2025 மே 19, திங்கட்கிழமை

சீர் பெருக்கும் சிவராத்திரி

Menaka Mookandi   / 2013 மார்ச் 10 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஆர்.பரிமளரங்கன்

எங்கும் நிறைந்திருக்கும் இறையாற்றலை எளியோரும் உணரும் அற்புத தினம். கிருத யுகத்திற்கு முற்பட்ட பிரளயத்தில் உமாதேவியும், திரேதா யுகத்திற்கு முற்பட்ட பிரளயத்தில் முருகனும், துவாபர யுகத்திற்கு முற்பட்ட பிரளயத்தில் விநாயகரும், கலி யுகத்திற்கு முற்பட்ட பிரளயத்தில் மகாவிஷ்ணுவும் சிவராத்திரி விரதம் கடைப்பிடித்ததாக புராண நூல்கள் சொல்கின்றன. தேவர்களும் சிவராத்திரி விரதம் மேற்கொண்டு பேறுகள் பெற்ற தகவல்களை ஆகமங்கள் கூறுகின்றன.

சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி நாளில் உமாதேவி சிவபெருமானை வழிபட்டு பேறுபெற்றுள்ளாள். வைகாசி வளர்பிறை அஷ்டமி சிவராத்திரியில் சூரிய தேவனும் ஆனி மாத வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரியில் ஈசானனும்; ஆடி மாத தேய்பிறை பஞ்சமி சிவராத்திரியில் முருகப் பெருமானும் ஆவணி வளர்பிறை, அஷ்டமி சிவராத்திரியில் சந்திரனும் புரட்டாசி வளர்பிறை திரயோதசி சிவராத்திரியில் ஆதிசேஷனும் ஐப்பசி வளர்பிறை துவாதசியில் இந்திரனும் கார்த்திகை வளர்பிறை சப்தமி, தேய்பிறை சிவராத்திரியில் சரஸ்வதியும் மார்கழி வளர்பிறை மற்றும் தேய்பிறை சதுர்த்தசி சிவராத்திரிகளில் லட்சுமியும் தை மாத வளர்பிறை திரயோதசி சிவராத்திரியில் நந்தி தேவரும் மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி சிவராத்திரியில் தேவர்களும் பங்குனி மாதம் வளர்பிறை திரிதியை சிவராத்திரியில் குபேரனும் வழிபட்டு பேறுகள் பெற்றிருப்பதாக ஆகமங்கள் கூறுகின்றன.

ஒவ்வொரு மாதமும் வரும் சிவராத்திரிக்கு பல பெருமைகள் இருக்கின்றன. மாசி மாதத்தில் வரும் மகாசிவராத்திரி நாளில் நான்கு கால பூஜையில் கலந்துகொண்டால் சிவனருள் கிட்டுவதுடன், இறுதிக்காலத்தில் சிவபதம் கிட்டுமென்று ஞான நூல்கள் கூறுகின்றன. ஈசனை லிங்க ரூபத்தில் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம் என்பதால், தேவலோக சிற்பியான மயன் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஏற்ற வகையில் லிங்கங்களை அமைத்துக் கொடுத்தாராம்.

தேவேந்திரனுக்கு பத்மராக லிங்கமும், குபேரனுக்கு பொன் லிங்கமும், எமனுக்கு மரகத லிங்கமும், வருணனுக்கு நீல லிங்கமும், விசுவ தேவர்களுக்கு வெள்ளி லிங்கமும், சூரியனுக்கு ஸ்படிக லிங்கமும், சந்திரனுக்கு முத்து லிங்கமும், நாகர்களுக்கு பவள லிங்கமும், சரஸ்வதிக்கு மாணிக்க லிங்கமும், மகாலட்சுமிக்கு நெய் லிங்கமும், தேவகணங்களுக்கு பஞ்சலோக லிங்கமும், துர்க்கைக்கு பொன் லிங்கமும், முனிவர்களுக்கு கல் லிங்கமும் என அவரவர்களுக்கு ஏற்ப லிங்கங்களை மயன் உருவாக்கிக் கொடுத்தார் என்று லிங்க புராணம் கூறுகிறது.

தேவாசுரர்கள் அமிர்தம் பெறவேண்டி பாற்கடலைக் கடைந்தபோது, முதலில் ஆலகாலம் என்னும் கொடும் விஷம் வெளிப்பட்டது. அதனை உலகம் உய்யும் பொருட்டு சிவபெருமான் உண்டார். அதைக் கண்ட பார்வதி சிவனின் கண்டத்தைப் பிடித்து அழுத்த, விஷம் அங்கேயே தங்கி நீலகண்டனானார்.

என்றாலும் விஷத்தின் தாக்கத்தால் சிவபெருமான் மயக்கமுற, அவரை தன் மடிமீது தலைசாய்த்துப் படுக்கவைத்து இரவு முழுக்க முந்தானையால் விசிறிக்கொண்டே சிவநாமத்தை ஜெபித்துக்கொண்டிருந்தாள் பார்வதிதேவி.  தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் பஞ்சாட்சாரத்தை இரவு முழுக்க ஜெபித்துக்கொண்டேயிருந்தார்கள். பிறகு, சிவபெருமான் விஷத் தாக்கத்திலிருந்து விடுபட்டார். அந்த இரவே மகா சிவராத்திரி எனப்படுகிறது.

