2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

அரசுபோல் எதிர்க்கட்சிகளும் செயற்பட்டால் தனியாக அரசியலில் பயணிப்பேன்: பொன்சேகா

Menaka Mookandi   / 2012 மே 26 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


'இந்த அரசாங்கம் மோசடியான அரசாங்கம் என்பதால். மோசடியற்ற அரசியல் பலத்துடன் இந்த அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாகும். மோசடியற்ற அரசியல் பலத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சியினர் அனைவரும் விரும்புவார்களாயின், அவர்களும் இணைந்த அரசியல் பயணத்துக்கு நான் தயார்.

அதற்கு அவர்கள் தயாரில்லையாயின் அவர்களுடன் இணையும் நோக்கம் எனக்கு இல்லை. நான் இந்த பயணத்தை தனியாகச் செல்வேன். அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் வேறுபாடொன்று காணப்படவில்லையாயின் நான் எதிர்க்கட்சியுடன் இணைவதில் அர்த்தம் இல்லை' என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.

தமிழ்மிரர் இணையத்தளத்துக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியின் போதே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். செவ்வியின் முழு விபரமும், வீடியோ காட்சியையும் இங்கு காணலாம். 


கேள்வி :- நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் குடும்பத்துடன் இணைந்துள்ளீர்கள்... இதனை எவ்வாறு உணர்கின்றீர்கள்?


பதில் :- இராணுவத்திலிருந்த காலத்திலும் குடும்பத்திலிருந்து விலகியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது. இருப்பினும் ஒரேயடியாக இவ்வளவு காலம் விலகியிருக்கவில்லை. இந்த பிரிவின் போது எனது குடும்பம் நிம்மதியாக இருக்கவில்லை. அவர்களுக்கு பாரிய தொந்தரவுகளைக் கொடுத்து வந்தனர்.

ஆத்ம சக்தியுடன் நாம் இந்த காலத்தைக் கடந்த போதிலும் பாரியளவிலான கஷ்டங்களை அனுபவித்தோம். அந்த கஷ்டங்களுக்கு ஒரு முடிவு கிடைத்துள்ளமையானது மனதுக்கு கொஞ்சம் இதமாக உள்ளது. என் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என எல்லோருக்கும் சற்று நிம்மதி கிடைத்துள்ளது. இந்த நிம்மதியை நாம் சந்தோஷமாக அனுபவித்து வருகின்றோம்.

இருப்பினும், எம் எதிரில் உள்ள சவால்கள் மற்றும் தடைகளை வெற்றிகொள்ள தயாராக வேண்டும். குடும்பம் என்ற ரீதியிலும் வலுப்பெற வேண்டும். என்னோடு இணைந்து புதிய பயணம் செல்ல என் குடும்பத்தினர் தற்போது தயாராக உள்ளனர்.

கேள்வி :- முழு உலகமே போற்றிய இராணுவ தளபதி நீங்கள். அப்படிப்பட்ட நீங்கள், சுமார் இரண்டரை வருட சிறைவாசம் அனுபவித்து வந்துள்ளீர்கள். இதனை எவ்வாறு உணர்கிறீர்கள்?

பதில் :- இந்த நாட்டில் உள்ள துரதிர்ஷ்டம்... எந்தவொரு குற்றத்தையும் செய்துவிட்டு ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகளின் காலடியில் விழுந்து ஆசிர்வாதத்தைப் பெற்றால் தப்பிக்க முடியும் என்பது. இது எல்லோரும் அறிந்த விடயம். அப்படியானதொரு நிலைமை காணப்படும் இந்த நாட்டில், நாம் நாட்டுக்காக சேவை செய்தோமே தவிர, எந்தவொரு குற்றமும் செய்யவில்லை.

எவருக்கும் வார்த்தைகளில் சில தவறுகள் ஏற்படுவதுண்டு. இது எல்லோருக்கும் பொதுவானது. கௌதம புத்தர், இயேசுநாதர் ஆகியோரே விதிவிலக்காக எந்தவொரு வார்த்தைத் தவறும் ஏற்படாமல் தப்பித்தவர்கள். அவர்களைத் தவிர ஏனைய எல்லோருக்கும் தவறுகள் ஏற்பட்டதுண்டு.

