2025 மே 19, திங்கட்கிழமை

டெல்லியில் தவிக்கும் பிரதமர் மன்மோகன்சிங்

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 25 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு சமாஜ்வாடிக் கட்சி தலைவர் முலயாம் சிங் யாதவ் - ஒக்ஸிஜன் கொடுத்துள்ளார். அதனால் மம்தா பாணர்ஜி தலைமையிலான 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் - பிரதமர் மன்மோகன்சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ள நிலையிலும், அரசின் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து இல்லாமல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் முலயாம்சிங்கின் ஆதரவில் மத்திய அரசு நீடிப்பது என்பது "எலியை இடுப்பில் கட்டிக் கொண்டு" இருப்பது போலவே என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது. எப்போதுமே டெல்லி அரசியலானது மாநில அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதே நிலை தமிழகத்திற்கும் பொருந்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மாநிலத்தில் உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க.), திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) ஆகிய இரு கட்சிகளுமே இந்த தாக்கத்தில் சிக்கிக் கொள்ளத் தவறியதில்லை. மத்தியில் இருக்கும் அரசுக்கு தாங்கள் அளித்து வரும் ஆதரவை வாபஸ் வாங்கினால் அது தங்களுக்கு எந்தவிதத்தில் பலத்தைக் கொடுக்கும், அல்லது பாதகத்தை விளைவிக்கும் என்ற இக்கட்டில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் அவ்வப்போது மாட்டிக் கொண்டுள்ளன. அதே மாதிரியான சிக்கலில் இப்போதும் இரு கட்சித் தலைவர்களும் இருக்கிறார்கள். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் "அகில இந்திய அரசியல் தாக்கத்தை" தமிழக அரசியலில் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்ற முடிவு எடுக்க முடியாமல் தயங்கி நிற்கிறார்கள்.

அ.தி.மு.க.விற்கும், தி.மு.க.விற்கும் இப்படி மாறி மாறி சிக்கல்கள் கடந்த காலத்தில் அரங்கேறியதுண்டு. 1991-96 காலத்தில் பிரதமர் நரசிம்மராவ் காங்கிரஸ் கட்சியின் பிரதமராக மத்திய அரசை வழிநடத்திச் சென்றார். ராஜீவ் காந்தியின் திடீர் படுகொலையால் சோனியா காந்தி அமைதி காத்த நேரம் அது. அப்போது அ.தி.மு.க.விற்கு 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். அந்த எம்.பி.க்களின் ஆதரவுடன்தான் நரசிம்மராவ் ஆட்சி செய்தார். ஆனாலும் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவிற்கும், பிரதமராக இருந்த நரசிம்மராவிற்கும் அரசியல் ரீதியாக உறவு சரியில்லை. தமிழக ஆளுனராக அப்போது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சென்னா ரெட்டி நியமிக்கப்பட்டது - ஜெயலலிதா, சசிகலா, நடராஜன் உள்ளிட்ட அனைவர் மீதும் வருமானவரித்துறை வழக்குகள் போடப்பட்டது எல்லாமே அ.தி.மு.க. அன்று ஆதரவு அளித்து மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான அரசால்தான் மேற்கொள்ளப்பட்டன. சமீபத்தில் வாரப்பத்திரிகை ஒன்றில் வெளிவந்த பேட்டியில் கூட சசிகலாவின் கணவர் நடராஜன் அவரது குடும்பத்தினர் எப்படியெல்லாம் அப்போது வழக்கில் சிக்கிக் கொண்டார்கள் என்பதை சுட்டிக் காட்டியிருந்தார். ஆனாலும், கடைசிவரை பிரதமர் நரசிம்மராவிற்கு அ.தி.மு.க.வின் 11 எம்.பி.க்களும் ஆதரவளித்துக் கொண்டிருந்துதான் இருந்தார்கள். ஏனென்றால் காங்கிரஸை விட்டால் தமிழகத்தில் அ.தி.மு.க.விற்கு கூட்டணி வைக்க வேறு அகில இந்தியக் கட்சி அப்போது இல்லை. பாரதீய ஜனதா கட்சி இருந்தாலும், அக்கட்சியுடன் கூட்டணி வைத்தால் வாக்கு வராது என்ற அச்சம் அ.தி.மு.க.விற்கு நிலவியது. இதுபோன்ற காலகட்டத்தில் தமிழக காங்கிரஸிலிருந்து மூப்பனார் பிரிந்தார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி என்று தனிக்கட்சி தொடங்கி, தி.மு.க.வுடன் கூட்டணி கண்டார். இந்நிலையில் பலமிழந்த காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும், அன்று வேறு அகில இந்திய கட்சி தமிழகத்தில் கிடையாது என்பதால் தனக்கும், தனக்கு வேண்டியவர்களுக்கும் எதிராக செயல்பட்ட காங்கிரஸ் கட்சியுடனேயே 1996 நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணியைத் தொடர்ந்தார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா. அதனால் அந்த அணி தோல்வி கண்டது.

