2025 மே 19, திங்கட்கிழமை

தாக்குதல்கள் விபரீத விளைவை தரக்கூடியவை

Menaka Mookandi   / 2013 மார்ச் 21 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாட்டிற்குச் செல்லும் இலங்கையர்கள் மீதான தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அவற்றின் வரிசையில் மிக அண்மைக் கால சம்பவங்களாக தொடர்ச்சியான இரண்டு நாட்களில் இரண்டு பௌத்த பிக்குகள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இவை இலங்கையில் தமிழர்களுக்கு சாதகமான முடிவைக் கொண்டு வருமா அல்லது பாதகமான முடிவைக் கொண்டு வருமா என்பதே இப்போதுள்ள மிக முக்கியமான கேள்வியாக உள்ளது. குறிப்பாக இலங்கையில் பெரும்பான்மை மக்கள் இன ரீதியாக கொதிப்படைந்துள்ள ஒரு சந்தர்ப்பத்தில் இச்சம்பவங்கள் எந்த திசைக்கு நிலைமையை இட்டுச் செல்லுமோ என்ற அச்சம் பலர் மனதில் எழுந்துள்ளது.

எனவே தான் ஏற்கனவே இரண்டு தமிழ் தேசிய பத்திரிகைகள் இச்சம்பவங்களை கண்டித்து அல்லது நிராகரித்து அசிரியத் தலையங்கங்களை வெளியிட்டுள்ளன. ஆதில் ஒன்று நேரடியாக இந்த அச்சத்தையும் வெளியிட்டு இருந்தது.

தமிழ்நாட்டிற்குச் செல்லும் இலங்கையரகளுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இதுபோன்ற எதிர்ப்புக்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. கடந்த வருடம் ஜனவரி மாதம் 10ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினரும் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவருமான திருக்குமார் நடேசன் தமிழ்நாட்டில் கோவில் ஒன்றில் வைத்து எதிர்ப்புக்கும் இம்சைக்கும் உள்ளாக்கப்பட்டார். அதே மாதம் 29ஆம் திகதி ஊவா மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் செந்தில் தொண்டமானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ஆருமுகன் தொண்டமானுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாக அவர் தாம் தங்கியிருந்த கோயம்பூத்தூர் ஹோட்டலில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது. ஜூன் மாதம் 8ஆம் திகதி கோயம்புத்துரில் உத்தியோகபூர்வ நிகழ்வொன்றில் கலந்துகொள்ளச் சென்ற மேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் ரெஜினோல்ட் குறேயும் இது போன்றதோர் எதிர்ப்பின் காரணமாக அங்கிருந்து வெளியேற வேண்டியதாயிற்று.

பின்னர் இந்த எதிர்ப்புக்கள் இந்திய அரசின் அனுசரணையுடன் நடைபெறும் இலங்கை - இந்திய கூட்டு பாதுகாப்புப் படை பயிற்சிகளின் பக்கம் திரும்பியது. தமிழ்நாட்டில் பயிற்சிக்காக சென்ற 4 விமானப்படை அதிகாரிகளுக்கு கடந்த வருடம் ஜூலை மாதம் அங்கிருந்து வெளியேறி பெங்களூருக்குச் செல்ல நேரிட்டது. ஓகஸ்ட் மாதம் இராணுவ அதிகாரிகள் சிலருக்கும் அதே நிலைமை ஏற்பட்டது.

இலங்கையில் அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்திற்கும் இடையிலான போரின் போது படையினரால் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதற்காகவே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் அடிப்படையில் ஒருவர் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் நியாயம் காணலாம் ஆனால் அதன் அடுத்த கட்டம் வித்தியாசமானதாகவே அமைந்தது.

