Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kanagaraj / 2014 டிசெம்பர் 23 , மு.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.ஜ.க.தலைவர் அமித் ஷா சென்னை வந்தார். கிறிஸ்துமஸ் விழாவிற்கு முன்பு சென்னை புறநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். தமிழகம் முழுவதும் இருந்து அக்கூட்டத்திற்கு பா.ஜ.க.வினர் வந்திருந்தார்கள். தமிழகத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்களான வைகோ ஏற்கனவே வெளியேறி விட்டார். விஜயகாந்த் வெளியேறாவிட்டாலும் விரும்பாத வகையில் அக்கூட்டணியில் தொடருகிறார். “என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடருவேன்” என்ற ரீதியில் கருத்துக்களைக் கசிய விட்டு காத்திருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் “என் தலைமையில் தனி அணி” என்று கூறிவிட்டு, இப்போது ஒட்டியும் ஒட்டாமலும் இருந்து கொண்டிருக்கும் கூட்டணிக் கட்சியின் தலைவர் அமித் ஷாவை தன் மகன் அன்புமணி ராமதாஸை அனுப்பி சந்திக்க வைத்திருக்கிறார்.
இப்படி பல்வேறு வகையான மாற்றங்களுக்கு இடையில் பா.ஜ.க. தலைவர் தமிழகத்திற்குள் வந்தார். புதுவிதமாக தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் “மாற்று கட்சி நாங்கள்தான்” என்ற முழக்கத்தை அறிவித்து விட்டுப் போயிருக்கிறார். “எங்களுடன் இணைந்து தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபடுங்கள்” என்றும் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதற்கெல்லாம் இனி தமிழக மக்கள்தான் செவி சாய்க்க வேண்டும் என்ற நிலைமை.
சென்னையில் அமித் ஷா அதிரடியாக தி.மு.க.வை அட்டாக் பண்ணினார். அது மட்டுமின்றி அ.தி.மு.க.வையும் அவர் விட்டு வைக்கவில்லை. அமித் ஷாவின் பேச்சு 2014ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலை நினைவு படுத்தும் வகையில் அமைந்தது. அந்த தேர்தலில் பிரதமர் வேட்பாளராக இருந்த நரேந்திரமோடி தமிழகத்திற்கு வந்து பொதுக்கூட்டங்களில் பேசினார். தன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். “மோடியால்தான் வளர்ச்சி” என்ற கருத்து முன் வைக்கப்பட்டது. அப்போது திடீரென்று கோபித்துக் கொண்ட முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தன் பிரச்சாரத்தின் இறுதியில் மோடியைத் தாக்கினார். “வளர்ச்சிக்கு இந்த லேடி காரணமா அல்லது மோடி காரணமாக என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும்” என்று மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். அதைத் தொடர்ந்து புதுக்கோட்டை தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தன் பிரச்சாரத்தை நிறைவு செய்த தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், “தமிழகத்தின் வளர்ச்சிக்கு மோடியும் காரணமல்ல. லேடியும் காரணமல்ல. என் டாடி (கலைஞர் கருணாநிதி)தான் காரணம்” என்று ஆணித்தரமாகப் பேசினார். தமிழகத்தின் இந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு பிரதமர் வேட்பாளராக இருந்த நரேந்திரமோடி நேரடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. “லேடி”யையோ அல்லது “டாடி”யையோ மோடி விமர்சிக்கவில்லை. இந்த நிலையில் இப்போது தமிழகத்திற்கு வந்த அமித்ஷா அந்த “லேடி” “டாடி” பிரச்சினையை முன் வைத்தே தன் உரையை நிகழ்த்தியது போலிருக்கிறது. அதன் பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும் அதே கருத்தை வலியுறுத்தியிருக்கிறார்.