பிறகு 1998 நாடாளுமன்ற தேர்தல் வந்தது. அதற்கு முன்பு 13 நாளில் ஆட்சியை வாஜ்பாய் இழந்ததால், பா.ஜ.க.விற்கு இந்தியா முழுவதும் அனுதாப அலை வீசியது. அதைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த அ.தி.மு.க, புதுவிதமான கூட்டணியை உருவகம் செய்தது. அக்கூட்டணியில் பா.ஜ.க.வுடன், வைகோ, ராமதாஸ், வாழப்பாடி ராமமூர்த்தி போன்றவர்களை இணைத்துக் கொண்டது அ.தி.மு.க. இப்படியொரு "கதம்ப கூட்டணி" பா.ஜ.க.வையும் சேர்த்துக் கொண்டு அப்போதுதான் நாடாளுமன்றத் தேர்தலில் அமைத்தார் ஜெயலலிதா. அவர் அரசியல் பிரவேசம் செய்த பிறகு அரங்கேற்றிய வித்தியாசமான கூட்டணி அது. வைகோவும், ராமதாஸும் ஒரே அணியில் சம எண்ணிக்கை உள்ள தொகுதிகளுடன் போட்டியிட்டதும் அந்த தேர்தலே. அப்போது ஆட்சியிலிருந்த தி.மு.க. ஜெயலலிதாவை கைது செய்தது. அந்த கைது அவருக்கு அனுதாபத்தைப் பெற்றுத்தந்தது. மேலும் பலம் கொடுக்கும் வகையில் நிகழ்ந்த "கோவை குண்டு வெடிப்பு" அக்கூட்டணி வெற்றிக்கூட்டணியாக அமையக் கை கொடுத்தது. அதுவே டெல்லியில் அதிகாரம் செலுத்தும் கட்சியாக அ.தி.மு.க. விளங்குவதற்கு காரணமாக அமைந்தது. ஆனால் வாஜ்பாய் அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொண்ட அ.தி.மு.க.வின் "டெல்லி பாலிடிக்ஸ்" தமிழகத்தில் அக்கட்சிக்கு பெரும் தடுமாற்றத்தைக் கொடுத்து விட்டது. மத்தியில் மாற்று அரசு அமைந்து விடும் என்ற நம்பிக்கையில் அப்போது தமிழகத்தில் எதிர்கட்சி வரிசையில் இருந்த ஜெயலலிதா, வாஜ்பாய் அரசுக்கு ஆதரவை வாபஸ் வாங்கினார். ஆனால் இன்று பிரச்சினை செய்கின்ற இதே முலயாம் சிங் யாதவ் அன்று அரங்கேற்றிய கடைசி நேர பல்டியால் சோனியா காந்தியால் 1999இல் ஆட்சியமைக்க முடியாமல் போனது. அதனால் டெல்லியில் மாற்று அரசு அமையாமல் நாடாளுமன்றத்திற்கு திடீர் தேர்தல் வந்தது. 1996இல் கடைசி வரை கூடவே இருந்து அ.தி.மு.க. கஷ்டப்பட்டது என்றால் 1998இல் முன்கூட்டியே கூட்டணியிலிருந்து விலகியதும் அக்கட்சிக்கு பிரச்சினையாகவே அமைந்தது.