ஓகஸ்ட் மாதம் இறுதியில் தமிழ்நாட்டில் விளையாடுவதற்குச் சென்ற இரண்டு கால்பந்து குழுக்களை மாநிலத்திலிருந்து வெளியேறுமாறு முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமே உத்தரவிட்டு இருந்தார். இது எல்லோரையும் வியப்புக்குள்ளாக்கியது.

ஏனெனில் நாடுகளுக்கிடையில் அல்லது நாடுகளின் தலைவர்களுக்கிடையில் முரண்பாடுகள் இருந்த போதிலும் நாடுகளில் வாழும் மக்களிடையிலான உறவுக்கு (ப்நழிடந- வழ- ப்நழிடந உழவெயஉவ) பங்கம் விளைவதை அல்லது விளைவிப்பதை பொதுவாக உலகம் ஏற்றுக் கொள்வதில்லை. அதிலும் நாடுகளுக்கிடையிலான விளையாட்டுத்துறை உறவை துண்டிப்பதை பொதுவாக எவரும் அங்கீகரிப்பதில்லை. எனவே இச் செயலை அப்போது தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மு.கருணாநிதியும் கண்டித்தார்.

ஜெயலலிதாவின் இந்த உத்தரவு செபஸ்டியன் சீமானின் தலைமையிலான நாம் தமிழர் கட்சியையும் வைகோவின் தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தையும் ஊக்குவித்தது போலும். கால்பந்து வீரர்களை வெளியேறுமாறு உத்திரவிட்டு மூன்று நாட்களில், செப்டமபர் 5ஆம் திகதி இலங்கையிலிருந்து தமிழ்நாட்டில் அண்ணை வேலாங்கண்ணி மற்றும் பூண்டி மாதா கோயில்களுக்கு யாத்திரைக்காக சென்ற கத்தோலிக்க யாத்திரிகர்கள் குழுவொன்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பின்னர் விமான நிலையத்திற்கு வரும் வழியில் அவர்கள் தாக்குதலுக்கும் உள்ளானார்கள்.

விந்தை என்னவென்றால் இந்த யாத்திரிகர்களில் பலர் இலங்கை தமிழர்கள் என்பதே. தாங்கள் இலங்கை தமிழர்கள் என்று கூறியும் தாக்கப்பட்டோம் என்று அவர்கள் இலங்கைக்கு வந்த பின்னர் ஊடகங்களுக்கு கூறியிருந்தனர். 

அப்போது பலர் இந்த தாக்குதல்களை நியாயப்படுத்தினர். இவை இலங்கை தமிழர்களையே பாதிக்கும் என்று கூறியவர்களையும் விமர்சித்தனர். ஆனால் இன்று குளோபல் தமிழ் போரம் போன்ற அமைப்புக்களும் இந்த தாக்குதல்களின் மோசமான பின் விளைவுகளை சுட்டிக் காட்டுகின்றன. இந்தத் தாக்குதல்கள் இலங்கை தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் மாணவர்கள் நடத்தும் போராட்டங்களை மூடி மறைக்கின்றன என்று குளோபல் தமிழ் போரம் கூறியிருந்தது.

உணர்வுகள் நியாயமாக இருக்கலாம். அவற்றை ஆர்ப்பாட்ட வடிவத்தில் வெளியிடுவது ஜனநாயகமும் தான்;. ஆனால் சாதாரண மக்களை தாக்கும் நிலை வந்தால் அதில் அவருக்கும் இவருக்கும் இடையில் வித்தியாசம் இருக்காது.

இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு எவரும் செல்ல முடியாது என்றால் தமிழ்நாட்டில் இருந்தும் எவரும் இங்கு வரக்கூடாது என்று ஜாதிக்க ஹெல உருமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க கூறியிருந்தார். அது மேலும் ஒரு படி மேல் சென்றால் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களை மோசமாக பாதிக்கும் அபாயம் இருக்கிறது. ஏனெனில் எங்கும் இனவாதமானது கண்மூடித்தனமானது. இந்திய வம்சாவளி மக்களில் ஆரம்பித்தாலும் அது இறுதியில் எங்கு போய் முடிவடையும் என்றும் கூற முடியாது.