குறிப்பாக “காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க ஆகிய மூன்று கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ச்சியில் பின்னுக்குப் போய் விட்டது” என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். “இன்றைக்கு தமிழகத்தின் பொருளாதாரம் நெருக்கடியில் நிற்கிறது” என்று கூறியிருக்கிறார். “வேலைவாய்ப்பபின்மை, தனி நபர் வருமானம், தொழில் வளர்ச்சி, ஏழ்மையை விரட்டும் பணிகள், பொருளாதார வளர்ச்சி ஆகிய அத்தனை விஷயங்களிலும் குஜராத்தை விட தமிழகம் பின் தங்கியிருக்கிறது” என்று போட்டு உடைத்து விட்டுப் போயிருக்கிறார். ஏன் பா.ஜ.க. ஆளும் சிறிய மாநிலமான கோவாவை விட ஏழ்மையைப் போக்கும் பணிகளில் தமிழகம் பின்தங்கியிருக்கிறது என்ற பயங்கரமான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இலவசத் திட்டங்கள் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாற்றி மாற்றி செய்து வந்தாலும் இது போன்ற நிலைமை இருப்பதாக அமித் ஷா சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆட்சியிலிருப்பது அ.தி.மு.க.தான். ஆகவே அமித் ஷா கூறிய அனைத்துக் குற்றச்சாட்டுகளுமே அ.தி.மு.க.வை முன்னிலைப் படுத்தி சொன்னது போலத்தான் அமைகிறது. நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகம் குஜராத்தை விட வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதை முன்னிறுத்தி விரிவாகப் பிரச்சாரம் செய்தார் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா. அதற்கு கவுண்டர் கொடுக்கும் விதத்தில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான குஜராத், மத்திய பிரதேஷ், கோவா ஆகிய மூன்று மாநிலங்களை விடவும் தமிழகம் ஒவ்வொரு விஷயத்திலும் பின் தங்கியிருக்கிறது என்ற பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்து விட்டுச் சென்றுள்ளார் அமித்ஷா. மறைமுகமாகப் பார்த்தால், “மோடியா” “லேடியா” “டாடியா” என்ற தமிழக பிரச்சாரத்திற்கு இப்போது பதில் சொல்லியிருக்கும் அமித்ஷா “மோடிதான்” வளர்ச்சி நாயகன் என்பதை தமிழக மக்களுக்குச் செய்தியாக விடுத்துள்ளார்.
இப்படியொரு குற்றச்சாட்டை முன் வைத்து விட்டு காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசாங்கம் “ஊழல்புகார்களின்” அரசாங்கமாகத் திகழ்ந்தது என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால் பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெற்ற தண்டனை பற்றி வாய் திறக்கவில்லை. ஊழல் என்பதை முன்னிறுத்தும் போது தி.மு.க.-காங்கிரஸ் ஊழலை சுட்டிக்காட்டிய அமித்ஷா அ.தி.மு.க. ஊழல் பற்றி வாய் திறக்கவில்லை. அக்கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் முரளிதர்ராவ் கூட “இப்போது யார் உண்மையான முதல்வர் என்று தெரியவில்லை. முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சர் அறையில் உள்ள நாற்காலியில் அமரவில்லை” என்பதை சுட்டிக்காட்டி மட்டும் பேசினார். பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், “அ.தி.மு.க.விற்கும், தி.மு.க.விற்கும் மாற்று பா.ஜ.க.தான். 122 எம்.எல்.ஏ.க்களுக்கு (மொத்த எம்.எல்.ஏ.க்கள் 234) குறையாமல் பெற்று 2016ல் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்” என்று அறிவித்துள்ளார். மாநிலத் தலைவர்களில் ஆரம்பித்து தேசியத் தலைவரான அமித்ஷா வரை இந்த கூற்றை பிரதிபலித்துள்ளார்கள்.
அதைவிட முக்கியமாக பா.ஜ.க. தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்பதை டிக்ளேர் செய்து விட்டுப் போயிருக்கிறார் அமித் ஷா. அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.விற்குப் பிறகு பா.ஜ.க.தான் மிகப்பெரிய கட்சி என்றும் நாட்டிலேயே இன்றைக்கு மிகப்பெரிய கட்சி பா.ஜ.க. என்றும் கூறியிருக்கிறார். பெரிய கட்சி பா.ஜ.க. என்ற “மந்திரத் தாயத்தை” தமிழகத்தில் அறிமுகப்படுத்தி ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்திருக்கிறார் அமித்ஷா.
இதற்கு முன்னோட்டமாக தமிழகத்தில் உள்ள 60000 பூத்துகளிலும் ஒரு பூத்திற்கு நூறு பேர் சேர்த்தால் போதும் 60 லட்சம் உறுப்பினர்கள் பா.ஜ.க.விற்கு கிடைத்து விடுவார்கள். பிறகு தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிதான் என்பது அமித்ஷா தன் கட்சித் தொண்டர்களுக்கு கொடுத்துள்ள அஜெண்டா.
