Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2014 டிசெம்பர் 15 , பி.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினை, இந்தியாவில் குறிப்பாக தமிழகத்துக்கு தாங்க முடியாத தலைவலியாக மாறியிருக்கிறது. காவிரிப் பிரச்சினையில் கர்நாடக மாநிலத்துடன் உள்ள உறவு, காவிரி தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு வெளிவந்த பிறகு கூட வழமை நிலைக்குத் திரும்பவில்லை.
காவிரி இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட முன்பு, முதல்வராக இருந்த ஜெயலலிதா பாடுபட்டதால்தான் அவரை பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டித்துவிட்டார்கள் என்று, தமிழகத்தில் நோட்டீஸ் அடித்து பிரசாரம் செய்யப்பட்டது. ஜெயலலிதா பிணையில் வெளிவந்ததைத் தொடர்ந்து அப்பிரச்சினைக்கு தற்காலிகமாக ஓய்வு கொடுக்கப்பட்டது.
ஆனாலும், அடுத்த சில வாரங்களில் காவிரியின் குறுக்கே மேகதாது அணைப் பகுதியில் மேலும் இரு புதிய அணைகள் கட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் சீத்தாராமைய்யா அறிவித்தார். இந்த அறிவிப்பு தமிழக மக்களை குறிப்பாக காவிரி டெல்டாவில் உள்ள மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
தொடர் போராட்டங்கள், ரயில் மறியல், கண்டனக் கூட்டங்கள் என்று களை கட்டியது தமிழகம். புதிய கட்சி ஆரம்பித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூட போராட்டம் நடத்திவிட்டார். புதிய அணைப் பிரச்சினை, கர்நாடகா மாநிலத்துடனான உறவில் பெரும் உரசலை ஏற்படுத்தியிருக்கிறது. இப்போது, முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையால் கேரளாவுடன் தலைவலி ஆரம்பிக்கிறது. இங்கும் புதிய அணை கட்டும் பிரச்சினைதான்!.
1979ஆம் ஆண்டு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்கப்பட்டது. இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, இந்த வருடம் அதாவது 2014இல் அணையின் நீர்மட்டம் 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்ந்திருக்கிறது.
இது கேரள அரசுக்கு ஏற்பட்ட தோல்வியாக அம்மாநில மக்கள் கருதுகிறார்கள். தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றியாக தமிழக மக்கள் கருதுகிறார்கள். இந்த வெற்றிக்கு அனைத்துக் கட்சியின் போராட்டங்களும் முயற்சிகளும் காரணம் என்றாலும் தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையில் மட்டும் 'என்னால் தான் வந்தது' என்ற போட்டி நிலவியது.
அதிலும் கூட, அ.தி.மு.க. அரசின் நடவடிக்கையால், குறிப்பாக ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால் இந்த அணையின் நீர்மட்டம் உயர்ந்தது என்று பெரும் பாராட்டு விழாவே நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.
இப்படி நடைபெற்ற வெற்றி விழாக்கள், கேரள மாநில மக்களை புண்பட வைத்தது. அதனால், அங்குள்ள அரசு அதாவது காங்கிரஸ் முதலமைச்சர் உம்மன் சான்டி, ஏதாவது ஒரு வகையில் தன் மாநில மக்களை திருப்திப்படுத்த நினைக்கிறார். அதனால், இப்போது புதிய சர்ச்சை எழுந்திருக்கிறது. அதுதான் முல்லைப் பெரியார் அணைக்கு முன்பு இன்னொரு புதிய அணை கட்டுவதற்கான முயற்சி.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்ற நிலைப்பாட்டை எடுத்து, அடுத்தடுத்து புதிய அணைகளைக் கட்ட கேரள அரசு பல வருடங்களாகவே முயற்சி செய்து வருகிறது. ஆனால், அதற்கு தமிழக அரசு இடம்கொடுக்கவில்லை. மத்திய அரசும் இடம்கொடுக்கவில்லை.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.எம்.லோதா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு, முல்லைப் பெரியாறு வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது நாங்கள் புதிய அணை கட்டுகிறோம். முல்லைப் பெரியாறு அணை மூலம், தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய தண்ணீரை முறைப்படி கொடுப்போம் என்று வாதிட்டது.