அது 1999 நாடாளுமன்ற தேர்தல். 1996இல் விலகிச் சென்ற அதே காங்கிரஸுடன் மீண்டும் கூட்டணி கண்டது அ.தி.மு.க. குறைந்த தொகுதிகளை காங்கிரஸுக்கு கொடுத்து கூட்டணி அமைத்தாலும் அது தேர்தலில் எடுபடவில்லை. மாறாக தி.மு.க. முதன் முறையாக (அதுவரை மதவாத சக்திகள் என்று சித்திரித்த) பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது. வைகோவும், ராமதாஸும் மீண்டும் தி.மு.க. கூட்டணிக்கே வந்தார்கள். "வாஜ்பாய் அரசைக் கவிழ்த்தது அ.தி.மு.க." என்ற பிரசாரம் மேலோங்கியதால், தி.மு.க. கூட்டணியே வெற்றி பெற்றது. மாநிலத்தில் தி.மு.க. அரசும், மத்தியில் வாஜ்பாய் பிரதமர் என்ற நிலைப்பாடும் தமிழக அரசியலில் அ.தி.மு.க.வின் எதிர்ப்பு அரசியலுக்கு சவலாக அமைந்தது. ஆனால் காலப்போக்கில் அ.தி.மு.க.வுடன் நட்பாக இருக்க எங்களுக்கு "க்ரீன் சிக்னல்" வந்து விட்டது என்று தமிழக சட்டமன்றத்திலேயே பா.ஜ.க.வின் சட்டமன்றக் குழுத் தலைவர் லட்சுமணன் பேச, தி.மு.க.விற்கும், அகில இந்தியக் கட்சியான பாரதீய ஜனதா கட்சிக்கும் பனிப்போர் படரத்தொடங்கியது. ஆனாலும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, மத்தியில் அமைச்சராக இருந்த முரசொலி மாறன் போன்றவர்களுக்கும், பிரதமராக இருந்த வாஜ்பாய் ஆகியோருக்கும் இடையே இருந்த நல்லுறவு கூட்டணியைக் கெடுத்து விடாமல் கொண்டு போய்க் கொண்டிருந்தது. அதனால், 2001 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடனேயே பா.ஜ.க. போட்டியிட்டது. அக்கூட்டணி தோல்வியைக் கண்டது. டெல்லி அரசியலில் பா.ஜ.க.வுடன் இருப்பது மாநிலத்தில் ஆட்சியமைக்க உதவாது என்ற நிலை அப்போது தி.மு.க.விற்கு ஏற்பட்டது. இதுபோன்ற சூழலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது அ.தி.மு.க. தமிழகத்தின் முதல்வரானார் ஜெயலலிதா. திடீரென்று நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டார். ஆனால் அதையும் சகித்துக் கொண்டு மத்திய அரசில் வாஜ்பாய்க்கு ஆதரவு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் சிக்கிக் கொண்டார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. மாநிலத்தில் தனக்கும், தன்னுடன் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகளையும் சமாளிக்க மத்தியில் வாஜ்பாயுடன் இருப்பது தவிர்க்க முடியாதது என்று நினைத்தார் கருணாநிதி என்றே சொல்ல வேண்டும். ஆகவே டெல்லி பாலிடிக்ஸை வைத்து தமிழகத்தில் ஜெயிக்க வேண்டும் என்றால் கூட்டணியை மாற்ற வேண்டும் என்ற கட்டாயத்திற்கு வந்தார். அப்போதுதான் சோனியா காந்தி "வெளிநாட்டுக்காரர்" என்று பிரசாரம் நடைபெற்ற நேரம். முதன் முதலில் அவர் பிரதமராக தடையேதுமில்லை என்று கூறி காங்கிரஸ் கூட்டணி அமைப்பதற்கான கதவைத் திறந்தார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இதுபோன்ற காலகட்டத்தில்தான் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் கொண்ட "மெகா கூட்டணி" அமைந்தது. இப்படியொரு மெகா கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலுக்கு அமைந்தது தமிழகத்தில் அதுவே முதல்முறை. டெல்லி அரசியலை மனதில் வைத்து எடுத்த முடிவு அந்த தேர்தலில் தி.மு.க.விற்கு கை கொடுத்தது.

