2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவுக்கு வழி காட்டும் தமிழகம்

Thipaan   / 2014 டிசெம்பர் 09 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதலமைச்சரான பிறகு முதன் முதலாக பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு திரும்பியிருக்கிறார் தமிழக முதலமைச்சர்  ஓ. பன்னீர்செல்வம்.

சென்ற முறை முதல்வராக இருந்த போது நிலவிய சூழ்நிலை மாறி தற்போது சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார். பிரதமருக்கு பல்வேறு கடிதங்களை எழுதுகிறார். பிரதமர் கூட்டும் கூட்டத்துக்கே சென்று உரையாற்றி விட்டு வந்திருக்கிறார்.

அந்த அளவில் தி.மு.க. முன் வைக்கும் பினாமி ஆட்சிக்கு தலைமை தாங்கும் முதலமைச்சர் என்ற குற்றச்சாட்டை முறியடிக்கும் விதமாக இப்படிச் செயற்படுகிறார் ஓ. பன்னீர்செல்வம் என்றுதான் கருதத் தோன்றுகிறது.

தமிழக சட்டமன்றத்தில் அவர் எதிர்கட்சிகள் குறிப்பாக தி.மு.க. எழுப்பும் பிரச்சினைகளுக்கு தனக்கே உள்ள முதிர்ச்சியுடன் பதிலளிக்கிறார்.
குறிப்பாக முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி எடுத்த நடவடிக்கைகள் பற்றியும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசினர் தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என்று தி.மு.க. சட்டமன்ற துணை தலைவர் துரைமுருகன் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு விளக்கம் அளித்து முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் பேசியது அனைவரும் வியக்கும் வகையில் அமைந்தது. பெயில் ஆகிவிட்டு பாஸ் மார்க் போடுங்கள் என்று கேட்பது போல் இருக்கிறது உங்கள் கோரிக்கை என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் முகத்துக்கு எதிரே அவர் விளாசித் தள்ளியது மற்ற எதிர்கட்சி உறுப்பினர்களைக் கூட பிரமிக்க வைத்தது.

குறிப்பாக இடது சாரி எம்.எல்.ஏ.க்கள், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மிகவும் சாதுர்யமாகப் பேசுகிறார். ஆணித்தரமான வாதங்களை அருமையாக எடுத்து வைக்கிறார். துரைமுருகன் போன்றவர்களே தாக்குப் பிடித்து பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார் என்கிறார்கள்.

இது போன்றதொரு சட்டமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்ற கையோடு டெல்லிக்குச் சென்றார் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.
அங்கு அவர் பிரதமர் முன்னிலையில் 28 பக்கங்கள் கொண்ட நீண்ட உரையை நிகழ்த்தினார். நீண்ட காலம் நிதியமைச்சராகவும் இருந்த அனுபவமோ என்னவோ தெரியவில்லை.

மத்திய- மாநில அரசுகளுக்கு இடையே உள்ள நிதி பங்கீட்டில் துவங்கி, மாநிலத்தின் திட்டங்களுக்கு மத்திய அரசின் துறைகளுக்கு காவடி தூக்க வேண்டியது வரை புட்டுப் புட்டு வைத்தார். மாநிலங்களின் குரலை மத்திய அரசு மதிப்பதில்லை என்பதை பகிரங்கமாகவே எடுத்துரைத்தார்.
இது 1967 வாக்கில் ராஜாஜி போன்றவர்களே உண்மை சமஷ்டி வருக வருகவே என்று தலையங்கம் எழுதி மாநில அரசுகளுக்கு இருக்க வேண்டிய அதிகாரங்களை வலியுறுத்தினார்.

அதன் பிறகு மாநிலத்திற்கு அதிக அதிகாரம் வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா எடுத்துரைத்த கருத்துக்கள் ஏராளம். அவர் முதலமைச்சரானவுடன் வெளிவந்த ஆளுநர் உரையிலேயே மாநிலத்திற்கு அதிக அதிகாரம் குறித்து வலியுறுத்தப்பட்டது.

மாநில சுயாட்சி அல்லது மாநிலத்துக்கு அதிக அதிகாரம் என்ற குரல் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே துவங்கி, ஆட்சியிலிருந்த போது தீவிரமாக எழுப்பப்பட்டது. அது மட்டுமல்ல 1968-லேயே அண்ணா முதலமைச்சராக இருந்த போது, 'மத்திய- மாநில அரசுகளுக்கிடையே இருக்க வேண்டிய நிதி வசதிகளையும், அதிகாரங்களையும் வரையறுக்கின்ற அரசியலமைப்பின் விதித்துறைகளை உயர்மட்ட அளவில் மறு ஆய்வு செய்தல் இன்றியமையாதது' என்று தெரிவித்திருந்தார்.