அவ்வழக்கில், 2011ஆம் ஆண்டு மே மாதம் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், 'புதிய அணை கட்ட வேண்டும் என்பது கேரளாவின் கோரிக்கை. அதை தமிழக அரசு ஏற்க மறுக்கிறது. இரு மாநில அரசுகளிடமும் இதில் ஓர் உடன்பாட்டை எட்ட முடியவில்லை. காரணம் இரு தரப்புமே விடாப்பிடியாக தங்கள் தங்கள் கோரிக்கைகளில் உறுதியாக இருக்கிறார்கள்.
ஆகவே, புதிய அணை கட்ட வேண்டும் என்றால் இரு மாநிலங்களின் ஒப்புதல் தேவை. அதனால் புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது' என்று தௌ;ளத் தெளிவாக தீர்ப்பளித்தது இந்திய உச்சநீதிமன்றம்.
இது தவிர, இந்த அணையின் பாதுகாப்பு தொடர்பாக நியமிக்கப்பட்ட மிட்டல் குழு, ஆனந்த் கமிட்டி அனைத்துமே அணை பாதுகாப்பாக இருக்கிறது என்பதை வலியுறுத்தி புதிய அணை கட்ட வேண்டிய அவசியமில்லை என்பதை வலியுறுத்தியுள்ளன.
2006 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இரு தீர்ப்புகள் மூலம் அணை பலமாக இருக்கிறது என்பதை உச்சநீதிமன்றமே உறுதி செய்திருக்கிறது. எல்லாவற்றையும் விட 1886இல் போடப்பட்ட முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தம், கேரள அரசை கட்டுப்படுத்தும். அதன் கீழ், தமிழக அரசுக்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது என்றும் அந்தத் தீர்ப்பில் தெளிவாக்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மீண்டும் கேரள அரசு இந்திய உச்சநீதிமன்றத்தில் ரிவியூவ் மனு தாக்கல் செய்தது. அதுவும் சில வாரங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது. அப்படி உச்சநீதிமன்றமே நிராகரித்துள்ள புதிய அணை விவகாரத்தை இப்போது கேரள அரசு தூக்கிப் பிடித்திருக்கிறது.
மத்திய அரசின் சுற்றுப்புறச் சூழல் துறை, 'சுற்றுப்புறச் சூழல் ஆய்வு' நடத்துவதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது. இதற்குத்தான் இப்போது தமிழகத்தில் எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது. தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடிக்கு 13.12.2014 அன்று எழுதியுள்ள கடிதத்தில், 'உச்;சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அணை கட்ட சுற்றுப் புறச்சூழல் தாக்கம் பற்றிய ஆய்வைச் செய்ய மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதியை இரத்து செய்ய வேண்டும். உங்கள் சாதகமான நடவடிக்கைக்காக காத்திருக்கிறேன்' என்று வலியுறுத்தியிருக்கிறார்.
இதில் வேடிக்கை என்னவென்றால், சென்ற வாரம் தான் தமிழக சட்டமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடிக்கு உயர்த்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அப்போது கூட 'அணைப் பிரச்சினையைத் தீர்க்க நாங்கள் எடுத்த முயற்சிகளையும் சட்டமன்ற தீர்மானத்தில் பதிவு செய்ய வேண்டும்' என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைக்க, அது மறுக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட மோதலில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
ஆனால், அந்த தீர்மானத்தின் ஈரம் காய்வதற்குள் 'புதிய அணை' என்று வேறு வடிவில் கேரள அரசுடன் தமிழக அரசுக்கு முட்டல் மோதல் ஆரம்பித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தங்களுக்கு கிடைத்த தோல்வியை, புதிய அணை கட்டும் முயற்சி மூலம் சரிக்கட்டிக் கொள்ள கேரள அரசு நினைக்கிறது என்பதுதான் இதன் உள்ளர்த்தம்.
