2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பூனைக்கு யார் மணி கட்டுவது?

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 16 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் 2013ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கை மீதான வாக்களிப்பில் ஹெல உறுமய நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரேலிய ரத்தின தேரரிடம் தமிழ் அரசியல்கட்சிகள் பாடம் படிக்க வேண்டும் என்ற கருத்தில் மனோ கணேசன் பேசியுள்ளார். இது குறித்து தமிழ் பேசும் அரசியல் தலைமைகளிடம் பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், அது குறித்து அந்த கட்சிகள் அனைத்தும் சரி சமமாக இருந்து, அவ்வப்போது கருத்து பரிமாற்றம் செய்து கொள்வது அவசியமாகிறது.

அது போன்றே, அந்த அரசியல் தலைமைகள் தங்கள் கட்சிகளுக்குள்ளேயும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்துடனும் அவ்வப்போது கலந்தாய்வு செய்வதும் முக்கியமாகிறது. அவ்வாறு செய்ய தவறியதால் தான், கடந்த காலங்களில், தமிழ் பேசும் சமுதாயத்தின் ஒன்றுபட்ட அரசியல் தலைமை இலங்கை சுதந்திரம் அடைந்த காலகட்டம் தொடங்கி, பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு வகைகளில் உடைந்து, சின்னாபின்னமாக இன்று உருக்குலைந்து நிற்கிறது. அதே நிலைமை இன்றும் தொடருகிறது.

'திவி நெகும' மற்றும் உள்ளூராட்சி தேர்தல் சட்ட திருத்தங்களை நாடாளுமன்றத்தில் அரசு சட்டமாக இயற்றுவதற்கு முன்னர், அவற்றிற்கு மாகாண சபைகளின் ஆதரவை பெற வேண்டும் என்று அரசியல் சட்டம் கூறுகிறது. அதனையே உச்ச நீதி மன்றமும் உறுதி செய்துள்ளது. என்றாலும், அந்த வழியிலேயே சென்று இதுபோன்ற சட்டங்களை நாடாளுமன்றம் நிறைவேற்றுமென்றால், அதனை அரசியலாக்க முடியுமே தவிர, அவை அரசியல் சட்டத்திற்கு புறம்பானவை என்று கூறிவிட முடியாது. ஆனால், இதுபோன்ற சட்டங்கள் சிறுபான்மையினருக்கு எதிரானது என்பது மனோ கணேசனின் வாதம். அதன் காரணமாகவே, தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகளின் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ரத்தின தேரரிடம் பாடம் படிக்க வேண்டும் என்பது அவரது முறையீடு.

அன்றும் சரி, இன்றும் சரி, நாட்டில் உள்ள சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்தில் கணிசமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் உள்ளனர். இனப்போர் முடிந்த காலகட்டத்திற்கு முன்னர், கடந்த நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 225 உறுப்பினர்களில், 45-50 உறுப்பினர்கள் தமிழ் பேசும் மக்களை சார்ந்தவர்கள். அதில், 22 பேர், தமிழ் தேசிய கூட்டமைப்பை சார்ந்தவர்கள். இன்று, போர் முடிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 12. ஆனாலும், மொத்த எண்ணிக்கையில் எந்தவித குறைவும் இல்லை.

இதில் இருந்து தெரிவது என்ன? சிறுபான்மை இன மக்களின் பிரச்சினை இலங்கை தமிழ் சமூகத்தில் மட்டுமே எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதும், அவர்களது அரசியல் தலைமை மட்டுமே இந்த பிரச்சினை குறித்து பேசுவதற்கு அருகதை உள்ளது என்பதும் பொய்ப்பிக்கப்பட்டுள்ளது. மாறாக, தமிழ் பேசும் சிறுபான்மை சமூகம் அல்லது சமூகங்கள், தங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலேயே வாக்கு அளித்து வந்துள்ளனர் என்பது புலப்படுகிறது.

அந்த வகையில், தமிழ் பேசும் கட்சிகளின் பிரதிநிதித்துவம் குறைந்த தற்போதைய காலகட்டத்தில் கூட, சிங்கள கட்சிகளில் தமிழ் பேசும் உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடி வந்துள்ளது. தற்போது ஐக்கிய தேசிய கட்சியை கூறலாம். கடந்த நாடாளுமன்றத்தில் 39 அல்லது நாற்பது உறுப்பினர்கள் இருந்த சிங்கள பேரினவாத கட்சியான ஜே.வி.பி. கூட தனது இரண்டு நியமன உறுப்பினர்கள் தமிழ் பேசுபவர்களான இருக்க வேண்டும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டது.