திருமாலும், பிரம்மனும் ஈசனின் திருவடி, திருமுடி காண முயன்று தோல்வியடைந்ததும், அவர்களுக்கு ஜோதிலிங்க உருவாய்த் தோன்றி திருவிளையாடல் புரிந்த நன்னாள் சிவராத்திரி எனப்படுகிறது.  ஒருமுறை கயிலையில் சிவபெருமானின் கண்களை பார்வதிதேவி விளையாட்டாக தன் இரு கைகளால் பொத்தினாள். உடனே உலகம் இருண்டது. ஜீவன்கள் உயிர்மூச்சுவிட தடுமாறின. அந்த நிலை மாற தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் சிவபெருமானை வேண்டி வழிபட்டனர். அந்த நாள் மகா சிவராத்திரி என்று புராணங்கள் கூறுகின்றன.

வேடன் ஒருவன் வேட்டைக்குச் சென்றான். அவனை புலியொன்று துரத்த, ஓடிப்போய் அருகிலிருந்த மரத்தின்மீது ஏறி அமர்ந்து கொண்டான். இரவு தொடங்கியது. தூங்கிவிடக்கூடாது என்று மரத்திலிருந்து ஒவ்வொரு இலைகளாகப் பறித்துக் கீழே போட்டான். மரத்தடியில் அமர்ந்திருந்த புலி அவனைப் பார்த்த வண்ணமிருந்தது. அவன் ஏறியமர்ந்தது வில்வ மரம். தூங்காமல் இருந்த அந்த இரவு சிவராத்திரி.

வில்வ இலைகள் விழுந்த இடத்தில் சிவலிங்கம் ஒன்று இருந்தது. விடிந்தது. மரத்தடியில் அமர்ந்திருந்த புலி காட்டுக்குள் ஓடியது.  தன்னை அறியாமலே அவன் செய்திருந்தாலும், தூங்காமல் விழித்திருந்து சிவபூஜை செய்த பலன் அவனுக்குக் கிடைத்தது. அவனது இறுதிக்காலம் முடிந்ததும் சிவபதம் அடைந்தான் என்பது புராணத் தகவல். இதுபோல் பல கதைகள் சிவராத்திரியின் பெருமையைப் பறைசாற்றுகின்றன.

சிவராத்திரி நாளில் நான்கு காலங்களிலும் முறையே வெள்ளி, தங்கம், ரத்தினம், மண் லிங்கங்களைப் பூஜிக்க வேண்டுமென்று விதிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் சிவாலயங்களில் எழுந்தருளியுள்ள கல்லாலான சிவலிங்கத்திற்குதான் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கத்தில் உள்ளது.

சிதம்பரத்தில் மட்டும் தங்கத்தாலான சிவலிங்கம் உள்ளது. நேபாளத்தில் பசுபதிநாதர் கோவிலில் வெள்ளியினாலான சிவலிங்கம் உள்ளது. மண்ணாலான சிவலிங்கங்கள் தமிழகத்தில் பல கோவில்களில் உள்ளன. சிவவழிபாடு இந்தியாவில் மட்டுமல்ல் உலகில் பல நாடுகளிலும் உள்ளன. பண்டைய காலத்திலேயே சிவவழிபாடு இருந்ததற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன.

வட அமெரிக்காவில் 'கொலராடோ' என்னும் இடத்தில் ஒரு குன்றின்மீது சிவன் கோவிலும், அக்கோவிலில் பெரிய சிவலிங்கம் ஒன்று இருப்பதையும் 1937-ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஜாவா தீவிலும் பாழடைந்த சிவாலயங்கள் உள்ளனவாம். அங்குள்ள 'டெகால்' என்ற ஆற்றிலிருந்து சிவபெருமானின் செப்புச்சிலை ஒன்று கிடைத்திருக்கிறது. மேலும், ஜாவாவில் உள்ள சிவாலயங்களில் திருவாசகம் ஓதப்படுகிறது. ஜாவா தீவிற்கு அருகேயுள்ள சுமத்திரா தீவிலும் மிகவும் பழமையான சிவன் கோவிலில்,

அர்த்தநாரீஸ்வரர் வடிவில் சிவபெருமான் அருள்புரிகிறார். போர்னியோ என்ற இடத்தில் ஒரு மலைக்குகைக்குள் சிவன் மற்றும் விநாயகர் திருமேனிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சியாம் நாட்டில் உள்ள பழமையான சிவாலயத்தில் சிவபெருமானுக்குரிய சிறப்பு நாட்கள் விழாவாகக் கொண்டாடப்படுகின்றன.
 
எகிப்திலும், மேற்கு ஆசிய நாடுகளிலும், மத்திய தரைக்கடலில் உள்ள தீவுகளிலும், அதன் கரையை ஒட்டியுள்ள ஆப்பிரிக்கா,ஐரோப்பிய நாடுகளிலும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பண்டைய மக்களின் வழிபாடுகள் நம் இந்தியர்களின் சிவ வழிபாடுகளுடன் ஒத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பர்மா (மியான்மர்),  இலங்கை, மொரீசியஸ் ஆகிய நாடுகளிலும் சிவவழிபாடு போற்றப்படுகிறது.
சிவராத்திரி அன்று விரதம் கடைப்பிடித்து, அன்று சிவாலயத்தில் நடைபெறும் நான்கு கால பூஜையில் கலந்துகொண்டு தங்களால் இயன்ற அபிஷேகப் பொருட்களை அர்ப்பணித்தால், இம்மையிலும் மறுமையிலும் நலம்பெறலாம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X