அ.தி.மு.க.வின் எதிர்ப்பு ஒரு புறமிருக்க, தி.மு.க.வின் சார்பிலும் கண்டனக் குரல், கலைஞர் கருணாநிதியின் அறிக்கை வாயிலாக 14.12.2014 அன்று வெளிவந்திருக்கிறது. 'சுற்றுப்புறச்சூழல் ஆய்வு' நடத்த மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், வேறு ஒரு முக்கியக் கோரிக்கையை தமிழக அரசிடம் முன்வைத்துள்ளார்.
அந்த அறிக்கையில், 'தமிழக அனைத்து அரசியல் கட்சிகளின் குழுவோடு முதலமைச்சரே நேரில் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்துக் கூறினால் மட்டும்தான் நல்ல விளைவுகள் ஏற்படும்.
எனவே, தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு உடனடியாக டெல்லி சென்று தமிழ் நாட்டின் கருத்துக்களை அங்கே எதிரொலித்து நல்லமுடிவு காண வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்' என்று தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஒரே அணியில் நின்று முல்லைப் பெரியாறு விடயத்தில், மத்திய அரசின் நிலைப்பாட்டை அறிக்கைகள் வாயிலாக கண்டித்தாலும் இரு கட்சியின் தலைவர்களும் ஒன்று சேர்ந்து டெல்லிக்குப் போவார்களா என்பது கேள்விக்குறிதான். ஆகவே, தி.மு.க. தலைவர் கருணாநிதியைப் பொறுத்தவரை மத்திய அரசுக்கும் கோரிக்கை வைக்கிறார். மாநில அரசுக்கும் கோரிக்கை வைக்கிறார்.
சூடுபிடித்துள்ள 'புதிய அணைகள்' பிரச்சினை தமிழக மக்களுக்கும் கேரள மற்றும் கர்நாட மாநில மக்களுக்கும் இடையே உள்ள நீண்ட நெடிய உறவுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது.
ஒன்றுபட்ட சென்னையில் இந்த மூன்று மாநிலப் பகுதிகளுமே இடம்பெற்றிருந்ததால், இந்த மூன்று மாநில மக்கள் மட்டுமின்றி, அருகில் உள்ள ஆந்திர மாநில மக்களுடனும் தமிழக மக்களுக்கு இனம்புரியாத உறவு உண்டு. ஆனால் காவிரி, முல்லைப் பெரியாறு, என்று வரும் நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைகளால் இந்த உறவுகள் உரசலுக்கு உள்ளாகி அவ்வப்போது மீண்டு வருகிறது.
1924ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி ஆரம்பித்த காவிரி நதிநீர் பிரச்சினை, 1970களில் சூடுபிடித்து, 1990களில் கலவரமாகவே வெடித்தது. பெங்களூரில் உள்ள தமிழர்கள் எல்லாம் தாக்கப்படும் சூழ்நிலை கூட வந்தது.
ஆனால், தமிழகத்தில் முதல்வராக கருணாநிதியும், கர்நாடகாவில் முதல்வராக எடியூரப்பாவும் இருந்த காலத்தில் இந்த உறவு சரி செய்யப்பட்டு சீரானது. ஆனால், அந்த உறவு இப்போது மேகதாதுவில் கட்டப் போகும் புதிய அணைகளால் விஸ்வரூபமாகும் நிலைமை உருவாகியிருக்கிறது.
அதே முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை, 1886ஆம் ஆண்டில் தொடங்கி 1979-80களில் அணையின் பாதுகாப்பு பற்றி கேரள அரசு சிக்கலை உருவாக்கியது.
பின்னர் அது உச்சநீதிமன்றம் எல்லாம் சென்றது. 2011ஆம் ஆண்டில் அது இரு மாநிலங்களுக்கு இடையிலான மோதலாகக் கூட வெடித்தது. இங்கிருந்து கேரளா செல்லும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அந்த மாநிலத்துக்;குச் செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்கள் கூட தாக்கப்பட்டனர். தேனி மாவட்டத்தின் கேரள எல்லையில் தமிழக பொலிஸார் குவிக்கப்பட்டு பத்து நாட்கள் வரை அப்பகுதியே பதற்றத்தில் இருந்தது.