இந்த தேர்தல் வெற்றி தி.மு.க.விற்கு தெம்பைக் கொடுத்தது. அ.தி.மு.க.விற்கு சோர்வை கொடுத்தது. ஏனென்றால் இன்று அ.தி.மு.க. எடுத்து வைக்கும் "நாற்பதுக்கு நாற்பது வெற்றி" என்ற கோஷத்தை 2004இல் நடத்திக் காட்டியது தி.மு.க. தலைமையிலான அணி. இந்த கூட்டணியால் வந்த "டெல்லி அரசியலை" சாதகமாக்கிக் கொண்டு, 2006 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரானார் கருணாநிதி. புதிய கட்சியான தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட்டு வாக்குகளைப் பிரித்ததும் இன்னொரு காரணம். மாநிலத்தில் ஆட்சியிலிருந்த காரணத்தால் மத்திய அரசின் உதவி பல்வேறு வகையில் தமிழகத்திற்கு தேவை என்ற கட்டாயம் முதல்வராக இருந்த கருணாநிதிக்கு ஏற்பட்டது. அதே நேரத்தில், பா.ஜ.க.விலும் வாஜ்பாய்க்கு இருந்த மவுசு குறைந்து கொண்டிருந்த நேரம். ஆகவே தமிழகத்தில் "இனி பா.ஜ.க.வுடன் கூட்டணிக்குப் போவதில்" பிரயோஜனமில்லை என்ற நிலை தி.மு.க.விற்கு புரிந்தது. இது போன்ற நிர்பந்தங்களால் 2009 நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸுடனான கூட்டணியையே தி.மு.க. "தர்மசங்கடத்துடன்" தொடர்ந்தது. ஆனால் தி.மு.க.விடமிருந்த வைகோ, ராமதாஸ் ஆகியோரும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளியேறின. அமெரிக்காவுடனான "அணுசக்தி ஒப்பந்தத்திற்கு" எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸுக்கு அளித்த வந்த ஆதரவை வாபஸ் பெற்ற நேரம் என்பதால், தி.மு.க. கூட்டணியை விட்டு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது. தமிழகத்தில் புதிதாக உருவான விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை அப்போது பெரிதும் பாதித்தது. அதனால் ஏறக்குறைய ஒரு மெகா கூட்டணி போன்ற அணியை அ.தி.மு.க. அமைத்தும் அக்கட்சியால் 2009 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூட முடியவில்லை. தி.மு.க.விற்கு கை கொடுத்தது. டெல்லி பாலிடிக்ஸை அடிப்படையாக வைத்து எடுத்த தேர்தல் யுக்தி வெற்றியைக் கொடுத்தது. ஆனால் இந்த நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் காங்கிரஸுக்கு கிடைத்த அதிக எண்ணிக்கையிலான சீட்டுகள் (206 எம்.பி.க்கள்), காங்கிரஸுக்கும்- தி.மு.க.விற்கும் இடையேயான உறவில் மோதலையும், முட்டலையும் தோற்றுவித்தது. அதன் ஓர் அங்கம்தான் அமைச்சரவை உருவாகும் போதே ஏற்பட்ட மோதல், பிறகு 2-ஜி அலைக்கற்றை ஊழல், மத்திய அமைச்சர்களாக இருந்த ராஜா, தயாநிதி மாறன் போன்றோர் ராஜினாமா செய்தது. கனிமொழி, ராஜா ஆகியோர் ஜெயிலுக்குப் போனது. இவை எல்லாம் அடுத்தடுத்து நிகழ்ந்தாலும், டெல்லி பாலிடிக்ஸில் என்ன முடிவை எடுப்பது என்று தி.மு.க. தலைமை திணறிய நின்றது.

தி.மு.க. தலைவரின் மகளே திகார் சிறையில் இருந்திருக்கிறார். ஆனாலும் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி தொடருகிறது. இதுபோன்ற பெரிய சிக்கல்கள் எதையும் சந்திக்காத மம்தா பாணர்ஜி மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்று விட்டார். முலயாம் சிங் யாதவோ "எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்கத் தயார்" "சில்லரை வணிகத்தில் நாடாளுமன்ற தீர்மானம் வந்தால் அதை ஆதரிப்போம்" என்றெல்லாம் பேசி காங்கிரஸுக்கு தலைவலியும், திருகுவலியும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும், நேரடியாக பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளான தி.மு.க.