அதாவது, தமிழ் கட்சிகள் செய்ய முடியாததை, அல்லது செய்ய விரும்பாததை, தமிழ் பேசும் மக்கள் தங்களுடைய போக்கில் செயல்பட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள். இன்னும் சொல்லப் போனால், மக்கள் தொகை விகிதாசாரத்தை வைத்து பார்க்கும் போது, சிறுபான்மையின நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையும் அந்த சதவீதத்தை ஒட்டியே இருப்பது, தங்களது அரசியல் தலைமை என்ற கணக்கை கைவிட்டுவிட்டு, தங்களது பிரதிநித்துவம் என்ற எண்ணப்போக்கில் தமிழ் பேசும் சமூகம் செல்கிறது என்று கூட கருத இடம் இருக்கிறது.

இந்த கணக்கிலும் குழப்பம் வரும் நாள் அதிக தொலைவில் இல்லை. இப்பொழுதே, மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைய இருக்கிறது. அதே சமயம், அமைச்சர் தினேஷ் குணவர்தனே கமிட்டி அறிக்கையின் அடிப்படையிலோ, அல்லது அதனை ஒட்டி வேறு விகிதாசாரத்திலோ, நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையும் எல்லைகளும் மாற்றி அமைக்கப்படும் பட்சத்தில், சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் காணாமலே போய்விடும் என்பதே உண்மை.

பல காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த உள்ளூராட்சி சட்ட திருத்தம் புதிய சட்டமாவதில் அரசு காட்டும் ஆர்வம், அடுத்தடுத்துள்ள தேர்தல் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் எதிர்பார்க்கப்பட வேண்டிய முன்னேற்றத்தின் அறிகுறியே ஆகும். ஆனால் இது குறித்து தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைமைகள் எதுவும் செய்வதாக தெரியவில்லை. கூட்டமைப்பும், மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியும் அல்லாத சிறுபான்மையின மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும் அரசில் அங்கம் வகிக்கின்றன. அவையும் சரி, அரசில் அங்கம் வகிக்காத தமிழ் கட்சிகளும் சரி, இதுபோன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து எந்த முயற்சியும் எடுப்பதாக தெரியவே இல்லை.

கடந்த தசாப்தங்களில், சிறுபான்மையின மக்களின் பிரச்சினை, வட இலங்கை தமிழர்களின் பிரச்சினை மட்டுமே என்ற எண்ணம் வேரூன்றி விட்டது. இதற்கு, பிற இனத்தவரையோ, அல்லது அவர்களின் கட்சி தலைமைகளை மட்டுமோ குறை கூறி பயன் இல்லை. இனப்பிரச்சினை என்பதே வட இலங்கை தமிழர்களின் பிரச்சினை என்ற அளவில் பிரசாரம் செய்வதில் அவர்களது அரசியல் தலைமைகளே முனைப்பு காட்டியதும், தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை என்பது, சுதந்திரம் அடைந்த காலகட்டம் தொடக்கம் வட இலங்கை தமிழர்களின் பிரச்சினை என்ற எண்ணம் தோற்றுவிக்கப்பட்டதுமே 'மொழிப் பிரச்சினை' என்பது 'இனப்பிரச்சினை' என்ற அளவில் குறுகியதும் சரித்திர உண்மை.

உதாரணத்திற்கு, எழுபதுகளில் பல்கலைக்கழக உயர்கல்வி பெறுவதற்கு கொழும்பு மற்றும் வட இலங்கை மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்ட போது, அந்த முறையின் கீழ், கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள் பயன் பெற்றாலும், அது ஏதோ அனைத்து தமிழ் மக்களின் உரிமைக்கு உலை  வைக்கப்படுவதாகவே பிரசாரம் செய்யப்பட்டது. இதுபோன்ற பிரச்சினை சார்ந்த பிரிவுகளால் தான் தமிழ் மொழி பேசும் அனைத்து சிறுபான்மை இன மக்களின் பிரச்சினை என்பது வேறு உருவம் பெற்று, இன்று அறியப்படும் 'இனப்பிரச்சினையாக' உருவெடுத்துள்ளது.

