2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

போர் வெற்றி இலாபம் தருமா?

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 12 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போர், முடிவுக்கு வந்து ஐந்தரை வருடங்களுக்குப் பின்னரும், இலங்கை அரசியலில் அதுவே மிகப்பெரிய முதலீடாக விளங்கிவருகிறது.

ஆளும் கட்சியினர் மட்டுமன்றி, எதிரணியினரும் கூட போர் வெற்றிக்கு உரிமை கோருவதிலும் அதனை பங்குபோட்டுக்கொள்வதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்போது,  போர் வெற்றியே பிரசாரங்களில் பிரதான இடத்தை வகிக்கப்போகின்றது என்பது இப்போது உறுதியாகிவிட்டது.

கடந்த திங்கட்கிழமை, வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட நாளன்று, டெய்லி மிரர் உள்ளிட்ட பல நாளிதழ்களின் முன்பக்கத்தில், ஐந்தரை வருடங்களுக்கு முன்னர் வெளியான முகப்புப்பக்கமே இடம்பெற்றிருந்தது. போர் வெற்றி கொள்ளப்பட்ட மறுநாள், வெளியான நாளிதழின் முகப்புத் தோற்றமே அது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பணம் கொடுத்து அந்த முகப்புத் தோற்றத்தை விளம்பரமாக பிரசுரித்திருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தேடுவதற்காக அந்த முன்பக்க விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.

போர் முடிந்து ஐந்தரை வருடங்கள்; ஆகியுள்ளதால், மீண்டும் போரை நினைவுபடுத்தவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு வந்துள்ளது. அதனாலேயே, ஐந்தரை வருடங்களுக்கு முந்திய நாளிதழின் முகப்புத் தோற்றத்தை வெளியிடவேண்டிவந்தது.

இதுவொன்றே, இந்தத் தேர்தலிலும், போரில் ஈட்டிய வெற்றியை வைத்து அரசாங்கம் பிழைப்பு நடத்தப்போகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
'போரில் வெற்றியை பெற்றுத் தந்தோம், புலிகளின் கையிலிருந்த நாட்டின் ஒருபகுதியை மீண்டும் கைப்பற்றி ஒன்றுபடுத்தினோம். ஆனாலும், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிகள் நடக்கின்றன.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலிருந்தும் மேற்கொள்ளப்படும் இத்தகைய சூழ்ச்சிகளிலிருந்து நாட்டை காப்பாற்றவேண்டும். அதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே வாக்களிக்கவேண்டும். இல்லாவிட்டால், நாடு பிளவுபடுத்தப்பட்டு விடும். புலிகளின் கையில் போய்விடும்' என்றெல்லாம் அரச தரப்பு பிரசார மேடைகளில் அமைச்சர்களும் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வீராவேசமாக பேசிவருகின்றனர்.

அரசாங்கத்தை பொறுத்தவரையில், போர் வெற்றியை வைத்து அண்மையில் எதிர்கொண்ட தேர்தல்கள் பெரியளவில் வெற்றியாக அமையவில்லை. ஆனாலும், புதியதொரு பிரசார உத்தியை வகுக்கமுடியாத நிலையிலிருப்பதால், மீண்டும் போர் வெற்றியை வைத்து அரசியல் செய்யத் தொடங்கியுள்ளது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, போர் வெற்றியை தமது பிரசார நடவடிக்கைகளில் முதன்மைப்படுத்த ஆரம்பித்துள்ள நிலையில், எதிரணியிலுள்ள தரப்புகளும் அதற்கேற்ற வகையில் எதிர்ப்பிரசாரங்களை மேற்கொள்ளவேண்டிய நிலைக்கு உள்ளாகியிருக்கின்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருடன் தொடர்புபட்ட சக்திகள் இரண்டு தரப்பிலுமே இருக்கின்றன.

இறுதிக்கட்டப் போரை நடத்தி வெற்றியை பெற்றுக்கொண்டது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம். ஆனால், அதற்கு முன்பாக, போரில் வெற்றி பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தவர்கள் என்று பார்த்தால், இப்போது எதிரணியிலிருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியும்  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுமே. 

அதுபோல, இறுதிக்கட்ட போருக்கு தலைமை தாங்கி நடத்தி, வெற்றியை பெற்றுக்கொடுத்து, அந்தச் செய்தியை முறைப்படி ஜனாதிபதியிடம் அறிவித்தவர் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா. கடந்தமுறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவர், இப்போது எதிரணி வேட்பாளருடன் நிற்கிறார்.

மேலும், எதிரணியின் பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவும் கூட, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடு சென்றிருந்த தருணங்களில் பதில் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றியவர். போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது கூட, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டிலேயே  தங்கியிருந்தார். அப்போது கூட, மைத்திரிபால சிறிசேன பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர். அவரும் போரில் பங்கெடுத்தவர்தான்.

அதேவேளை, போரை வெற்றி கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில், முக்கிய பங்காற்றிய ஜாதிக ஹெல உறுமயவும் இப்போது எதிரணியில் நிற்கிறது.