வோ, "நாங்கள் மிரட்டல் அரசியல் நடத்த மாட்டோம்" என்று கூறி, டெல்லி அரசியலில் அதிரடி மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் கூட, அதை தமிழகத்தில் பயன்படுத்திக் கொள்ள தயங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு முதல் காரணம் காங்கிரஸுக்கு மாற்றாக வாக்கு வங்கியைத் தரக்கூடிய கட்சி இன்னும் தி.மு.க.விற்கு கூட்டணியாக வரவில்லை என்பதே. அதனால் டெல்லி அரசியல் தாக்கத்தை பயன்படுத்திக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது தி.மு.க. "தாங்களும் வாபஸ் வாங்கி, மத்திய அரசு பிழைத்து விட்டால் பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க.வின் அதிரடிகளை சமாளிக்க முடியாதே" என்ற அச்சத்தில் தி.மு.க. திணறிக் கொண்டிருக்கிறது என்பதே இதன் உட்பொருள். தமிழகத்தில் காங்கிரஸுக்கு மாற்றுக் கட்சி எது என்பது கண்ணிலும் பட்டு, உத்தரவாதமும் கிடைத்த பிறகே தி.மு.க. தடுமாற்றம்" எல்லாம் தொடரும். டெல்லி பாலிடிக்ஸில் அதிரடி முடிவு எடுக்கும் என்றே தெரிகிறது. அதுவரை இந்த "திணறல்" "
அதே போல் அ.தி.மு.க.வும் டெல்லி அரசியல் தாக்கத்தை தமிழகத்தில் பயன்படுத்திக் கொள்ள இன்னும் தயங்கியே நிற்கிறது. இதுவரை காங்கிரஸுக்கு எதிராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா செய்து வந்த கடும் பிரசாரம் அந்த முயற்சிக்கு தடைக்கல்லாக கிடக்கிறது. மத்திய அரசிலிருந்து தி.மு.க. விலகினால் உடனே காங்கிரஸை ஆதரிக்க அ.தி.மு.க. முன்வருமா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும். முன்பெல்லாம் டெல்லியில் உள்ள மத்திய அரசை தி.மு.க. ஆதரித்தால், அ.தி.மு.க. எதிர்க்கும். அதேபோல் அ.தி.மு.க. ஆதரித்தால், தி.மு.க. எதிர்க்கும். இதுதான் கடந்த காலத்தில் 1996 முதல் 2009 வரையில் உருவான மத்திய அரசுகள் விடயத்தில் நிகழ்ந்த சம்பவங்கள். ஆனால் இந்த முறைதான் தி.மு.க. விலகினால் நாங்கள் ஆதரிக்கிறோம் என்ற சொல்ல இன்னமும் அ.தி.மு.க. தயங்குகிறது. முன்பு 2-ஜி அலைக்கற்றை விடயத்தில் தி.மு.க. மீது நடவடிக்கை எடுத்தால் அக்கட்சி வாபஸ் பெறும் என்றால் நாங்கள் ஆதரிக்கத் தயார் என்று பிரதமருக்கு சமிக்ஞை செய்தது அ.தி.மு.க. ஆனால் அதை இப்போது செய்யாமல் அமைதி காக்கிறது. ஏனென்றால் அன்றை விட இன்றைக்கு காங்கிரஸுக்கு அந்த அளவிற்கு தமிழகத்தில் பெயர் கெட்டுப் போயிருக்கிறது என்ற எண்ணம் அ.தி.மு.க. தலைமைக்கு இருப்பதே காரணம். காங்கிரஸை ஆதரித்தால், தமிழகத்தில் தேர்தல் வெற்றிக்கு உதவாது என்று அ.தி.மு.க. திடமாக நம்புகிறது. அதேபோல் காங்கிரஸுக்கு மாற்றாக தமிழகத்தில் வாக்கு வங்கி கொடுக்க எந்தக் கட்சி இருக்கிறது என்பது கண்ணுக்குத் தெரிந்தும், "சிக்னல்" கிடைக்காமல் தவிக்கிறது. இந்த சூழ்நிலைகளைப் பார்த்தால், டெல்லியில் தற்போது நடக்கும் அரசியல் சித்து விளையாட்டுகளில் தாங்களும் பங்கேற்று அதை, தமிழகத்தில் பயன்படுத்திக் கொள்வதற்கு இரு முக்கிய அரசியல் கட்சிகளான தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தயங்குகின்றன. ஏறத்தாழ 16 வருடங்களுக்குப் பிறகு இப்படியொரு வித்தியாசமான அரசியல் சூழ்நிலை தமிழக அரசியலில் இப்போது ஏற்பட்டிருக்கிறது. "பெரிய சகோதரர்களே" (அ.தி.மு.க., தி.மு.க.) அமைதி காப்பதைப் பார்த்து, "சிறிய சகோதரர்கள்" (ம.தி.மு.க., பா.ம.க.) எந்தப் பக்கமும் சேராமல் கருத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதை விட முக்கியமாக டெல்லி அரசியலை வைத்து, இந்த "பெரிய சகோதரர்கள்" என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பதை தமிழக அரசியலில் மூன்றாவது சக்தியாக திகழும் விஜயகாந்த் பொறுமையாக கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X