இனப்பிரச்சினை இன்றும் சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழ் மக்களின் அபிலாஷைகள் குறித்து உலக நாடுகள் கவலை கொண்டிருக்கின்றன என்றால், அதற்கு முக்கிய காரணமே விடுதலை புலிகள் இயக்கத்தின் தீவிரவாதமும் அதனை ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தையான இனப்போரும் தான். ஆனால், அந்த பிரச்சினையினாலும் இனப்போரினாலும் இலங்கையின் உள்ளே உள்ள தமிழ் பேசும் சமூகத்தவர்களின் முழு முதல் ஆதரவையும் ஒட்டு மொத்தமாக பெற முடியாததற்கும் இதுவே காரணமாகும்.

இன்று உலக நாடுகளின் கவலை, இனப்போரை ஒட்டிய 'போர் குற்றங்கள்' குறித்தே அதிக அளவில் உள்ளது. அது குறித்து ஏதோ ஒருவிதத்தில் அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய முடிவு ஏற்பட்டால், இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து அவர்களில் எத்தனை பேர் சிந்திப்பார்கள் என்று தெரியாது. இந்த அரசோ, அல்லது இலங்கையில் எதிர்காலங்களில் பதவிக்கு வரும் எந்த அரசோ, தாங்கள் ஏதோ ஒரு வகையில் தண்டிக்கப்பட்டு விட்டார்கள் அல்லது தவறாக குற்றம் சாட்டப்பட்டார்கள் என்ற குற்ற உணர்வை சர்வதேச சமூகத்தினரிடம் ஏற்படுத்தி விட்டால், அரசியல் தீர்விற்கான ஆதரவை பின்னர் தமிழ் சமூகம் அவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பது வேலையற்ற வேலையாகி விடும்.

இந்த பின்னணியில், இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஆகட்டும், அல்லது அரசியல் சட்டம் ஏற்றுக் கொண்டுள்ள வகையில் மேற்கொள்ளப்படும் சிறுபான்மையினரை பாதிக்கும் விதத்திலான சட்டங்கள் ஆகட்டும், அவை தம்மில் ஒரு சாராரை மட்டுமே பாதிக்கிறது என்ற எண்ணத்தில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதித்துவ அரசியல் தலைமைகள் செயல்படுவது இன்னும் தொடருகிறது. மொத்த தமிழ் பேசும் மக்களில் அதிகமானவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிந்துபட்ட அரசியல் தலைமைகள், யார் ஆண்டாலும் அந்த அரசுகளை சார்ந்து அரசியல் செய்வதே சிறுபான்மை இன மக்களுக்கு காலகாலத்திற்கும் பயன்படும் என்று எண்ணுவதே இதற்கு காரணம்.

ஆனால், அவர்களுக்கு அப்பால், பாதிக்கப்பட்ட சமூக கூறுகளின் அரசியல் பிரதிநிதித்துவம் தனி ஆவர்த்தனம் வாசிப்பதும், அதன் ஒலி, உலகம் எங்கும் தொடர்ந்து எதிரொலிப்பதும், களநிலைக்கு மாறான உருவகங்களை தோற்றியுள்ளது. ஆனால், இவர்களது கூற்றில் உண்மை இல்லை என்று பொருளல்ல. இந்த நிலை மாற வேண்டும். இனப்பிரச்சினை என்ற அடையாளத்திற்கு அப்பால் சென்று மொழிப்பிரச்சினை என்ற எண்ண ஒட்டம் அனைத்து தரப்பினரிடமும் உருவானால் மட்டுமே, அந்த பிரச்சினைகளுக்கான ஏற்றுக்கொள்ள தக்க அரசியல் தீர்வு உருவாகும். அதற்கான முயற்சிகள் தமிழ் சமூகத்தினுள் உருவாக வேண்டும். அதற்கான முஸ்தீபுகள் மேலும் காலவிரயம் இன்றி தொடங்கப்பட வேண்டும்.

ஆனால், பிரிந்துபட்ட அரசியல் தலைமைகளும், எப்போதோ காலாவதி ஆகியிருக்க வேண்டிய சமுதாய வேற்றுமைகளும் தொடரும் வரை இத்தகைய மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மாறுபட்ட அரசியல் மற்றும் சமுதாய மாற்றங்களை தோற்றுவிக்க மாறுமட்ட முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். அதற்கு மாறுபட்ட தலைமைகள் தோன்ற வேண்டும், தோற்றுவிக்கப்பட வேண்டும்.

அந்த பூனைக்கு யார் மணி கட்டுவது?

  Comments - 0

  • thurai Friday, 19 October 2012 03:08 PM

    தெளிவாகச் சொல்லுங்க... குழப்ப வேண்டாம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X