எனவே, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றியை பெற்றுக்கொடுத்தது தாமே என்று அரசாங்கம் பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ள நிலையில், அதற்கு எதிராக தாமும் அதில் பங்கெடுத்தோம் என்ற குரல்கள் எதிரணித் தரப்பிலிருந்தும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், கடந்த வாரம் ஹோமகமவில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, போர் வெற்றிக்கு மஹிந்த ராஜபக்ஷவை தவிர, வேறெவரும் உரிமை கோரமுடியாது எனத் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூளையில் உதித்த திட்டத்தின் படியே போர் வெற்றி கொள்ளப்பட்டது என்றும் அதில் வேறெவரினது பங்களிப்பும் இல்லை என்றும்  அவர் கூறியிருந்தார்.

போருக்கு அரசியல் ரீதியாக தலைமை தாங்கியது, சர்வதேச ரீதியான அழுத்தங்களை எதிர்கொண்டது, சர்வதேச ஆதரவைத் திரட்டியது, போருக்கான வளங்களை ஒன்றுதிரட்டி வழங்கியது. இவை அனைத்தும், போர் வெற்றிக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய பங்களிப்புகளாகும். ஆனால், இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு போரை வென்றுவிட முடியாது. அதுவும், விடுதலைப் புலிகள் என்ற ஒரு பலம் மிக்க இராணுவ அமைப்புக்கு எதிரான போரை, மேற்கூறிய பங்களிப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு நிச்சயமாக வென்றிருக்கமுடியாது.

எனவே,  இப்போது எதிரணியில் இருக்கின்றவர்கள் போரை முடித்துவைப்பதற்கு அளித்த பங்களிப்புகளை புறமொதுக்கிவிட முடியாதுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர், 2005ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் திட்டமிட்டு மூன்றரை வருடங்களுக்குள் முடித்துவைக்கப்பட்டது என்று கூறமுடியாது.

புலிகளுக்கு எதிரான போரின் இறுதி வெற்றிக்கான அடித்தளம், 2002ஆம் ஆண்டே போடப்பட்டுவிட்டது. அதாவது, விடுதலைப் புலிகள் எப்போது, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் போர்நிறுத்த உடன்பாட்டை கையெழுத்திட்டனரோ, அப்போதே அவர்களின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது.

2001ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் முன்பாக வைக்கப்பட்டது ஒரு சமாதானத்திட்டம் மட்டுமல்ல, அது அவர்களை வீழ்த்துவதற்கான ஒரு பொறியும் கூட. அதனை கச்சிதமாக வைத்தவர் ரணில் விக்கிரமசிங்கவே.  அது மட்டுமன்றி, சர்வதேச வலைப்பின்னல் ஒன்றின் மூலம் விடுதலைப் புலிகளை வெளிநாடுகளில் தடை செய்யவைத்து, மெல்ல மெல்ல அவர்களின் கழுத்தை இறுக்கத் தொடங்கியிருந்தார்.

அதேவேளை, புலிகளின் வெளிநாட்டு ஆயுத விநியோக மார்க்கங்களை தடைசெய்வதிலும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் கணிசமான முன்னேற்றத்தை எட்டியிருந்தது. அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்க, பாதுகாப்பு அமைச்சை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடமிருந்து பறித்தும் அந்த அரசாங்கத்தை கலைத்தும் புலிகளுக்கு எதிரான போரை, பின்னர் தன் கையில் எடுத்துக்கொண்டார். வெளிப்படையாக அல்லாத - ஆனால், மிகத் தெளிவானதொரு நிழல் போராக உருவெடுத்தது சந்திரிகாவின் காலத்திலேயே.

இந்தக் காலகட்டத்தில் போரை முன்னெடுப்பதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டன. புலிகளை பலவீனப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனாலேயே, தமது அரசாங்கத்தின் காலத்தில்; விடுதலைப் புலிகளின் 75 சதவீத பலம் அழிக்கப்பட்டதாகவும் எஞ்சியிருந்த 25 சதவீத போரை வென்றதே, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் என்றும் அண்மையில் உரிமை கோரியிருந்தார் சந்திரிகா குமாரதுங்க. தனது அரசாங்கம் பதவியிலிருந்தபோதே, போர் வெற்றிக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது என்பது அவரது வாதம். அது உண்மையான கருத்தும் கூட. ஆனால், அவர் கூறும் சதவீதக் கணக்கு எந்தளவுக்கு சரியானது என்று தெரியவில்லை.

சந்திரிகா குமாரதுங்க, அரசாங்கத்தில் இணைந்துகொண்ட ஜாதிக ஹெல உறுமயவும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நடத்துவதில் உறுதியாக இருந்தது.

மக்கள் விடுதலை முன்னணியுடன்  (ஜே.வி.பி.)  சேர்ந்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை உருவாக்கி, ரணில் விக்கிரமசிங்க கையிலிருந்து ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வழிவகுத்தது ஜாதிக ஹெல உறுமய. இந்த முயற்சியில் ஜாதிக ஹெல உறுமய ஈடுபட்டமைக்கு ஒரே காரணம் போர்நிறுத்த உடன்பாட்டை கிழித்தெறிந்துவிட்டு, போரை மீண்டும் ஆரம்பித்து புலிகளை முற்றாக அழிப்பதே.   இந்த எழுச்சியின் விளைவாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உருவெடுத்திருந்தார்.