1969 வாக்கில் 'மாநில அரசு அதிகாரங்கள் விரிவாக்கப்பட்டு மாநிலங்கள் பூரண தன்னாட்சி உரிமை பெற்று விளங்கத் தேவையான திருத்தங்களை அரசியல் அமைப்புச் சட்டத்திலே செய்வதற்கு ஆலோசனை சொல்ல' மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்தார் அண்ணாவுக்கு பிறகு முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி. அக்குழுவுக்கு  பி.வி.ராஜமன்னார் தலைமை தாங்கினார்.

ஏ.லட்சுமணசாமி முதலியார், பி.சந்திரா ரெட்டி ஆகியோர் குழு உறுப்பினர்களாக இருந்தார்கள். பஞ்சாப் மாநில முதலமைச்சரை எல்லாம் அழைத்து அப்போது தி.மு.க. மாநில சுயாட்சி மாநாட்டையே நடத்தியது. அதை விட 1971- தேர்தல் பிரகடனத்தில் மாநில சுயாட்சி அடைவது தி.மு.க.வின் குறிக்கோள் என்றும் அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக 1974ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் திகதி தமிழக சட்டமன்றத்தில் மாநில சுயாட்சி தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.

இதேபோல் தி.மு.க. ஆட்சியின் இறுதிக் காலத்தில் 'மாநில சுயாட்சி' தீர்மானத்தையே எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க. எதிர்த்தாலும் எம்.ஜி.ஆர். முதலமைச்சரான பிறகு 'மாநிலங்களுக்கு அதிக அதிகாரம்' என்பதை மிகவும் வேகமாக வலியுறுத்தினார்.

குறிப்பாக அவர் ஆட்சி 1980ல் கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று முதலமைச்சரானவுடன் தென் மாநில முதல்வர்கள் அனைவரையும் சேர்த்து பெங்களூரில் மாநாடு நடத்தி, 'மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும்' என்ற கோரிக்கைக்கு வலுவூட்டினார். அதில் அப்போது ஆந்திரமாநில முதல்வராக இருந்த என்.டி.ஆர், கர்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே போன்றவர்கள் கலந்து கொண்டார்கள்.

இப்படி அடுத்தடுத்து மாநிலங்களில் இருந்து கிளம்பிய 'அதிக அதிகார'க்குரல் மத்திய அரசையே யோசிக்க வைத்தது. அதன் விளைவாக 1983ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி 'சர்க்காரியா கமிஷன்' அமைத்தார்.

இந்திய உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற ஆர்.எஸ். சர்க்காரியா தலைமையிலான கமிஷனில் சிவராமன், மற்றும் டாக்டர் பி.ஆர்.சென் ஆகிய இருவரும் உறுப்பினர்களாக இருந்தார்கள்.

இந்த கமிஷன் 1988 வாக்கில் 'மத்திய- மாநில அரசு உறவுகள்' குறித்த 1600 பக்க அறிக்கையை சமர்பித்தது. அவற்றை இன்றும் கூட உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்புகளில் மேற்கோள் காட்டுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 'மாநிலங்களுக்கு அதிக அதிகாரம்' வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசுக்கு எழுதும் ஒவ்வொரு கடிதத்திலும் வலுவாக எடுத்து வைத்தார். 'மாநிலங்களின் குரலுக்கு மதிப்பில்லை' என்று பிரதமராக மன்மோகன்சிங் இருந்த போது நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் இருந்தே வெளிநடப்புச் செய்தார்.

இப்போது பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் அதே கோரிக்கையை வலியுறுத்தியிருக்கிறார் தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.

பிரதமரின் முன்னிலையில், 'நிர்வாகத்திலும், வளர்ச்சித் திட்டங்களிலும் மாநில அரசுகளை சம பங்குதாரராக மத்திய அரசு கருதுவதில்லை. மாநில அரசுகள் மத்திய அரசு துறைகளின் பார்வைக்காக காத்துக் கிடக்க வேண்டியதிருக்கிறது' என்று ஆணித்தரமாக வாதிட்டுள்ளார்.