அந்தவகையில், என் மீது பொய்யான பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். சிறு சிறு விடயங்களை பெரிதாகக் காண்பித்து எனக்கு தண்டனை கொடுத்தார்கள். எனக்கு அவர்கள் தண்டனை கொடுத்ததன் மூலம் அவர்கள் அநாகரிகமானவர்கள் என்பதை இந்த உலகுக்கு காண்பித்துவிட்டார்கள். இதற்கு சிறந்த உதாரணம்... இராணுவ தளபதியொருவருக்கு... அதிலும் நான்கு நட்சத்திர ஜெனரல் ஒருவருக்கு தண்டனை கொடுப்பதற்காக பதவிநிலை குறைந்த இராணுவ அதிகாரிகளை நீதிபதிகளாகக் கொண்ட இராணுவ நீதிமன்றமொன்றை அமைத்தார்கள். இவ்வாறான சம்பவங்கள் இந்த உலகில் எங்கும் ஏற்படவில்லை. இது சட்டவிரோதமானது.

குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படும் இராணுவ அதிகாரி வகிக்கும் பதவி நிலையை விட உயர்பதவி வகிக்கும் இராணுவ அதிகாரிகளை நீதிபதிகளாகக் கொண்ட இராணுவ நீதிமன்றமொன்றையே அமைத்து அதன் கீழ் குற்றவாளிக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பது இராணுவ சட்டப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயமாகும். இருப்பினும், இந்த சட்டம் மீறப்பட்டே தண்டனை வழங்கப்பட்டது. இராணுவ தளபதியொருவருக்கு அவர் வகித்த பதவியிலும் இரு நிலைகள் குறைவான மேஜர் ஜெனரல்களை நீதிபதிகளாகக் கொண்ட இராணுவ நீதிமன்றத்திலேயே தண்டனை வழங்கப்பட்டது.

இப்படியே போனால், எதிர்காலத்தில் இராணுவ உயரதிகாரியொருவருக்கு தண்டனை வழங்க, சாதாரண சிப்பாய்களை நீதிபதிகளாகக் கொண்ட இராணுவ நீதிமன்றம் அமைக்கும் வாய்ப்பும் ஏற்பட இடமுண்டு. இவ்வாறானதொரு நிலைமையே எமது நாட்டில் தற்போது காணப்படுகின்றது.

இதனால், இது எனக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட அநீதியோ அல்லது பழிவாங்களோ என்று கூறிவிட முடியாது. நீதியை மதிக்கும், நாகரிகமாக செயற்படும் அனைவருக்கும் இழைக்கப்படும் அநீதியாகவே நான் இதனைப் பார்க்கின்றேன். இது எமது நாட்டின் நற்பெயருக்கு ஏற்படுத்தப்பட்ட கலங்கமாகும். எமது நாட்டு இராணுவத்துக்கு ஏற்படுத்தப்பட்ட கலங்கம் என்றே நான் இதனைக் கருதுகின்றேன். அதனால், இது குறித்து நாம் கவலைப்படப் போவதில்லை. இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள், ஏதாவது ஒருநாள் பின்விளைவுகளைச் சந்திப்பார்கள்.


கேள்வி :- உங்களது விடுதலைக்காக உங்கள் மனைவி மிகவும் போராடினார்... அவரது போராட்டத்துக்கு நீங்கள் செலுத்தும் காணிக்கை என்ன?


பதில் :- அவரது போராட்டத்துக்கு பதிலீடாக என்னால் எதையும் கொடுத்துவிட முடியாது. இப்போது நான் அவர்களோடு மீண்டும் சேர்ந்ததில் அனைவரும் சந்தோஷமாக உள்ளோம். இருப்பினும், என் மனைவிக்கு கடமைப்பட்டுள்ளேன். அவர்களுக்கான எனது கடமைகளை நான் சரியாக நிறைவேற்றுவேன். அது தான் என்னால் அவர்களுக்கு கொடுக்க முடிந்த காணிக்கை.

கேள்வி :- நீங்கள் தண்டனை அனுபவித்த காலகட்டத்தில் சிறைச்சாலை அதிகாரிகள், சக கைதிகள் போன்றோர் உங்களோடு எவ்வாறு பழகினார்கள்?

பதில் :- அவர்கள் என்னை நன்றாக கவனித்தார்கள். ஆனால் சிறைச்சாலை அதிகாரிகள், ஒரு கைதியிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமோ... அவற்றை மீறி அவர்கள் என்னோடு பழகுவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை. அதற்கு இடமளிக்கவும் இல்லை. 10 வருடங்களேனும் சிறையில் இருக்கத் தயார் என்ற மனநிலையை ஏற்படுத்திக் கொண்டே நான் சிறைச்சால

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X