போரை முடித்துவைக்க நடவடிக்கை எடுக்குமாறு தாமே அவருக்கு அழுத்தங்களை கொடுத்ததாக அண்மையில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின்  செயலாளர் சம்பிக்க ரணவக்க உரிமை கோரியிருந்தார்.

சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளை ஒன்றுதிரட்டி போரை நிறுத்தவைக்க மேற்கொள்ளப்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு முயற்சிகள் அனைத்தையும் தடுத்து நிறுத்தியதில் ஜாதிக ஹெல உறுமயவுக்கு உள்ள பங்கை குறைத்து மதிப்பிடமுடியாது.

அதேவேளை, போருக்கு தலைமை தாங்கி, வியூகங்களை வகுத்து வெற்றியை கையில் பெற்றுக்கொடுத்தவர் சரத் பொன்சேகாவே. அவரது தலைமைத்துவம், இலங்கை இராணுவம் வரலாற்று வெற்றியை பெறுவதற்கு காரணமாக இருந்தது. அதனாலேயே, வெறும் அரசியல் தலைமைத்துவத்தினால் போர் வெற்றி கொள்ளப்படவில்லை. இராணுவத்தினரின் அர்ப்பணிப்புடன்  தனது போர் வியூகங்களும் போர் வெற்றிக்கான காரணங்கள் என்று சரத் பொன்சேகா உரிமை கோரியிருந்தார். அத்துடன், போரின்போது, படையினர் எந்தக் குற்றங்களிலும் ஈடுபடவில்லை.

போர்க்குற்றச்சாட்டு படையினர் மீது சுமத்தப்படுமானால், அதற்காக தான் மின்சாரக்கதிரையில் அமரவும் தயார் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஒரு பக்கத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னை போர்க்குற்றச்சாட்டில் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி, மின்சாரக்கதிரையில் அமரவைக்க முயற்சிகள் நடப்பதாக புலம்புகிறார்.

இன்னொரு பக்கத்தில் சரத் பொன்சேகாவோ போர்க்குற்றம் சுமத்தப்பட்டால், தான் மின்சாரக்கதிரையில் அமரத் தயார் என்கிறார். ஆக, இப்போது போர் வெற்றிக்கு உரிமை கோரும் போர் மட்டும் நடக்கவில்லை. மின்சாரக்கதிரையில் அமர்வதற்கான போட்டியும் கூட நடக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

வெற்றி கொள்ளப்பட்ட ஒரு போருக்காக பல தரப்புகளும் உரிமை கொண்டாடுகின்ற நிலையில், போர் வெற்றிக்கான உரிமை முழுவதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே என்று கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

பதவி ஏற்றவுடனேயே போரை முடிக்க அவர் திட்டமிட்டு செயற்பட்டதாகவும் இந்தியாவின் ஆதரவை பெற்றுக்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். இவையெல்லாமே சிங்கள பௌத்த வாக்காளர்களின் ஆதரவை பெறுவதற்கான முயற்சிகளே.

போர் வெற்றியை  முன்னிறுத்தி தமிழர்களிடம் வாக்கு கேட்கமுடியாது. சிங்கள மக்களின் வாக்குகளை அள்ளுவதற்காகவே போர் வெற்றியை அரசு மூலதனமாக்கியுள்ளது. இந்தச் சூழலில், சிங்கள மக்களிடையே ஒரு குழப்பம் ஏற்படப்போவது உறுதி. அதாவது, உண்மையில் போரை வெற்றி கொண்டது யார் என்பதே அது.

இந்தக் கேள்விக்கான விடையை  தேடுவது பலருக்கும் குழப்பம் நிறைந்ததொரு விடயமாகவே இருக்கும். அதுவும், போருக்கு பின்னர், வாக்களிக்கத் தகுதி பெற்ற இளம் வாக்காளர்களுக்கு இதுவொரு குழப்பம் நிறைந்த கேள்வியாகவே இருக்கும். போர் வெற்றி என்பது இந்தத் தேர்தலில் எந்தத் தரப்புககும் மிகப்பெரியளவில் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

இந்தியாவில் காங்கிரஸ் கட்சி, இன்னமும் நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்தது தாமே என்று கூறியே இன்றுவரை வாக்கு கேட்கிறது.
அதுபோலவே, இலங்கையிலும் எத்தனை காலம் சென்றாலும், போர் வெற்றியை வைத்து வாக்கு கேட்கும் பழக்கம் மாறப்போவதில்லை.
அரசியல் கட்சிகள் இவ்வாறு பிரசார உத்தியை பயன்படுத்தினாலும், இதையெல்லாம் எதிர்கால வாக்காளர்கள் பெரியதொரு விடயமாக கருதுவார்களா என்பது சந்தேகமே.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X