பின்னர் இரு மாநில உறவுகள் ஒரு வழியாக சீரானது. ஆனால், இப்போது மீண்டும் புதிய அணை கட்டுவோம் என்ற கேரள அரசின் முயற்சியால், தமிழக - கேரள உறவில் மீண்டும் விரிசல் வரும் சூழ்நிலை எழுந்திருக்கிறது.
கர்நாடக மாநிலத்துடன் உள்ள காவிரி நதிநீர் உரிமை 90 வருடம் பழமையான ஒப்பந்தத்தின் அடிப்படையில் உள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மூலம் நிலைநாட்டப்பட்டுள்ளது.
கேரள அரசுடன் உள்ள முல்லைப் பெரியாறு அணை உரிமை 128 வருடத்துக்கு முன்பு உள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு விட்டது. இனியும் இந்த இரு மாநிலங்களும் தமிழக மக்களுடன் மோதத் துடிப்பது மூன்று மாநிலங்களுக்கு இடையில் உள்ள உறவையும் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் விரோதமான செயல் என்றே சட்ட வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
இதுவரை தமிழகத்தின் குரல் டெல்லியில் கேட்டுக் கொண்டிருந்தது. அதற்கு முக்கியக் காரணம் தமிழக எம்.பி.க்களின் ஆதரவு இல்லாமல் மத்தியில் ஆட்சி நடத்த முடியாது என்ற நிலைமை. ஆனால், இப்போது நிலைமை அப்படியில்லை. அ.தி.மு.க.வுக்;கு 37 எம்.பி.க்கள் இருந்தாலும் அவர்களின் ஆதரவு இல்லாமலேயே பிரதமர் நரேந்திரமோடி ஆட்சி நடத்த முடியும்.
இந்த சூழ்நிலையில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வுக்கு கர்நாடாக மாநிலத்தில் ஆட்சிக்கு வரும் அந்தஸ்து உள்ள கட்சி. அதனால் காவிரிப் பிரச்சினையில் உடனடியாக தமிழகத்தின் கோரிக்கைக்கு பதில் சொல்ல மறுக்கிறது. அதனால்தானே என்னவோ இறுதித் தீர்ப்பின் படி அமைக்க வேண்டிய காவிரி மேலாண்மை வாரியம் இன்னும் அமைக்கப்படவில்லை.
கேரளாவிலும் தமிழகத்திலும் பா.ஜ.க.வுக்கு ஒரே நிலைமைதான். இன்னும் சொல்லப் போனால் கேரளாவில் தமிழகத்தை விட அக்கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது.
அதனால்தான், முல்லைப் பெரியாறு அணைக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கண்காணிப்புக் குழுவை உடனே அமைத்த மத்திய அரசு, கேரள மக்களின் கோபத்தை தணிக்க இப்போது புதிய அணை கட்ட சுற்றுப்புறச்சூழல் ஆய்வு நடத்த அனுமதி கொடுத்திருக்கிறது என்பது போல் தெரிகிறது. கேரளா மற்றும் கர்நாடகாவின் பக்கம் நியாயம் இல்லை என்றாலும் மத்திய அரசு தமிழக அரசின் பக்கமாக முழுவதுமாக சாய்வதற்கு வாய்ப்பில்லை என்பதுதான் இன்றைய நிலைமை.
ஆனால், புதிய அணைகள் பிரச்சினையில் மூன்று மாநிலங்களுக்கு உருவாகியுள்ள இடையே சர்ச்சைக்கு ஏதாவது ஒரு வகையில் தீர்வு காண வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.
அப்படி இப்பிரச்சினைகளில் மத்திய அரசு மௌனம் காக்குமானால், பிரதமர் நரேந்திரமோடி தலையிடாமல் அமைதியாக இருந்தால் காவிரியிலும் முல்லைப் பெரியாறிலும் ஆளுங்கட்சி கோட்டை விட்டது என்ற பழிச்சொல்லை அ.தி.மு.க. சுமக்க வேண்டிய நிலை வந்து விடும். மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதுதான் நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினையில் இப்போது உள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பு.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
32 minute ago
34 minute ago