அதே நேரத்தில் இலங்கை தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் பிரச்சினை குறித்தோ, தமிழகத்திற்கு பா.ஜ.க.வின் “வளர்ச்சி அஜெண்டா” என்பது பற்றியோ எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை அமித்ஷா. மீனவர்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைக் குறிப்பிட்டுள்ள அவர் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தோ, அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட படகுகளை விடுவிப்பது குறித்தோ எந்தக் கருத்தையும் கூறவில்லை. தமிழகத்தின் முக்கிய திட்டமான “சேது சமுத்திரத் திட்டம்” குறித்தும் அவர் பொதுக்கூட்டத்தில் கருத்துச் சொல்லவில்லை. மொத்தத்தில் தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகள் மீது அவர் எந்தக் கருத்தும் சொல்லாமல் சென்றிருக்கிறார் என்பதுதான் க்ளைமாக்ஸ் காட்சியாக இருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க. பலகீனமாக இருக்கிறது. அக்கட்சியை தாக்கினால் அதற்கு வாக்களிக்கும் வாக்காளர்கள் தங்கள் பக்கம் வருவார்கள் என்பதும், மத்தியில் ராஜ்ய சபை போன்ற இடங்களில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அ.தி.மு.க.வின் ஆதரவு பா.ஜ.க. விற்கு தேவை என்பதால் ஜெயலலிதாவின் ஊழல் வழக்கு பற்றி பேசாமல் சென்றிருக்கிறார் அமித்ஷா என்பதும்தான் அரசியல் பார்வையாளர்களின் கணிப்பாக இருக்கிறது. ஆட்சியிலிருக்கும் கட்சியை விமர்சிக்காமல் எதிர்கட்சியை விமர்சிக்கும் பா.ஜ.க.வின் பாணி எப்படி “மாற்றுக் கட்சியாக” வர உதவும் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
ஏனென்றால் தமிழகத்தில் அ.தி.மு.க.விற்கும் தி.மு.க.விற்கும் மாற்று என்று ஏற்கனவே ஏகப்பட்ட கட்சிகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. இதே கருத்துச் சொல்லி வருகிறது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை மாநிலத் தலைவராகக் கொண்டிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் இந்தக் கருத்தை விதைத்து வருகிறது. இது தவிர பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸும் “திராவிடக் கட்சிகளுக்கு மாற்று” என்ற கோஷத்தை நீண்ட நாட்களாகவே முன் வைத்து வருகிறார். இவர்களுக்குப் பின்னால்தான் பா.ஜ.க. “மாற்றுக் கட்சி” என்ற கோஷத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு அக்கட்சி தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையும் விமர்சிக்க வேண்டும். அப்போதுதான் பா.ஜ.க.வின் மீது நம்பகத்தன்மை மக்களுக்கு வரும். ஒரு புறம் தி.மு.க.வின் ஊழலைச் சுட்டிக்காட்டிக் கொண்டு, இன்னொரு புறம் அ.தி.மு.க.வின் ஊழல் பற்றி அமைதி காப்பது “மாற்று அரசியலுக்கு” உரிய அடையாளமாக இருக்காது என்பதே இன்றைய சூழ்நிலை.
அமித்ஷாவின் வருகை தமிழக பா.ஜ.க.விற்கு ஹார்லிக்ஸ் கொடுத்திருக்கிறது. ஆனால் அதுவே ஆட்சி அமைக்கும் பலமாக மாறுமா என்பது கேள்விக்குறிதான். அதற்கு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் வாக்காளர்கள் பா.ஜ.க. பக்கம் வர வேண்டும். அமித்ஷாவின் பேச்சில் அப்படியொரு யுக்தி இருப்பதாகப் புலப்படவில்லை என்பதுதான் சமீபத்தைய அமித்ஷா விஸிட்டின் முக்கிய அம்சம்! “அ.தி.மு.க.வை விமர்சிக்காத” பா.ஜ.க.வின் போக்கு ராஜ்ய சபையில் தங்களுக்கு என்று பலம் வரும் வரை இருக்குமா அல்லது அதன் பிறகும் தொடருமா என்பதை வைத்தே அக்கட்சியின் “மாற்று அரசியல்” முழக்கம் மக்களின் மனதை மயக்குமா அல்லது பொய்க்குமா என்பது தெரிய வரும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
13 minute ago
22 minute ago