட்டுப் பிரிவுக்கு தொலைபேசி மூலமாக அறிவிக்கலாம். 

1929 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக 24 மணிநேரமும் செயற்படும் - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் முறைப்பாட்டுப் பிரிவுக்கு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தகவல்களை நீங்கள் வழங்க முடியும்.

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் என்பதோடு மட்டுமல்லாமல், சிறுவர்கள் தொடர்பான அனைத்து துஷ்பிரயோகங்கள் தொடர்பிலும் இந்த இலக்கத்தினூடாக நாம் தகவல்களை வழங்க முடியும்.
கடந்த 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மட்டும் மேற்படி 1929 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 398 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 1989ஆம் ஆண்டின் சிறுவர் உரிமைப் பிரகடனத்தின் பிரகாரம் 18 வயதுக்குக் குறைந்த மனிதப் பிறவிகள் அனைவரும் பிள்ளைகள் அல்லது சிறுவர்களாகக் கருதப்படுகின்றார்கள்.

ஆனால், இலங்கையைப் பொறுத்தவரையில் சிறுவர்கள் என்போருக்கான வயதெல்லை குறித்து ஒரு குழப்ப நிலை உள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. உதாரணமாக, இலங்கையின் தண்டனைச் சட்டக்கோவை, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பராமரிப்புச் சட்டம் போன்றவைகளில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் சிறுவர்கள் என வரையறை செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, பெண்களையும் இளம் ஆட்களையும் சிறுவர்களையும் தொழிலுக்கமர்த்துதல் சட்டம், தொழிற்சாலை கட்டளைச் சட்டம், சிறுவர் இளம் பராயத்தவர் கட்டளைச் சட்டம் மற்றும் சிறுவர் இளம் பராயத்தவர் (தீங்குமிக்க வெளியீடுகள்) சட்டம் போன்றவைகளில் 14 வயதுக்கு உட்பட்டவர்களே சிறுவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறிருந்த போதும், 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை நாம் சிறுவர்களாகக் கருத முடியும்!
அந்தவகையில், சிறுவர்கள் குறித்து நாம் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும். ஊடகங்களைத் திறந்தால் பாலியல் வன்புணர்வு அல்லது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் குறித்த செய்திகள் ஒவ்வொரு நாளும் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. அடுத்த வீட்டில் நிகழும் வரைதான் இதுபோன்ற நிகழ்வுகள் நமக்குச் செய்தியாக இருக்கும். அதுவே நமது வீட்டில் நிகழ்ந்து விட்டால், ஆற்ற முடியாத துயரமாகி விடும்!

பிள்ளைகள் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதென்பது - ஒரு விபத்துப் போன்ற நிகழ்வுதான்! பலவேளைகளில் நமக்கு ஏற்படும் விபத்துக்களுக்கு நமது கவனயீனமே காரணமாகி விடுவதைப் போல, சிறுவர்கள் மீது புரியப்படும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் அந்தப் பிள்ளையின் தரப்பினரே காரணமாகி விடுகின்றார்கள் என்பதுதான் கசப்பான உண்மையாகும்!

மொரட்டுவ, ரோகல்வத்தை – லுனாவ எனும் பகுதியில் தனது சொந்த மகள் மீதே பாலியல் துஷ்பிரயோகம் புரிந்து விட்டு தந்தையொருவர் தப்பித்துச் சென்று விட்டார். கடந்த 06ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றது. குறித்த பிள்ளைக்கு 13 வயதுதான் ஆகிறது. மிகக் கொடூரமான முறையில் புரியப்பட்ட இந்த துஷ்பிரயோகம் காரணமாக அந்தச் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கும் நிலை ஏற்பட்டது!

அப்படியென்றால், இதற்கு யார் பொறுப்பு என்கிறீர்களா?

போதைப் பொருள் பாவனை, தவறான நடவடிக்கைகள், மற்றும் ஒழுக்க ரீதியாக வாழ்க்கை முறைமைகளைப் பின்பாற்றாமை போன்ற மோசமான பழக்க வழக்கங்களே – கடைசியில் அந்தத் தந்தையை மிருகமாக மாற்றியுள்ளது!

அடுத்த வீட்டுப் பிள்ளைகளையும் நமது பிள்ளைகள் போல் நேசிக்க வேண்டும் என்பது உண்மைதான்! ஆனால், எல்லோரும் அப்படி நேசிப்பவர்களாகத்தான் இருப்பார்கள் என்று நம்பி விடும் நமது ஏமாளித்தனமே சிலவேளைகளில் நமது வீட்டுப் பிள்ளை மீது ஒரு மனித மிருகம் தனது கோரப் பற்களைப் பதிப்பதற்கான நிலையினை ஏற்படுத்தி விடும் என்பது – அதைவிடவும் உண்மையாகும்!