பிக்குகள் மீதான தாக்குதலை மேற்கொண்டோர் வீடியோ கமெராக்களோடு சென்றே அந்தத் தாக்குதல்களை மேற்கொண்டார்கள் என்ற காரணத்தையும் தொடர்ந்து இரண்டு நாட்களாக கமெராக்களோடு சென்று அவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்ற காரணத்தையும் கவனிக்கும் போது தாக்குதல் நடத்தியவர்களிடம் வேறு நோக்கங்கள் இருந்தனவா என்ற சந்தேகமும் எழுகிறது. அந்த வீடியோ படங்கள் ஊடகங்கள் மூலம் காண்பிக்கப்பட்ட போது இலங்கையிலும் அது போன்ற தாக்குதல்கள் இடம்பெற மாட்டாது என்பதற்கு தாக்குதல் நடத்தியவர்களிடம் என்ன உத்தரவாதம் இருந்தது? இல்லாவிட்டால் அது தான் அவர்களின் நோக்கமா?

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டுவதில் பல்வேறு பௌத்த குழுக்கள் போட்டி போடுவதைப் போல் தமிழ்நாட்டிலும் இலங்கைக்கு எதிராக குரல் கொடுப்பதில் போட்டியொன்று உருவாகியிருக்கிறது. அதனால் இவர்கள் இவ்வாறு கமெராக்களுடன் சென்று தாக்குதல்களை மேற்கொணடு மற்றவர்களை விஞ்ச முற்பட்;டார்கள் என்றும் வாதிடலாம். ஆனால் அதனால் அவர்கள் சர்வதேச சமூகத்தின் முன் தமிழ்நாட்டுக்கு எதிராக குரல் எழுப்ப இலங்கை அரசாங்கத்திற்கும் வாய்ப்பளித்துள்ளனர்.

இப்போது இலங்கை தமிழ்நாட்டுக்கான விமான சேவைகளை அறைவாசியால் குறைத்துள்ளது. தமிழ்நாட்டுக்கான பயணத்தடை விதிப்பது தொடர்பாகவும் கருத்துக்கள் வெளியாகின. உத்தியோகபூர்வ பயணத் தடை இல்லாவிட்டாலும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தமிழ்நாட்டுக்குச் செல்ல வேண்டாம் என்று கூறியிருக்கறார். துமிழ் வியாபாரிகளும் தமிழ் மக்களுமே இதனால் கூடுதலாக பாதிக்கப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தும் மாணவர்கள் அவ்வாறான வாய்ப்பை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கவில்லை. அமெரிக்கா கடந்த திங்கட்கிழமை ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்தது.

வியாழக்கிழமையே அதன் மீதான வாக்கெடுப்பு. இந்த நிலையில் தி.மு.க. மத்திய அரசாங்கத்திற்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் பெற்றமையும் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மாணவர்களினதும் ஏனையவர்களினதும் சாத்வீகப் போராட்டங்களும் பிரேரணைக்கு ஆதரவளிக்கும் நிலைக்கு இந்திய மத்திய அரசாங்கத்தை தள்ளியிருக்கின்றன.

ஆனால் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் என்று ஆரம்பத்தில் பிரேரணையில் இருந்த கருத்து  இப்போது பிரேரணையின் முன்னுரையில் மாத்திம்தான் இருக்கிறது. இந்தியாவே இதற்கு காரணகர்த்தாவாக இருந்துள்ளது என சர்வதேச மன்னிப்புச் சபை கூறியிருக்கிறது.

You May Also Like

  Comments - 0

  • MADURANKULI KURANKAR Friday, 22 March 2013 07:55 PM

    தமிழ் பேசுபவராக இருந்தாலும் அவர்கள் சிங்களம் பேசும் கிறிஸ்தவர்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X