இந்த முதலமைச்சர்கள் கூட்டம் இந்தியாவில் 1950ல் உருவாக்கப்பட்ட திட்டக் கமிஷனை நீக்கி விட்டு அதற்குப் பதிலாக புதிய அமைப்பை உருவாக்கும் நோக்கத்தில் கூட்டப்பட்ட கூட்டம். அக்கூட்டத்தில்தான் தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இப்படிப் பேசியிருக்கிறார்.
ஆக ராஜாஜி, அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் எடுத்து வைத்த கோரிக்கையை இன்றைக்கு
ஓ. பன்னீர்செல்வமும் டெல்லியில் எடுத்து வைத்துள்ளார்.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமே கூறியிருப்பது போல் 'இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த நாள்' என்றால் மிகையாகாது.

இதுவரை மாநிலங்கள் 'தங்களுக்கு அதிக அதிகாரம்' வேண்டும் என்று கோரிக்கை வைத்த போது மத்தியில் இருந்த பிரதமர்கள் பெரிதும் கை கொடுக்கவில்லை.

இந்திரா காந்தி மட்டும் 'சர்க்காரியா கமிஷன்' அமைத்தார். அவருக்குப் பிறகு வந்த ராஜீவ் காந்தியோ, வி.பி.சிங்கோ, சந்திரசேகரோ, நரசிம்மராவோ, தேவகவுடாவோ, ஐ.கே.குஜ்ராலோ மாநிலத்துக்;கு அதிக அதிகாரம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பெரிய அளவில் முன்னெடுத்துச் செல்லவில்லை.

அதன் பிறகு பிரதமரான வாஜ்பாய் மாநிலங்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருந்தாலும், அதில் எந்த முன்னேற்றமும் நடைபெற்றுவிடவில்லை.

அதே சமயத்தில் பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன்சிங் காலத்தில் மாநிலங்கள் பற்றி கவலையே கொள்ளவில்லை என்பதுதான் இன்று இப்படியொரு கோரிக்கை எழுவதற்குக் காரணம்.

'மாநிலங்கள் பற்றி கவலைப்படாத' மன்மோகன்சிங்கின் கொள்கையால் இன்றைக்கு பிரதமராக இருக்கும் நரேந்திரமோடியும் குஜராத் முதல்வராக இருந்த போது பாதிக்கப்பட்டார்.

அதை அவரே கூட தேசிய வளர்ச்சிக் குழு கூட்டங்களிலும், பிரதமருடனான மற்ற கூட்டங்களிலும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

இதன் வெளிப்பாடோ என்னவோ, இப்போது முதல் முறையாக மத்தியில் பிரதமராக இருக்கும் நரேந்திரமோடி 'மாநிலங்கள் இல்லாமல் மத்திய அரசு இல்லை' என்ற முக்கியமான கோஷத்தை முன்னெடுத்து நிற்கிறார்.

அதனால்தான் இப்போது முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்டி, 'டீம் இந்தியா' என்று கூறுகிறார். இந்த டீம் இந்தியாதான் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உத்தரவாதம் கொடுக்க முடியும்- இப்போது இருக்கின்ற திட்டக் கமிஷன் அல்ல என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

டீம் இந்தியா என்றால் என்ன? பிரதமரும், மாநில முதல்வர்களும் ஒரு டீம். மத்திய அமைச்சர்கள் இன்னொரு டீம். மத்திய அதிகாரிகளும், மாநில அதிகாரிகளும் இன்னொரு அணி;.

இந்த மூன்று தரப்பினரும் இணைந்து 'டீம் இந்தியாவை' உருவாக்குவோம் என்ற முழக்கத்தை மேற்கொண்டிருக்கிறார். 1967-ல் தமிழகத்தில் அண்ணா எழுப்பிய முழக்கத்தை இன்றைக்கு பிரதமர் நரேந்திரமோடி எழுப்புகிறார்.

அந்த வகையில் மாநிலங்களும், மத்திய அரசும் சம அந்தஸ்துடன் இணைந்து செயல்பட்டால்தான் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது என்று தமிழகத்தில் 47 வருடங்களுக்கு முன்பு எழுந்த குரலை இப்போது அகில இந்திய அளவில் பிரதமர் நரேந்திரமோடி ஒலிக்கிறார்.

மாநிலங்களுடன் கைகோர்த்துப் பயணிக்க முயற்சி செய்யும் இந்தியப் பிரதமரின் இந்த போக்கு சிறந்த கூட்டாட்சித் தத்துவ வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய முழக்கம்!
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X