ஆக, இப்போதைய நிலைவரத்தில் ஒவ்வொரு பிள்ளை மீதும் நாம் இரட்டிப்புக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இலங்கையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கெதிரான செயற்பாடுகளில் நமது பங்களிப்புக் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. அடுத்த ஆண்டு வெளியிடப்படும் புள்ளி விபரங்களிலாவது பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான குழந்தைகள் என்பதற்கு எதிரே – பூச்சியம் எனும் எண் இருக்கப் பிரார்த்திப்போம்!

கட்டுரையை முடிக்கப் போகிறேன்...

அநாமிகா எங்கிருக்கிறாள் என்று அறிவதற்கு உங்களில் எவரேனும் விரும்புகிறீர்களா?

மிக நன்றாக – செவிகொடுத்துப் பாருங்கள்! அநாமிகாவின் விசும்பல் உங்களுக்கு மிக அருகில் கூட கேட்கலாம்!

  Comments - 0

  • aboosulaim Thursday, 29 March 2012 04:04 PM

    வெரி நைஸ் மப்ரூக். திருடனாகப் paarththu திருந்தாவிட்டால் மக்கள்தான் இந்த அநீதிக்கேல்லாம் நல்ல நீதி மன்றமும் நல்ல நீதிபதியும். அப்பத்தான் திருடனுக்கு திருட்டே மறந்து போகும்.

    Reply : 0       0

    m.i.m.infas,puttalam. Friday, 30 March 2012 12:35 AM

    வழமையாய் நீங்கள் எழுதும் அரசியல் கட்டுரைக்கு அப்பால் ஒரு மனிதாபிமான கட்டுரை... இவர்களுக்கு அரபு நாட்டு சட்டமே பொருத்தம். வாழ்த்துக்கள் நேற்றைய காற்று நண்பரே...

    Reply : 0       0

    Pottuvil_Naleem Friday, 30 March 2012 04:24 AM

    நல்ல படைப்பு ....வாழ்த்துக்கள் மப்ரூக்..

    Reply : 0       0

    RAUF HAZEER Friday, 30 March 2012 04:33 AM

    அருமையான கட்டுரை.நோட்டீஸ் அடித்து வீடு வீடாக பங்கிடவேண்டும் போல் இருக்கிறது .நான் இங்கொரு குறிப்புசொல்லி வாசகர்களின் கருத்துகளையும் எதிர்பார்கிறேன் : குறிப்பு - குடி போதையில் தந்தையே மகளை....என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் ஒரு PARTY நடக்கும்போது அங்கு குடித்துவிட்டு அருகில் உள்ள பெண்களிடம் மிக அநாகரீகமாக நடந்துகொள்ளும் ஒருவன் ,அதே PARTY யில் கலந்துகொண்டுள்ள தன் மகளிடம் அங்கு முறைகேடாக நடந்துகொண்டதாக எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா. மூக்கு முட்ட குடித்துவிட்டும் தன் மகளை மகளென அங்கு அடையாளம் காண்பவன் ...வீட்டில் மட்டும் எப்படி இப்படி நடந்துகொள்ள முடியும் . குடிதிருக்கிறேன் என்பது அந்த மிருகத்திற்கு ஒரு போலியான காரணமே தவிர அவன் தெரிந்தேதான் அந்த ஈனத்தனமான வேலையை செய்கிறான் என்பதே என் கருத்து.

    Reply : 0       0

    ooraan Friday, 30 March 2012 09:14 PM

    உங்களுடைய பேனாக்கள் ஆயிரம் போர் வீரர்களை விட பலம் வாய்ந்தது......... வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் அணியின் பணி.......

    Reply : 0       0

    anas_shm Friday, 06 April 2012 08:52 AM

    இவர்களுக்கெல்லாம் பேனா அல்ல ஆயுதம் ....... துப்பாக்கி

    Reply : 0       0

    Nalavan Saturday, 07 April 2012 06:26 PM

    எல்லா வகையிலும் ஆண்களுக்கு, இன்பம் தரும் பெண்ணை எந்தச் சூழ்நிலையிலும் விருப்பமின்றி முரட்டுத்தன்மையால் கற்பழிப்பவர்கள் உலகத்தில் இருக்கக் கூடாது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .